நிறைய தீபாவளி பட்சணங்களில் கடலைமாவு அல்லது மைதா மாவுதான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், என்னதான் வாசனையும் சுவையும் சுண்டியிழுத்தாலும், சிலர் அந்தப் பக்கமே திரும்ப மாட்டார்கள். `தீபாவளியன்றும் டயட்டா’ என்று நீங்கள் விழி உயர்த்துவது தெரிகிறது. ஆரோக்கிய விரும்பிகளுக்கும் அறுசுவை தீபாவளி சாத்தியமே என வித்தியாசமான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல்கலைஞர் அன்னம் செந்தில்குமார்.

ஓட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், புதினா, தாமரை விதை, வெள்ளரி விதை, கொள்ளு என ஸ்வீட், காரங்களில் இவர் பயன்படுத்தியிருப்பவை அனைத்தும் ‘கிச்சன் கிளினிக்’ அயிட்டங்கள்! சத்தோடு சுவையையும் அள்ளித்தரும் இந்த ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸை ருசிக்கும்போது,‘இத்தனை நாள்களாக எங்கிருந்தாய்?’ என்று ஆசையோடு கேட்கத் தோன்றும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெசிப்பிஸ் & படங்கள்: அன்னம் செந்தில்குமார்
ராஜ்கிரா பர்ஃபி
தேவையானவை:
ராஜ்கிரா பொரி - ஒன்றரை கப்
துருவிய வெல்லம் - ஒரு கப்
முந்திரி - கால் கப் (விருப்பப்பட்டால்)
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு கடாயில் நெய், வெல்லம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடாக்கவும். பாகு நுரைத்து ஒரு கம்பி பதம் வந்தவுடன் ராஜ்கிரா பொரி, உடைத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி, துண்டுகள் போடவும். பர்ஃபி வட்டமாக வேண்டுமென்றால் சிறிய டப்பா மூடி அல்லது ரவுண்ட் குக்கி கட்டரால் கட் செய்து எடுக்கவும்.

குறிப்பு:
* ராஜ்கிரா விதை பயன்படுத்துவதாக இருந்தால் ஒரு கப் அளவு எடுத்துக்கொள்ளவும். ராஜ்கிரா விதையை வெறும் வாணலியில் பொரித்தால் அது நன்கு பொரியும். எல்லா விதைகளையும் பொரித்துக்கொண்டு பெரிய கண்ணுள்ள சல்லடையில் சலித்தால் பொரி மேலே நிற்கும் விதை கீழே விழும். ராஜ்கிரா பொரி கிடைக்காதவர்கள் இவ்வாறு செய்துகொள்ளலாம்
* ராஜ்கிரா என்பது முளைக்கீரை விதையாகும். இது நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ராஜ்கிரா பர்ஃபி வட மாநிலங்களில் மிகப் பிரபலமான ஒன்று. இங்கும் ஆர்கானிக் கடைகளில் கிடைக்கிறது. பொரியாகவும் கிடைக்கிறது; விதையாகவும் கிடைக்கிறது.
* பாகு வெல்லமாக வாங்கிக்கொள்ளவும். பாகு வெல்லம்தான் பர்ஃபிக்கு நன்றாக இருக்கும்.
நெய் சேர்க்காமல் வெல்லத்தில் ஒரு கம்பிப் பதம் பாகு வைத்து பின் பொரியைச் சேர்த்தும் பர்ஃபி செய்யலாம்.
ஏலக்காயும் இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிதான்.
ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர்
தேவையானவை:
ரோல்டு ஓட்ஸ் - ஒரு கப்
பாதாம், முந்திரி - தலா 10
வேர்க்கடலை - 20
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 20
கறிவேப்பிலை - 10
பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறிக்கொள்ளவும்)
கொப்பரைத் தேங்காய் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கிஸ்மிஸ், கொப்பரைத் தேங்காய் என்று இதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும். வறுத்தவற்றை டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை வடியவிடவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து, பின்னர் மிளகுத்தூள், உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் வறுத்து வைத்துள்ளவை எல்லாவற்றையும் சேர்க்கவும். கடைசியாகப் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
விருப்பப்பட்டால், தட்டையான அவலை வறுத்து இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப இனிப்பு, காரம் சேர்த்துக்கொள்ளலாம்.
வேர்க்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது.
லோட்டஸ் சீட் புடிங் (தாமரை விதை கீர்)
தேவையானவை:
பால் - அரை லிட்டர்
தாமரை விதை - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 10
பிஸ்தா, பாதாம், முந்திரி - தலா 8
குங்குமப்பூ - சிறிதளவு
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
ஜாதிப்பூ, ஜாதிக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை

செய்முறை:
வாணலியில் நெய்யைச் சூடாக்கி அதில் தாமரை விதைகளைப் போட்டு வறுக்கவும். அடுப்பைக் குறைத்து வைத்து மிதமான தீயில் தாமரை விதை மொறுமொறுப்பாகும் வரை, அதாவது 5 நிமிடங்கள் வறுக்கவும். கையில் எடுத்து அழுத்திப் பார்த்தால் உடைய வேண்டும். அதுவரை வறுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றில் சிறிதளவு அலங்கரிக்க எடுத்துக்கொண்டு மீதியுள்ளவற்றை கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, பொடித்து வைத்துள்ள பொடி, ஏலக்காய்த்தூள், ஜாதிப்பூ, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். பின்னர் வறுத்து வைத்துள்ள தாமரை விதையைக் கைகளால் ஒன்றிரண்டாக உடைத்து (மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கலாம்) பாலில் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் குங்குமப்பூ, நெய்யில் வறுத்த திராட்சை மற்றும் உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை மேலே தூவி அலங்கரித்துச் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம். கீர் திக்காக வேண்டுமென்றால் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.
குறிப்பு:
தாமரை விதை சத்துகள் நிறைந்தது. வடமாநிலங்களில் நவராத்திரி மற்றும் தீபாவளியன்று தாமரை விதை கீர் செய்வார்கள். விரத காலங்களிலும் இந்த கீர் செய்து சாப்பிடுவார்கள்.
தாமரை விதைகளில் புரதம் நிறைந்திருப்பதால் சீனர்கள் இதில் சூப் தயாரித்துப் பருகுகின்றனர்.
புதினா ஓமப்பொடி
தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
அரைக்க:
புதினா இலைகள்- ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
ஓமம் - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
மிக்ஸியில் புதினா, பச்சை மிளகாய், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் புதினா அரைத்த தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும். முறுக்கு பிழியும் குழலில் ஓமப்பொடி அச்சைப் போட்டுப் பிசைந்த மாவை வைத்து ஓமப்பொடியாகச் சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும் (மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். இல்லையென்றால் ஓமப்பொடி கருகிவிடும்). ஆறியவுடன் நொறுக்கி காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குறிப்பு:
அரைத்த விழுதை அப்படியே மாவில் சேர்த்துப் பிசைந்தால் அது ஓமப்பொடி அச்சில் மாட்டிக்கொண்டு பிழிய வராது. அதனால் அரைத்த விழுதை வடிகட்டிக்கொள்ளவும். ஓமம் சேர்க்காமல் வெறும் புதினா மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
அசைவ உணவு மற்றும் கொழுப்புப் பொருள்களை எளிதில் ஜீரணமாக்கும் தன்மை புதினாவுக்கு உண்டு.
பொட்டேட்டோ முறுக்கு
தேவையானவை:
அரிசி மாவு (அ) இடியாப்ப மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு (மீடியம் சைஸ்) - ஒன்று
வெண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக்கொள்ளவும். அல்லது மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உருளைக்கிழங்கு, வெண்ணெய், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு போட்டு நன்கு கலந்துகொள்ளவும். பிறகு தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும். முறுக்கு குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு, பிசைந்த மாவை வைத்துச் சூடான எண்ணெயில் முறுக்குகளாகப் பிழிந்துவிடவும். முறுக்கு இருபுறமும் நன்றாக வெந்து எண்ணெயின் ஓசை அடங்கியவுடன் எடுத்து எண்ணெயை வடியவிடவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குறிப்பு: முறுக்கு குழலில் எந்த அச்சை வேண்டும் என்றாலும் போட்டு இந்த முறுக்கைப் பிழியலாம்.
வெண்ணெய் 35 டிகிரிக்கு அதிகமான வெப்பத்தில் உருகி நெய்யாகும்.
கொள்ளு வெள்ளரி விதை மிக்ஸர்
தேவையானவை:
கொள்ளு, வெள்ளரி விதை - தலா ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு, அரிசி மாவு - ஒரு கப்
வெண்ணெய் - அரை டீஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு
ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்
கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கொள்ளுப் பயறை இரவு முழுவதும் ஊறவிடவும். பிறகு துணியில் போட்டு ஈரம் போக நிழலில் உலரவிடவும். உலர்ந்த பின் ஒரு வலைகரண்டியில் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வெள்ளரி விதையையும் அதே கரண்டியில் போட்டு, தீயைக் குறைத்து வைத்துப் பொரித்து எடுக்கவும். முந்திரிப்பருப்பையும் வறுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவி ஃபிங்கர் சிப்ஸுக்கு நறுக்குவது போல் நறுக்கி, எண்ணெயில் நன்றாகச் சிவக்க பொரித்துக்கொள்ளவும். கடலை மாவில் பாதி எடுத்துக் கொஞ்சம் அரிசி மாவு, வெண்ணெய், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து, இடியாப்ப அச்சில் இந்த மாவை வைத்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, மெல்லிய ஓமப்பொடியாகப் பொரித்துக்கொள்ளவும். மீதி கடலை மாவில், பச்சை ஃபுட் கலர், மீதமுள்ள அரிசி மாவு, தேவையான உப்பு, தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்து பூந்திக் கரண்டியில் ஊற்றி காராபூந்திகளாகப் பொரித்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை வடியவிடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாகக் கலந்துவிடவும். பின்னர் ஆம்சூர் பவுடர், கறுப்பு உப்பு, சாட் மசாலா, மிளகுத்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து, மிக்ஸருடன் சேர்த்துக் கலந்துவிடவும்.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் கொள்ளு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆக்ரா பேதா
தேவையானவை:
பூசணிக்காய் - அரை கிலோ
சர்க்கரை - 300 கிராம்
சுண்ணாம்பு - அரை டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்
செய்முறை:
பூசணிக்காயின் விதைகளை நீக்கிவிடவும். இளசாக உள்ள பகுதிகளையும் எடுத்துவிட்டு, கல்லு போல உள்ள சதை பகுதியை மட்டும் தோலை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ளவும். முள்கரண்டியால் எல்லாப் பக்கமும் குத்திவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் சுண்ணாம்புப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கலந்துவிடவும். அப்படியே அந்தப் பாத்திரத்தை மூடி, 12 முதல் 24 மணி நேரம் வரை ஊறவிடவும். பின்னர் பூசணிக்காய்த் துண்டுகளைச் சுண்ணாம்புத் தண்ணீரில் இருந்து எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை கழுவவும். ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய் துண்டுகள் மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டுக் குழையாமல் பதமாக வேகவைத்து எடுக்கவும் (10 முதல் 12 நிமிடங்கள் வரை வேகவிடவும்).

பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் வேகவைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு, தண்ணீர் வற்றும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரை பூத்து வரும்போது அடுப்பில் இருந்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். சிறிது ஆறிய பின் பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்கவும். நன்றாக ஆறிய பின் காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குறிப்பு:
வாசனைக்கு அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப எசென்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். கலர் விரும்புபவர்கள் சர்க்கரைப் பாகு செய்யும்போது தேவையான கலர் சேர்த்துக்கொள்ளலாம். இது வெளியே பத்து நாள்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம். சுண்ணாம்புத் தண்ணீரில் பூசணிக்காய் துண்டுகளை ஊறவைப்பதால் அது கல்லு போல இருக்கும். அதனால் குறைந்தது 12 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
உஷ்ண பாதிப்பைத் தவிர்க்க பூசணிக்காய் ஜூஸ் செய்து பருகலாம்.