
சோறு முக்கியம் பாஸ்! - 40
அதிக காரமில்லாத, மசாலா வாசனை உறுத்தாத, பஞ்சு மாதிரி வெந்த, செமி கிரேவி பதத்திலான மட்டன் சுக்கா; நிறமிகளையும் அன்னாசிப்பூ வகையறாக்களையும் அள்ளிக்கொட்டாத, ‘தம்’ போட்டுச் சமைத்த, லெக்பீஸ் புதைந்த சிக்கன் பிரியாணி; கூடவே, தொடுகறியாக மணமான மட்டன் சாப்ஸ்... நன்கு பசியெடுத்த ஒரு மதியநேரத்தில் இவையெல்லாம் வாய்த்தால் அது பொன்னான தருணம். ராஜபாளையம், ரயில்நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘கூரைக்கடை’யில் அப்படியொரு ரசனையான அனுபவம் வாய்த்தது.

33 வருடங்களுக்கு முன்னால், அரவமில்லாமல் கிடந்த ரயில்நிலையச் சாலையில், ஓலையில் கொட்டகை வேய்ந்து நான்கு பேர் அமரும்வகையில் இந்த உணவகத்தைத் தொடங்கினார் கருப்பசாமி. இப்போது காங்கிரீட் கட்டடமாகிவிட்டது. அறுபது பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். ஆனால், மக்கள் சூட்டிய ‘கூரைக்கடை’ என்ற பெயர் இன்னும் நீடிக்கிறது. பெயர்ப் பலகையெல்லாம் கிடையாது. அடையாளமாக, முகப்பில் கூரை வேய்ந்திருக்கிறார்கள்.

உணவகத்தின் சூழலே வித்தியாசமாக இருக்கிறது. வராண்டா மாதிரியிருக்கிறது முகப்பு. விசாலமாக டேபிள் போட்டிருக்கிறார்கள். பக்கவாட்டிலும் உள் அறைகளிலும்கூட அமர்ந்து சாப்பிடலாம். மதிய நேரத்தில் எல்லா இருக்கைகளும் நிறைந்துவிடுகின்றன. ஒரு பந்திக்கு ஆட்கள் காத்திருக்கிறார்கள்.
முகப்பிலேயே கரியடுப்புகள் கனன்று கொண்டிருக்கின்றன. குழம்புகளை அனலிலேயே வைத்திருக்கிறார்கள். ஆவி பறக்க அள்ளிவந்து ஊற்றுகிறார்கள்.

கூரைக்கடையின் ஸ்பெஷல், மட்டன் சாப்பாடு. 155 ரூபாய். பொன்னியரிசி சாதம், கூட்டு, பொரியல், மட்டன் குழம்பு, சாம்பார், ரசம், மோர், வெங்காயப் பச்சடி, மட்டன் சுக்கா. சுக்காவுக்காகவே கூரைக்கடையைத் தேடி நெடுந்தொலைவிலிருந்து வருபவர்களெல்லாம் இருக்கிறார்கள். அனலில் நன்கு வெந்து சுண்டிப்போயிருக்கிறது சுக்கா. இறைச்சி, மசாலாவில் தோய்ந்து நன்கு வெந்திருக்கிறது. மட்டன் குழம்பில் தென்மாவட்டத்துக்கே உரித்தான மிதமான காரம். தூக்கலான மல்லி வாசனை ஈர்க்கிறது.

மட்டன் சாப்பாடு விரும்பாதவர்கள், மீன் சாப்பாடு சாப்பிடலாம். 185 ரூபாய். நெய் மீன், அயிரை மீன் என இரண்டு வகைகள் உண்டு. மட்டன் குழம்பு, சுக்காவுக்குப்பதில் ஏதேனும் ஒரு மீன் குழம்பு வாங்கிக்கொள்ளலாம். அயிரை மீன் குழம்பு அசத்தலாக இருக்கிறது.

சிக்கன் சாப்பாடும் உண்டு. இதில் கோழிச்சுக்கா, கோழி சாப்ஸ் தருகிறார்கள். தவிர நாட்டுக்கோழி சாப்ஸ், காடை சாப்ஸும் வைத்திருக்கிறார்கள். தலா 90 ரூபாய். பிரியாணியும் உண்டு. தம் பிரியாணிதான். சிக்கன், மட்டன் என எந்த பிரியாணி வாங்கினாலும் தொடுகறியாக மட்டன் சாப்ஸ் தருகிறார்கள். 150 ரூபாய்.
காலை, இரவு சிற்றுண்டிகளும் உண்டு. வழக்கமான பூரி, தோசை, பொங்கல் வகைகள்தான். ஆனாலும் மதியம்தான் கூரைக்கடையின் சிறப்பான தருணம். நிரம்பி வழிகிறது கூட்டம்.
உணவகத்துக்கு வருபவர்களை மிகவும் அன்போடு வரவேற்கிறார் கருப்பசாமி. தெக்கத்தி மண்ணுக்கேயுரிய வெள்ளந்தி மனிதர்.

“தென்மாவட்டத்திலேயே ‘ராஜபாளையம் மசாலா’வுக்குன்னு தனியா ஒரு சிறப்பு உண்டு. எல்லா உணவுகள்லேயுமே பூண்டு, இஞ்சி சேர்மானம் அதிகமாய் இருக்கும். சுவையை மட்டுமல்லாம, செரிமானத்தையும் மனசுல வெச்சுதான் சமைப்போம். ‘கூரைக்கடைக்குப் போனா சாப்பாடு நல்லா இருக்கும்... வயித்துக்கு ஒண்ணும் பண்ணாது’ன்னு எல்லாரும் நம்புறாங்க. வெளியூர்ல இருந்தெல்லாம் சாப்பிட வர்றாங்க. அந்தப் பேரைக் காப்பாத்திக்கணும்...” என்கிறார் கருப்பசாமி.
- பரிமாறுவோம்
வெ.நீலகண்டன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

வெறும் வயிற்றில் இளநீர் அருந்தலாமா?

- ஷைனி சுரேந்திரன், உணவியல் நிபுணர்
“கண்டிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. உணவு சாப்பிட்டு அரைமணி நேரத்துக்குப் பிறகே குடிக்கவேண்டும். உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இளநீர். அதனால், மழை, குளிர்காலங்களில் குடித்தால் ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்னைகள் வரலாம். அந்த நேரங்களில் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். வெயிற்காலங்களில் ஏற்படும் நீரிழப்பு, தாது உப்புகள் இழப்பைச் சீராக்கும் சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இளநீரில் நிறைவாக இருக்கின்றன. வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர் இழப்பு ஏற்படும் சமயங்களில் அதை ஈடுகட்ட மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீர் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் அதிகம் குடிக்கக்கூடாது. நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். இளநீரை வெட்டியபிறகு உடனே குடித்துவிட வேண்டும். காலம் தாழ்த்தியோ, ஃபிரிட்ஜில் வைத்தோ குடிப்பது நல்லதல்ல.