மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 38

சோறு முக்கியம் பாஸ்! - 38
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 38

சோறு முக்கியம் பாஸ்! - 38

சில உணவகங்களில் சாப்பாடு பிரமாதமாக இருக்கும். ஆனால் அமர்ந்து சாப்பிடும் சூழல் மனசுக்கு நெருக்கமாக இருக்காது. அவஸ்தையாகச் சாப்பிட்டு எழுந்து வருவோம். சில இடங்களில் டைனிங் நன்றாக இருக்கும். சாப்பாடு வாயில் வைக்க முடியாது. திருப்தியில்லாமல் திரும்புவோம். இவை இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற உணவகங்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். 

சோறு முக்கியம் பாஸ்! - 38

விசாலமான டைனிங், மனதுக்குகந்த அமைதி, கனிவான உபசரிப்பு, நிதானமாக, தொந்தரவில்லாமல் ஆற அமர ருசித்துச் சாப்பிடுகிற சூழல்... கூடவே ருசியான நல்லுணவு... இப்படி ஓர் உணவகம் வாய்த்தால் அது நற்தருணம்.

சென்னை, பெசன்ட் நகர், முதல் பிரதான சாலையில், மின்சார வாரிய அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் நெல்வேலி சைவ உணவகம் இப்படியான ஒரு நல்லனுபவத்தைத் தருகிறது. உணவகத்தின் சூழலே புத்துணர்வு அளிக்கும் வகையில் இருக்கிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 38முகப்பில் கொய்யா, கறிவேப்பிலை, மருதாணிச் செடிகள் தோரணங்களாக நின்று வரவேற்கின்றன. ஒருபக்கம் முழுவதும் சுவராகவே குரோட்டன்ஸ் செடிகளை நட்டுவைத்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். அந்தச் சூழலிலேயே அமர்ந்து சாப்பிடலாம். மேலே, ஏ.சி டைனிங். நாற்பது பேர் தொந்தரவில்லாமல் அமர்ந்து சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்ததும் பால்கனியில் அமர்ந்து இளைப்பாறலாம்.

பாரம்பர்யமான உணவுகள்... விரும்புவோருக்காக சைனீஸ் வகைகளும் கொஞ்சம் வைத்திருக்கிறார்கள். மதியம்,  ‘நெல்வேலி ஸ்பெஷல் தென்னிந்திய விருந்து’ 138 ரூபாய்.  திருநெல்வேலி மரபிலான உணவு.

தமிழகத்தில், பாரம்பர்யமான  உணவுகளும் சமையல் முறைகளும் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் திருநெல்வேலி வட்டாரமும் ஒன்று. நகர்ப்புறம் கடந்து, சற்று உள்ளே சென்றால் களி, பானகம் எனப் பழைமையான உணவுகளையெல்லாம் ருசிக்கலாம். நல்லெண்ணெய் தளும்ப, தளும்பக் கருப்பட்டி இனிப்பில் களி, இன்னும் கொஞ்சம் தரமாட்டார்களா என்றிருக்கும். பூப்பெய்திய பெண்களுக்கு, குறிப்பிட்ட நாள்கள்வரை  தினமொரு கிண்ணம் உளுந்தங்களி தருவார்கள். குழந்தைபெறும் காலத்தில் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தவும், மாதவிடாய் சிக்கலின்றி நடக்கவும் முன்னெச்சரிக்கையாகத் தரப்படும் ஆயுள்கால மருந்து.

திருநெல்வேலியின் உன்னதமான சைவ உணவை அசலாகத் தருகிறார்கள் ‘நெல்வேலி’யில்.

முதலில் சிறு கண்ணாடிக் குவளையில் பானகம் தருகிறார்கள். வெள்ளை எள் பானகம், சீரகப் பானகம், புதினாப் பானகம், கொத்தமல்லிப் பானகம், துளசிப் பானகம் என தினமொரு வகை. புளிப்பும் இனிப்புமாகச் சுவை நரம்புகளைச் சுண்டிவிடுகிறது. அடுத்து, களி. அதிக எண்ணெயின்றி, ஐஸ்கிரீம் மாதிரி செய்திருக்கிறார்கள். பக்குவமாக இருக்கிறது. தொட்டுக்கொள்ளக் கொண்டைக்கடலைக் குருமா தருகிறார்கள். இரண்டும் பொருந்தி வருகிறது. அதைவிடப் பொருத்தம், துவையல். வல்லாரைத் துவையலுக்கும் களிக்கும் அவ்வளவு ருசியாக இருக்கிறது.  சீரகச்சம்பாவில் சாதம் மணக்கிறது. திருநெல்வேலி வட்டாரத்துக்கேயுரிய அவியல். தயிர் சேர்த்துச் செய்திருக்கிறார்கள். வித்தியாசமாக இருக்கிறது. பொரியலில் காரம் சற்று தூக்கல்.  காய்கறிகள் நிரம்பிய சாம்பார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வற்றல் குழம்புக்குப் பதிலாக சொதி தருவார்களாம். தேங்காயை அரைத்து விட்டு காரம் குறைவாக கெட்டியாக இருக்கிறது சொதி. தென்மாவட்ட ஸ்பெஷல் இது. சாதத்துக்கு மிகவும் இணக்கமாக இருக்கிறது. அன்னாசிப் பழம் போட்டு வைத்த ரசமும் சிறப்பு. தயிர், பாயசத்தோடு விருந்து நிறைகிறது.

அன்லிமிடெட்... எது விருப்பமோ அதைக் கேட்டு வாங்கி, தேவையான அளவு சாப்பிடலாம். மொழி புரியாவிட்டாலும் குறிப்பறிந்து, பரிமாறுகிற வடமாநிலப் பெண்கள், புன்னகை மாறாமல் கொண்டு வந்து தருகிறார்கள்.  நிறைவான உணவு. பேபி கார்ன், கோபி , பனீர் என... குழந்தைகளை ஈர்க்கும் தொடுகறிகளும் உண்டு. சிறிய இடைவெளியில் சுடச்சுட செய்து தருகிறார்கள்.

சோறு முக்கியம் பாஸ்! - 38சாப்பாடு விரும்பாதவர்கள், பனீர் பிரியாணி, ட்ரை ஃப்ரூட் புலாவ், காஷ்மீரி புலாவ், பச்சைப்பட்டாணி பிரியாணி சாப்பிடலாம். என்ன ஒன்று... லஞ்ச்சைவிட விலை அதிகம். ஆனால் ரசனையான சுவை. 

மாலை 3 மணிக்கெல்லாம் மதிய உணவு நிறைவுபெற்றுவிடுகிறது. 4 மணிக்கு ஸ்நாக்ஸ் தயாராகிவிடும். வாழைப்பூ வடை, கீரை வடை, பஜ்ஜி, பக்கோடா வகையறாக்கள்...  மாலை சிற்றுண்டி... கம்பு தோசை, கொள்ளு தோசை, பச்சைப்பயறு தோசை, ஆப்பம்-தேங்காய்ப்பால், ஸ்பிரிங்ரோல் தோசை, தக்காளி தோசை, பொடி தோசை எனக் கொண்டாட ஏராளம் உண்டு. இட்லியிலும் நிறைய வெரைட்டி வைத்திருக்கிறார்கள்.

மென்பொருள் துறையில் பணியாற்றிய நான்கு இளைஞர்கள் சேர்ந்து தொடங்கிய உணவகம் இது. புதிதாகச் சிந்தித்திருக்கிறார்கள்.

“விடுமுறை நாள்கள்ல ஊர் ஊராப்போவோம். விதவிதமா சாப்பிடுவோம். அந்த அனுபவம் கொடுத்த தைரியத்துலதான் இந்த உணவகத்தைத் தொடங்கினோம். மென்பொருள் வேலையில பெரிசா கிரியேட்டிவிட்டி இல்லை. அதைத்தாண்டி சொல்லிக்கிற மாதிரி ஏதாவது செய்யணும்னு யோசிச்சோம். நிறைய உணவகங்கள் இருக்கு. நல்ல உணவு, நல்ல சூழல், நல்ல உபசரிப்பு... இந்த மூணையும் இணைச்சு சிந்திச்சோம். எங்க ஊர் திருநெல்வேலி... எங்க ஊருக்கு வர்ற சென்னை நண்பர்கள், எங்க ஊர் சாப்பாட்டை சிலாகிச்சு சாப்பிடுவாங்க. அதே தரத்தோடவும் சுவையோடவும்  இங்கே கொடுக்க முயற்சி செஞ்சோம். மக்கள் ரசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. செக்கு எண்ணெய்தான் பயன்படுத்துறோம்... சுவைக்காக எந்த சமரசத்தையும் செஞ்சுக்கிறதில்லை” என்கிறார், உரிமையாளர்களில் ஒருவரான மதன்.

சென்னையில் நல்லதொரு பாரம்பர்ய சைவ உணவு சாப்பிட விரும்புபவர்கள் நெல்வேலிக்குச் செல்லலாம்.  நல்லனுபவமாக இருக்கும்!

- பரிமாறுவோம்


வெ.நீலகண்டன் - படங்கள்: க.பாலாஜி

சோறு முக்கியம் பாஸ்! - 38

நட்ஸ், உலர்பழங்களை சிலர் தினமும் சாப்பிடுகிறார்கள்... அப்படிச் சாப்பிடலாமா? 

சோறு முக்கியம் பாஸ்! - 38

“நட்ஸ்களில் நார்ச்சத்து, புரதச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய நல்ல கொழுப்புகளும் இருக்கின்றன. அதனால், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸை தினமும் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். அளவுக்கதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற, வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.  உலகளவில் ஃபுட் அலர்ஜிக்குக் காரணமான எட்டு உணவுகளில், நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்களும் இருக்கின்றன. நட்ஸைப் பொறுத்தவரை, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை, நாளொன்றுக்கு 10 முதல் 12 பருப்புகள் வரை சாப்பிடலாம். கலவையாகச் சாப்பிட்டாலும் அதிகபட்சம் 12 என்கிற அளவில்தான் சாப்பிடவேண்டும். உலர்பழங்களைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிடலாம். உலர்திராட்சை என்றால் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். தினமும் இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிடலாம். இந்த அளவில் சாப்பிட்டால் எந்தப் பிரச்னையும் வராது.”

- தாரிணி கிருஷ்ணன், உணவியல் நிபுணர்.