தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

வாழைப்பூக் கூட்டு

தேவை:  வாழைப்பூ – பாதியளவு பூ, பாசிப்பருப்பு – அரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது), தேங்காய்த்துருவல் – 2 – 3 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது), தேங்காய் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்துச் சிறிது தண்ணீர் விட்டு ஒரு விசில் வைத்து எடுக்கவும். வாழைப்பூவில் நரம்பு எடுத்துப் பொடியாக நறுக்கி மூன்று முதல் நான்கு முறை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் வாழைப்பூ, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பு, தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்தபின் தேங்காய்த்துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

குடமிளகாய் தயிர்ப்பச்சடி

தேவை:  குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது), தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

தாளிக்க:  கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிப்புப் பொருள்களைத் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியபின் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிவைத்து ஆறவிடவும். நன்கு ஆறிய பிறகு தயிர், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

மாதுளை தயிர்ப்பச்சடி

தேவை:  மாதுளம்பழ‌ம் – ஒன்று, தயிர் – ஒன்றரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  தயிரை ஒரு துணியில் கட்டி அரை மணி நேரம் தண்ணீர் வடிய தொங்க விடவும். மாதுளம்பழ விதைகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். த‌யிரை ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் தயிரில் கலந்து கொள்ளவும். சா‌ப்‌பிடு‌ம்போது இ‌ந்தத் த‌யி‌ர்ப்ப‌ச்சடி‌யி‌ல் உ‌தி‌ர்‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மாதுளை முத்துகளையும் மேலாக‌த் தூ‌வி பரிமாறவும். முத்துகள் நன்கு சிவப்பாக இருந்தால் தயிர்ப்பச்சடி, பார்க்கவே கண்ணைப் பறிக்கும்.

கோஸ் கடலைப்பருப்பு பொரியல்

தேவை:  முட்டைகோஸ் – இரண்டு கப் (பொடியாக நறுக்கியது), கடலைப்பருப்பு – கால் கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கியது), செட்டிநாடு சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து வெங்காயம், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு கிளறவும். மூடி வைத்து குறைவான சூட்டில் நன்கு வேகவைக்கவும். நடுவில் அவ்வப்போது திறந்து கிளறி, மீண்டும் மூடி வைக்கவும். முட்டைகோஸ் நன்கு வெந்து, பொரியல் சுருளவந்ததும் இறக்கி வைக்கவும்.

மிளகுப்பொடி (மோர் மிளகாய்ப்பொடி)

தேவை:  பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 கப், மோர் மிளகாய் – ஒரு கப், உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  அரிசி, உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் குறைவான சூட்டில் நன்கு சிவக்க வறுத்து ஆறவைத்துக் கொள்ளவும். மோர் மிளகாயை வெயிலில் ஒருநாள் முழுவதும் நன்கு காயவைத்துக் கொள்ளவும். அரிசி, உளுந்து, மோர் மிளகாய், உப்பு சேர்த்து மெஷினில் கொடுத்து நன்கு நைஸாக அரைத்துக்கொள்ளவும். காற்றுபுகா டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.

சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெயுடன் இந்தப் பொடியைக் கலந்து சாப்பிடலாம்.

மிளகே சேர்க்கப்படாவிட்டாலும், இந்தப் பொடிக்கு செட்டிநாடு பகுதிகளில் `மிளகுப்பொடி' என்பதே பெயர்.

காளான் பிரயாணி

தேவை:  காளான் – ஒரு கப், பாசுமதி அரிசி – இரண்டு கப், வெங்காயம் – ஒன்று (நீள வாக்கில் நறுக்கியது), நெய் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,  தேங்காய்ப் பால் – அரை கப், தயிர் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியா (மல்லித்) தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க துருவிய தேங்காய் – இரண்டு டேபிள்ஸ்பூன், தக்காளி – 2 (நறுக்கியது), இஞ்சி – ஓர் அங்குலம், பூண்டு – 6, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி (நறுக்கியது), புதினா – ஒரு கைப்பிடி (நறுக்கியது), மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், முந்திரி – 10.

தாளிக்க:  பிரியாணி இலை – ஒன்று, ஏலக்காய் – 3, லவங்கம் – 2, கிராம்பு – 5, அன்னாசிப்பூ – ஒன்று.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  காளானை நன்கு கழுவி நீளவாக்கில் நறுக்கி தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அரைத்துக்கொள்ள கொடுத்துள்ளதை, நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய், எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், அன்னாசிப்பூ சேர்த்துத் தாளித்து, மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு, ஊறவைத்திருக்கும் காளான் கலவை, உப்பு சேர்த்து, நன்கு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். ஒரு குக்கரில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, அதில் வதக்கிய மசாலா சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதிவந்ததும் ஊறவைத்து வடித்த அரிசி, தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்க வேண்டும். பிரஷர் வெளியே வந்ததும் காளான் பிரயாணியை வேறொரு பாத்திரத்தில் மாற்றி மூடிவைக்கவும்.

கொண்டைக்கடலை குழம்பு / மொச்சை குழம்பு / வேர்க்கடலை குழம்பு

தேவை:  வெள்ளை கொண்டைக்கடலை / மொச்சை / வேர்க்கடலை – அரை கப், சின்ன வெங்காயம் – அரை கப், பூண்டு – 10 பல், தக்காளி – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன், புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

அரைக்க:  தேங்காய்ப்பல் – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரி – 10.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  கொண்டைக்கடலை / மொச்சை / வேர்க்கடலை 8 மணி முதல் 10 மணி நேரம் ஊற வைக்கவும். கொண்டைக்கடலை / வேர்க்கடலை / மொச்சையை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தைத் தோல் நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த கொண்டைக்கடலை / மொச்சை / வேர்க்கடலை மற்றும் புளிக்கரைசல் ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரும் குழம்பைக் கொதிக்கவைக்கவும். அரைத்த விழுது, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.

தட்டைப்பயறு இளங்குழம்பு

தேவை:  தட்டைப்பயறு - ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, தக்காளி - ஒன்று, பூண்டு - 4 பல், சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்), உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

தாளிக்க:  கடுகு, சீரகம், உளுந்து – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  தட்டைப்பயறை வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து, குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவைத்த தட்டைப்பயறு, புளிக்கரைசல், உப்பு, சாம்பார் பொடி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பூண்டை தட்டிப்போட்டுக் கொதிக்கவிடவும்.  பருப்பு நன்கு வெந்ததும் மற்றொரு வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்துக் கொதிக்கும் இளங்குழம்பில் சேர்த்து, கொதிக்கவைத்து கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.

தக்காளி குழம்பு

தேவை:  தக்காளி – 5 (நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), பூண்டு – 10 (தட்டிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், முந்திரி – 10, மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி அதில் சோம்பு,  மல்லி சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். முந்திரி சேர்த்து லேசாகச் சிவக்கும் வரை வறுக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். தேங்காய்த்துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி ஆற விடவும். இந்தக் கலவையை மிக்ஸியில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் சேர்த்து அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, குழம்பை நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

மீல் மேக்கர் குழம்பு

தேவை:  மீல் மேக்கர் (சோயா) – முக்கால் கப், சின்ன வெங்காயம் – அரை கப், பூண்டு – 10 பல், தக்காளி – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன்  புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்)  உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

அரைக்க:  தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரி – 10.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  முதலில் இரண்டு கப் கொதிக்கும் நீரில் உப்பு, மீல் மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அதைப் பிழிந்தெடுத்து, நான்கு முறை தண்ணீரில் அலசி மீண்டும் பிழிந்து எடுக்கவும். பூண்டு, வெங்காயத்தைத் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசல் ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை குழம்பைக் கொதிக்க வைக்கவும். மீல் மேக்கர், அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சோயா உருண்டைகளில் குழம்பு சேர்ந்து கெட்டியானதும் இறக்கவும்.

வெங்காய சாம்பார்

தேவை:  துவரம்பருப்பு – அரை கப் (வேகவைத்துக் கொள்ளவும்), நறுக்கிய வெங்காயம் – 2 கப், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்),  எண்ணெய், உப்பு -தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

அரைக்க:  கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பச்சரிசி – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எல்.ஜி. பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  ஒரு வாணலியில் ஒரு 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடானதும் அரைத்துக் கொடுத்துள்ளவற்றை நன்கு வாசம் வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு மணம்சேர்க்கும் பெருங்காயத்துடன் தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு, புளிக்கரைசல், 2 கப் தண்ணீர், வேகவைத்த பருப்பை ஊற்றி கொதிக்க வைக்கவும். ஓரிரு நிமிடங்கள் கொதித்த பிறகு அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

வெங்காயம் பூண்டு குழம்பு

தேவை:  பூண்டு – 15 - 20, சின்ன வெங்காயம் – 15 - 20, தக்காளி – ஒன்று (அரைத்துக்கொள்ளவும்), புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்), சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  பூண்டு, வெங்காயம் தோல் நீக்கிவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை குழம்பைக் கொதிக்கவைக்கவும். இறக்குவதற்குச் சற்றுமுன் வெல்லம் சேர்த்து இரண்டு கொதிவந்ததும் இறக்கவும்.

கறிவேப்பிலை குழம்பு

தேவை:  கறிவேப்பிலை – 2 கப், சின்ன வெங்காயம் – கால் கப், பூண்டு - 10 பல், சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, மிளகு – அரை டீஸ்பூன், தேங்காய்ப்பல் – 2 டேபிள்ஸ்பூன்  புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்  எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம், காய்ந்த மிளகாய், மிளகை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளி, கழுவிய கறிவேப்பிலை, தேங்காய்ப்பல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்துவரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

வெங்காயத்தாள் சூப்

தேவை:  துவரம்பருப்பு வேகவைத்த நீர் - 2 கப், வெங்காயத்தாள் - ஒரு கட்டு (பச்சை மற்றும் வெள்ளை பகுதி), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),  பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்), சோம்பு – கால் டீஸ்பூன், மிளகு – 5, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, காய்ச்சி ஆறவைத்த பால் - அரை டம்ளர், நெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  வெங்காயத்தாளின் இரு பகுதியையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி சோம்பு, மிளகு, பட்டை, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் பருப்பு நீர், வெங்காயத்தாள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாக பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கிப் பரிமாறவும்.

கொள்ளு ரசம்

தேவை:  வேகவைத்த கொள்ளு – ஒரு டேபிள்ஸ்பூன்,  கொள்ளு வேகவைத்த தண்ணீர் – 3 கப் , தக்காளி – ஒன்று (விழுதாக அரைத்துக் கொள்ளவும்) , பூண்டு – 5 பல்,  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு , புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,  ரசப்பொடி / சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,  துருவிய வெல்லம் – அரை டீஸ்பூன்,  நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:  கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், வெந்தயம், எல்.ஜி. பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  கொள்ளுவை வேகவைத்ததும் வேகவைத்த தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் கொள்ளுவை எடுத்து மசித்துவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தக்காளி விழுது, கொள்ளு தண்ணீர், மஞ்சள்தூள், புளிக்கரைசல், பூண்டை தட்டிப்போட்டுக் கொதிக்க விடவும். மசித்து வைத்து இருக்கும் கொள்ளு, ரசப்பொடி, வெல்லம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். மற்றொரு வாணலியில் நெய்விட்டு , மணம்சேர்க்கும் பெருங்காயத்துடன் தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

புடலங்காய் துவட்டல்

தேவை:  புடலங்காய் – ஒரு கப்,  துவரம்பருப்பு – கால் கப்,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,  தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் , பச்சை மிளகாய் – 5- 6 (கீறிக்கொள்ளவும்),  எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,  பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  புடலங்காயை நன்கு கழுவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசறிவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, புடலங்காயைப் பிழிந்து சேர்க்கவும். பச்சை மிளகாயைச் சேர்த்துக் கிளறவும். புடலங்காய் வெந்ததும், வேகவைத்த துவரம்பருப்பு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பீட்ரூட் உசிலி

தேவை:  துவரம்பருப்பு – அரை டம்ளர்,  கடலைப்பருப்பு – அரை டம்ளர்,  பீட்ரூட் – ஒன்று பெரியது,  காய்ந்த மிளகாய் – 8,  சோம்பு - ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,  கடுகு – ஒரு டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் நன்கு கழுவி முக்கால் மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பருப்புகளை இட்லி தட்டில் வைத்து, பத்து நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மீண்டும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பீட்ரூட்டைத் தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு பருப்பு கலவை, உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறவும். பீட்ரூட் உசிலி ரெடி.

குடமிளகாய் மாவடு இஞ்சி பச்சடி

தேவை:  குடமிளகாய் – ஒரு கப் (சிறிய கட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்),  மாவடு இஞ்சி – கால் கப் (தோலுரித்து, சிறிய வட்டங்களாக நறுக்கியது),  துவரம்பருப்பு (மலர வேகவைத்தது) – கால் கப்,  தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),  நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,  புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்),  சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: 
கடுகு - கால் டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு,  காய்ந்த மிளகாய் - 2.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர், குடமிளகாய், மாவடு இஞ்சி சேர்த்து வதக்கவும். சாம்பார் பொடியைச் சேர்த்து லேசாகக் கிளறி, புளித்தண்ணீரை ஊற்றிக் கலக்கவும். வேகவைத்த பருப்பு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போய், காய்கள் நன்றாக வெந்த பின் கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.

கொண்டைக்கடலை மாவடு இஞ்சி மண்டி

தேவை:  வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப்,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,  மாவடு இஞ்சி – கால் கப் (தோலுரித்து சிறிய வட்டங்களாக நறுக்கியது),  சின்ன வெங்காயம் - 10,  பூண்டு – 10 பல்,  தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது),  மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,  பச்சை மிளகாய் – 5 (கீறிக் கொள்ளவும்),  புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்),  அரிசி களைந்த நீர் – 2 கப் அல்லது அரிசிமாவு – 2 டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:  கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,  வெந்தயம், பெருங்காயம் – கால் டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  கொண்டைக்கடலையை 8 மணி முதல் 10 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தைத் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தக்காளி சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் மாவடு இஞ்சி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த கொண்டைக்கடலை, புளிக்கரைசல் ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். அரிசி களைந்த நீர் அல்லது அரிசி மாவு சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கெட்டியானதும் இறக்கவும்.

பருப்புத் துவையல்

தேவை:  துவரம்பருப்பு (அல்லது) பாசிப்பருப்பு – கால் கப்,  காய்ந்த மிளகாய் – 3, தேங்காய்ப்பல் – 2 டேபிள்ஸ்பூன்,  பூண்டு – 2 பல், உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  வெறும் வாணலியில் துவரம்பருப்பு (அல்லது) பாசிப்பருப்பை நன்கு வாசம் வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து ஆற வைக்கவும். பிறகு வறுத்த பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்ப்பல், பூண்டு, உப்பு சேர்த்துச் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இளங்குழம்பு, கெட்டிக் குழம்பு, ரசம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள பருப்பு துவையல் ஏற்றது.

வாழைப்பூ வடை

தேவை:  வாழைப்பூ - பாதியளவு (ஆய்ந்து நறுக்கவும்),  கடலைப்பருப்பு – அரை கப் , துவரம்பருப்பு – அரை கப்,  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது),  காய்ந்த மிளகாய் - 8,  சோம்பு - அரை டீஸ்பூன்,  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை: பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து வடை மாவுப் பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளை வடைகளாகத் தட்டி,, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கொண்டைக்கடலை மசாலா / மொச்சை மசாலா / சோயாபீன்ஸ் மசாலா

தேவை:  வெள்ளை கொண்டைக்கடலை / மொச்சை / சோயாபீன்ஸ் – அரை கப், வெங்காயம் – ஒன்று,  பூண்டு – 10 பல்,  தக்காளி – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்) , மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,  உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

அரைக்க:  தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  கொண்டைக்கடலை / மொச்சை / சோயாபீன்ஸ் 8 மணி முதல் 10 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிது தண்ணீர்விட்டு நன்கு நைஸாக அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த கொண்டைக்கடலை / மொச்சை / சோயாபீன்ஸ் மற்றும் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். நன்றாகச் சுருளக் கிளறி இறக்கவும்.

இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்

தேவை:  பெரிய கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று (தோல் நீக்கி சிறிய கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்),  பட்டாணி, நறுக்கிய பீன்ஸ் – அரை கப் , சிறிய துண்டுகளாக நறுக்கிய காலிஃப்ளவர் – அரை கப் , வெங்காயம் – ஒன்று , பூண்டு – 10 பல், தக்காளி – ஒன்று (விழுதாக அரைத்துக் கொள்ளவும்),  மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

அரைக்க: 
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  காலிஃப்ளவரை உப்பு தண்ணீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டிவைத்துக் கொள்ளவும். கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கிய பீன்ஸ், பட்டாணியை குக்கரில் சேர்த்து, காய்கறி மூழ்கும் வரை தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிது தண்ணீர்விட்டு நன்கு நைஸாக அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். நன்றாகச் சுருளக் கிளறி இறக்கவும்.

சேப்பங்கிழங்கு வறுவல்

தேவை:  சேப்பங்கிழங்கு – 10  மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்  கார்ன்ஃப்ளார் – ஒரு டீஸ்பூன்  கடலை மாவு – அரை டீஸ்பூன்  எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு  உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  சேப்பங்கிழங்கை தண்ணீர்விட்டு ஆவியில் குழையாமல் வேகவைத்து, தோல் நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் போட்டு அரைவேக்காடாகப் பொரித்து எடுக்கவும். சலசலப்பு அடங்கியதும் எடுத்து விடவும். கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்க வேண்டும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கார்ன்ஃப்ளார், கடலை மாவு, உப்பு சேர்த்துப் பிசறி அரை மணி நேரம் வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்திருக்கும் சேப்பங்கிழங்கைச் சேர்த்து ரோஸ்ட் ஆகும் வரை கிளறி இறக்கவும்.

குட்டி உருளைக்கிழங்கு வறுவல்

தேவை:  குட்டி உருளைக்கிழங்கு – அரை கிலோ, வறுத்து அரைத்துக் கொள்ள:  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல் – தலா ஒரு டீஸ்பூன்,  மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்,  மிளகு, சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன் , காய்ந்த மிளகாய் – 10, எள்ளு - அரை டீஸ்பூன்.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எல்.ஜி. பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி உப்பு சேர்த்து அரைவேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு நன்கு வாசம் வரும் வரை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொரகொரப்பாக அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, மணம்சேர்க்கும் பெருங்காயத்துடன் தாளிப்புப் பொருள்களைத் தாளித்து உருளைக்கிழங்கைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி, அரைத்துவைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்துக் கிளறவும். உருளைக்கிழங்கு, நன்கு ரோஸ்ட்டாகும் வரை கிளறி இறக்கவும்.

பழப் பாயசம்

தேவை: காய்ச்சிய பால் – ஒரு லிட்டர், கண்டன்ஸ்டு மில்க் – அரை டின், மிக்ஸ்டு ஃப்ரூட் – ஒரு டின் (அல்லது நைஸாக வெட்டிய ஆப்பிள், திராட்சை, செர்ரி, மாம்பழம் – கலந்து ஒரு கப்), கஸ்டர்டு பவுடர் – 2 டீஸ்பூன், சர்க்கரை – அரை கப்  பாதாம் பருப்பு, முந்திரி – தலா 15, பன்னீர் (ரோஸ் வாட்டர்) – மூன்று டேபிள்ஸ்பூன், சாரைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்).

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி, முந்திரியுடன் சேர்த்து அரை கப் பாலில் ஊறவைத்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் பாலில் அரைத்த விழுது, கஸ்டர்டு பவுடர் கலந்து, அடி பிடிக்காமல் கிளறவும். கொதி வந்ததும் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறிக்கொண்டே கொதிக்க விடவும். சற்றுக் கொதித்ததும் இறக்கிவைத்து ஆறவிடவும். பிறகு, பன்னீர் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைக்கவும், பரிமாறுவதற்குச் சற்றுமுன் பழங்கள், சாரைப்பருப்பைச் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

கேரட் பாயசம்

தேவை:  துருவிய கேரட் – ஒரு கப்,  காய்ச்சிய பால் - ஒரு லிட்டர்,  ஏலக்காய் – 2, பாதாம் பருப்பு, முந்திரி – தலா 15,  சர்க்கரை – அரை கப்,  நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

செய்முறை:  பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி, முந்திரியுடன் சேர்த்து அரை கப் பாலில் ஊறவைத்துச் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பாலை முக்கால் லிட்டர் ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். கேரட்டைச் சூடான நெய்யில் மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கியதும் சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறவும்.

3 டேபிள்ஸ்பூன் கேரட்டை எடுத்துவைத்துக் கொண்டு மீதியை ஏலக்காயுடன் சேர்த்து மிக்ஸியில் கூழாக்கிக்கொள்ளவும். காய்ச்சிய பாலில் கேரட் கூழ், பாதாம் - முந்திரி விழுது சேர்த்து நன்கு கொதிவரும்வரை கிளறவும். தனியாக எடுத்து வைத்து இருக்கும் கேரட்டைச் சேர்த்துக் கொதிவந்ததும் இறக்கி வைக்கவும். கேரட் பாயசத்தை ஜில்லென்றும் பரிமாறலாம்; சுடச்சுடவும் பரிமாறலாம். இரண்டுமே மிகவும் சுவையாக இருக்கும்.

தலைவாழை விருந்து!

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி

சுவையும் மணமும் மிகுந்த செட்டிநாடு உணவுகளில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அதோடு, உணவு வகைகளின் பெயர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு.  மசாலாவை நன்கு வதக்கியபிறகு காய்கறிகள் அல்லது வேகவைத்த கடலை வகைகளைச்சேர்த்து, நன்கு சுருண்டு வரும்வரை புரட்டி எடுப்பதால்தான், அதற்குப் பிரட்டல் என்று பெயர். அரிசி கழுவும் மண்டியைக் (தண்ணீரை) கெட்டித்தன்மைக்காகப் பயன்படுத்துவதால், மண்டி என்று பெயர். காய்கறிகள் மற்றும் பருப்பைத் தனித்தனியாக வேகவைத்து எடுத்து, பிறகு தாளித்து இரண்டையும் சேர்த்து லேசாகத் துவட்டி (கலந்து) எடுப்பதாலே அது துவட்டல்.

`கெட்டிக் குழம்பு' நீர்க்க இல்லாமல் கெட்டியாக இருப்பதால் தான் அதற்கு அந்தப் பெயர். இதில் காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும், அதனால் சாதத்தில் கொஞ்சமாக சேர்த்துச் சாப்பிட வேண்டும். இளங்குழம்பில் கொஞ்சமாகப் பயறு அல்லது பருப்பு சேர்த்துச் செய்வதால், அது சாம்பார் போன்று கெட்டியாகவும்  இருக்காது; ரசம் அளவுக்கு நீர்த்தும் இருக்காது. ருசியோ குழம்பு போலவே இருக்கும். அதனால்தான் `இளங்குழம்பு' என்று பெயர். இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.
இந்த இணைப்பில் செட்டிநாடு சமையலின் சிறப்பான உணவு வகைகளை, உடனே செய்யத் தூண்டும் அழகிய படங்களுடன் அளிக்கிறார் Classic Chettinad Kitchen / kitchen chronicles வலைப் பூக்களை நடத்தும் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.