Published:Updated:

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பிரியாணி செய்யலாம்!

நெய், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் சேர்த்து வாழை இலையால் மூடி 20 நிமிடங்கள் வரை சிறு தீயில் வேகவிட்டு இறக்கினால் ருசி அள்ளும்.

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பிரியாணி செய்யலாம்!
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பிரியாணி செய்யலாம்!

பிரியாணி பிரியர்கள் ஒரு கட்டத்துக்கு மேல், அதை ஹோட்டல் ருசியில் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டால் வயிற்றுக்கு இதமாக, எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும் என்று ஏங்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காகவே இதோ இரண்டு பிரியாணிகள்...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி 

தேவையானவை:

சிக்கன் துண்டுகள் – ஒரு கிலோ

சீரகச் சம்பா அரிசி –  ஒரு கிலோ

மிளகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 8

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பட்டை – சிறிய துண்டு

ஏலக்காய் – 4

கிராம்பு – 5

முந்திரி – 25 கிராம்

கசகசா – ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் – 3 கப்

வெங்காயம், தக்காளி – தலா கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

எலுமிச்சைப் பழம் – 2 (சாறு பிழியவும்)

நெய் – 100 கிராம்

எண்ணெய் – 100 மில்லி

சோம்பு – அரை டீஸ்பூன்

புதினா - ஒரு கட்டு (ஆயவும்)

கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு  

தாளிக்க:

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தேவையான அளவு 

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கவும். அதனுடன் 3 கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவிடவும். மேலே நெய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கி மூடிப் போடவும். தவாவைச் சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்துச் சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை `தம்’ போடவும். பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

மட்டன் பிரியாணி 

தேவையானவை:

மட்டன் – ஒரு கிலோ

பாசுமதி அரிசி – ஒரு கிலோ

தயிர் – ஒரு கப்

காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் நறுக்கவும்)

புதினா – ஒரு கட்டு (ஆயவும்)

கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 25 கிராம்

வறுத்து அரைத்த முந்திரி விழுது - 2 டீஸ்பூன்

எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)

வெங்காயம் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்)

தக்காளி – 150 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

தோலுரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம்

வாழை இலை - 2

எண்ணெய் – 100 மில்லி

நெய் – 75 மில்லி

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

அலங்கரிக்க - நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த சின்ன வெங்காயம் – தேவையான அளவு 

செய்முறை: 

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மட்டனுடன் தயிர், காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், முந்திரி விழுது, எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், சின்ன வெங்காயம் சேர்த்து ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுப் பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மிருதுவாக வேகவிடவும். 

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீருடன் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும். தவாவைச் சூடாக்கி, மட்டன் பாத்திரத்தை வைத்து, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் நெய், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் சேர்த்து வாழை இலையால் மூடி 20 நிமிடங்கள் வரை சிறு தீயில் வேகவிட்டு இறக்கவும். அதன்மீது வறுத்த வெங்காயம், கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும்.