தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

சரஸ்வதி அசோகன்

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

சுரைக்காய் சாமை சாதம்

தேவை: சாமை - 200 கிராம், சுரைக்காய் (நறுக்கியது) - ஒரு கப், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 7 பல், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லி இலைகள்  - சிறிதளவு, எண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

சாமையைப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் களைந்து தண்ணீரை வடித்துவைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, சாம்பார் பொடி, சீரகத்தூள், பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, சுரைக்காயையும் சேர்த்து சுருள வதக்கவும். பிறகு ஒரு பங்கு சாமைக்கு இரண்டரை பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை இதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது ஊறவைத்த சாமையையும் சேர்த்து, குக்கரை மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். சுரைக்காய் சாமை சாதம் ரெடி. குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து கொத்தமல்லி இலைகளைத் தூவிப் பரிமாறவும்.

வரகு பருப்பு சாதம்

தேவை:  வரகு - 250 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (நறுக்கவும்), சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, சீரகம் - 2 டீஸ்பூன், பூண்டு - 7 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

வரகு, துவரம்பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஒன்றாக ஊறவைத்துக் களைந்து வைக்கவும். சீரகம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாகப் போட்டு, தண்ணீர்விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சிறு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, ஒன்றிரண்டாக அரைத்த சீரகக் கலவை, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி தேவையான உப்பு சேர்க்கவும். பிறகு ஒரு பங்கு வரகுக்கு மூன்று பங்கு என்கிற கணக்கில் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த வரகு பருப்புக் கலவையைப் போட்டு, குக்கரை மூடி, மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். வரகு பருப்பு சாதம் ரெடி.

குறிப்பு: மற்ற சிறுதானியங்களிலும், அரிசியிலும் இதேபோல் சாதம் செய்யலாம். சூடான வரகு பருப்பு சாதத்துடன் ஒரு ஸ்பூன் நெய்விட்டுச் சாப்பிட்டால் சுவை அள்ளும்

சாமை கொள்ளுப் பொங்கல்

தேவை:  சாமை - 300 கிராம்  கொள்ளு - 50 கிராம்  சீரகம், மிளகு, இஞ்சித் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

கொள்ளுப் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். சாமையை இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றவும். இதில் நெய், எண்ணெய்விட்டு சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு சாமைக்கு மூன்று பங்கு என்கிற அளவில் தண்ணீரைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த சாமை, வேகவைத்த கொள்ளைச் சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு  இறக்கவும். ருசியான சாமை கொள்ளுப் பொங்கல் தயார்.

சாமை நீர் உருண்டை

தேவை:  சாமை - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (நறுக்கியது) - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

சாமையைக் களைந்து ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். பிறகு வெந்த சாமையை ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும். பிறகு இதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதைச் சாமையுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் கலவையைச் சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லிப் பானையில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: வரகு, குதிரைவாலியிலும் இந்த உருண்டையைச் செய்யலாம்.

வரகு இனிப்புப் பொங்கல்

தேவை:  வரகு, வெல்லம் - தலா 200 கிராம்  முந்திரிப்பருப்பு, திராட்சை - தேவைக்கேற்ப  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்  ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

முதலில் வெல்லத்தைத் துருவிக்கொள்ளவும். வரகை இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் களையவும். ஒரு பங்கு வரகுக்கு இரண்டரை பங்கு என்கிற அளவில் தண்ணீர்விட்டு குக்கரில்  மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு, திராட்சையைச் சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த வரகுடன் துருவிய வெல்லம் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். வெல்லம் முழுவதுமாகக் கரைந்ததும்  மறுபடியும் ஐந்து நிமிடங்களுக்குக் கலவையை அடிபிடிக்காமல் கிளறவும். பின்னர் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்து, மீதமுள்ள நெய்விட்டுக் கிளறி இறக்கவும்.

தினைப் பாயசம்

தேவை:  தினை - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 300 கிராம் (பொடிக்கவும்), தேங்காய்ப்பால் - ஒரு கப், முந்திரிப்பருப்பு, திராட்சை - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இதைத் தினையுடன் சேர்த்து அரை லிட்டர் தண்ணீர்விட்டு குக்கரில் குழைய வேகவிடவும். பிறகு வேகவைத்த தினைக் கலவையுடன்  பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் கொஞ்சம் தண்ணீரை இதனுடன் சேர்த்து பாயசப் பதத்துக்குக் கொண்டுவந்து மறுபடியும் கொதிக்கவிடவும். பிறகு நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து இதனுடன் சேர்க்கவும். பின்னர் தேங்காய்ப்பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மறுபடியும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான, சுவையான தினை பாயசம் ரெடி.

ஹெல்த்தி இனிப்பு உருண்டை

தேவை: வரகு, சாமை, கம்பு, குதிரைவாலி, பாசிப் பயறு (பச்சைப் பயறு) - தலா 100 கிராம், கருப்பட்டி - 400 கிராம் (பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

வரகு, சாமை, கம்பு, குதிரைவாலி, பாசிப் பயறு ஆகியவற்றை வெறும் வாணலியில் ஒன்றாகப் போட்டு வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் அரைத்துச் சலித்து எடுத்துக்கொள்ளவும். தண்ணீரைச் சூடாக்கி, கருப்பட்டித் தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். வடிகட்டிய கருப்பட்டி நீரை மறுபடியும் அடுப்பில் ஏற்றிக் கொதிக்கவிட்டு, கம்பிப்பாகுப் பதம் வரும்வரை (இளம் பாகாக வந்தால் போதும்) கொதிக்கவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகை இறக்கவும். அரைத்து, சலித்துவைத்துள்ள மாவில் இந்த வெல்லப்பாகைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் நெய்விட்டு நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும். சத்து நிறைந்த இனிப்பு உருண்டை ரெடி.

குறிப்பு: விருப்பப்பட்டால் முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.

மில்லெட் வெஜ் பணியாரம்

தேவை:  வரகு, சாமை, குதிரைவாலி - தலா 100 கிராம், உளுந்து - 75 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - சிறிதளவு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

வரகு, சாமை, குதிரைவாலி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊறவைத்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் மையாக அரைக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட் துருவல், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். வதக்கிய கலவையை அரைத்துவைத்துள்ள மாவில் கலந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையையும் அதில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லில் எண்ணெய்விட்டு மாவைப் பணியாரங்களாக ஊற்றவும். இருபுறமும் வேகவிட்டு முறுகலாக வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

வரகு தேங்காய் சாதம்

தேவை:  வரகு - 200 கிராம், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

வரகை 15 நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்துகொள்ளவும். ஒரு பங்கு வரகுக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். பிறகு வெந்த வரகை ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு இதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்தால் வரகு தேங்காய் சாதம் தயார்.

கம்பு தோசை

தேவை:  கம்பு, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து -  கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

கம்பு, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சற்றே கொரகொரப்பாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துவைக்கவும். கரைத்த மாவை ஏழு  மணி நேரம் புளிக்கவைத்து தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: பொருள்களின் அளவு குறைவாக இருந்தால் மிக்ஸியிலேயே  எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு அரைக்கலாம். அதிகமாக அரைப்பதாக இருப்பதால் உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக  ஊறவைத்து அரைக்க வேண்டும். கம்பு, புழுங்கலரிசியை ஒன்றாக ஊறவைத்து அரைக்க வேண்டும். பிறகு இந்த இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவைக்க வேண்டும்.

குதிரைவாலி கார தோசை

தேவை:  குதிரைவாலி - 200 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 4 (தோலுரிக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 2 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

குதிரைவாலி, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கலந்துகொள்ளவும். மாவைத் தோசைக்கல்லில் தோசையாக  ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சாமை, வரகு போன்றவற்றிலும் இந்த தோசையைச் செய்யலாம்.

சாமை பிடிகொழுக்கட்டை

தேவை: சாமை - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பச்சை மிளகாய், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

சாமையைக் களைந்து ஒரு பங்கு சாமைக்கு இரண்டரை பங்கு என்கிற அளவில்  தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். வெந்த சாமையை ஆறவிடவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பச்சை மிளகாயைச் சேர்த்துப் புரட்டவும். பிறகு வாணலியைக் கீழே இறக்கி இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை ஆறவைத்துள்ள சாமை சாதத்தில் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதை பிடிகொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குதிரைவாலி பொடி இட்லி

தேவை: குதிரைவாலி, புழுங்கலரிசி - தலா 200 கிராம், உளுந்து - 150 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு, இட்லி மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

குதிரைவாலி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக்கரைத்து எட்டு மணி நேரம் புளிக்கவிட்டு மினி இட்லிகளாக ஊற்றி எடுத்து வைக்கவும். பிறகு ஒரு வாணலியைச் சூடாக்கி சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் இட்லிப் பொடியையும் சேர்த்துப் புரட்டவும். பிறகு செய்து வைத்திருக்கும் மினி இட்லிகளைச் சேர்த்து நன்கு கலந்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கலாம். சாமை, வரகு ஆகியவற்றிலும் இதுபோல இட்லி செய்யலாம்.

ராகி ரிப்பன் பக்கோடா

தேவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு), அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 200 கிராம், எள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் - 2 டீஸ்பூன்.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

மாவு வகைகள் அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் நிரப்பவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைப் பிழிந்தெடுக்கவும். சத்தான, சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.

கம்பு பயறு உருண்டை

தேவை:  கம்பு, பாசிப் பயறு (பச்சைப் பயறு) - தலா 100 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன்.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

கம்பு, பாசிப் பயறு இரண்டையும் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் அரைத்துச் சலித்து வைக்கவும். பிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி கம்பிப்பதத்தில் பாகு காய்ச்சவும் (இளம் பாகாக வந்தால் போதும்). இந்தப் பாகுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். அரைத்துச் சலித்துவைத்துள்ள மாவில் வெல்லப்பாகை சேர்த்துக் கிளறி, நெய்விட்டுக் நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் மாவில் முந்திரிப்பருப்பு பொடித்துப் போட்டும் உருண்டைகள் செய்யலாம்.

சாமை ரிப்பன் பக்கோடா

தேவை:  சாமை, புழுங்கலரிசி - தலா 250 கிராம், பொட்டுக்கடலை - 200 கிராம், வெண்ணெய் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

சாமை, புழுங்கலரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊறவைத்துக் களைந்து கிரைண்டரில் மையாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் அரைத்த சாமை மாவுக் கலவையைச் சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணெய் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து மாவை முறுக்கு மாவுப் பதத்துக்கு நன்கு பிசையவும். பின்னர் மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் நிரப்பி, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு: வரகு, குதிரைவாலியிலும் இதேபோல் பக்கோடா செய்யலாம்.

வரகு முறுக்கு

தேவை:  வரகு மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 200 கிராம், உளுந்து - 4 டீஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

உளுந்தை வாசம் வரும் வரை வறுத்துப் பொடி செய்து சலித்து வைக்கவும். வரகு மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு நன்கு கலந்து வைக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர்விட்டு வெண்ணெய், மிளகாய்த்தூள், உளுந்த மாவு, எள், தேவையான உப்பு சேர்த்து முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும். மாவை முறுக்கு அச்சில் நிரப்பி, எண்ணெயைக் காயவிட்டுப் பிழிந்தெடுக்கவும்.

குறிப்பு:  வரகு மாவு கடைகளில் கிடைக்கும். விருப்பப்பட்டால் வரகை மெஷினில் கொடுத்தும் அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

வரகு காரப்பொங்கல்

தேவை:  வரகு - 200 கிராம், கொள்ளு அல்லது காராமணி - 50 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கேரட் துருவல், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

கொள்ளு அல்லது காராமணியை அரை மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேகவைத்து மூன்று விசில்விட்டு இறக்கவும். வரகை 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்து வைக்கவும். பிறகு  குக்கரை அடுப்பில் ஏற்றி சிறிதளவு நெய் மற்றும் எண்ணெய்விட்டு சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன்  கேரட் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு வரகுக்கு மூன்று பங்கு என்கிற அளவில் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பை இதனுடன் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது வரகு, வேகவைத்த கொள்ளு (அ) காராமணியைச் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். வரகு காரப் பொங்கல் தயார்.

தினை கீரை சூப்

தேவை:  தினை - ஒரு டேபிள்ஸ்பூன், மணத்தக்காளிக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, தக்காளி- ஒன்று (நறுக்கவும்), பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்), பூண்டு - 4 பல், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

தினை, பாசிப்பருப்பைத் தண்ணீர்விட்டுக் களையவும். பிறகு இவற்றை குக்கரில் சேர்க்கவும். இவற்றுடன் மணத்தக்காளிக்கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள், சீரகத்தூள், நல்லெண்ணெய், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பத்து விசில்விட்டு இறக்கவும். பிறகு நீரை வடித்து அதை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதமிருக்கும் தினை - பருப்பு கலவையை நன்கு கரண்டியால் கடைந்துகொள்ளவும். இப்போது வடித்து எடுத்துவைத்துள்ள நீரைக் கடைந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடைசியாக இந்தக் கலவையை வடிகட்டி, அதில் மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால்  கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்தும் அருந்தலாம்.

கேரட் சாமை தோசை

தேவை: சாமை, புழுங்கலரிசி - தலா 100 கிராம், உளுந்து - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கேரட் - 2, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

கேரட்டைத் தோல் சீவி நறுக்கி வைக்கவும். சாமை, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் இதனுடன்  நறுக்கிய கேரட்டைச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அரைத்த மாவில் தயிர் கலந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கரைத்து தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தயிர் சேர்த்துச் செய்வதால் மாவைப் புளிக்கவிட வேண்டியதில்லை.

தினை அடை

தேவை:   தினை - 200 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப, சோம்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, எண்ணெய், உப்பு  - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

தினை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டுக் களைந்துகொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துச் சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மாவில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்தும் அடை தயாரிக்கலாம்.

மிக்ஸ்டு மில்லெட் தோசை

தேவை:  சாமை, வரகு, கம்பு, தினை, குதிரைவாலி, சோளம் - தலா 50 கிராம், உளுந்து - 75 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

சிறுதானியங்கள் அனைத்தையும் உளுந்து, வெந்தயத்துடன் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களைந்துகொள்ளவும். இதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். மாவில் உப்பு போட்டுக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:  விருப்பப்பட்டால் மாவின் மேலே இட்லி மிளகாய்ப்பொடி தூவியும் தோசை வார்க்கலாம்.

சாமை வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி

தேவை:  சாமை - 100 கிராம், பாசிப்பருப்பு - 25 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி (சிறியது), பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 7 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - 2 சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று,  கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) - தலா 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

சாமை, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு, பூண்டு இரண்டையும்  ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிவைக்கவும். பச்சை மிளகாயையும் வட்டமாக  நறுக்கிவைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டு பட்டையைத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் பூண்டு, சோம்பு சேர்த்துப் புரட்டவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். கொத்தமல்லியும் புதினாவும் லேசாக வதங்க ஆரம்பிக்கும்போது வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு சாமைக்கு ஆறு பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை ஊற்றவும். கூடவே தேவையான அளவு உப்பையும் இதில் சேர்க்கவும். பிறகு இதனுடன் களைந்து வைத்த அரிசி - பருப்புக் கலவையையும் சேர்த்துக் கலக்கி பத்து விசில் வரும்வரை குக்கரில் வேகவைக்கவும். குக்கரில் ஆவி அடங்கியபின் திறந்து தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கி மேலாக சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவினால், சாமை வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.

குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி மிகவும் கெட்டியாகத் தெரிந்தால் தேவைக்கேற்ப வெந்நீர் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் கஞ்சியில் மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.

வரகு தயிர் சாதம்

தேவை:  வரகு - 200 கிராம், பால் - 200 மில்லி, தயிர் - ஒரு கப், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

வரகை இருபது நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்து தண்ணீரை வடித்துவைக்கவும். பிறகு இதனுடன் 200 மில்லி பால் மற்றும் 400 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். இதை வேகவைத்துள்ள சாமை சாதத்தில் சேர்த்து நன்கு கிளறவும் (சாதம் இறுகலாக இருப்பின் கொஞ்சம் வெந்நீர் அல்லது பால் ஊற்றி, சற்று நெகிழ்வாகக் கலந்துகொள்ளலாம்).  கூடவே  தேவையான அளவு உப்பு சேர்த்து மறுபடியும் கிளறவும். பின்னர் இதனுடன் தயிர் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: லஞ்சுக்கு, பயணங்களுக்கு, எடுத்துச் செல்லும்போது ஒரு ஸ்பூன் தயிர் மட்டும் சேர்த்துக் கலந்து எடுத்துச் செல்லலாம். சாப்பிடும்போது புளித்துவிடாமல் சுவையாக இருக்கும். விருப்பப்பட்டால் கேரட் துருவல், மாதுளை முத்துகளைச்  சேர்த்தும் பரிமாறலாம்.

ராகி ஆனியன் தோசை

தேவை:  ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப், இட்லி மாவு - அரை கப், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு, புளித்த தயிர் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

ராகி மாவுடன் புளித்த தயிர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளவும். இதனுடன்  இட்லி மாவையும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு நன்கு கலக்கிக்கொள்ளவும். பின்னர் இந்த மாவைத் தோசையாக  ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் இட்லி மிளகாய்ப் பொடி தூவியும் தோசை செய்யலாம்.

தினை கேசரி

தேவை:  தினை, சர்க்கரை - தலா 200 கிராம், முந்திரிப்பருப்பு, திராட்சை - தேவையான அளவு, நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு தினைக்கு இரண்டு பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். தினையுடன் தண்ணீரைச் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் வெந்த தினையைச் சேர்க்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கலவை கெட்டியாகும்வரை கிளறவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கலவை திரண்டு வந்ததும் இறக்கவும். தினை கேசரி ரெடி.

சோள தோசை

தேவை:  வெள்ளைச் சோளம் - 200 கிராம், உளுந்து - 50 கிராம், புழுங்கலரிசி - 100 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

வெள்ளைச் சோளம், அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இந்த மாவுடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: சோள தோசையை மூடி வைத்து வேகவைத்தால் அதன் ருசி குறையும். அதனால் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அதேபோல இந்த மாவில் பணியாரமும் செய்யலாம். பணியாரத்துக்கு மாவைக் கொஞ்சம் கெட்டியாகக் கரைக்க வேண்டும்.

ராகி இட்லி

தேவை:  ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 400 கிராம், உளுந்து - 100 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் மையாக அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டுக் கலந்துகொள்ளவும். இதனுடன் அரைத்த உளுந்து மாவுக் கலவையையும் சேர்க்கவும். கூடவே தேவையான உப்பு போட்டு இட்லி மாவைவிடச் சற்று கெட்டிப் பதத்தில்  கரைத்துக்கொள்ளவும். மாவை ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு இட்லிகளாக வார்த்தெடுக்கவும்.

ராகி முந்திரிப் பக்கோடா

தேவை:  ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, முந்திரி - 10 (இரண்டாக உடைக்கவும்), சீரகத்தூள் - 2 சிட்டிகை, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, வனஸ்பதி - அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

முதலில் வனஸ்பதியை உருக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி, சீரகத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சமையல் சோடா, மிளகாய்த்தூள் தேவையான உப்பு, உருக்கிய வனஸ்பதி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகப் பிசிறி வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பிசிறிவைத்துள்ள மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: வனஸ்பதியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெண்ணெய் சேர்க்கலாம். அதேபோல இந்தக் கலவையில் அரைக்கீரை சேர்த்தும் பக்கோடா செய்யலாம்.

தினை கீரை சாதம்

தேவை: தினை - 200 கிராம், நறுக்கிய சிறுகீரை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 10 (நறுக்கவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு.

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

செய்முறை:

தினையை பத்து  நிமிடங்கள் ஊறவைத்துக் களைந்துகொள்ளவும். கீரையை அலசி வைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் கீரை, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு தினைக்கு இரண்டரை பங்கு என்கிற கணக்கில் தண்ணீரைச் சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்ததும் தினையைச் சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். கமகம தினை கீரை சாதம் தயார்.

குறிப்பு: பொன்னாங்கண்ணிக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றிலும் இந்த சாதத்தைச் செய்யலாம். தினைக்குப் பதிலாக வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றையும்  பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்துகளின் சுரங்கம்!

மில்லெட் மேஜிக்! - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்

`பளிச்சென்ற தோற்றத்தையும் சுவையையும் மட்டும் கருத்தில்கொண்டு, பாலிஷ் மேல் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் சத்துகள் மிகவும் குறைந்துவிடுகின்றன’ என்ற நெடுங்காலமாக உணவியளாளர்கள் ஒலிக்கும் எச்சரிக்கை மணியைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், தங்களுக்குப் பழக்கமான உணவுமுறையையே பலரும் கடைப்பிடித்து வந்த போக்கு, சமீப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மேலும், ஊட்டச்சத்துகளின் சுரங்கமாக விளங்கும் சிறுதானியங்களின் பெருமையை உணர்ந்து, அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதிலும், சிறுதானியங்களைப் பயன்படுத்தி உணவு வகைகளைச் செய்து பரிமாறுவதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த வரவேற்கத்தக்க போக்கை ஊக்குவிக்கும் வகையில் தினை, வரகு, சாமை, குதிரைவாலி, சோளம், ராகி எனப் பல்வேறு சிறுதானியங்களில் செய்யக்கூடிய விதவிதமான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன் (Sarasus Samayal - YouTube).

`` சத்துமிக்க சிறுதானியங்களில் பொங்கல், தோசை, கலந்த சாதம், பணியாரம், பாயசம், சூப், முறுக்கு, கேசரி எனச் சுவையான உணவுகளின் ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். உங்கள் குடும்ப ஆரோக்கியம் சிறப்பாக அமைய இவை உறுதுணை புரியும்’’ என்று நம்பிக்கை பொங்க கூறுகிறார் சரஸ்வதி அசோகன்.

படங்கள்: நா.ராஜமுருகன்