Published:Updated:

விடுமுறை தினத்தை சுவையாக்க ஸ்பெஷலான பிரியாணி ரெசிப்பிகள்...!

வெ.வித்யா காயத்ரி
விடுமுறை தினத்தை சுவையாக்க ஸ்பெஷலான பிரியாணி ரெசிப்பிகள்...!
விடுமுறை தினத்தை சுவையாக்க ஸ்பெஷலான பிரியாணி ரெசிப்பிகள்...!

விடுமுறை தினத்தை சுவையாக கொண்டாடுவதற்கு ஏற்றாற்போல் வெரைட்டியான பிரியாணி வகைகளை எளிமையாய் வீட்டிலிருந்தபடியே செய்து அசத்துவதற்கு கற்றுக் கொடுக்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞர் திவ்யா.

முளைகட்டிய பயறு பிரியாணி

தேவையானவை: 

பொன்னி அரிசி அல்லது சாதாரண சமையல் அரிசி - ஒரு கப் 

முளைகட்டிய பயறு - ஒரு கப்

வெங்காயம் - 2 (நறுக்கவும்)

புதினா - ஒரு கைப்பிடி அளவு 

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு

இஞ்சி - 2 அங்குலத் துண்டு

பூண்டு - 3 பல்

எலுமிச்சைச்சாறு - 3 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்

பட்டை - ஓர் அங்குலத் துண்டு 

அன்னாசிப்பூ - ஒன்று

ஏலக்காய் - 4

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

அரிசியை நன்கு கழுவி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். இஞ்சி, பூண்டைத் தோல் சீவி அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் பெருஞ்சீரகம், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து ஊறவைத்த அரிசி சேர்த்து முளைகட்டிய பயறையும் சேர்த்து வதக்கவும். பின்னர் 3 கப் தண்ணீர்விட்டு நன்றாகக் கிளறவும். எலுமிச்சைச்சாறு, சிறிதளவு உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சில நிமிடங்கள் கழித்து குக்கரைத் திறந்து சூடாகப் பரிமாறவும்.

2. மண்பானை இறால் பிரியாணி

தேவையானவை: 

பாசுமதி அரிசி - ஒரு கப்

இறால் - 175 கிராம்

பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்

பட்டை - 3

ஏலக்காய் - 5 

கிராம்பு - 4 

பிரியாணி இலை - ஒன்று

அன்னாசிப்பூ - 2

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

புதினா - கொத்தமல்லி - ஒரு கப்

நெய் - 5 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இறாலுடன் சேர்க்க வேண்டியவை:

தயிர் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை

பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இறால்களை நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். இறாலுடன் சேர்க்க வேண்டிய பொருள்களை ஒன்றாகச் சேர்த்து இறால்களின் மீது தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்போது மண்பானையில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். அதன்பின் இறால்களைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிவிட்டு உடனே அடுப்பிலிருந்து எடுத்து விடவும். அதே மண்பானையில் மீதமிருக்கும் நெய் சேர்த்துச் சூடானதும் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ ஆகியவற்றை ஒரே நேரத்தில் சேர்த்து, சில நொடிகளுக்குக் குறைந்த தீயில் வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை நீங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாகச் சுருளும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் ஊறவைத்த இறால், பாசுமதி அரிசி சேர்த்துத் தண்ணீர்விட்டு மூடி 10 நிமிடங்கள் மீதமான தீயில் வேகவிடவும். பின்னர் எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

 மண்பானையை உபயோகிக்கும் முன் நன்றாகக் கழுவி, துடைத்து வடித்த பின்னர் அரிசி தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சி அல்லது வெறும் தண்ணீரில் பானையை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் தண்ணீரைக் கொட்டிவிட்டு நன்றாகக் கழுவவும். இதன் மீது தேங்காய் எண்ணெய் பூசி அடுப்பில் வைத்து மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வெறும் பானையை வைத்து எடுத்து ஆற விடவும். பின்னர் தண்ணீரில் அல்லது அரிசி வடித்த தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்த நாளும் இதுபோல் எண்ணெய் தடவி மேற்கூறியது போலவே தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் செய்தால் பானை வலுப்படும். மூன்றாம் நாள் பானையை நன்றாகக் கழுவிவிட்டுச் சமைக்க உபயோகிக்கவும்.

3. செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையானவை

பாசுமதி அரிசி - 2 கப் 

சிக்கன் - முக்கால் கிலோ (பெரிய துண்டுகள்) 

பெரிய வெங்காயம் - 3 (நறுக்கவும்) 

தக்காளி - 3 (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 4 (நீளவாக்கில் நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது – 6 டீஸ்பூன் 

தேங்காய்ப்பால் - ஒரு கப் 

தண்ணீர் - 4 கப் 

கொத்தமல்லி - அரை கப் 

புதினா - அரை கப் 

தயிர் - அரை கப் 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் 

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் 

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

பட்டை - 4 

ஏலக்காய் - 6 

கல்பாசி - 2 துண்டுகள் 

கிராம்பு - 5 

பிரியாணி இலை - 2 

எண்ணெய் - 100 மில்லி 

நெய் - 4 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். சிக்கனை சுத்தப்படுத்தி சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, கல்பாசி, மஞ்சள்தூள், சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் அரை கப் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் சிக்கனைத் தனியாக எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய், 3 டீஸ்பூன் நெய்விட்டுக் காய்ந்ததும் பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு வதக்கவும். அடுத்து வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், நறுக்கிய தக்காளி சேர்க்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, தயிர் சேர்த்துக் கிளறவும். நன்றாகக் குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த சிக்கனைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிவந்ததும் அரிசியைச் சேர்த்து விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். பிறகு, குக்கரைத் திறந்து மீதமுள்ள நெய், கொத்தமல்லி, புதினா சேர்த்து மூடி போட்டு மூடி அடுப்பிலிருந்து இறக்கவும். அடுப்பின் மீது ஒரு பெரிய தோசைக்கல் (பான்) வைத்து அதன்மீது இந்த குக்கரை வைத்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் தம்மில் போடவும். சாதம் முழுதாக வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.