Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 48

சோறு முக்கியம் பாஸ்! - 48
பிரீமியம் ஸ்டோரி
சோறு முக்கியம் பாஸ்! - 48

சோறு முக்கியம் பாஸ்! - 48

சோறு முக்கியம் பாஸ்! - 48

சோறு முக்கியம் பாஸ்! - 48

Published:Updated:
சோறு முக்கியம் பாஸ்! - 48
பிரீமியம் ஸ்டோரி
சோறு முக்கியம் பாஸ்! - 48

ஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ‘மொய் விருந்து’களில்,  ‘கப்புக் கறி’ விருந்து போடுவார்கள். சாப்பிடுபவர்களுக்கு, கூடக் குறைத்துப் பரிமாறிவிட்டால் பிரச்னையாகிவிடும். அதற்காகச் சிறு கிண்ணங்களில் ஒரே அளவில் கறியை நிரப்பிப் பரிமாறுவார்கள். உருளைக்கிழங்கும் ஆட்டு ரத்தமும் நுரையீரலும் சேர்ந்த கூட்டு, கொழுப்பு மிதக்கும் எலும்பு ரசம் என விருந்து களைகட்டும். இந்த விருந்தில் தருகிற கறிக்குழம்பை வேறெங்கும் நீங்கள் சாப்பிட முடியாது. அப்படியொரு தனித்துவச் சுவை.  நன்றாகச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு மொய் விருந்து நடக்கும் ஆடி மாதம் என்பது பெரும் வரம். தினமும் விருந்துதான்.  

சோறு முக்கியம் பாஸ்! - 48

இந்த விருந்தில் அளவுகடந்து சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக சமையல்காரர்கள் ஓர் உத்தியைக் கையாள்வார்கள். வடித்து இறக்கிய சுடுசாதத்தில் கொஞ்சம் சுண்ணாம்புத் தண்ணீரைத் தெளித்துவிடுவார்கள். சோறு தும்பைப்பூ மாதிரி வெண்மையாகிவிடும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. எதுக்களிக்கத் தொடங்கிவிடும்.

சில உணவகங்களிலும் இந்த நுட்பத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ‘அன் லிமிடெட்’  சாப்பாடு என்பார்கள். இரண்டு கரண்டி சாப்பிட்டதுமே வயிறு நிறைந்து கனத்துப்போய்விடும். சில உணவகங்களில் கொஞ்சம் நாகரிகமாக, தொடக்கத்திலேயே ஒரு கிண்ணம் சூப் கொடுத்துவிடுவார்கள். கேட்டால், ‘நல்லா பசியெடுக்கும், சிறப்பா செரிமானமாகும்’ என்றெல்லாம் கதைவிடுவார்கள். சூப் வயிற்றை நிறைத்துவிட்டால் சாப்பாடு குறைவாக எடுக்கும் என்பதுதான் உண்மை. சில உணவகங்களில் மட்டும் சாப்பாடு விறுவிறுவென்று உள்ளே இழுக்கும். இலையில் சோறு குறைந்தால் பாத்திரத்தோடு வந்து நிற்பார்கள். போதுமென்றாலும் விடாமல் அள்ளி வைத்துக்கொண்டேயிருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோறு முக்கியம் பாஸ்! - 48திருச்சி, புத்தூரில் பாத்திமா மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் உள்ள சேதுராம் மெஸ்ஸில் சாப்பிடுபவர்கள் குறைந்தது ஐந்து முறையாவது சாதம் வாங்குகிறார்கள்.

முதல் தளத்தில் இருக்கிறது உணவகம். வெளியில் நின்று பார்த்தால் இருப்பதே தெரியாது. உள்ளே, விசாலமான ஏசி டைனிங். 40 பேர் வசதியாக அமர்ந்து சாப்பிடலாம். மதிய உணவு மட்டும்தான். 11 மணிக்குத் திறந்து 4 மணிக்கெல்லாம் மூடிவிடுகிறார்கள். இந்த நேரத்தில் கல்யாண வீடு மாதிரி பரபரப்பாக இருக்கிறது உணவகம்.

மதிய சாப்பாடு 110 ரூபாய். முதலில் இலையோரம் உப்பு வைக்கிறார்கள். இந்தப் பண்பாட்டை வீடுகளிலேயே விட்டுவிட்டோம். உணவகத்தில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து இரண்டு சின்ன வெங்காயம் வைக்கிறார்கள். இடையிடையே கடித்துக்கொண்டால் செரிமானச் சிக்கல் இருக்காதாம். பரிமாறுபவரே அதன் முக்கியத்துவத்தையும் சொல்கிறார். கூட்டுப் பொரியலோடு கருவாட்டுச்சம்பலும் தொடுகறியாக வைக்கிறார்கள். நெத்திலிக் கருவாடு. வெங்காயம், தக்காளி போட்டு கிரேவியாகச் செய்திருக்கிறார்கள். தொடக்கமே மிகச்சிறப்பு.

சாதத்துக்கு ஊற்றிக்கொள்ள சிக்கன் தொக்கு, காடைத்தொக்கு, இறால்தொக்கு, நண்டு மசாலா, மட்டன்குழம்பு, மீன்குழம்பு. இவைதவிர வழக்கமான ரசம், மோர், தயிரும் இருக்கின்றன. 
 
சிறு சிறு மண்பாண்டங்களில் வைத்துக்கொண்டு அழகாகப் பரிமாறுகிறார்கள். தொக்கு வகைகளை வரிசையாகக் கொண்டுவந்து, ‘இது சிக்கன் தொக்கு’, ‘இது காடைத் தொக்கு’ என அவற்றின் பெயர் சொல்லி ஊற்றுகிறார்கள். எல்லாத் தொக்குகளையும் கட்டாயம் ருசிபார்த்தாக வேண்டும்.  ‘போதும்’ என்றாலும் விடமாட்டார்கள். ‘சார், கொஞ்சமாவது டேஸ்ட் பாருங்க’ என்று வலியுறுத்தி ஊற்றிவிட்டுப் போகிறார்கள். அதிக காரமில்லாமல் அதனதன் சுவையோடு இருக்கின்றன தொக்கு வகைகள். குறிப்பாக மீன்குழம்பு. உப்பு, புளி, காரம் செமையாகப் பொருந்தியிருக்கிறது. முள்ளும் சதையுமாக அள்ளிப்போடுகிறார்கள்.

தொடுகறிகளும் நன்றாகவே இருக்கின்றன. மட்டன் எண்ணெய் சுக்கா சாப்பாட்டுக்குச் சிறந்த இணை. கோழிப்பிரட்டல், காடை வறுவல், நண்டுவறுவல், இறால்வறுவல், மீன்வறுவல்... எல்லாம் வீட்டுச் சுவை. நாட்டுக்கோழிவறுவலும் கிடைக்கிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 48எல்லாம் முடிந்ததும் சோம்புமிட்டாய், கடலைமிட்டாய்த் தட்டைக் கொண்டுவந்து நீட்டுகிறார்கள்.

உணவகத்தின் உரிமையாளர் காந்தலெட்சுமி எம்.சி.ஏ பட்டதாரி. சமையலில் இருந்த ஆர்வம், இந்த உணவகத்தைத் தொடங்க வைத்திருக்கிறது.

“வீட்டுல விதவிதமா சமைப்பேன். எல்லாரும் பாராட்டுவாங்க. சொந்தக் கட்டடம். சும்மா கிடந்துச்சு. ‘நமக்குத்தான் நல்லா சமைக்கத் தெரியுமே, உணவகம் ஆரம்பிக்கலாம்’னு தோணுச்சு. மூணு வருஷத்துக்கு முன்னாடி விளையாட்டா ஆரம்பிச்சதுதான் சேதுராம் மெஸ். பொதுவா உணவகத்துக்கு வர்றவங்க வித்தியாசமா சாப்பிடணும்னுதான் வர்றாங்க. அவங்களுக்கு குறைந்த விலையில நிறைவான விருந்தைக் கொடுக்கணும்ங்கிற நோக்கத்துலதான் இப்படியொரு மதிய சாப்பாட்டை டிசைன் செஞ்சோம். இந்த வட்டாரத்துல சிறப்பா சமைக்கக்கூடிய பெண்களைத் தேர்வு செஞ்சு கிச்சன்ல வச்சிருக்கோம். உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற எந்தப் பொருளையும் சிறுதுளிகூடச் சேர்க்கக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கோம்...” என்கிறார் காந்தலெட்சுமி.

தனியாக பார்க்கிங் வசதியில்லை. சாலையோரத்தில்தான் வாகனங்களை நிறுத்த வேண்டும்.  மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லக் குறையொன்றுமில்லை. பட்ஜெட்டில் ஒரு நல்விருந்து... திருச்சிப் பக்கம் போனால் மதியத்தை சேதுராம் மெஸ்ஸுக்கு ஒதுக்குங்கள்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படங்கள்: தே.தீட்ஷித்

சோறு முக்கியம் பாஸ்! - 48

சாப்பிட்டவுடன் டீ, காபி அருந்தலாமா?

- நிஷா, உணவியல் நிபுணர்  

சோறு முக்கியம் பாஸ்! - 48

“காலையில் சிற்றுண்டி சாப்பிட்டவுடன் சிலருக்குச் சூடாக ஒரு காபி குடித்தே ஆகவேண்டும். அதேபோல மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் செரிமானத்துக்காக சிலர் டீ குடிப்பார்கள். உண்மையில் இது நல்லதல்ல. காபி, டீ இரண்டிலுமே ‘கஃபைன்’ என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. அது போதைப்பொருள் போலச் செயல்படக்கூடியது. சாப்பிட்டு முடித்ததும் உணவில் இருக்கின்ற சத்துகளை நம் உடல் கிரகிக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் டீ, காபி குடித்தால் அவற்றில் இருக்கின்ற கஃபைன், இந்தச் செயல்பாட்டைத் தடுத்துவிடும். உதாரணமாக, கீரையில் இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. கீரை சாப்பிட்டவுடன் டீயோ, காபியோ அருந்தினால், கீரையில் இருக்கின்ற இரும்புச்சத்து உடலில் சேராது. அதனால் சாப்பிட்டவுடனே டீ, காபி குடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும். அதிகாலை, மாலை நேரங்களில் டீ, காபி குடிப்பதில் பிரச்னையில்லை. மற்ற நேரங்களில் தவிர்த்துவிடுவதே நல்லது.”  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism