தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

சசி மதன், சந்திரலேகா ராமமூர்த்தி, சரஸ்வதி அசோகன்

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

ரோஸ் குக்கீஸ்

தேவை: மைதா மாவு - அரை கப்  அரிசி மாவு - கால் கப்,  ஏலத்தூள் - கால் டீஸ்பூன்  சர்க்கரைத்தூள்  - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - பொரித்தெடுக்க  உப்பு - சிட்டிகை  மாவு பிழிய அச்சு முறுக்கு அச்சு (பாத்திரக் கடைகளில் கிடைக்கும்).

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, ஏலத்தூள், சர்க்கரைத்தூள் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குத் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அச்சு முறுக்கு அச்சை மாவில் முக்கால் பாகம் மூழ்கும்வரை தோய்த்து எண்ணெயில் விடவும். அச்சிலிருந்து குக்கீஸ் தானாகவே பிரிந்து எண்ணெயில் விழும். பிறகு, அச்சை எடுத்துவிட்டு குக்கீஸைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: ஒவ்வொரு முறையும் அச்சைச் சூடான எண்ணெயில் வைத்து மாவில் தோய்த்து குக்கீஸைப் பொரித்தெடுக்க வேண்டும்.

மலபார் பக்கோடா

தேவை: புழுங்கலரிசி - 2 கப்  காய்ந்த மிளகாய் - 6  பொட்டுக்கடலை மாவு - கால் கப்  கடலை மாவு - அரை கப்  எண்ணெய் - பொரிப்பதற்கு  உப்பு – தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:  காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் ஊற விடவும். புழுங்கலரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரிசியைக் களைந்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு சேர்த்து  கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காய விடவும். பிசைந்த மாவை ரிப்பன் பகோடா அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில்  பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

ரவை ஃப்ரைடு பிஸ்கட்

தேவை:  ரவை - ஒரு கப்  சர்க்கரை - 8 டீஸ்பூன்  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,  முந்திரி, பால் - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்க   உப்பு - ஒரு சிட்டிகை.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்துப் பிசறவும். பிறகு பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய பந்துகளாக உருட்டவும். உருண்டைகளை வடை போலத்தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:    தேங்காய்க்குப் பதில் கொப்பரைத் தேங்காயும் பயன்படுத்தலாம். ரவையை வறுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

லேயர் மட்ரி

தேவை: மைதா (மாவு பிசைய) - 2 கப்  ஓமம் - கால் டீஸ்பூன் (கையால் கசக்கவும்)  எண்ணெய் - கால் கப்  தண்ணீர் - தேவைக்கேற்ப  மைதா (பூசுவதற்கு) - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் (பூசுவதற்கு) - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் (பொரிக்க) - தேவையான அளவு  உப்பு - தேவைக்கேற்ப .

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: பூசுவதற்குக்கொடுத்துள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதா, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து வைக்கவும். பிசையக்கொடுத்துள்ள மைதா, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்துக் கலந்தால் பிரெட் தூள் போல் வரும். இதில் தேவையான தண்ணீர் தெளித்து, ஓமம் சேர்த்து, பூரி மாவுப் பதத்துக்கு பிசைந்து ஒரு ஈரத் துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும். அதற்குப்பின் மாவை எடுத்து மீண்டும் 5 நிமிடங்கள் பிசையவும். இந்த மாவை இரண்டு பாகங்களாகப் பிரித்து உருட்டவும். ஓர் உருண்டையை முதலில் எடுத்து பெரிய சப்பாத்தியாகத் திரட்டவும். பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள மைதா - எண்ணெய் கலவையில் இருந்து ஒரு
டேபிள்ஸ்பூன் எடுத்துப் பூசவும். இப்போது சப்பாத்தியை மீண்டும் இரண்டு பக்கமும் இழுத்து சதுரமாக மடிக்கவும். மீண்டும் தேய்த்து மைதா - எண்ணெய்க் கலவையைப் பூசவும். மீண்டும் மடித்து ரிப்பன் மாதிரி நீட்டாக தேய்த்துக் கத்திக்கொண்டு அரை இன்ச் கனத்துக்கு வெட்டி லேசாக அழுத்தவும். எண்ணெயைக் காயவைத்து, வெட்டியவற்றை மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, எண்ணெயை வடித்து, ஆறவிட்டு பரிமாறவும். இதே போல இன்னோர் உருண்டையையும் தேய்த்து, வெட்டிப் பொரித்து எடுத்து ஆறவிட்டு பரிமாறவும்.

கார பின் வீல்ஸ்

தேவை: மேல் மாவுக்கு...  மைதா - ஒரு கப்  ரவை - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு  - சிறிதளவு  தண்ணீர் - தேவையான அளவு  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.

பூரணத்துக்கு...  வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 4  பச்சைப் பட்டாணி (வேகவைத்தது) - அரை கப்  சீரகம், மிளகாய்தூள் - தலா ஒரு டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப)  தனியாத்தூள் - 2 டீஸ்பூன்

 ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 2 (அல்லது தேவைக்கேற்ப)  உப்பு - தேவையான அளவு.

கரைப்பதற்கு...  மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்  சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன். பொரிப்பதற்கு...  எண்ணெய் - தேவையான அளவு.கடைசியில் புரட்ட...  பிரெட் தூள் - ஒரு கப்.    

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:  மேல் மாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மைதா மாவு, உப்பு, ரவையைச் சேர்த்துக் கலந்து, இத்துடன் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் பிரெட் தூள் போல் வரும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கெட்டி பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து ஒரு ஈரத்துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும். பூரணத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் கலந்து மசித்து வைக்கவும்.

கரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். மேல் மாவை இரண்டு பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். ஓர் உருண்டையை பெரிய, மெல்லிய ரொட்டியாகத் தேய்க்கவும். ரொட்டியின் ஓரத்தை சிறிதளவு விட்டுவிட்டு, ரொட்டியில் பாதியளவு பூரணத்தைப் பரப்பி பாய் போல் சுருட்டி, ஓரத்தை தண்ணீர் கொண்டு ஒட்டி, அரை இன்ச் நீள துண்டுகள் போட்டவும். பார்ப்பதற்கு சக்கரம் போல இருக்கும். இவற்றை சிறிது லேசாக அழுத்தி, மைதா கலவையில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மற்றோர் உருண்டையிலும் இதேபோல் செய்து பரிமாறவும்.

காஜா

தேவை: மைதா மாவு - ஒரு கப்  தயிர், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்  கடலை மாவு - 2  டேபிள்ஸ்பூன்  சர்க்கரை - அரை கப்  எண்ணெய் -  தேவையான அளவு  தண்ணீர் - 3 டேபிள்ஸ்பூன்,  உப்பு - ஒரு சிட்டிகை.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:  ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு பூரி மாவு போலப் பிசையவும். கடலை மாவையும் எண்ணெயையும் சேர்த்துக் குழைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, அரை கம்பிப் பாகு தயாரிக்கவும். இதுவே சிரப். மைதா மாவை ஐந்து உருண்டைகளாகப் பிரித்து சப்பாத்திகளாக இடவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேலும் கடலை மாவு கலவையைத் தடவவும். ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, பாய் போலச் சுருட்டவும். பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். வெட்டிய துண்டுகளை லேசாகத் தேய்க்கவும். எண்ணெயைக் காயவிட்டு தேய்த்தத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த காஜாவைச் சர்க்கரை சிரப்பில் போட்டுச் சிறிது நேரம் ஊறவிடவும். பிறகு எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.

குறிப்பு: மீதி சிரப் இருந்தால் கடைசியாக காஜாக்கள் மேலே ஊற்றிவிடலாம்.

சைனீஸ் ஸ்பிரிங் ரோல்

தேவை:  மைதா மாவு  - ஒரு கப்  குடமிளகாய், கேரட், வெங்காயம்  - தலா ஒன்று  வினிகர் - அரை டீஸ்பூன்  சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்,  வெங்காயத்தாள் - 2  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: வெங்காயத்தாள், குடமிளகாய், கேரட், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.  மைதா மாவில் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுப் பதமாகப் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, வெங்காயம், குடமிளகாய், கேரட், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு வினிகர், சோயா சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து வதக்கி இறக்கவும். மைதா மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். உருண்டைகளை ஓவல் வடிவத்தில் தேய்க்கவும். ஒவ்வொன்றின் ஓரத்திலும்  காய்கறிக் கலவையை வைத்துச் சுருட்டவும். பிறகு, சுருட்டிய ஸ்பிரிங் ரோலை ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவிடவும். எண்ணெயைக் காயவிட்டு ஸ்பிரிங் ரோல்களை போட்டுப் பொரித்தெடுக்கவும். இதைச் சாஸுடன் சாப்பிட, சுவையாக இருக்கும்.

குறிப்பு: ஸ்பிரிங் ரோல் பிரியாமல் இருக்க ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி, பிறகு சுருட்டவும். காரம் வேண்டும் என்றால் சிறிது மிளகாய்த்தூளைக் காய்கறியில் சேர்த்து வதக்கலாம்.

டீ டைம் க்ராக்கர்ஸ்

தேவை:  கோதுமை மாவு - ஒரு கப்  கடலை மாவு, கேழ்வரகு மாவு - தலா கால் கப்  மஞ்சள்தூள், சீரகம், எள் - தலா அரை டீஸ்பூன்  ஓமம் - கால் டீஸ்பூன்  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு  இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:  புதினா, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, கேழ்வரகு மாவு, ஓமம், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, மஞ்சள்தூள், சீரகம், எள், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்துப் பிசறவும். பிறகு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்து டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும். எண்ணெயைக் காயவிட்டு வெட்டிய துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

பாசிப்பயறு சுகியன்

தேவை:   பாசிப்பயறு - 200 கிராம்  வெல்லம் - 150 கிராம்  மைதா மாவு - 100 கிராம்  இட்லி மாவு - 2 கரண்டி  தேங்காய் - ஒரு மூடி (துருவியது)  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்  நெய் - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - 2 சிட்டிகை  உப்பு - ஒரு சிட்டிகை  எண்ணெய் - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: பாசிப்பயறை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, நன்கு வேகவைத்து எடுத்து வைக்கவும். வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டு பாசிப்பயறு, வெல்லத்தூள், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து எல்லாம் ஒன்றுசேர்ந்து வரும்வரை நன்கு கிளறி இறக்கவும். கலவை ஆறியதும் கையில் லேசாக நெய் தடவிக்கொண்டு, உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, மஞ்சள்தூள், இட்லி மாவு சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு உருட்டி வைத்த உருண்டையை மைதா - இட்லி மாவு கலவையில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: பொரித்தெடுக்கும்போது எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் தீயைக் குறைக்கவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

பிரெட் பக்கோடா

தேவை:  சால்ட் பிரெட் - ஒரு சிறிய பாக்கெட்  வெங்காயம் - ஒன்று  கடலை மாவு - அரை கப்  அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  ஓமம் - அரை டீஸ்பூன்,  எண்ணெய் - பொரிக்க  சமையல் சோடா - ஒரு சிட்டிகை , உப்பு – தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். பிரெட்டை விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காய விழுது, மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், சமையல் சோடா சேர்த்து கலந்து பஜ்ஜி மாவுப் பதமாகக் கரைக்கவும். எண்ணெயைக் காயவிட்டு பிரெட் துண்டுகளை மாவில் தோய்த்துப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:    பிரெட் ஓரங்களை நீக்கிவிட்டும் செய்யலாம். நீக்காமலும் செய்யலாம்.

உருளைக்கிழங்கு சீஸ் சேவு

தேவை:  பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும்)  கடலை மாவு - ஒன்றரை கப்  அரிசி மாவு - அரை கப்  கரம் மசாலாத்தூள், சீரகம் - தலா கால் டீஸ்பூன்,  வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்  ஓமம், மிளகாய்த்தூள் - தலா அரை, டீஸ்பூன்  சீஸ் க்யூப் (சதுரத்துண்டு) - ஒன்று (துருவவும்)  எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு  உப்பு - தேவைக்கேற்ப. 

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு அழுத்தி, கட்டி இல்லாமல் காராசேவு பதத்தில் மாவு பிசையவும் (தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, சிறு கண் உள்ள காரா சேவு அச்சு அல்லது பெரிய கண் உள்ள ஓமப்பொடி அச்சில் மாவை நிரப்பி, எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு:    எண்ணெய் அதிகம் சூடாக இருக்கக் கூடாது. மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்து சேர்க்கவும். விருப்பமான சீஸ் சேர்க்கலாம்.

கார மஃபின்ஸ்

தேவை:  உருளைக்கிழங்கு - 4 (வேகவைத்து, தோல் நீக்கி, மசிக்கவும்)  கெட்டித் தயிர் - 3 டேபிள்ஸ்பூன் (துணியில் கட்டித் தொங்கவிட்டு நீரை வடிக்கவும்)  பால் - அரை கப்  பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன்  மைதா மாவு - முக்கால் கப்  துருவிய சீஸ் - 3 டேபிள்ஸ்பூன்  பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டீஸ்பூன்,  மிளகு (கொரகொரப்பாக பொடித்தது) - அரை டீஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: மைதாவைச் சலித்து, உப்பு, எண்ணெய் சேர்த்து ரவை மாதிரி கலக்க வேண்டும் (இது பிரெட் தூள் போல் இருக்க வேண்டும்). மீதம் உள்ள எல்லாவற்றையும் இதனுடன் சேர்த்து, கெட்டியாகக் கலக்கவும் (உப்புமா பதம் மாதிரி இருக்கும்). இந்தக் கலவையை மப்ஃபின்ஸ் (Muffins) கப்களில் அல்லது `பேக்’ செய்யும் சிறு சிறு கப்களில் ஊற்றி சூடான `அவனில்’ பேக் செய்யவும் (180 டிகிரி செல்சியஸில், 25 நிமிடங்களுக்கு அல்லது வேகும் வரை) இந்த மஃபின்ஸ் டீ டைம் ஸ்நாக்ஸாகச் சாப்பிட ஏற்றது.

குறிப்பு: விருப்பமான சீஸ் சேர்க்கலாம். சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்துச் சேர்க்கவும்.

ரவா முந்திரி

தேவை:  பொடியாக உள்ள ரவை - 200 கிராம் (ரவை பெரியதாக இருந்தால் மிக்ஸியில் பொடிக்கவும்; மாவாக இருக்கக் கூடாது)  பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்  வெண்ணெய் - தேவையான அளவு  மைதா மாவு - தலா 50 கிராம்  எண்ணெய் (மாவு பிசைய) - 50 கிராம்  சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  உப்பு - அரை டீஸ்பூன்,  எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: ரவை, மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் கலந்து, இதனுடன் எண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலக்கவும் (இந்தக் கலவை பிரெட் தூள் போல் வர வேண்டும்; கையில் பிடித்தால் பிடிக்க வர வேண்டும்). கைபொறுக்கும் அளவு சூடான தண்ணீர் எடுத்து இதில் தெளித்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து உருட்டி, ஒரு ஈரத்துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும். மீண்டும் நன்கு 5 நிமிடங்கள் பிசையவும். கையில் சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு  இதை நான்கு பாகங்களாகப் பிரித்து, உருட்டி, அரை இன்ச் கனத்துக்கு ரொட்டிகளாகத் தேய்க்கவும். பின் ஏதாவது ஒரு சிறு பாட்டில் மூடியைக் கொண்டு, மூடியின் பாதி அளவுக்கு ரொட்டியில் இருந்து முந்திரிப்பருப்பு மாதிரி வெட்டவும். எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரிக்கவும்.

பாம்பே லக்டி

தேவை: மைதா  மாவு - அரை கப்  சர்க்கரைத்தூள் - கால் கப்,  வனஸ்பதி - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - பொரிப்பதற்கு  சமையல் சோடா, உப்பு - தலா ஒரு சிட்டிகை.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வனஸ்பதியுடன் சமையல் சோடாவைச் சேர்த்து நன்றாகத் தேய்க்கவும். பிறகு அதனுடன் சர்க்கரைத்தூள், மைதா மாவு சேர்த்துப் பிசறவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, மாவைக் கெட்டியாகப் பிசையவும். பிறகு பிசைந்த மாவைச் சப்பாத்திகளாகத் தேய்த்து, சிறிய சதுரங்களாக வெட்டவும். எண்ணெயைக் காயவிட்டு, வெட்டிய துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:     தண்ணீர் சேர்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். இல்லையென்றால், மாவு மிகவும் தளர்ந்துபோய் திரட்ட வராது. பொரித்து எடுக்கும்போது, பாம்பே லக்டி `வதக்வதக்'கென்றுதான் இருக்கும். ஆறியதும் மொறுமொறுப்பாக ஆகிவிடும்.

கறிவேப்பிலைத்தட்டை

தேவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப்  எள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, மிளகாய்த்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை - கால் கப்  எண்ணெய் – பொரிப்பதற்கு  உப்பு - தேவைக்கு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு, எள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசறவும். பிறகு தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டின் மீது மாவைத் தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுத் தட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு தயாரிக்க: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து மெஷினில் மாவாக அரைத்து வரவும்.  இதுவே பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு. ஊறவைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். சப்பாத்தி மேக்கரில் வைத்து அழுத்தியும் தட்டையைத் தட்டலாம்.

ஸ்பைஸி கார்ன் - பொட்டேட்டோ நக்கட்ஸ்

தேவை: வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - ஒன்றரை கப்  ஸ்வீட் கார்ன் முத்துகள் - அரை கப்  சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்  பார்மேசன் சீஸ் (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்  பதப்படுத்திய மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும்) - அரை டீஸ்பூன்  கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் - அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - 2 (துருவவும்)  பிரெட் தூள் - கால் கப்  எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு  சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன் (கால் கப் தண்ணீரில் கரைக்கவும்)  பிரெட் தூள் (கடைசியில் புரட்ட) - அரை கப்,  உப்பு - தேவைக்கேற்ப.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:  எண்ணெய், சோள மாவு கரைசல், கடைசியில் புரட்ட வைத்திருக்கும் அரை கப் பிரெட் தூள் தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் கலந்து பிசைந்து, ஒரு மூடியைக் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பின்னர் எடுத்துக் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு கலவையை இரண்டு கைகொண்டு, திரிப்பது போல குழல் வடிவில் (பைப் மாதிரி) நீளமாக உருட்டவும். உருட்டியதைக் கத்திகொண்டு அரை இன்ச் கனத்துக்கு வெட்டவும். இந்தத் துண்டுகளை மீண்டும் ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்து, இரண்டு ஓரங்களிலும் லேசாகத் தட்டி, சோள மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில், கொஞ்சம் கொஞ்சமாக மிதமான தீயில் பொரிக்கவும்.

குறிப்பு: சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்து சேர்க்கவும்.

பச்சைப்பட்டாணி மட்ரி

தேவை: மைதா - ஒன்றரை கப்  கொரகொரப்பாக பொடித்த மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  ஓமம் - கால் டீஸ்பூன் (கையில் கசக்கவும்),  பச்சைப்பட்டாணி (ஃப்ரெஷ் அல்லது பதப்படுத்தியது) - கால் கப்,  பச்சை மிளகாய் - 3  கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் (மாவில் சேர்ப்பதற்கு) - கால் கப்  தண்ணீர் - கால் கப்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் (பொரிப்பதற்கு) - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். மைதா மாவுடன், மிளகு, சீரகம், ஓமம், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இத்துடன் மிக்ஸியில் பொடித்த பொடியைச் சேர்க்கவும். பிறகு கால் கப் எண்ணெயை மாவுக் கலவையில் சேர்த்து, தேவையான தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து, பூரி மாவுப் பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். இதை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி 15 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் எடுத்து 5 நிமிடங்கள் கைவிடாமல் பிசையவும். பின்னர் இந்த மாவுக் கலவையை இரண்டு பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை எடுத்து உருட்டி அரை இன்ச் கனத்துக்கு பெரிய, தடிமனான ரொட்டியைத் தேய்க்கவும். பிறகு ஒரு முள் கரண்டி கொண்டு ரொட்டியின் மத்தியில் குத்தவும். பின் விருப்பமான வடிவத்தில் அல்லது விருப்பமான கட்டர் கொண்டு வெட்டி வைத்துக்கொள்ளவும். மாவுக் கலவையின் மற்றொரு பாகத்தையும் இதேபோல் செய்யவும். எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெட்டிவைத்தவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுத்து ஆறவிட்டுப் பரிமாறவும்.

நெய்க்கடலை

தேவை: கடலைப்பருப்பு - 200 கிராம்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  கறிவேப்பிலை -  ஒரு கைப்பிடி  பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை  எண்ணெய் - தேவையான அளவு  உப்பு - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:  ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பைச் சேர்த்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு டவலில் சேர்த்து மூடி ஐந்து நிமிடங்கள் தனியாக வைக்கவும். பிறகு, கடலைப்பருப்பை மற்றொரு துணிக்கு மாற்றி ஈரம்போக நன்கு உலர விடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடலைப்பருப்பை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுத்து பருப்புடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து விடவும். டீ டைம் ஸ்நாக்ஸ் ரெடி.

அவல் கிரிஸ்பி

தேவை:  ரவை மாதிரி பொடித்த அவல் - 5 டீஸ்பூன்  கொரகொரப்பாக உடைத்த வேர்க்கடலை - கால் கப்  உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோலுரிக்கவும்)  உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை  சாட் மசாலாத்தூள் (அலங்கரிக்க) - சிறிதளவு.

பொரிப்பதற்கு:  எண்ணெய் -  தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு மசிக்கவும். இதனுடன் பொடித்த அவல், மசாலாத் தூள்கள், உப்பு, பொடித்த வேர்க்கடலை சேர்த்து நன்கு பிசையவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). கையில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, எலுமிச்சை அளவு கலவையை எடுத்து உருட்டி விருப்பமான வடிவத்தில் செய்யவும். சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, எண்ணெயை வடிக்கவும். மேலே சாட் மசாலா தூவி, சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

மஷ்ரூம் கட்லெட்

தேவை: மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்  மஷ்ரூம் - 100 கிராம்,  உருளைக்கிழங்கு - 2  பெரிய வெங்காயம் - 2  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்  மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  பிரெட் கிரம்ப்ஸ் - தேவையான அளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். மஷ்ரூமைச் சிறியதாகச் சன்னமாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய மஷ்ரூமைச் சேர்த்து லேசாக வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து அடிபிடிக்காமல் பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் கலவை ஒன்று சேரும்வரை புரட்டி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும் மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இனி உருட்டிய ஒவ்வொரு பீஸ்களையும் மைதா மாவு கலவையில் முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் எண்ணெய்விட்டு கட்லெட்டை வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: தவா நன்கு சூடானதும் கட்லெட்டைச் சேர்த்து தீயை இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

கேப்பேஜ் சாப்

தேவை:  பூரணத்துக்கு...  பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும்)  முட்டைகோஸ் - அரை கிலோ (பொடியாக நறுக்கவும் அல்லது துருவவும்)  பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்  துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

மேல் மாவுக்கு...  கடலை மாவு - 2 கப்  அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,  மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் (அல்லது ஒரு டீஸ்பூன்)  சமையல் சோடா - 2 சிட்டிகை  உப்பு - தேவையான அளவு.

பொரிப்பதற்கு...  எண்ணெய் - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டுப் பூரணத்துக்குக் கொடுத்துள்ள நறுக்கிய, துருவிய காய்கறிகள், உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி, கடைசியில் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கலந்து, உருட்டும் பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். மேல் மாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டி பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பூரணத்தில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்து மசால் வடை மாதிரி தட்டி ஒவ்வொன்றாக மேல் மாவு கலவையில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.

பனீர் குர்குரே

தேவை:  பனீர் - 100 கிராம்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்  அரிசி மாவு - 2 டீஸ்பூன்  கடலை மாவு - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - 2 சிட்டிகை  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: பனீரை 2 அங்குலம் அளவுள்ள நீளத் துண்டுகளாக கட் செய்யவும். எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் பனீருடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறி எலுமிச்சைச்சாறுவிட்டுக் கலந்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டுச் சூடானதும், பனீரை இரண்டு இரண்டாகச் சேர்த்துப் பொரித்தெடுத்தால், பனீர் ‘குர்குரே’ தயார்.

குறிப்பு:    கலவை கலக்கும்போது தண்ணீர் அதிகமாகச் சேர்த்தால், பனீரில் கலவை ஒட்டாது. பேஸ்ட் போல ஒட்டுமளவுக்குத் தண்ணீர் சேர்த்தால் போதும்.

மூங்தால் ஃபிங்கர்ஸ்

தேவை: பாசிப்பருப்பு - 200 கிராம்  பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)  பிரெட் - 4 ஸ்லைஸ்  கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன்,  கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் (நறுக்கியது)  பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன் (நறுக்கியது)  மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்  சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்  எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். இதனுடன் பிரெட், கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பிசைந்து விரல் நீள அளவுக்கு பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும், தீயை மிதமாக்கி பருப்பு உருண்டைகளைச் சேர்த்து முறுகலாகப் பொரித்தெடுக்கவும்.

கோதுமைப் பக்கோடா

தேவை: கோதுமை மாவு - 200 கிராம்  ராகி மாவு - 100 கிராம்  கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்  பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)  கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன் (நறுக்கியது)
 கறிவேப்பிலை - 4 டீஸ்பூன் (நறுக்கியது)  பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)  இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - தேவையான அளவு  உப்பு - தேவையான அளவு.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக ஒரு பவுலில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டுச் சூடானதும், பிசைந்து வைத்த மாவை எண்ணெயில் பிய்த்துப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இட்லி மாவு போண்டா

தேவை: இட்லி மாவு - ஒரு கப்  மைதா மாவு - கால் கப்  வெங்காயம் - ஒன்று  பச்சை மிளகாய் - 2  சமையல் சோடா - ஒரு சிட்டிகை  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இட்லி மாவுடன் மைதா மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைக் கையால் கிள்ளிப்போடவும். நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:    திடீர் விருந்தினருக்கு  இன்ஸ்டன்ட் போண்டாவாகக் கொடுக்கலாம். புளித்த இட்லி மாவிலும் செய்யலாம்.

கரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

க்ரிஸ்பி... டேஸ்ட்டி!

ரிலாக்ஸாக அமர்ந்து ருசிக்கும் உணவுகளில் ஸ்நாக்ஸ் வகைகளே முதலிடம் வகிக்கின்றன. விருந்தினர்களின் வருகையின்போதும் ஸ்நாக்ஸ் வகைகளே முதலில் கைகொடுக்கும். அந்த வகையில் இனிப்பும் காரமுமாக கரகர மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெசிப்பிகளை இந்த இணைப்பிதழில் அளிக்கிறார்கள் சமையல் கலைஞர்கள் சசி மதன், சந்திரலேகா ராமமூர்த்தி மற்றும் சரஸ்வதி அசோகன்.

பெரும்பாலும் இந்த உணவுப்பொருள்கள் எண்ணெயில் பொரித்தவை யாகவே இருக்கும். இருப்பினும், கலோரிகளை அதிகரித்து உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்காத வகையில் பாரம்பர்யமான பக்குவத்தில் கறிவேப்பிலைத்தட்டை, பச்சைப்பட்டாணி மட்ரி, பாசிப்பயறு சுகியன், மஷ்ரூம் கட்லெட், கோதுமைப் பக்கோடா என விதவிதமான ஸ்நாக்ஸ் வகைகளை தீபாவளி ஸ்பெஷலாக வழங்கியிருக்கிறார்கள் இவர்கள்.