நேந்திரம் பழ அல்வா

தேவை: நன்கு பழுத்த நேந்திரம் பழம் - 3, பாகு வெல்லம் - 200 கிராம், நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நேந்திரம் பழத்தின் தோலை உரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்துக்கொள்ளவும். ஒரு கனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் பொடியாக நறுக்கிய பழத்தைப்போட்டு, பழம் நன்கு மசிந்து வரும் வரை கைவிடாமல் வதக்கவும். பழம் நன்கு வெந்ததும் துருவிய வெல்லத்தைப் போட்டு மேலும் சிறிது சிறிதாக நெய்விட்டு வெல்லம் நன்கு கரைந்து பழத்தோடு சேரும் வரை கைவிடாமல் கிளறவும். அல்வா கடாயில் ஒட்டாமல் நெய் மிதக்கும் வரும்வரை கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:  இந்த அல்வாவுக்கு நேந்திரம் பழம் நன்கு பழுத்து இருக்க வேண்டும்.

சிறப்பு:  நேந்திரம் பழம் மற்றும் வெல்லம் ஆகிய இரண்டு பொருள்களிலும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இந்த அல்வா எல்லா வயதினருக்கும் ஏற்றது.

தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ்

தேவை:  தேங்காய் - ஒரு மூடி, கறிவேப்பிலை - 20 இலைகள், ஊறவைத்த பாதாம்பருப்பு - 5.

செய்முறை: தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம்பருப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய வடிகட்டியில் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும். பிறகு தேங்காய் - கறிவேப்பிலை - பாதாம் விழுதை மீண்டும் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:  இதில் கறிவேப்பிலைக்குப் பதிலாக, கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகள் சேர்த்து அரைக்கலாம்.

சிறப்பு:  இந்தத் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸைக் காலை உணவாக உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

அடை பிரதமன்

தேவை: அரிசி அடை - 200 கிராம், பாகு வெல்லம் - 225 கிராம், பெரிய தேங்காய் - ஒன்று.

செய்முறை: தேங்காயைத் துருவிக்கொள்ளவும். பிறகு இரண்டு முறை பால் எடுத்துக் கொள்ளவும். தனித்தனியாக எடுத்து வைக்கவும். அரிசி அடைகளை லேசாக கைகளால் உடைத்துக்கொள்ளவும். ஓர் அகலமான பாத்திரத்தில் ஒரு கப் இளம் சூடான நீர் ஊற்றி அரிசி அடையைப் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை முழுவதும் வடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர்விட்டுச் சூடானதும் ஊறவைத்த அரிசி அடையைப் போட்டு வேகவிடவும். அடை நன்கு வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டு அலசிக்கொள்ளவும் (இப்படிச் செய்தால் அடை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்). ஒரு கனமான கடாயில் அல்லது வெண்கலப்பானையில் பொடித்த பாகு வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். வெல்லம் நன்கு கரைந்ததும் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். இதோடு வேகவைத்த அரிசி அடையைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பாயசம் நன்கு கெட்டியானதும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து, தீயை நன்கு குறைத்து லேசான கொதிவந்ததும் இறக்கவும்.

சிறப்பு: அரிசி அடை பார்ப்பதற்கு பாஸ்தா போல இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்ணுவார்கள்.

சின்ன வெங்காயம் துவையல்

தேவை: சின்ன வெங்காயம் - 25, காய்ந்த மிளகாய் - 12, கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும். பின்னர் அதில் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் ஒரு தட்டில் வெந்த வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை நன்கு ஆறவிடவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.

குறிப்பு: சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் துவையலாக அரைக்கும்போது வெங்காயத்தில் உள்ள நெடி குறைந்து சுவையாக இருக்கும்.

சிறப்பு:  கேழ்வரகு தோசை, கம்பு தோசை போன்ற தோசை வகைகளுக்கு இந்தச் சின்ன வெங்காயம் துவையல் அற்புதமாக இருக்கும்.

பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ்

தேவை: தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்), துருவிய பீட்ரூட் - கால் கப், ஏலக்காய் - 3.

செய்முறை:  ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், பீட்ரூட் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். பிறகு வடிகட்டியில் வடிகட்டி பிழிந்துகொள்ளவும். மீண்டும் ஒருமுறை பிழிந்த தேங்காய் - பீட்ரூட் விழுதை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி நன்கு பிழிந்து வடிகட்டிக்கொள்ளவும். இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு:  தேங்காயை பிரவுன் நிறம் இல்லாதபடி துருவிக்கொள்ளவும். பீட்ரூட்டைத் தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.

சிறப்பு: வாரத்துக்கு ஒருமுறை இந்த ஜூஸை எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும்.

மிளகு ரொட்டி

தேவை:  கோதுமை மாவு - 2 கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

சிறப்பு:  இந்த மிளகு ரொட்டியை இரவு நேர உணவாக உட்கொள்ளும்போது எளிதில் ஜீரணமாகும். வெளியூருக்குப் பயணம் செய்யும்போது, மிளகு ரொட்டியின் நடுவில் சிறிதளவு ஊறுகாயைத் தடவி ரோல் போன்று செய்து `பேக்’ செய்து கொள்ளலாம்.

தினை அரிசி தேங்காய்ப்பால் பொங்கல்

தேவை: தினை அரிசி - 100 கிராம், தேங்காய் - ஒரு மூடி, பாகு வெல்லம் - 200 கிராம்

செய்முறை:  தேங்காயைத் துருவி, பால் எடுத்துக்கொள்ளவும். இரண்டு முறை பால் எடுத்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தினை அரிசியைச் சேர்த்து இரண்டு முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பின்னர் ஒரு சிறிய பிரஷர் குக்கரில் தினை அரிசி மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இருபது நிமிடங்கள் தேங்காய்ப்பாலில் ஊறவிடவும். பிறகு மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து ஒரு கரண்டியால் லேசாக மசித்துக்கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய பாகு வெல்லம் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். வெல்லம் நன்கு கரைந்ததும் ஒரு கனமான கடாயில் அல்லது வெண்கலப்பானையில் கரைத்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் வேகவைத்த தினை அரிசியைச் சேர்த்து, நன்றாக மசித்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பொங்கல் நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறி அடுப்பை அணைத்துவிடவும். அதன் சூட்டிலேயே சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் பாத்திரத்துக்கு மாற்றிப் பரிமாறவும்.

குறிப்பு:  தினை அரிசியைத் தேங்காய்ப்பாலில் வேகவைப்பதால் இதற்கு நெய் தேவையில்லை.

கேழ்வரகு இடியாப்பம்

தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியை லேசாகச் சூடாக்கவும். கேழ்வரகு மாவைச் சேர்த்துக் கைவிடாமல் ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். மாவில் இருந்து நல்ல வாசனை வரும்போது அரிசி மாவைச் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்துவிடவும். ஓர் அகலமான பாத்திரத்தில் வறுத்த மாவைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கலந்துவைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக விட்டு ஒரு கரண்டியால் கலந்து வைக்கவும். பிறகு கைகளால் நன்கு பிசைந்துகொள்ளவும் (ஒட்டாமல் வரும் வரை பிசையவும்). பிசைந்த மாவை இடியாப்ப உழக்கில் (குழலில்) வைத்து இட்லித் தட்டில் பிழிந்துகொள்ளவும். இட்லிப் பாத்திரத்தில் 12 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் ஓர் அகலமான பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கைகளால் நன்கு உதிர்த்துவிடவும். சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு:  கேழ்வரகு மாவில் தயாரிக்கும் இந்த இடியாப்பத்தை இரவு உணவாகக் கொள்வது சிறப்பாகும்.

வாழைக்காய் ஃப்ரைஸ்

தேவை: வாழைக்காய் - ஒன்று, எண்ணெய் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயின் தோலை உரித்துக்கொள்ளவும். பின்னர் நீளமான, கனமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய வாழைக்காய் துண்டுகளைத் தண்ணீரில் போட்டு நன்கு அலசிக்கொள்ளவும். ஓர் அகலமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீரைச் சூடாக்கவும். அதில் நறுக்கிய வாழைக்காயைப் போட்டு அடுப்பை அணைத்துவிடவும். மூடி போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர் வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும். நன்கு ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, சூடானதும் வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்துப் பொரிக்கவும். சிறிது பொன்னிறமாக மாறும்போது மெதுவாக எடுக்கவும். உப்பைக் கைகளால் தூவி, சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு: வீட்டுக்கு வரும் திடீர் விருந்தினர்களுக்கு, இந்த வாழைக்காய் ஃப்ரைஸை மிகவும் குறைவான நேரத்தில் தயார் செய்து பரிமாறலாம்.

கருப்பட்டி சம்பா அவல்

தேவை: சம்பா கெட்டி அவல் - ஒரு கப், கருப்பட்டி (பனைவெல்லம்) - அரை கப், தேங்காய்த் துருவல் - அரை கப்.

செய்முறை: சம்பா அவலை இரண்டு முறை நன்கு கழுவிக்கொள்ளவும். பின்னர் ஒரு கப் வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். கருப்பட்டியைப் பொடியாகத் துருவிக்கொள்ளவும். ஓர் அகலமான, கனமான வாணலியில் கருப்பட்டியைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக்கொள்ளவும். ஊறவைத்த அவலைத் தண்ணீர் இல்லாமல் மெதுவாகப் பிழிந்துகொள்ளவும். வடிகட்டிய கருப்பட்டியைச் சிறிது சிறிதாக ஊறவைத்த அவலோடு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

சிறப்பு: இன்று பலரும் நமது பாரம்பர்ய அவலை மறந்துவிட்டுப் பல்வேறு பேக்டு (Packed) உணவு வகைகளைக் காலை உணவாக உட் கொள்கின்றனர். இந்தக் கருப்பட்டி அவலை காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

புளிக்கீரை

தேவை: அரைக்கீரை - 3 கப் (ஆய்ந்தது), காய்ந்த மிளகாய் - 8, புளி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாயை லேசாக வறுத்துக்கொள்ளவும். ஒரு குழம்பு பாத்திரத்தில் அரைக்கீரை, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் கீரையை வேகவிடவும். கீரை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதே குழம்பு பாத்திரத்தில் அரைத்த விழுதைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கொதித்ததும் இறக்கவும்.

சிறப்பு:  இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரையை வாரம் இருமுறை உட்கொள்வது நல்லது.

வெஜிடபிள் ஃபைத்தா

தேவை:  பெரிய வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, ஒரிகானோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை இதழ் இதழாகப் பிரித்து நீளமான, அகலமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். குடமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு நீளமான, அகலமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இரும்பு தோசைக்கல்லில் ஆலிவ் எண்ணெய் தடவி நன்கு சூடாக்கிக்கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடமிளகாய் துண்டுகளைப் பரப்பி வைக்கவும். அவை வதங்கும்போதே உப்பு மற்றும் ஒரிகானோவை மேலே தூவவும். வெங்காயம் மற்றும் குடமிளகாய் லேசாக நிறம் மாறும்போது இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:  இது ஒரு கிரில்டு வகை மெக்ஸிகன் உணவு. ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய சைடிஷ். இதை சாதத்துடன் அல்லது சப்பாத்தியின் நடுவில் வைத்து ரோல் போன்று செய்து பரிமாறவும்.

தக்காளி சாம்பார்

தேவை: பழுத்த தக்காளி - 5, பச்சை மிளகாய் - 6, துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: ஒரு சிறிய குக்கரில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். ஆவி அடங்கிய பின் குக்கரைத் திறந்து வேகவைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாயை எடுத்து ஆறவைத்துக்கொள்ளவும். தக்காளி நன்கு ஆறியதும் தோலை உரித்துக்கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் வேகவைத்த பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த தக்காளி விழுதோடு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். மிதமான தீயில் கொதிக்கவிடவும். சாம்பார் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

சிறப்பு:  இது இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

கேரட் சூப்

தேவை: கேரட் - 3, தக்காளி - 3, மிளகு - ஒருடேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை நன்றாகக் கழுவிவிட்டு, தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நன்கு கழுவி நறுக்கிக்கொள்ளவும். ஒரு சிறிய பிரஷர் குக்கரில் நறுக்கிய கேரட், தக்காளி, மிளகு சேர்த்து காய்கறிகள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கலந்துகொள்ளவும். பின்னர் 2 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். குக்கரில் ஆவி அடங்கியவுடன் திறந்து, வேகவைத்த காய்கறிகளை ஆறவைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் வேகவைத்த காய்கறிகளை நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். அதோடு மேலும் 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சூடாக்கி, மிதமான தீயில் கொதிக்கவிடவும். சூப் நன்கு கொதித்ததும் வெண்ணெய் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: சூப் கெட்டியாகச் சேர்க்கும் சோள மாவு அல்லது மைதா மாவு இதற்குத் தேவையில்லை.

சிறப்பு: காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை வாரம் இருமுறை செய்து கொடுக்கலாம்.

பீட்ரூட் கூட்டு

தேவை: பீட்ரூட் (சிறியது) - ஒன்று, பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல் மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சிறிய பிரஷர் குக்கரில் நறுக்கிய பீட்ரூட் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். வெந்த பீட்ரூட் - பாசிப்பருப்போடு அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.

சிறப்பு:  இதைப் புளிக்குழம்பு சாதத்தோடு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். செய்வதற்கு மிகவும் எளிதானது என்பது மட்டுமன்றி பீட்ரூட் சத்து நிறைந்தது என்பதால் ஆரோக்கியமானதும் ஆகும்.

தவா கத்திரிக்காய் கிரிஸ்ப்ஸ்

தேவை: கத்திரிக்காய் - 4, கடலை மாவு - 6 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: கத்திரிக்காயை நன்றாகக் கழுவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு மெலிதான வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய வட்டங்களைப் பத்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டுவைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதும் வடித்துவிடவும். ஒரு தட்டில் கடலை மாவு, உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கத்திரிக்காய் வட்டங்களை மாவில் இருபக்கமும் நன்கு புரட்டி வைக்கவும். ஒரு இரும்பு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவிச் சூடாக்கவும். கத்திரிக்காய் வட்டங்களைத் தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு வதக்கவும். பின்னர் மெதுவாகத் திருப்பிப்போட்டு நன்கு பிரவுன் நிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: தவாவில் கத்திரிக்காயை வதக்குவதால் இதற்குச் சிறிதளவு எண்ணெய் போதுமானது.

சிறப்பு: எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களுக்கும் இதை சைடிஷாகப் பரிமாறலாம். இது ஒரு வித்தியாசமான ஸ்டார்டர். கத்திரிக்காய் பிடிக்காதவர்கள்கூட இதை விரும்புவார்கள்.

பனீர் பைட்ஸ்

தேவை: பனீர் - 200 கிராம், கடலை மாவு - கால் கப், சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஓர் அகலமான தட்டில் கடலை மாவு, சாட் மசாலாத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பனீர் துண்டுகளை இந்தக் கலவையில் நன்கு புரட்டிக்கொள்ளவும். ஓர் இரும்பு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி சூடாக்கவும். அடுப்பைச் சிறு தீயில் வைத்து பனீர் துண்டுகளைத் தோசைக்கல்லில் சேர்த்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு வறுக்கவும். பனீர் லேசாக நிறம் மாறும்போது மெதுவாகத் திருப்பிக்கொண்டே இருக்கவும். நான்கு பக்கங்களிலும் பொன்னிறமாக மாறியதும் ஒரு தட்டுக்கு மாற்றிக்கொள்ளவும். சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

சிறப்பு: பனீரில் இருக்கும் புரோட்டீன் சத்தானது உடலில் உள்ள தசைகளுக்கு வலிமை சேர்க்கும். பனீரை அதிகமான எண்ணெயில் பொரித்தால் அதன் சத்துகள் அழிந்துவிடும். அதற்குப் பதிலாகச் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தோசைக்கல்லில் வறுத்து எடுத்தால், வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்டார்டர் தயார்.

வெந்தய சாதம்

தேவை: அரிசி - ஒரு கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்), நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியைச் சூடாக்கி அதில் வெந்தயத்தைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசியைச் சேர்த்து, தண்ணீர்விட்டு இரண்டு முறை நன்கு கழுவிக்கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் அரிசி, வறுத்த வெந்தயம் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துகொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். குக்கரில் ஆவி அடங்கிய பின் திறந்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் குக்கரைத் திறந்து நன்றாகக் கலந்து தேங்காய்த் துவையல் போட்டுப் பிசைந்து சாப்பிடவும்.

சிறப்பு: வெந்தயம் சமையலுக்குச் சுவை சேர்ப்பதோடு நார்ச்சத்தையும் அளிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயத்தை உணவில் கட்டாயம் சேர்ப்பது நல்லது. குழம்பில் சிறிதளவு சேர்ப்பதோடு நின்றுவிடாமல் அதை அரிசியோடு கலந்து சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது. இந்தச் சாதத்தில் வெந்தயத்துடன் தேங்காய்த் துருவல் சேர்ப்பதால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

வெந்தய மிளகாய்

தேவை: பச்சைமிளகாய்-25, வெந்தயம்-ஒரு டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் - சிறிய துண்டு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாயை நன்கு கழுவிக்கொள்ளவும். பிறகு ஒரு வெள்ளைத் துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து, நடுவில் கீறிக்கொள்ளவும். வாணலியில் வெந்தயத்தைப் போட்டு வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். அதை ஒரு தட்டுக்கு மாற்றவும். அதே வாணலியில் ஒரு துளி எண்ணெய்விட்டு, கட்டிப் பெருங்காயத்தைப் போட்டு, பொரிந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், வறுத்த பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடித்துக்கொள்ளவும். இப்போது ஒரு சிறிய ஸ்பூனால் சிறிதளவு பொடித்த பொடியை எடுத்து ஒவ்வொரு பச்சை மிளகாயின் நடுவிலும் வைத்து இரண்டு பக்கங்களிலும் தடவவும். ஒரு கனமான கடாயில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கலந்துவைத்துள்ள பச்சை மிளகாய்களைச் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு பீங்கான் பவுலுக்கு மாற்றிக்கொள்ளவும்.

குறிப்பு: இட்லி, தோசைக்குப் பரிமாறும்போது வெந்தய மிளகாயின் மேல் சிறிது நல்லெண்ணெய்விட்டுக் கலந்துகொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள `கேப்சிக்கோ' என்ற வேதிப்பொருள் பல்வேறு மருத்துவக் குணங்களுடைய வெந்தயத்தோடு சேர்ந்து நாவுக்குச் சுவையான சைடிஷை அளிப்பதோடு நமது உடலுக்குத் தேவையான பல நன்மைகளைத் தருகிறது. மேலும், எண்ணெயில் பச்சை மிளகாயை வதக்குவதால் காரம் குறைவாக இருக்கும்.

நீராகார சாதம்

தேவை:   நொய் அரிசி - ஒரு கப், புளித்த நீராகாரம் - இரண்டரை கப், கறிவேப்பிலை - 15 இலைகள், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நொய் அரிசியைத் தண்ணீரில் இரண்டு முறை கழுவிவிட்டு, தண்ணீரை முழுவதும் வடித்துக்கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் புளித்த நீராகாரத்தை ஊற்றிக் கொதிக்கவிடவும். நீராகாரம் நன்கு கொதித்ததும் நொய் அரிசியைச் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து மேலும் வேகவிடவும். அரிசி நன்கு நீர் இல்லாமல் முழுவதும் வெந்ததும் நல்லெண்ணெய்விட்டுக் கிளறி இறக்கவும். தொட்டுக்கொள்ள, கறிவேப்பிலை துவையல், நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: இந்த சாதத்தில் கறிவேப்பிலையோடு இரண்டு நார்த்தங்காய் இலைகளும் சேர்க்கலாம். நொய் அரிசிக்குப் பதில் புழுங்கல் அரிசி அல்லது சிறுதானிய அரிசி (சாமை, வரகு, குதிரைவாலி) வைத்தும் செய்யலாம்.

சிறப்பு: முப்பது வருடங்களுக்கு முன் அனைவருமே சாதத்தை வடித்துச் சாப்பிட்டுப் பின் மறுநாள் காலை நீராகாரம் அருந்துவது என்பது வழக்கமாக நடைபெறும் செயல். இப்போது நிறைய விஷயங்களை மீட்டெடுத்து வருகிறோம். அந்த வகையில் நீராகாரத் தண்ணீரை ஒருநாள் புளிக்க வைத்து அதில் நொய்யைப் போட்டுச் சமைத்து அதற்கு, கறிவேப்பிலைத் துவையலுடன் சாப்பிடும்போது அமிர்தமாக இருக்கும்.

பீன்ஸ் பூண்டு வதக்கல்

தேவை:   பீன்ஸ் - 200 கிராம், பூண்டுப் பற்கள் - 10, காய்ந்த மிளகாய் துகள்கள் (சில்லி ஃபளேக்ஸ்) - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பீன்ஸை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பிறகு நீளமாக நறுக்கவும். பூண்டுப் பற்களை தண்ணீர்விடாமல் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அதில் நறுக்கிய பீன்ஸ் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து அடுப்பை அணைத்துவிடவும். மூடிபோட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் நீரை முழுவதும் வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வேகவைத்த பீன்ஸைச் சேர்த்து லேசாக வதக்கவும். அதோடு அரைத்த பூண்டு விழுதைச் சேர்த்து, கைவிடாமல் 2 நிமிடங்கள் பீன்ஸோடு நன்கு புரட்டி வதக்கவும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் துகள்கள் தூவி நன்றாகக் கலந்து இறக்கவும். பீன்ஸோடு பூண்டு விழுது சேர்க்கும்போது அதன் வாசனை நன்றாக இருக்கும்.

சிறப்பு: பீன்ஸில் பொரியல் செய்து போர் அடித்துவிட்டது என்று நினைப்பவர்கள் இதைச் செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் இதை சாலட் போன்று அப்படியே காலி செய்து விடுவார்கள்!

குடமிளகாய் உருளைக்கிழங்கு பொரியல்

தேவை:   குடமிளகாய் - ஒன்று, உருளைக்கிழங்கு - 2, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். குடமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, குடமிளகாயைச் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வதக்கி, ஒரு சிறிய தட்டுக்கு மாற்றவும். அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் வதக்கிய குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: குடமிளகாயை மற்ற காய்கறிகளைப் போல் அதிக நேரம் சமைக்காமல் லேசாக வதக்கினால் அதன் சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

சிறப்பு: இந்தப் பொரியல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற சைடிஷ். மிளகுத்தூளுக்குப் பதிலாக, சாம்பார் பொடி சேர்த்து இதைச் செய்து எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

சீரகத்தூள் ஃப்ரைடு ரைஸ்

தேவை:  சீரகசம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசி - ஒரு கப், சீரகத்தூள் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: அரிசியை இரண்டு முறை நன்கு கழுவிக்கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர்விட்டு 15 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரை முழுவதும் வடித்துக்கொள்ளவும். பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர்விட்டு மூடிபோட்டு குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். ஓர் அகலமான தட்டில் வேகவைத்த சாதத்தைப் பரப்பி ஆறவைக்கவும். சிறிதளவு நெய்யை மேலே ஊற்றிக் கலந்துவிடவும். வாணலியில் மீதமுள்ள நெய்விட்டுச் சூடாக்கி, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இதனுடன் வேகவைத்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக நன்கு கலந்துகொள்ளவும். கடைசியில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

சிறப்பு: நம் உணவில் தினமும் சேர்க்கும் சீரகத்தைக்கொண்டு செய்யும் ஆரோக்கியமான மற்றும் எளிமையான ஃப்ரைடு ரைஸ் இது. மழைக்காலத்தில் இரவு உணவாக, தொட்டுக்கொள்ள மீல்மேக்கர் அல்லது மஷ்ரூம் குழம்பு வைத்துச் சூடாகப் பரிமாறலாம்.

சோயா பீன்ஸ் மசாலா

தேவை:  சோயா பீன்ஸ் - அரை கப், தக்காளி - 5, கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பிறகு 2 கப் தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஏழு விசில் வரும்வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அதே குக்கரில் தக்காளியைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும்வரை வேகவைத்துக்கொள்ளவும். அதன் தோலை உரித்து நன்கு ஆறவைத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, அதில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்துக் கைவிடாமல் வதக்கவும். பின்னர் வேகவைத்த சோயா பீன்ஸ், தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் மிதக்கும் வரை (சுமார் 10 நிமிடங்கள்) கொதித்ததும் இறக்கவும். சப்பாத்தியோடு பரிமாறவும்.

சிறப்பு: பேச்சுலர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் இரவு உணவுக்கு ஆரோக்கியமான சோயா பீன்ஸ் மசாலாவை எளிதில் செய்யலாம். சோயா பீன்ஸில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

சுக்கினி பொரியல்

தேவை:   சுக்கினி (Zucchini - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒன்று, செலரித் தண்டு (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுக்கினியை கனமான அரைவட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். செலரித் தண்டின் இலைகளை நீக்கிவிட்டு மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, நறுக்கிய செலரித் தண்டுகளைச் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பின்னர் நறுக்கிய சுக்கினி துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். சுக்கினி லேசாக நிறம் மாறும்போது மிளகுத்தூள் தூவி, நன்கு கலந்து அடுப்பை அணைத்துவிடவும். சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: சுக்கினி பார்ப்பதற்கு வெள்ளரிக்காய் போல் இருக்கும். மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் அதிக நேர வேக வைக்காமல் சில நிமிடங்கள் வதக்கினால் போதும்

சிறப்பு:  எடையைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

ஸ்வீட் கார்ன் மிளகு ரைஸ்

தேவை:  பாஸ்மதி அரிசி - ஒரு கப், ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாஸ்மதி அரிசியை இரண்டு முறை நன்கு கழுவி, ஓர் அகலமான பாத்திரத்தில் சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். மற்றோர் அகலமான பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊறவைத்து வடித்த அரிசி மற்றும் ஸ்வீட் கார்ன் முத்துகள் சேர்த்து நன்கு வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் போட்டுச் சிறிது நேரம் ஆறவைக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, மிளகுத்தூளைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆறவைத்த சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

குறிப்பு:  அரிசியை வடித்து வேகவைக்க நேரமில்லை என்றால் குக்கரில் ஊறவைத்த அரிசி, ஸ்வீட் கார்ன், ஒன்றரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும்.

சிறப்பு: உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்ப குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய சுவையான ரைஸ் இது.

கொள்ளு தோசை

தேவை:  இட்லி அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், கொள்ளு - ஒன்றரை கப், கல் உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுப்பருப்பு சேர்த்து, தண்ணீரில் மூன்று முறை நன்கு கழுவிக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மீண்டும் ஒருமுறை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை கிரைண்டரில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். கிரைண்டரில் அரைக்கும்போது ஓரத்தில் இருக்கும் அரிசி, பருப்பை ஒதுக்கிவிட்டு, தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க நன்கு அரைத்துக்கொள்ளவும் (சுமார் 30 நிமிடங்கள்). அரைத்த மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு பிசைந்துகொள்ளவும். 8 மணி நேரம் புளிக்கவிடவும். பின்னர் மாவைக் கரண்டியால் நன்கு கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை நன்கு சூடாக்கி, ஒன்றரை கரண்டி மாவை எடுத்து தோசை போல் வார்க்கவும். தோசையைச் சுற்றி 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு நன்கு முறுகலானதும் திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கவும். காரச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: கொள்ளுப்பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன. மாதத்துக்கு இரண்டு முறை சேர்த்துக்கொண்டால் போதுமானது.

முட்டைகோஸ் மிளகு பொரியல்

தேவை: முட்டைகோஸ் - 200 கிராம், தேங்காய்த் துருவல் - கால் கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:முட்டைகோஸிலுள்ள தண்டுகளை நீக்கிவிட்டு இதழ் இதழாகப் பிரித்துக்கொள்ளவும். பின்னர் நீளமாக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். இட்லித் தட்டில் நறுக்கிய முட்டைகோஸை வைத்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் ஓர் அகலமான பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடானதும் வேகவைத்த முட்டைகோஸைச் சேர்த்து ஒரு நொடி வதக்கவும். இதனுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்துவிடவும். கடைசியில் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இதை முட்டைகோஸ் சாலட் என்றும் கூறலாம். இதை தோசையின் மேல்வைத்து சுவையான முட்டைகோஸ் ஊத்தப்பம் செய்யலாம்.

சிறப்பு: சப்பாத்தி, கலந்த சாதம் வகைகளுக்கு சூப்பரான சைடிஷ்.

மஷ்ரூம் கிரேவி

தேவை:   மஷ்ரூம் - 150 கிராம், தேங்காய்த் துருவல் - முக்கால் கப்

சப்ஜி மசாலாத்தூள் - 4 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மஷ்ரூமை நன்கு கழுவிவிட்டு வெள்ளைத் துணியால் மெதுவாகத் துடைத்துக்கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவலுடன் சப்ஜி மசாலாத்தூள் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, நறுக்கிய மஷ்ரூமை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி, பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.

சிறப்பு:  மஷ்ரூம் எளிதில் எண்ணெயில் வதங்கிவிடுவதால் இதைப் பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம். பூரி, சப்பாத்திக்குச் சுவையான சைடிஷ்.

பெப்பர் மஷ்ரூம்

தேவை:   பட்டன் மஷ்ரூம் (காளான்) - 150 கிராம், மிளகு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காளானை லேசாகக் கழுவிவிட்டு, வெள்ளைத் துணியால் துடைத்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறிய மிக்ஸி ஜாரில் மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய காளானைச் சேர்த்துக் கைவிடாமல் வதக்கவும். காளான் லேசாக நிறம் மாறும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கைவிடாமல் வதக்கவும். காளான் நன்கு சுருங்கி வதங்கியதும் பொடித்த மிளகைச் சேர்த்துப் புரட்டி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு: மழைக்காலத்தில் காரசாரமாக, குறுகிய நேரத்தில் காளானை வைத்து மிளகு காளான் (பெப்பர் மஷ்ரூம்) செய்து சாப்பிட்டால், சூப்பர் சுவையில் அசத்தும். இதை ஃப்ரைடு ரைஸுக்கு சைடிஷ்ஷாகவும் பரிமாறலாம்.

ஈஸி... டேஸ்ட்டி... ஹெல்த்தி...

`வேலை வேலை’ என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் பெண்கள் பெருகிக்கொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில், பலராலும் சமையலுக்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை.

`குறைந்த நேரத்தில், சில பொருள்களை மட்டுமே பயன்படுத்தி, சுவையாக இருக்கும் உணவுகளைச் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று ஏங்குபவர்கள் ஏராளம். இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்.

சமையல் கலையில் பல்வேறு புதுமை களைப் புகுத்திவருபவரும்,virundhombal.com இணையதள நிர்வாகியுமான சென்னையைச் சேர்ந்த முத்துலட்சுமி, வேலைக்குச் செல்லும் பெண்கள், புதிதாகச் சமையல் கற்க விரும்புபவர்கள் எளிதாகச் சமைக்கும் வகையில் மூன்று மற்றும் ஐந்து பொருள்களை மட்டும் பயன்படுத்திச் செய்யும் சுவையான 30 வகை ஈஸி... டேஸ்ட்டி... ஹெல்த்தி...சமையல் குறிப்புகளை இந்த இணைப்பிதழில் படங்களுடன் வழங்குகிறார்.

இந்த உணவு வகைகள் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும் என்பது கூடுதல் சிறப்பு.

தொகுப்பு: ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்