தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அடுக்கு பராத்தா அமர்க்களம்!

அடுக்கு பராத்தா அமர்க்களம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அடுக்கு பராத்தா அமர்க்களம்!

கிச்சன் பேசிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோக்கள் : லக்ஷ்மி வெங்கடேஷ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாதாரண சப்பாத்தி சாப்பிடுவதைவிட அடுக்கு பராத்தா அல்லது ஸ்டஃப்டு பராத்தாக்கள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இதுவரை நாம் பார்த்தது பிளெய்ன் பராத்தாக்களின் செய்முறை. இந்த இதழில் பராத்தாக்களின் சுவையை எவ்வாறு காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் சேர்த்து அதிகரிப்பது என்பதை காண்போம்.

மேத்தி லச்சா பராத்தா

வெந்தயக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கோதுமை மாவில் வெந்தயக் கீரை, மஞ்சள்தூள், ஓமம், இஞ்சி, பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு பிசிறவும். அதில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து 20 நிமிடங்கள் ஊறவிடவும். சென்ற இதழில் கூறிய முறைகளில் செய்முறை - அடுக்கு 5 தவிர, ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி பராத்தாக்களைச் செய்யவும்.

அடுக்கு பராத்தா அமர்க்களம்!

அச்சாரி லச்சா பராத்தா

கோதுமை மாவு, ரெடிமேட் ஊறுகாய் மசாலா, உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும். உப்பைச் சற்றுக் கவனமாகச் சேர்க்கவும். ஏனெனில், ஊறுகாய் மற்றும் ஊறுகாய் மசாலாவில் ஏற்கெனவே உப்பு சேர்க்கப்பட்டுள்ளது. பிசைந்து வைத்த மாவைச் சப்பாத்திக்குச் செய்வதுபோல உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக்கொள்ளவும். எண்ணெய் மற்றும் ஏதேனும் ஓர் ஊறுகாய் மசாலா மற்றும் அதில் இருக்கும் காய்கறியைச் சப்பாத்தியின் மேலே தடவி, கொஞ்சம் கோதுமை மாவைத் தூவவும். சென்ற இதழில் கூறிய முறைகளில் செய்முறை - அடுக்கு 4, 5, 7 தவிர, ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி பராத்தாக்களைச் செய்யவும்.

அடுக்கு பராத்தா அமர்க்களம்!

3 இன் 1 (மூவண்ண) லச்சா பரோட்டா

பச்சை நிற லேயர்

ஒரு கப் கொதிக்கும் நீரில் கழுவிய பாலக்கீரை மற்றும் சர்க்கரை சேர்த்து இரண்டு கொதிக்கவிட்டு இறக்கவும். உடனே குளிர்ந்த நீரில் அலசி நீரை வடிக்கவும். இந்த முறையை `பிளான்சிங்' (blanching) என்பார்கள். இவ்வாறு செய்யும்போது கீரை மிகவும் `பளிச்’ பச்சையாக மாறிவிடும். மிக்ஸியில் கீரை, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைக்கவும். இந்த விழுதை அரை கப் கோதுமை மாவில் ஊற்றி, உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

அடுக்கு பராத்தா அமர்க்களம்!

சிவப்பு நிற லேயர்

பீட்ரூட்டைத் தோல் நீக்கி அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய விழுதை அரை கப் கோதுமை மாவில் ஊற்றி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

மஞ்சள் நிற லேயர்

கேரட்டைத் தோல் நீக்கி, அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய விழுதை அரை கப் கோதுமை மாவில் ஊற்றி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும்.

இப்போது மூன்று வண்ண மாவு தயாராக உள்ளது. ஒவ்வொரு வண்ணத் திலும் ஒரு சப்பாத்தி திரட்டி மூன்றையும் சம அளவிலான சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொன்றின் மீதும் நெய் /
எண்ணெய் தடவி, கொஞ்சம் கோதுமை மாவைத் தூவவும். ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக்கொள்ளவும். சென்ற இதழில் கூறிய முறைகளில் செய்முறை - அடுக்கு 2-ஐப் பின்பற்றி பராத்தாக்களைத் தயாரிக்கவும்.

புரோக்கோலி, பனீர் ஸ்டஃப்டு லச்சா பராத்தா

சென்ற இதழில் கூறிய முறைகளில் ஏதேனும் ஒருமுறையைப் பயன்படுத்தி பராத்தா திரட்டிக்கொள்ளவும். புரோக்கோலியை `பிளான்ச்' செய்து துருவிக்கொள்ளவும். பனீரைத் துருவிக் கொள்ளவும். கோதுமை மாவில் புரோக் கோலி, பனீர், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். ஒரு பாதியில் 2 டேபிள்ஸ்பூன் புரோக்கோலி - பனீர் கலவையை வைத்து, ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி அழுத்தி மூடவும். பிறகு வேகவைத்து பரிமாறவும்.

அவகாடோ - ஸ்பினச் லச்சா பராத்தா

அவகாடோவை நீளவாக்கில் பாதியாக வெட்டி அதன் கொட்டையை நீக்கவும். பிறகு பழத்தை ஒரு ஸ்பூனால் ஸ்கூப் செய்யவும். பாலக்கீரையை `பிளான்ச்' செய்துகொள்ளவும். வேகவைத்த பாலக்கீரை, அவகாடோ விழுது மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதைக் கோதுமை மாவில் ஊற்றி, உப்பு, சீரகத்தூள், ஓமம், நெய், தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும். சென்ற இதழில் கூறிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி பராத்தாக்களை செய்யவும் (செய்முறை - அடுக்கு 5 தவிர).

அடுக்கு பராத்தா அமர்க்களம்!

மசாலா லச்சா பராத்தா

கோதுமை மாவுடன் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, ஓமம், புளித்த மோர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து அரை
மணி நேரம் வைக்கவும். மாவை முழுவதையும் ஒரு பெரிய மெல்லிய செவ்வகச் சப்பாத்தியாகத் தேய்த்துக்கொள்ள வும். எண்ணெய் / நெய்யை மேலே தடவி, ஒரு டீஸ்பூன் கோதுமை மாவைத் தூவவும். இதன் மேல் ஒன்றன் பின் ஒன்றாக சில்லி ஃப்ளேக்ஸ், வெங்காயம், கொத்தமல்லித்தழை, தனியாத்தூள், வறுத்துப் பொடித்த சீரகத்தூள், கறுப்பு உப்பு தூவவும். மேல் பக்கத்தில் இருந்து ஆரம்பித்து, கடைசி வரை நன்கு கெட்டியாக உருட்டு வடிவம் போல் உருட்டிக்கொண்டே வரவும். பிறகு இதை எட்டு சம பாகங்களாக வெட்டிக்கொள்ளவும். ஒவ்வொன்றையும் செங்குத்தாக நிற்கவைத்து உள்ளங்கையால் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இதேபோல் மீதம் இருக்கும் மாவை வட்டங்களாக (circular discs) செய்து கொள்ளவும். பராத்தாக்களைத் திரட்டி வேகவைத்துக்கொள்ளவும்.

இத்தாலியன் லச்சா பராத்தா

கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், ஒரு டீஸ்பூன் ஓரிகானோ, உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும். பிசைந்து வைத்த மாவைச் சப்பாத்திக்குச் செய்வது போல உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகானோ தூவவும். சென்ற இதழில் கூறிய முறைகளில் செய்முறை - அடுக்கு 5 தவிர, ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி பராத்தாக்களைச் செய்யவும்.

அடுக்கு பராத்தா அமர்க்களம்!

தந்தூரி ஸ்டைல் லச்சா பராத்தா

சென்ற இதழில் கூறிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி  கோதுமை மாவில் பராத்தாக்களைத் திரட்டிக்கொள்ளவும். பராத்தாவின் மேல்புறம் தண்ணீர் தடவி அந்தப் பக்கத்தை நன்கு சூடான தோசைக்கல்லில் போட்டு லேசாக அழுத்திவிடவும். மிதமான தீயில் வேகவைக்கவும். மேல் பக்கம் சற்று நிறம் மாறியதும் தவாவைத் திருப்பி ரொட்டியை நேரடியாக மிகவும் குறைவான தீயில் காட்டி வேகவைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தடவி ஒட்டிய பக்கத்தையும் நேரடியாகத் தணலில் காட்டி சற்று வேகவைத்துக்கொள்ளவும். நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறவும்.

அடுக்கு பராத்தா அமர்க்களம்!

கார்லிக் லச்சா பராத்தா, புதினா லச்சா பராத்தா, கோரியண்டர் லச்சா பராத்தா:

சென்ற இதழில் கூறிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி கோதுமை மாவில் பராத்தாக்களைச் செய்யவும். உள்ளங்கையால் அழுத்தி வட்டங்களாக (circular discs) செய்து வைத்துக் கொள்ளவும்.

கார்லிக் லச்சா பராத்தா: பிறகு இந்த வட்டங்களைப் பூண்டில் ஒரு முறை அழுத்தி பராத்தாவாக திரட்டி வேகவைத்துக்கொள்ளவும்.

புதினா லச்சா பராத்தா: பிறகு இந்த வட்டங்களைப் புதினாவில் ஒருமுறை அழுத்தி பராத்தாவாகத் திரட்டி வேகவைத்துக்கொள்ளவும்.

கோரியண்டர் லச்சா பராத்தா: பிறகு இந்த வட்டங்களை கொத்த மல்லித்தழையில் ஒருமுறை அழுத்தி பராத்தாவாகத் திரட்டி வேகவைத்துக் கொள்ளவும்.