மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 50

சோறு முக்கியம் பாஸ்! - 50
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 50

சோறு முக்கியம் பாஸ்! - 50

யணங்களின்போது, நகரங்களைக் கடந்து கிராமப்புறங்களில் இருக்கும் குடிசை உணவகங்களில் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா..? பலசமயங்களில் அது மிகச்சிறந்த தருணமாக அமைந்துவிடும். குளிர்சாதனப் பெட்டியில் உறைந்துபோகாத, அந்த மண்ணில் விளைந்து முகிழும் கறிகாய்களால் சமைத்து, கள்ளங்கபடமில்லாமல் பரிமாறுகிற தாய்மார்களின் அந்த அன்பில் கரைந்துபோவோம்.  

சோறு முக்கியம் பாஸ்! - 50

ஓமலூரிலிருந்து தாராமங்கலம் செல்லும் சாலையில், இந்திரா நகரில் இருக்கும் அழகப்பன் கிராமத்து உணவகத்தில் எனக்கு அப்படியொரு அனுபவம் வாய்த்தது. சாலையையொட்டி, கூரை வேயப்பட்ட சிறிய வீடு. முகப்பில் புகைபோக்கிக் குழாய் வைத்து மண் பூசப்பட்ட அடுப்புகள். நான்கைந்து அடுப்புகள் எரிந்தாலும் துளிப் புகை வெளியில் வரவில்லை. சிறப்பான கிராமத்துத் தொழில்நுட்பம். மாரியம்மா  பாட்டி, குழம்பில் வாகாக வெட்டிய மீன்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார். லட்சுமி பாட்டி கொதிக்கும் நீரில் கேழ்வரகு மாவைக் கொட்டி, கட்டிபடாமல் புரசைக் கட்டையைப் போட்டு வேகவேகமாகக் கிளறிக்கொண்டிருக்கிறார். ராஜாமணி பாட்டி சாமைச்சோற்றை அகப்பையில் அளவெடுத்து கிண்ணங்களில் வைத்துக்கொண்டிருக்கிறார். உணவகத்தை நிர்வகிக்கும் ஆறு பெண்களில், உணவக உரிமையாளர் அமுதா மட்டும்தான் இளையவர்.  

சோறு முக்கியம் பாஸ்! - 50

உள்ளே பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம். நீளமான டேபிள் பெஞ்ச் போட்டிருக்கிறார்கள். ராமாயி பாட்டி, தமிழரசி பாட்டி இருவரும் பரிமாறுகிறார்கள். அமுதாக்கா தொடுகறிகள், களி, பொங்கலையெல்லாம் அளவெடுத்து கிண்ணங்களில் அள்ளிவைத்து அடுக்குகிறார். சாலையிலிருந்து இறங்கும்போதே குழம்புகளின் வாசனை மனதை ஈர்க்கிறது. 

சோறு முக்கியம் பாஸ்! - 50

எளிமையான உணவகம். ஆனால் அசத்தலான உணவுகள். தழையத் தழைய வாழையிலை போட்டுப் பரிமாறுகிறார்கள். காலை 8 மணிக்கெல்லாம் சுடச்சுட உணவுகள் தயாராகிவிடுகின்றன. களி, சாமைச்சோறு, பொங்கச்சோறு, முட்டைப்பணியாரம். சுடச்சுடச் சாப்பிடலாம். பெரிய களி உருண்டை 25 ரூபாய். நாட்டுக்கோழிக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, தலைக்கறிக் குழம்பு, மீன் குழம்பு... தொட்டுக்கொள்ள எதுவேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். நான்கையும் கேட்டால்கூட அள்ளிவந்து ஊற்றுகிறார்கள். இஞ்சி பூண்டு வாசனையோடு அமர்க்களமாக இருக்கின்றன குழம்புகள். சைவ விரும்பிகளுக்காகக் கீரைக்குழம்பு, சாம்பார், தக்காளிச் சட்னியும் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழிக்குழம்பு அல்லது கருவாட்டுக் குழம்பு... களிக்கு அற்புதமான பக்கத்துணை. களியின் கழுத்துவரை ஊற்றி ஊறவைத்துச் சாப்பிடலாம். சாமைச்சோறும் 25 ரூபாய்தான். சந்தன நிறத்தில் கேக் மாதிரி கொண்டு வந்து வைக்கிறார்கள். இதற்கு, காரசாரமான நாட்டுக்கோழிக் குழம்பு பொருத்தமாக இருக்கிறது. ‘பொங்கச்சோறு’ என்றால் சர்க்கரை போட்டுப் பொங்கும் சோறல்ல. பச்சரிசி போட்டு, குழைய வேக வைத்த வெண்சாதம். தளும்ப மீன்குழம்பு ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால்... அடடா! 

சோறு முக்கியம் பாஸ்! - 50

குளத்து மீன்... குழம்போடு சேர்ந்து சுவை அபாரமாக இருக்கிறது. பெரிது பெரிதாக வீட்டில் செய்வதுபோல வெட்டிப் போட்டிருக்கிறார்கள். ஒரு துண்டு 30 ரூபாய்தான். தலைக்கறி, நாட்டுக்கோழிக் கறியும் தனியாக வாங்கிக்கொள்ளலாம். குடலோடு நுரையீரல், ரத்தம் சேர்த்து வறுத்து வைத்திருக்கிறார்கள். அளவெல்லாம் கிடையாது. அமுதாக்கா கையில் எவ்வளவு வருகிறதோ அவ்வளவு. பொங்கச்சோற்றுக்குக் குடல் வறுவல் பொருத்தமான தொடுகறியாக இருக்கிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 50களி, சாமைச்சோறு, பொங்கச்சோறு விரும்பாதவர்கள் இட்லி சாப்பிடலாம். ஆனால், எவரும் இட்லியை விரும்புவதாகத் தெரியவில்லை. களியும் பொங்கச்சோறும்தான் பரபரப்பாக விற்பனையாகிறது. 10 மணிக்குமேல் முட்டைப் பணியாரம் ரெடியாகிவிடும். குழிப்பணியாரம் தான். கேட்பவர்களுக்கு, குழிப்பணியார மாவில் முட்டையை உடைத்துச் சேர்த்து, பணியாரக்கல்லில் ஊற்றி வேகவைத்துத் தருகிறார்கள். நான்கு முட்டைப்பணியாரம் பத்து ரூபாய். தக்காளிச் சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பெரும்பாலானோர், தலைக்கறிக் குழம்பு வாங்கிச் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள்.

காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை களி, சாமைச்சோறு, பொங்கச்சோறு கிடைக்கும். தொடுகறிகள்தான் மதியத்தோடு காலியாகிவிடும். ஒருமுறை காலியானால் அதற்குமேல் செய்வதில்லை. சட்னி, சாம்பார், கீரைக்குழம்புதான்.

வேலைகளுக்கு மத்தியில் பாட்டிகள் பேசுகிற ஊர்க்கதைகளும் போட்டுக்கொள்கிற சண்டைகளும் அந்தச் சூழலையே சுவாரஸ்யமாக்குகின்றன. அடுப்புகள் எரிந்து கொண்டேயிருக்கின்றன. களியும் சாமைச்சோறும் பொங்கச்சோறும் தயாராகிக்கொண்டே யிருக்கின்றன. நகரத்துவாசிகளுக்கு அந்த சமையல் முறையே கண்காட்சி மாதிரியிருக்கும்.

சோறு முக்கியம் பாஸ்! - 50வயது வித்தியாசமின்றி, ‘கண்ணு’, ‘தங்கம்’, ‘தம்பி’ என்று களங்கமில்லாமல் அழைத்து அமர வைக்கிறார் அமுதா. பாட்டிகளையும் சமாளித்துக்கொண்டு வாடிக்கையாளர்களையும் புன்முறுவல் மாறாமல் உபசரிக்கிறார். அமுதாவின் அப்பா அழகப்பன்தான் உணவகத்தின் உரிமையாளர். உணவகத் தொழிலில் 30 வருட அனுபவம். முழுவதும் கிராமத்து உணவுகளை உள்ளடக்கி இந்த உணவகம் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிறதாம்.

“அதிகாலை நாலு மணிக்கெல்லாம் மாரியம்மாக்கா வந்திரும். கோழி, தலைக்கறி, குடலெல்லாம் அது கை பாத்தாதான் சுத்தமாவும் சுவையாவும் இருக்கும். லட்சுமியக்கா காலையில 6 மணிக்குக் களிக்கிண்ட உக்காந்தா ராத்திரி ஏழு மணி வரைக்கும் கிண்டிக்கிட்டே இருக்கும். நாட்டுப்புறத்துல உடம்புக்குச் சேராத எந்தப் பொருளையும் சாப்பாட்டுல சேக்கமாட்டாக. இங்கேயும் அப்படித்தான். கொத்தமல்லி, வரமிளகாவோட அரிசிக் குருணை, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு, பட்டை, கசகசா சேர்த்து லேசா வறுத்து அரைச்சு வச்சுக்குவோம். குழம்புகளுக்கு அந்த மசாலா மட்டும்தான் சேர்ப்போம்.  உள்ளூர் ஆட்கள் மட்டுமில்லாம வெளியூர்ல இருந்தெல்லாம் சாப்பிட வருவாங்க. வீட்டுக்கும் நிறைய வாங்கிட்டுப் போவாங்க...” என்கிறார் அமுதா.

எளிய மனிதர்கள்... எளிய உணவு... வயிறும் மனமும் தளும்பத் தளும்ப நிறைந்து விடுகின்றன. இளைஞர்கள் நம் நாட்டுப்புறச் சாப்பாட்டின் தனித்தன்மையை அறிய, கட்டாயம் ஒருமுறை இந்த உணவகத்துக்குச் செல்ல வேண்டும்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படங்கள்: எம்.விஜயகுமார்

சோறு முக்கியம் பாஸ்! - 50

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?  

சோறு முக்கியம் பாஸ்! - 50

சி.பி.ராஜ்குமார்,  சர்க்கரை நோய்  மருத்துவர்

“ப
ழங்களில் நிறைய அத்தியாவசியமான சத்துகள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உணவுப்பொருளிலும் ‘கிளைசெமிக் இன்டெக்ஸ்’ எவ்வளவு இருக்கிறது என்று ஒரு கணக்கு இருக்கிறது. இதைச் சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவர்களிடம் கேட்டால் அச்சிடப்பட்ட அட்டவணையே தருவார்கள்.  எந்த உணவுப்பொருளிலெல்லாம் 55 என்ற அளவுக்குக் கீழே ‘கிளைசெமிக் இன்டெக்ஸ்’ இருக்கிறதோ அவற்றையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பழங்களுக்கும் இது பொருந்தும். பொதுவாக, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.  ஆனால் அளவைக் கவனத்தில் கொள்ளவேண்டும். 100 கிராம் ஆப்பிளில், ‘கிளைசெமிக் இன்டெக்ஸ்’ 60 உள்ளது. சர்க்கரை நோயாளிகள் பாதி ஆப்பிள் சாப்பிடலாம். இதுவும், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பேரீச்சை, திராட்சை, அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில்  120-க்குமேல் கிளைசெமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. சர்க்கரை நோயுடன் சிறுநீரகக் கோளாறும் இருப்பவர்கள் பழங்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்...”