தீப ஒளித் திருநாளில் தித்திக்கும் பலகாரங்களைத் தயாரித்து உற்றாருக்கும் உறவினருக்கும் மகிழ்ச்சியுடன் அளிப்பது நம் பாரம்பர்ய வழக்கம். பொதுவாக பல வீடுகளில் ஒரேவிதமான ஸ்வீட் வகைகளே எவ்வித மாற்றமும் இல்லாமல் செய்யப்படுகின்றன. அதனால், நம் வீட்டுக்கு வரும் தீபாவளி பலகாரத் தட்டுகளில் வித்தியாசமான ஸ்வீட்டைக் கண்டாலோ, அது யாருக்கு என்பதில் ஜாலி ரகளை நடக்கும்.

இதுபோல பார்த்தவுடன் போட்டி போட்டு சாப்பிடத் தூண்டுகிற சுவையான ஸ்வீட் வகைகளை அழகிய படங்களுடன் நமக்காக அளித்திருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த சமையல் கலைஞரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட்டுமான புனிதா உபேந்திரன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெசிப்பிஸ் & படங்கள்: புனிதா உபேந்திரன்
பால் போளி
தேவையானவை:
மைதா - ஒரு கப்
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நறுக்கிய நட்ஸ்
(பாதாம், முந்திரி, பிஸ்தா) -
அலங்கரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
பாத்திரத்தில் மைதா, நெய், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பாலைக் காயவிட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். பிசைந்துவைத்த மாவைப் பூரி போல திரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும். பூரிகளைப் பாலில் ஊறவைத்து, நறுக்கிய நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
கவனம்... உயர்தரமான காஷ்மீரி குங்குமப்பூவானது விலை குறைவான இரானிய இறக்குமதி குங்குமப்பூவுடன் கலக்கப்படுகிறது.
பனானா அல்வா
தேவையானவை:
பழுத்த வாழைப்பழம் - 6
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 6 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரி - தேவையான அளவு (நறுக்கவும்)

செய்முறை:
வாழைப்பழத்தை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கிக்கொள்ளவும். அடி கனமான நான் - ஸ்டிக் பானில் (pan) 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு, முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துவைக்கவும். அதே பானில் 4 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு வாழைப்பழ விழுதைச் சேர்க்கவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கலவை கெட்டியாகி, பானின் பக்கவாட்டில் இருந்து பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வேகவிடவும். பிறகு நெய் தடவிய தட்டில் கலவையைச் சேர்த்து ஆறவிட்டு, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தபோது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். அவரே கிரேக்கம் மற்றும் மேலை நாடுகளில் இப்பழத்தை அறிமுகப்படுத்தினாராம்.
பாதாம் கீர்
தேவையானவை:
பாதாம் - 30
கொழுப்பு நீக்கப்படாத பால் - ஒன்றரை லிட்டர்
சர்க்கரை - கால் கப்
குங்குமப்பூ - கால் டீஸ்பூன்
நறுக்கிய பாதாம் - பிஸ்தா - 6 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பாதாமை 20 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து, தோலுரித்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நறுக்கிய பாதாம் - பிஸ்தாவில் அலங்கரிக்க சிறிதளவு தனியே எடுத்து வைக்கவும். அடிகனமான கடாயில் பாலைக் கொதிக்கவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குங்குமப்பூ, பாதாம் விழுது சேர்த்து, பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை, நறுக்கிய பாதாம் - பிஸ்தா சேர்த்து 15 நிமிடங்கள் வேகவிடவும். தனியே எடுத்துவைத்த நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
பாதாம், ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் கிடைக்கிறது.
டிரை ஃப்ரூட் பர்ஃபி
தேவையானவை:
விதை இல்லாத பேரீச்சை - 500 கிராம்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
டிரை ஃப்ரூட்ஸ் (பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து) - 2 கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
பேரீச்சையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கசகசாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். டிரை ஃப்ரூட்ஸை மிக்ஸியில் போட்டு 3 (அ) 4 சுற்றுவிட்டு சிறிய துண்டுகளாக்கிக்கொள்ளவும் சிறிதளவு துண்டுகளைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு டிரை ஃப்ரூட் கலவையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு அரைத்த பேரீச்சையைச் சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். டிரை ஃப்ரூட்ஸ், ஏலக்காய்த்தூள், ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து நன்கு கலந்து இறக்கி, சிறிது நேரம் ஆறவிடவும். மீதமுள்ள கசகசா, தனியே எடுத்து வைத்த டிரை ஃப்ரூட்ஸை ஒரு தட்டில் பரப்பி, அதில் பேரீச்சை கலவையைச் சேர்த்து அழுத்தி சமமாகப் பரப்பவும். துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
எகிப்து, இரான், சவுதி அரேபியா, யு.ஏ.ஈ., பாகிஸ்தான், அல்ஜீரியா நாடுகளில்தான் அதிக அளவு பேரீச்சை உற்பத்தி செய்யப்படுகிறது.
டிரை ஃப்ரூட் சாக்லேட் ட்ரஃபிள்ஸ்
தேவையானவை:
க்ரீம் - 250 மில்லி
டார்க் குக்கிங் சாக்லேட் - 500 கிராம்
நறுக்கிய நட்ஸ் கலவை (பாதாம், பிஸ்தா, முந்திரி) - கால் கப்

செய்முறை:
சிறிதளவு நட்ஸ் கலவையை தனியே எடுத்து வைக்கவும். அடிகனமான கடாயில் க்ரீம், நறுக்கிய டார்க் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து இரண்டும் ஒன்று சேரும்வரை வேகவிடவும். நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் 30 நிமிடங்கள் குளிரவைக்கவும். பிறகு கலவையை உருண்டைகளாக்கி, தனியே எடுத்து வைத்த நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
சற்றே கசப்பும் இனிப்பும் கலந்த டார்க் சாக்லேட்டில்தான் நிறைய சத்துகள் உள்ளன.
சந்திரகலா
தேவையானவை:
மைதா - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
இனிப்பில்லாத கோவா - அரை கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
சர்க்கரைத்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய நட்ஸ் (பாதாம், பிஸ்தா, முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 2 கப்

செய்முறை:
தண்ணீருடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து, ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். மைதாவுடன் நெய், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும். கோவாவை உதிர்த்து, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பிசைந்துவைத்த மாவை, சிறிய உருண்டைகளாக்கி, சிறிய பூரிகளாகத் திரட்டிக்கொள்ளவும். பூரிகளின் நடுவே கோவா உருண்டைகளை வைத்து ஓரங்களை நன்றாக ஒட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இவற்றை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். 5 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து நட்ஸ், எடிபிள் சில்வர் ஃபாயில் கொண்டு அலங்கரிக்கவும்.
தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவு முந்திரி பயிரிடப்படுகிறது.
நியூடெல்லா ஜார்
தேவையானவை:
விப்பிங் க்ரீம் - ஒரு கப்
நியூடெல்லா - 100 கிராம்
டின் செர்ரி - அரை கப்

செய்முறை:
சிறிதளவு செர்ரிப் பழங்களை தனியே எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை ஹேண்ட் பிளெண்டரில் சேர்த்து கெட்டியாகும் வரை அடித்துக்கொள்ளவும். இதை இரண்டு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும். ஒரு பாகத்துடன் நியூடெல்லா சேர்த்துக் கலக்கவும். ஒரு ஜாடியில் பாதியளவுக்கு இதைச் சேர்த்து, நறுக்கிய செர்ரி சேர்க்கவும். நியூடெல்லா சேர்க்காத விப்பிங் க்ரீமை பைபிங் பேகில் போட்டு மேலே பிழியவும். தனியே எடுத்து வைத்த செர்ரி கொண்டு அலங்கரிக்கவும்.
பதப்படுத்தாத ஸ்வீட் செர்ரிப் பழத்தில் 82% நீர்ச்சத்து உள்ளது. அதோடு 16% மாவுச்சத்து, 1% புரதம் மற்றும் மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது.