ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும்... நிறைய குழந்தைகள் ஒன்றுசேர்ந்தால்! நமக்கோ திண்டாடமாகிவிடும்... என்ன சமைத்துத் தரலாம் என! குழந்தைகளுக்குப் பிறந்த நாள் விழாவில் தொடங்கி, இப்போது வீக் எண்டு கொண்டாட்டம், கெட் டுகெதர் மீட், முதல் மதிப்பெண் எடுத்தால் ட்ரீட் எனப் புதிது புதிதாக ட்ரெண்ட் களைகட்டத் தொடங்கியுள்ளது.

அவர்களுக்குப் பிடித்த மாதிரி, அதேநேரம் சத்துகள் நிறைந்த உணவுகளை செய்வது எப்படி என இங்கே வழிகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுதா செல்வகுமார், படங்கள்: தி.குமரகுருபரன்
கிரன்ச் மன்ச் பால்ஸ்
தேவையானவை:
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
வெற்றிலை - 15
நெய் - தேவையான அளவு
சாக்கோ சிப்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்
ரோஜா குல்கந்து – ஒரு டேபிள்ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளவும்)
வறுத்துப் பொடித்த பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்துப் பொடித்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
விதை எடுத்த முழு பேரீச்சை – 10 (சரிசமமாகப் பிளந்துகொள்ளவும்)

செய்முறை:
வெற்றிலையை அலசி, நறுக்கி கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடானதும் தேங்காய்த் துருவலை வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வெற்றிலை விழுதை அதில் ஊற்றிக் கிளறி, முந்திரிப் பொடி, பாதாம் பொடி சிறிதளவு நெய்விட்டுக் கிளறி, ரோஜா குல்கந்து சேர்த்துக் கிளறி இறக்கி வேர்க்கடலை, சாக்கோ சிப்ஸ் சேர்க்கவும். கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பேரீச்சைத் துண்டு வைத்து மூடி உருண்டை பிடிக்கவும். இதே மாதிரி எல்லாவற்றையும் செய்துகொள்ளவும். சுவையான, சத்தான கிரன்ச் மன்ச் பால்ஸ் ரெடி.
முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரதமும் குளுகோஸும் அதிகம்.
ஸ்ட்ரைப்ஸ் ஸ்நாக்ஸ்
தேவையானவை:
கோதுமை மாவு – அரை கப்
மைதா – கால் கப்
கடலை மாவு – கால் கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5 (தோல் உரித்து விழுதாக அரைக்கவும்)
ஓமம் - அரை டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
ரெடிமேட் மயோனைஸ் – தேவையான அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெறும் வாணலியில் ரவை மற்றும் மாவு வகைகளைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதை வாய் அகன்ற பாத்திரத்தில் சேர்த்து, எண்ணெய், மயோனைஸ் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துச் சிறிதளவுத் தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். மாவைச் சப்பாத்திகளாகத் திரட்டி மெல்லிய ரிப்பன் மாதிரி நீள நீளமாகக் கத்தியால் வெட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் இதைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மயோனைஸ் உடன் பரிமாறவும்.
தேவையான அளவு கோதுமை நொய்யை முன்தினமே நீரில் ஊறவைத்து, காலையில் நன்றாக அடித்துப் பசையாக்கி, மெல்லிய துணியில் வடிகட்டி பிழிந்தெடுத்தால் `கோதுமைப்பால்’ ரெடி.
சேமியா பனீர் டபுள் டெக்கர் ட்ரீட்
தேவையானவை:
சேமியா அடுக்குக்கு:
வறுத்த சேமியா - அரை கப்
கஸ்டர்ட் பவுடர் (விருப்பமான ஃப்ளேவர்) - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
பால் - ஒன்றரை கப்
வெண்ணெய் - 50 கிராம்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பட்டை – கிராம்பு பொடி - ஒரு சிட்டிகை
டூட்டி ஃப்ரூட்டி – ஒரு டேபிள்ஸ்பூன்
பனீர் அடுக்குக்கு:
பனீர் துருவல் - ஒரு கப்
வறுத்த ரவை - கால் கப்
பொடித்த சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உலர்திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்
மக்காச்சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – சிறிதளவு
அலங்கரிக்க:
மெலிதாக நறுக்கிய பிஸ்தா, பாதாம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - 2 டேபிள்ஸ்பூன்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர்விட்டு கொதிவந்தவுடன் சேமியாவைப் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும். பிறகு குளிர்ந்த நீர் சேர்த்து வடிக்கட்டவும் (இப்படிச் செய்வதால் சேமியா ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரியாக வரும்). அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் பாலைச் சேர்த்துச் சூடுபடுத்தவும். சர்க்கரை சேர்க்கவும். பட்டை - கிராம்புப் பொடி, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். மீதமுள்ள அரை கப் பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் பாலில் ஊற்றி, கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வெந்த சேமியா, குங்குமப்பூ, வெண்ணெயை இதனுடன் கலக்கவும். வெண்ணெய் தடவிய விருப்பமான வடிவ பேக்கிங் ட்ரேயில் ஊற்றவும். பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 180 டிகிரி செல்ஷியஸில் பத்து நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
அடுத்து, பனீர் அடுக்குக்குத் தேவையான பொருள்களை மிக்ஸியில் சேர்த்து அடித்துக்கொள்ளவும். சேமியா அடுக்கின் மீது இக்கலவையை ஊற்றி அவனில் வைத்து மேற்புறம் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். வெந்ததும் வெளியில் எடுத்துப் பரிமாறும் தட்டுக்கு மாற்றவும். குறைந்த தீயில் அடுப்பை வைத்து பானில் (pan) மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம், தேன் விட்டுக் கிளறவும். உருகிய தன்மை வந்ததும் இறக்கி, செய்து வைத்த டபுள் டெக்கர் மீது ஊற்றிப் பரப்பவும். மேலே நட்ஸ் தூவி அலங்கரித்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்து, பிறகு கட் செய்து பரிமாறவும்.
குறிப்பு:
ஃப்ரிட்ஜில் வைக்காமல் சூடாகவும் இந்த புடிங்கைச் சாப்பிடலாம்
சேமியா அல்லது பனீர் புடிங் எது வேண்டுமானாலும் முதலில் வரலாம்.
சேமியாவும் பாஸ்தா வகையைச் சேர்ந்ததே!
கோகனட் சாக்கோ டிலைட்
தேவையானவை:
கடல் பாசி (china grass) - 10 கிராம்
இளநீர் - அரை கப்
இளநீர் வழுக்கை - அரை கப்
சாக்லேட் பார் – ஒன்று
கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்
சர்க்கரை – அரை கப்
வாழைப்பழம் – ஒன்று
பச்சை திராட்சை (விதை நீக்கி, நறுக்கியது) - சிறிதளவு
வெனிலா எசென்ஸ் – 2 துளி
துண்டுகளாக்கி வறுத்த விருப்பமான நட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
பிளெய்ன் கேக் (விருப்பமான ஃப்ளேவர்) – 2 துண்டுகள்
ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப்
ஜெம்ஸ் மிட்டாய் - சிறிதளவு

செய்முறை:
கடல் பாசியைப் பொடியாக நறுக்கிக்கொண்டு சிறிதளவு நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கையாலோ, மத்தாலோ மசித்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் ஒரு கப் தண்ணீர்விட்டுச் சூடாக்கவும். நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் மசித்த கடல் பாசியைக் கலந்து அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும். கடல் பாசி நன்கு கரைந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நடு நடுவே கிளறிவிடவும். சர்க்கரை கரைந்து பளபளப்புத்தன்மை வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். பாதி சாக்லேட்டைத் துருவிக்கொள்ளவும். மீதியைச் சிறிய துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கண்டன்ஸ்டு மில்க் உடன் ஃப்ரெஷ் க்ரீம், இளநீர், இளநீர் வழுக்கை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். இதைக் கடல் பாசி கலவையில் ஊற்றிக் கலக்கவும். விருப்பமான வடிவ அகன்ற பாத்திரம் அல்லது மோல்டின் உட்புறம் வெண்ணெய் தடவி, துண்டுகளாக்கிய சாக்லேட்டை அடுக்கவும். அடுத்து கேக் துண்டுகளை அடுக்கவும். பிறகு கலந்துவைத்துள்ள கலவையை ஊற்றவும். ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்து, துருவிய சாக்லேட், வாழைப்பழத் துண்டுகள், பச்சை திராட்சை, நட்ஸை மேலே சேர்த்து, நடுவே ஜெம்ஸ் மிட்டாய் வைத்து அலங்கரித்துத் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
`உயிர்தரும் திரவம்’ என்ற பாராட்டுக்குரியது இளநீர்.
மேரி லாக்
தேவையானவை:
மேரி பிஸ்கட் அல்லது க்ரீம்
இல்லாத பிஸ்கட் (விருப்பமானது) - 12
ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்
வெனிலா கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – 50 மில்லி
சர்க்கரை – அரை கப்
ஸ்ட்ராபெர்ரி பழம் - 3 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
செர்ரி - அலங்கரிக்கத் தேவையான அளவு
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஐசிங் சுகர் – கால் கப்
கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
கலர் ஸ்பிரிங்கிள்ஸ் – தேவையான அளவு
ஐஸ் குச்சிகள் – தேவையான அளவு
வெனிலா எசென்ஸ் - 2 துளிகள்
ரெடிமேட் விப்பிங் க்ரீம் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் பால், கஸ்டர்ட் பவுடர், சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து, தீயைக் குறைத்துக் கைவிடாமல் கிளறவும். கலவை கெட்டிப்பட்டதும் நிறுத்தி ஸ்ட்ராபெர்ரி விழுதை அதில் கலக்கவும். ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் க்ரீம் ரெடி. மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், கோகோ பவுடர், விப்பிங் கிரீம், வெனிலா எசென்ஸ், ஐசிங் சுகர் ஆகியவற்றைக் கலந்து நன்றாக அடித்துக்கொள்ளவும். இப்போது கோகோ ஃபிளேவர் க்ரீம் ரெடி. இரண்டு க்ரீம்களையும் தனித்தனியே ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
மேரி பிஸ்கட் ஒன்றின்மீது செய்து வைத்துள்ள ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் க்ரீமை சிறிதளவு தடவி அதன் மீது மற்றொரு மேரி பிஸ்கட் வைத்து அதில் கோகோ விப்பிங் கிரீம் கலவையைத் தடவி மேலே கலர் ஸ்பிரிங்கிள்ஸ் தூவி, நடுவில் செர்ரி வைத்து அலங்கரித்து, கீழ்ப்புறம் (இரு பிஸ்கட் நடுவே) ஐஸ் குச்சி செருகவும். எல்லா பிஸ்கட்டுகளிலும் இப்படிச் செய்துகொள்ளவும். பத்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.
குறிப்பு: சீஸனுக்குத் தகுந்த மாதிரி மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம் என பழக்கூழ் சேர்த்துக்கொள்ளலாம்.
`டீ பிஸ்கட்’ என்ற அடையாளத்தோடு இங்கிலாந்தில் பிரசித்திப் பெற்றுள்ளது மேரி பிஸ்கட்!
க்யூட்டி சாண்ட்விச்
தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 6
நெய் - சிறிதளவு
வெண்ணெய் – 50 கிராம்
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
ஆலிவ் காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
ஜெம்ஸ் மிட்டாய் மற்றும் செர்ரி - அலங்கரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் சிறிது நெய்விட்டுச் சூடானதும் கேரட் துருவலைச் சேர்த்து வதக்கி, ஆலிவ் காய், உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கிளறி நிறுத்தவும். வெஜ் பிரெட் ஸ்பிரெட் (bread spread) ரெடி. ஒரு பான் (pan) அல்லது தோசைக்கல்லில் நெய்விட்டுச் சூடானதும் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவும். நடுத்தர அளவுள்ள வட்டமான மூடியை எடுத்து எல்லா பிரெட் ஸ்லைஸ்களிலும் வைத்து அழுத்தி எடுக்கவும்.
சுலபமான க்யூட்டி டெட்டி பியர் மாதிரி செய்ய போகிறோம். அதற்கு உடல் பகுதிக்கு இரு வட்ட வடிவ பிரெட் துண்டும், முகத்துக்கு ஒரு வட்ட பிரெட் துண்டும் தேவைப்படும். இரு வட்ட வடிவ பிரெட் துண்டுகள் நடுவில் தயார்செய்து வைத்துள்ள வெஜ் பிரெட் ஸ்பெரெட்டை சிறிது எடுத்துப் பரப்பி தடவவும். இது உடல் பகுதி. அதன் மேற்புறம் ஒரு வட்ட வடிவ பிரெட்டை வைக்கவும். அது தலைப் பகுதி. அதன் மீது கண்ணுக்கு ஜெம்ஸ் மிட்டாய், மூக்குக்கு செர்ரி வைத்து, காதுக்குச் சிறிய வட்ட பிரெட் துண்டு வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
கண்ணுக்கினிய கேரட்டில் ஏ, சி, கே வைட்டமின்களும் பொட்டாசியமும் உள்ளன.
ஃப்ரூட்ஸ் டிக்கா
தேவையானவை:
வெள்ளரிக்காய், பெங்களூரு தக்காளி – தலா ஒன்று
கறுப்பு மற்றும் பச்சை திராட்சை - தலா பத்து
உலர் செர்ரி - 5
சாக்கோ சிரப் - 2 டேபிள்ஸ்பூன்
டிக்கா குச்சிகள் - தேவையான அளவு
ஸ்டார் வடிவ குக்கீஸ்/பிஸ்கட் கட்டர் (சிறியது) - ஒன்று

செய்முறை:
வெள்ளரிக்காயைத் தோல் சீவி வட்ட வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஸ்டார் வடிவ கட்டரால் அதன் நடுவே வைத்து அழுத்தி எடுக்கவும். ஸ்டார் வடிவ வெள்ளரித் துண்டை தனியே வைக்கவும். இப்போது பார்ப்பதற்கு வெள்ளரி வட்டத் துண்டுக்கு நடுவே ஸ்டார் வடிவ ஓட்டை தெரியும். தக்காளியைத் துண்டாக வெட்டி ஸ்டார் வடிவ கட்டரை வைத்து அழுத்தி எடுத்து வெள்ளரிக்காயில் உள்ள ஓட்டையில் பொருத்தவும். வெள்ளரிக்காய்க்குள் தக்காளி இருக்கும் (பார்க்க... படம்). சுவையும் இருவிதமாகக் கிடைக்கும். இதே மாதிரி எல்லாவற்றையும் செய்து கொள்ளவும். டிக்கா குச்சியில் முதலில் இரு பச்சை திராட்சைகளைச் செருகவும். பிறகு செர்ரி செருகி, அடுத்து 2 கறுப்பு திராட்சைகளைச் செருகவும் (பார்க்க... படம்). பிறகு அதன்மீது ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள ஸ்டார் தக்காளி - வெள்ளரி துண்டைச் செருகவும். இப்போது ஃப்ரூட் டிக்கா தயார். எல்லாவற்றையும் இப்படி தயார் செய்துகொள்ளவும். எல்லாவற்றிலும் சாக்கோ சிரப் சிறிதளவு தடவி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
வெள்ளரி உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிப்பது சீனா.
ஆரஞ்சு ஃப்ரூட் மோல்டு
தேவையானவை:
ஆரஞ்சுப்பழம் - ஒன்று (தோலுரித்து, விதை நீக்கிக்கொள்ளவும்)
கோதுமை பிரெட் – 4 ஸ்லைஸ்
அவல் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பால் - அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
நெய் - சிறிதளவு

செய்முறை:
அவலைப் பத்து நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துக்கொள்ளவும். ஆரஞ்சுப் பழத்தைத் தோலுரித்து, விதை நீக்கிக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் பாலை ஊற்றிச் சூடாக்கி கொதிவந்ததும், அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, பிரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டுப் பிய்த்துப் பாலில் சேர்க்கவும். இதனுடன் அவல் சேர்த்துக் கிளறவும். பிறகு பனீர் துருவல், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு சிறிதளவு நெய்விட்டுக் கிளறி, சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து அந்தச் சூட்டிலேயே ஆரஞ்சுச் சுளைகளை போட்டுக்கிளறி ஆறவிடவும். சிலிக்கான் மோல்டில் இதை ஊற்றி ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்து மோல்டிலிருந்து எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு:
சிலிக்கான் மோல்டில் ஊற்றிய கலவையை ஃப்ரிட்ஜில் வைக்காமல் ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துச் சூடாகவும் சாப்பிடலாம்.
ஆரஞ்சு மரம் 10 மீட்டர் உயரம் வரை வளரும்.
டேட்ஸ் ஸ்நோ க்ரீம்
தேவையானவை:
பேரீச்சம்பழம் - 20
சப்ஜா விதை - ஒரு டீஸ்பூன் (நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்)
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
ஃப்ரெஷ் க்ரீம் – அரை கப்
முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
விதை நீக்கி நறுக்கிய பேரீச்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
டேட்ஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த திக்கான பால் - கால் கப்

செய்முறை:
பேரீச்சையை விதை நீக்கி நறுக்கி வெந்நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். முந்திரிப்பருப்பையும் அதனுடன் ஊறவைக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து, பால்விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும். நன்றாக விழுதானவுடன் கண்டன்ஸ்டு மில்க், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பரிமாறும் கண்ணாடி பவுல் அல்லது கண்ணாடி டம்ளரில் டேட்ஸ் க்ரீமை ஊற்றி அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம் வைத்து, டேட்ஸ் சிரப் ஊற்றி, சப்ஜா விதை தூவி, நறுக்கிய பேரீச்சை தூவி, ஃப்ரீசரில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
சப்ஜா விதைகள் பித்தத்தைக் குறைக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
கார்ன் பேல் சாட்
தேவையானவை:
வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – அரை கப்
ஆலிவ் காய் (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
மசாலா பொரி - மேலே தூவ தேவையான அளவு
மாங்காய் (சதுரமாக நறுக்கிய சிறிய துண்டுகள்) – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய்/நெய், உப்பு - சிறிதளவு
பவுல் செய்ய:
நெய் - சிறிதளவு
உடைத்த சேமியா – அரை கப்
கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
வாணலியில் நெய்விட்டு சேமியாவைச் சிவக்க வறுக்கவும். அதில் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றிக் கிளறி நிறுத்தவும். விருப்பமான கிண்ணத்தில் உள்ளே சிறிது வெண்ணெய் தடவி சேமியா கலவையை அதில் போட்டு, கிண்ணம் மாதிரி குழியாக அழுத்திவிடவும். இதை ஃப்ரீசரில் 5 மணி நேரம் வைத்து எடுத்து, கிண்ணத்திலிருந்து சேமியா பவுலை எடுக்கவும். இதில் கார்ன் சாட் போட்டு அப்படியே சாப்பிடலாம்.
வாணலியில் எண்ணெய் / நெய்விட்டுச் சூடானதும் இஞ்சி, சோளம், கிரீன் சில்லி சாஸ், உப்பு, ஆலிவ் காய், மாங்காய் சேர்த்து வதக்கி, சாட் மசாலாத்தூள் தூவி அடுப்பை அணைக்கவும். இதை சேமியா பவுலில் போட்டு மசாலா பொரி தூவிப் பரிமாறவும். இனிப்பு, காரம், புளிப்புச் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும் இந்த சாட்.
குறிப்பு:
சேமியாவை வறுத்து நீரில் வேகவிட்டு எடுத்து கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து மேற்கூறிய முறையில் பவுல் தயாரிக்கலாம். சேமியா பவுல் டீப் ஃப்ரீஸ் ஆகியிருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் சாட் வைக்கும்போது பவுல் பிரிந்து வந்துவிடும்.
ஸ்வீட் கார்னிலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி கார்ன் உருவாக்கப்பட்டுள்ளது.