
பேரீச்சை இட்லி
தேவை: பச்சரிசி - 400 கிராம் தேங்காய்த் துருவல் - 150 கிராம் பாசிப்பருப்பு - 50 கிராம் பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்) முந்திரி - 10 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை வெல்லம் - கால் கிலோ நெய் - சிறிதளவு உப்பு - ஒரு சிட்டிகை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். பேரீச்சை மற்றும் முந்திரியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். அரைத்த அரிசி மாவில் பொடித்த வெல்லம், பொரித்த பேரீச்சை, முந்திரி துண்டுகள், வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கரைக்கவும். உப்பு, சமையல் சோடா, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். குறைந்தது ஏழு மணி நேரம் ஊறவிடவும். பிறகு மாவை இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்க, ஸ்வீட் பேரீச்சை இட்லி ரெடி.
பேரீச்சை தோசை
தேவை: பேரீச்சை - 10 பாம்பே ரவை - 200 கிராம் தேங்காய்ப்பால் - 150 மில்லி கெட்டித்தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையைக் கொட்டை நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கி, இரண்டு நிமிடங்கள் நீரில் வேகவிட்டு மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். ரவையைத் தேங்காய்ப்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அரைத்த ரவையுடன் பேரீச்சை விழுது, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கெட்டித் தயிர் சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். தவாவைச் சூடுசெய்து மாவை மெல்லிய தோசையாக வார்த்துச் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி எடுக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள ஒன்றும் தேவையில்லை.
பேரீச்சை மூங்தால் புட்டு
தேவை: பாசிப்பருப்பு - ஒரு கப் பேரீச்சை - 10 (பொடியாக நறுக்கவும்) கேரட் துருவல் - ஒரு கப் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் - தலா அரை கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத் தண்ணீர் விட்டு கால் மணி நேரம் ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் சற்று கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய பேரீச்சை, கேரட் துருவல் சேர்த்துப் பிசைந்து குக்கரில் 15 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் ஒரு பெரிய தட்டில் சேர்த்துக் கட்டிகளில்லாமல் உதிர்த்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பேரீச்சை மூங்தால் புட்டு தயார்.
பேரீச்சை பொங்கல்
தேவை: பச்சரிசி - 200 கிராம் பாசிப்பருப்பு - 100 கிராம் வெல்லம் - அரை கிலோ (பொடிக்கவும்) பேரீச்சை - 20 (கொட்டை நீக்கியது) முந்திரி - 10 (துண்டுகளாக்கி நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் நெய் - 2 டேபிள்ஸ்பூன் பால் - அரை லிட்டர் தேன் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்புடன் பால், அரை கப் நீர் சேர்த்து வேகவிடவும். வெந்த பச்சரிசி - பாசிப்பருப்புக் கலவையை நன்கு மசிக்கவும். பேரீச்சையைப் பொடிப்பொடியாக நறுக்கவும். வெல்லத்தைச் சிறிதளவு நீரில் கரைத்து வடிகட்டி, பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான, அகலமான பாத்திரத்தில் சேர்த்துச் சூடாக்கவும். வெல்லப்பாகில் மசித்த அரிசி - பருப்பு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பேரீச்சைத் துண்டுகள், தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி, நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகள் சேர்த்து இறக்கினால், சுவையான பேரீச்சை பொங்கல் ரெடி.
பேரீச்சை இனிப்பு சாதம்
தேவை: சீரக சம்பா அரிசி - 200 கிராம் பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) முந்திரி, பாதாம் - தலா 10 சர்க்கரை - 200 கிராம் குங்குமப்பூ - சிறிதளவு பால் - ஒரு டேபிள்ஸ்பூன் நெய் - 4 டேபிள்ஸ்பூன் லவங்கம் - 2 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: சீரக சம்பா அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பேரீச்சை, முந்திரி, பாதாமை நீளவாக்கில் மெல்லியதாகச் சீவவும். குங்குமப்பூவைப் பாலில் கரையவிடவும். பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான கடாயில் நெய்விட்டு லவங்கம் தாளித்து பேரீச்சை, முந்திரி, பாதாமை லேசாக வறுத்து, வேகவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். இதனுடன் பாலில் கரைத்த குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி இறக்க, கமகம மணத்துடன் பேரீச்சை இனிப்பு சாதம் ரெடி.
பேரீச்சை தேங்காய் இனிப்பு
தேவை: கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கிய பேரீச்சை - 2 கப், முந்திரி - 6 (பொடியாக நறுக்கவும்) சர்க்கரை - 2 கப், தேங்காய்த் துருவல் - 2 கப் நெய் - 100 கிராம்.

செய்முறை: பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான, அகலமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து பாகு கொதிக்கும்போது பொடியாக நறுக்கிய முந்திரி, பேரீச்சைத் துண்டுகளைப் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் கழித்து, தேங்காய்த் துருவலைச் சேர்த்து, நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து இறுகி வரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி, ஆறிய பின் துண்டுகள் போடவும்.
பேரீச்சை போளி
தேவை: கொட்டை நீக்கிய பேரீச்சை - 20 மைதா மாவு - 2 கப், வெல்லம் - 150 கிராம் தேங்காய்த் துருவல் - ஒரு கப், நெய் - தேவையான அளவு ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் பால் - கால் டம்ளர் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பேரீச்சையைப் பாலில் வேகவைத்து மிக்ஸியில் நன்கு மசிக்கவும். வெல்லத்தில் அரை டம்ளர் நீர்விட்டுக் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கம்பிப் பதம் வந்தவுடன் அரைத்த பேரீச்சை விழுது, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். நீர் நன்கு சுண்டியவுடன் இறக்கி ஆறவிடவும். பூரணம் தயார்.
மைதா மாவுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கெட்டியாகவும் அதேசமயம் சற்றுத் தளரவும் பிசைந்துக்கொள்ளவும். பிசைந்த மாவு பூரி போலத் திரட்டி, கொஞ்சம் பேரீச்சை பூரணம் வைத்து மீண்டும் மூடி மெல்லியதாகத் தட்டி தவாவில் போட்டு இருபுறமும் நெய்விட்டுப் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். மாலை நேரத்துக்கு ஏற்ற சுவையான டிபன் இது.
பேரீச்சை அல்வா
தேவை: பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்) பால் - அரை லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது) தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் முந்திரிப்பருப்பு - 10 சோயா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 150 கிராம் நெய் - 5 டேபிள்ஸ்பூன் ரோஸ் எசென்ஸ் - 3 துளிகள் ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சையைச் சின்னத் சின்னத் துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தேங்காய்த் துருவலையும் பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். முந்திரியையும் பால் சேர்த்து அரைக்கவும். சோயா மாவை வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான கடாயில் கொஞ்சம் நெய்விட்டு, உருகியதும் பேரீச்சைப்பழ விழுது, தேங்காய் விழுது, முந்திரி விழுது மூன்றையும் சேர்த்து நன்கு கிளறவும். சோயா மாவு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து மீதமுள்ள நெய்விட்டுக் கிளறவும் (அடுப்பை `சிம்’மில் வைப்பது அவசியம்). சற்று இறுக்கமானவுடன் ஏலக்காய்த்தூள், ரோஸ் எசென்ஸ் சேர்த்து இறக்கவும். சத்தான பேரீச்சை அல்வா ரெடி.
பேரீச்சை பாசந்தி
தேவை: பால் - ஒரு லிட்டர் சர்க்கரை - 150 கிராம் பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்) ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சாரைப்பருப்பு அல்லது பிஸ்தா - தேவையான அளவு, வெனிலா எசென்ஸ் - 3 துளிகள்.

செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சவும். காய்ச்சிய பாலில் சர்க்கரையைப் போட்டுக் கரையவிடவும். பிறகு இதில் நீள நீளமாக மெலிதாக நறுக்கிய பேரீச்சைத் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள், வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும். கப்பில் பரிமாறும்போது சாரைப் பருப்பு (அ) பிஸ்தா தூவிக் கொடுக்கவும்.
பார்ட்டிகளின்போது ஸ்பெஷலாக தயாரித்துப் பரிமாற ஏற்றது இந்தப் பேரீச்சை பாசந்தி!
பேரீச்சை ஜாமுன்
தேவை: மைதா மாவு, சர்க்கரை - தலா 200 கிராம் பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்) தயிர் - 3 டேபிள்ஸ்பூன் சமையல் சோடா - ஒரு சிட்டிகை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும். மைதா மாவில் தயிர், சமையல் சோடா சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். அதனுடன் பேரீச்சை விழுதையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். சர்க்கரையில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவைச் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளிப்போட்டு, சிவக்க வெந்தவுடன் எடுத்து, சர்க்கரைப் பாகில் போட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.
பேரீச்சை மில்க் புடிங்
தேவை: பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) பால் - ஒரு லிட்டர், முந்திரி, பாதாம், திராட்சை, ரஸ்க் - தலா 10 பால்கோவா - 100 கிராம் (சர்க்கரை சேர்த்தது) வெனிலா எசென்ஸ் - 2 துளிகள் நெய் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 100 கிராம்.

செய்முறை: பேரீச்சை, முந்திரி, பாதாம் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ரஸ்க்கை மிக்ஸியில் கொரகொரவெனப் பொடிக்கவும். பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான, அகலமான பாத்திரத்தில் பாலைச் சூடாக்கி, பொடியாக நறுக்கிய பேரீச்சை, பாதாம், முந்திரி, திராட்சை, ரஸ்க் தூள், பால்கோவா, தேங்காய்த் துருவல், நெய் சேர்த்து நன்கு கிளறவும் இறுதியாக வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கவும். சூடான, சுவையான புடிங் ரெடி.
பேரீச்சை பாயசம்
தேவை: பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) தேங்காய்ப்பால் - 2 கப் வெல்லம் - ஒன்றேகால் கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் சுக்குத்தூள் - கால் டீஸ்பூன் பால், முந்திரி - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையைப் பொடியாக நறுக்கி, பாலில் வேகவிட்டு நன்கு மசிக்கவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும், வடிகட்டி மசித்த பேரீச்சையில் சேர்க்கவும். இதனுடன் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். தேங்காய்ப்பால், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.
பேரீச்சை ஸ்வீட் பால்ஸ்
தேவை: வறுத்த அரிசி மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப் பேரீச்சை - 10 (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்) சர்க்கரை - ஒரு கப், கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் சுக்குத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பேரீச்சையை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அரிசி மாவு, கோதுமை மாவு, பேரீச்சை விழுது, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர்விட்டு முறுக்கு மாவு போல நன்கு பிசைந்து கோலிகுண்டு அளவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும். பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 2 டம்ளர் நீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் பேரீச்சை உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவும் (அடுப்பை `சிம்’மில் வைக்கவும்). இரண்டு நிமிடங்கள் கழித்து, திருப்பிப் போடவும். வெந்ததும் தேங்காய்ப்பால், சுக்குத்தூள் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பேரீச்சை ஸ்வீட் பால்ஸைச் சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் குளிரவைத்தோ சாப்பிடலாம்.
பேரீச்சை பேபி கார்ன் ஃப்ரை
தேவை: மைதா - ஒரு டேபிள்ஸ்பூன் பேபி கார்ன் - 8 (வட்ட வட்டமாக நறுக்கவும்) பேரீச்சை - 10 (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்) கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவி, நீள நீளமாக மெல்லியதாகக் குச்சி போல நறுக்கவும்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தேவையான நீர்விட்டு பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கலக்கவும். அதில் பேபி கார்னை சேர்த்துப் பிசைந்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து டிஷ்யூ பேப்பரில் பரப்பவும். பிறகு வாணலியில் ஒரு சிறிதளவு எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி சோயா சாஸ் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பொரித்த பேபி கார்ன், நறுக்கிய பேரீச்சை இரண்டையும் இக்கலவையுடன் சேர்த்து, கொஞ்சம் உப்பு சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை, நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
பேரீச்சை ஃப்ரைடு ரைஸ்
தேவை: சீரக சம்பா அரிசி - 200 கிராம் பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் அஜினமோட்டோ - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சாதத்தை உதிராக வடிக்கவும். பேரீச்சையைத் துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயத்தாள், மிளகுத்தூள், அஜினமோட்டோ, பேரீச்சைத் துண்டுகள் ஆகியவற்றை சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உதிராக வடித்த சாதத்தில் வதக்கியதைப் போட்டு நன்கு கலந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பேரீச்சை டிரை ஃப்ரூட் சாட்
தேவை: வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா கால் கப் (லேசாக வறுக்கவும்) அவல் - கால் கப் (பொரித்துக்கொள்ளவும்), பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10 (துருவிக்கொள்ளவும்), உலர்திராட்சை, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கிய பேரீச்சை - தலா 10 சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் அகலமான பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
பிள்ளைகள் தேர்வுக்குப் படிக்கும்போது இதைக் கொடுக்க புத்துணர்வு பெறுவார்கள்.
பேரீச்சை பக்கோடா
தேவை: பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) கடலை மாவு - 100 கிராம் தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு நீரை வடிக்கவும். இதனுடன் கடலை மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் தெளித்து, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் மாவைக் கிள்ளிப்போட்டுப் பொரிக்கவும். இனிப்பு, காரம் நிறைந்த பக்கோடா ரெடி.
ஃப்ரூட்ஸ் & டேட்ஸ் சாலட்
தேவை: ஆப்பிள் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) மாதுளை முத்துகள் - ஒரு கப் இனிப்பான திராட்சைப்பழம் - 20 ஆரஞ்சு - 4 சுளைகள் பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்) தயிர் - ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப் சர்க்கரை, மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையைப் பொடியாக நறுக்கி எண்ணெயில் லேசாக வதக்கவும். ஓர் அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய ஆப்பிள், தோல், கொட்டை நீக்கிய ஆரஞ்சு சுளைகள், மாதுளை முத்துகள், திராட்சைப்பழம், வதக்கிய பேரீச்சை, தயிர், ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கிப் பரிமாறவும்.
பேரீச்சை உண்ணியப்பம்
தேவை: பச்சரிசி - ஒரு கப் வாழைப்பழம் - ஒன்று பொடித்த வெல்லம் - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை தேங்காய்த் துண்டுகள் - தேவையான அளவு (மிகவும் பொடியாக நறுக்கவும்) பேரீச்சை - 10 (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்), நெய் - தேவையான அளவு உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசியைச் சுத்தம் செய்து மாவாக அரைத்துச் சலித்துக்கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துண்டுகள், பேரீச்சைத் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து இட்லி மாவுப் பதத்தில் கரைத்து வைக்கவும்.
அடிகனமான வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் கரைத்த மாவைச் சின்னச் சின்ன அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
பேரீச்சை பணியாரம்
தேவை: பாம்பே ரவை, சர்க்கரை - தலா 200 கிராம் பேரீச்சை - 10 (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்) முந்திரி, பாதாம் - தலா 10 (பொடியாக நறுக்கவும்) ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ரவையை அரை மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பிறகு நீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றவும். அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய பேரீச்சை, பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மாவைப் பணியாரங்களாகச் சுட்டு எடுக்கவும்.
பேரீச்சை தயிர் பிரெட்
தேவை: பிரெட் ஸ்லைஸ்கள், பேரீச்சை (கொட்டை நீக்கவும்), முந்திரி - தலா 10 வெங்காயம் - 2 கொத்தமல்லித்தழை - சிறிதளவு தயிர் - 200 கிராம் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காராபூந்தி - 50 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பேரீச்சை, முந்திரி, கொத்தமல்லித்தழையை மிகவும் பொடிப்பொடியாக நறுக்கவும். நறுக்கியவற்றைத் தயிரில் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கலக்கவும். பிரெட் ஸ்லைஸ் ஒவ்வொன்றையும் சிறிது வெண்ணெய் தடவி தவாவில் போட்டு எடுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை இரண்டாக கட் செய்து மேலே தயிர்க் கலவையை ஊற்றி, மிளகாய்த்தூள், காராபூந்தி தூவி சாப்பிடவும்.
இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த சுவையான டிஷ் இது.
ஸ்டஃப்டு பேரீச்சை
தேவை: பேரீச்சை (பெரியதாக எடுத்துக்கொள்ளவும்) - 20 முந்திரி, பாதாம் - தலா 7 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு - 100 கிராம் அரிசி மாவு - 50 கிராம் மைதா - ஒரு டேபிள்ஸ்பூன் சமையல் சோடா - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையை லேசாகக் கீறி, கொட்டையை நீக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி மற்றும் பாதாமை வறுத்துக்கொள்ளவும். வறுத்தவற்றுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடிக்கவும். பொடித்த பொடியை பேரீச்சையினுள் வைத்து நன்கு அழுத்தி மூடவும். கடலை மாவு, அரிசி மாவு, மைதா, சமையல் சோடா, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துச் சிறிதளவு நீர்விட்டுக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு ஸ்டஃப்டு பேரீச்சைகளை மாவுக் கலவையில் நனைத்துப் பொரிக்கவும்.
இது மிகவும் கிரிஸ்பியான மாலை டிபன்.
பேரீச்சை தக்காளி பச்சடி
தேவை: கொட்டை நீக்கிய பேரீச்சை - 10 நன்கு பழுத்த தக்காளி - கால் கிலோ சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 கடுகு - ஒரு டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சை மற்றும் தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு தக்காளி, உப்பு மற்றும் பேரீச்சைத் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி, தேங்காய்த் துருவல் மற்றும் சர்க்கரைச் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
இது சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். ஜாம் மாதிரி செம டேஸ்ட்டியாக இருக்கும்.
பேரீச்சை கிரேப் ஸ்குவாஷ்
தேவை: பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) இனிப்புக் கறுப்பு திராட்சை - கால் கிலோ முந்திரி - 8 (உடைக்கவும்) வெல்லம் - 100 கிராம் (பொடிக்கவும்) தேங்காய்த் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பேரீச்சையைச் சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். பேரீச்சைத் துண்டுகளை லேசாக வதக்கி வைக்கவும். தேங்காய்த் துருவலில் பால் பிழியவும். திராட்சையை மிக்ஸியில் சேர்த்துச் சாறு எடுக்கவும். திராட்சை சாற்றுடன் வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். பிறகு வறுத்த முந்திரி, பேரீச்சைத் துண்டுகள், ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும்.
சத்தான ஸ்குவாஷ் இது.
பேரீச்சை பர்ஃபி
தேவை: பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) சர்க்கரை - 150 கிராம் தேங்காய்த் துருவல் - 100 கிராம் நெய் - 3 டேபிள்ஸ்பூன் முந்திரி - 20 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சையை மிகவும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். பிறகு பேரீச்சையைச் சேர்த்து லேசாக ஒரு புரட்டுப் புரட்டவும். வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலைப் பொன்னிறமாக வதக்கவும். தேங்காய்த் துருவல், முந்திரி இரண்டையும் மிக்ஸியில் சன்னமாகப் பொடிக்கவும். பேரீச்சையும் உடன் சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும். பிரஷர் பான் (pressure pan) அல்லது அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் நீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் பொடித்து வைத்திருக்கும் கலவை, ஏலக்காய்த்தூள், மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி, பூத்து வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
கிரிஸ்பி பேரீச்சை வடை
தேவை: பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்) பொட்டுக்கடலை - 100 கிராம் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்) தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையைப் பொடியாக நறுக்கி இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு மிக்ஸியில் அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் சன்னமாகப் பொடிக்கவும். ஓர் அகலமான பாத்திரத்தில் பேரீச்சை விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுப் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி அதையும் சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து, வடைகளாகத் தட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வடைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
பேரீச்சை பிரெட் மசாலா உப்புமா
தேவை: பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்) பிரெட் ஸ்லைஸ் - 10 வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையை நீளவாக்கில் மிகவும் மெல்லியதாக நறுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக கட் செய்து, வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டுப் பொரித்துத் தனியே எடுத்து வைக்கவும். பிரஷர் பேனில் கொஞ்சம் எண்ணெய்விட்டு கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். கால் கப் தண்ணீர்விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து பேரீச்சைத் துண்டுகள், பிரெட் துண்டுகள் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பேரீச்சை ஆப்பம்
தேவை: பேரீச்சை (கொட்டை நீக்கவும்), முந்திரி - தலா 6 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் பச்சரிசி, புழுங்கலரிசி - தலா 100 கிராம் உளுந்து - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஊறவைத்து முதல் நாள் இரவே அரைத்து வைக்கவும். பேரீச்சை மற்றும் முந்திரியை மிகவும் மெல்லியதாக, பொடிப்பொடியாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் பொரித்து எடுத்து, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஆப்பக்கடாயை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி, சிறிதளவு பேரீச்சைக் கலவையைப் போட்டு வாணலியை ஒரு சுழற்றுச் சுழற்றி வேகவிட்டு எடுக்க, வாசமான ஆப்பம் ரெடி!
பேரீச்சை கேக்
தேவை: மைதா - இரண்டரை கப் வெண்ணெய் - ஒரு கப் பால் - ஒன்றரை கப் கண்டன்ஸ்டு மில்க் - 400 மில்லி பேரீச்சை - அரை கப் (கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கியது) சமையல் சோடா - முக்கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா - ஒன்றரை டீஸ்பூன் பொடித்த சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முதலில் 2 டீஸ்பூன் மைதாவைத் தனியே எடுத்து வைக்கவும். பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சமையல் சோடா, பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். பொடியாக நறுக்கிய பேரீச்சையில்
2 டீஸ்பூன் மைதா சேர்த்துப் பிசிறவும். சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்துக் குழைக்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். பிறகு பால், மைதா, வெனிலா எசென்ஸையும் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாகப் பேரீச்சையைச் சேர்த்துக் கலக்கவும். வெண்ணெய் தடவி, மைதா தூவிய ட்ரேயில் இதை ஊற்றி அவனில் (oven) 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யவும். பிறகு கட் செய்து பரிமாறவும்.
பேரீச்சைத் தொக்கு
தேவை: பேரீச்சை - 100 கிராம் தனி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு - கால் கப் கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சையைக் கொட்டை நீக்கி மிகவும் பொடியாக நறுக்கவும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, எடுக்கும்போது பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காயவைத்து கடுகு தாளித்து, நறுக்கிய பேரீச்சையைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று நிமிடங்கள் வதக்கவும். பின்னர் எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், பொடித்து வைத்த வெந்தயப் பொடி, தேவையான உப்பு சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கினால், கமகம மணத்துடன் பேரீச்சைத் தொக்கு ரெடி.
ஆரோக்கிய காவலன்!
பார்த்தவுடனேயே எடுத்துச் சாப்பிட்டுவிட வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டும் பேரீச்சையில் சுவை மட்டுமல்ல, சத்துகளும் ஏராளம். எளிதில் ஜீரணமாகக் கூடியது. உடனடியாக ஆற்றலை அளிக்கக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து எனப் பல்வேறு சத்துகளின் சங்கமமாக விளங்கும் பேரீச்சை... மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதுடன், மூட்டுவலியில் இருந்து நிவாரணம் அளிப்பது வரை உடலின் பல பாகங்களுக்கும் ஆரோக்கியக் காவலனாக அரும்பணியாற்றுகிறது. ரத்த ஓட்டம் சீரடையவும், எலும்புகள் உறுதிபெறவும் உறுதுணை புரிகிறது.

``அப்படியே சாப்பிடும்போதே அசத்தும் பேரீச்சையில் வகை வகையான ரெசிப்பிகள் செய்து சாப்பிட்டால் `டபுள் தமக்கா’ தானே? உங்கள் நாவின் சுவை நரம்புகளை ஓவர் டைம் பார்க்கவைக்கும் விதத்தில் பேரீச்சையைக்கொண்டு புட்டு, அல்வா, பாசந்தி, உண்ணியப்பம், ஃப்ரைடு ரைஸ், வடை எனப் பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் முறையை இங்கே வழங்கியுள்ளேன். செய்து பரிமாறுங்கள்; பாராட்டுகளை அள்ளுங்கள்!’’ என்று உற்சாகப் படுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஆதிரை வேணுகோபால்.
படங்கள்: ப.பிரியங்கா