தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

அகிலா விமல்

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

க்ரீமி கீரை மக்ரோனி

தேவை: மக்ரோனி பாஸ்தா - 150 கிராம், பாலக்கீரை - ஒரு கட்டு, பச்சை மிளகாய்  - ஒன்று, பூண்டு - 6 பல், வெங்காயம் - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப், துருவிய சீஸ் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

பாஸ்தாவை உப்பு சேர்த்த கொதிநீரில் போட்டு வேகவைத்து வடித்துக்கொள்ளவும். கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கீரையை அதனுடன் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றிய பின்னர் இறக்கி ஆறவிட்டு, தேவையான உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் பாஸ்தா, அரைத்த விழுது, க்ரீம் சேர்த்துக் கொதிக்கவிடவும். துருவிய சீஸை மேலே தூவி, சூடாகப் பரிமாறவும்.

பாலக் லீஃப் தோசை

தேவை: பாலக்கீரை இலைகள் - 8, தோசை மாவு  - 2 கப், எண்ணெய், தேங்காய் சட்னி, சாம்பார் - தேவையான அளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

பாலக்கீரை இலைகளில் பெரிய இலைகளாய் காம்போடு எடுத்து வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைக்கவும். ஒரு இலையை எடுத்து மாவின் மீது வைத்து, மற்றொரு கையில் கரண்டியால் மாவை அள்ளி, இலையின் மீது ஊற்றவும். கவனமாக இலையை எடுத்து, தோசைக்கல்லின் மீது வைத்து, இரு பக்கமும் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். சாம்பார், சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

கீரை சோயா ஷமி கபாப்
                                                        
தேவை: மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒன்றரை கப், சிறுகீரை - ஒரு கட்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  மிளகாய்த்தூள், சீரகத்தூள் தலா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா 2 டீஸ்பூன், கடலை மாவு, மைதா மாவு - தலா  கால் கப், எண்ணெய், உப்பு, எலுமிச்சை வில்லைகள் - தேவையான அளவு.

மின்ட் சட்னி செய்ய:  புதினா - ஒரு சிறிய கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - 2 சிட்டிகை, தயிர் - ஒரு கப்.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கொதிக்கும் நீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து, தண்ணீரை வடித்துப் பிழிந்துவைக்கவும். கீரையைச் ஆய்ந்து சுத்தம் செய்யவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, கீரையைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் மீல்மேக்கர், இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி ஆறவிடவும். பின்னர் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதில் மைதா, கடலை மாவு சேர்த்துக் கலந்து, கட்லெட் போல தட்டவும். நான்-ஸ்டிக் பானில், கால் செ.மீ கனத்துக்கு எண்ணெய் ஊற்றி, கபாப்களைப் போட்டு, இருபக்கமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

புதினாவையும் பச்சை மிளகாயையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். இதைத் தயிரில் கலந்து உப்பு சேர்த்தால் மின்ட் சட்னி தயார். கபாப்களை மின்ட் சட்னி, எலுமிச்சை வில்லைகளோடு பரிமாறவும்.

வெந்தயக்கீரை பட்டர் நாண்

தேவை: மைதா - 2 கப், கோதுமை மாவு - ஒரு கப், வெந்தயக்கீரை - 2 சிறிய கட்டு, வெதுவெதுப்பான நீர் - ஒரு கப், ஈஸ்ட் - முக்கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பில்லாத வெண்ணெய் - கால் கப், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையை அலசி இலைகளை நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய கீரையைப் போட்டு, நீர் வற்றும் வரையில் நிதானமான தீயில் நன்கு வதக்க வேண்டும். இல்லையெனில் நாண் கசப்பாக மாறிவிடும். வதக்கிய கீரையை ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இதனுடன் கீரையைச் சேர்த்துப் பிசிறிவிடவும். வெதுவெதுப்பான நீரில், ஈஸ்ட்டைப் போட்டு, 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். அது நன்றாக நுரைத்து வந்தவுடன், மாவுடன் சேர்த்துப் பிசையவும். தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இதை மூடிப் போட்டு ஒரு மணி நேரம் (இருமடங்காக ஆகும் வரையில்) வைத்திருக்கவும். ஒரு நான்-ஸ்டிக் தவாவை மிதமான சூடாகும் வரையில் காயவைக்கவும். மாவை உருண்டைகளாக உருட்டி, சற்று தடிமனான சப்பாத்திகளாகத் தேய்க்கவும். மேலே சிறிதளவு தண்ணீர் தடவவும். தண்ணீர் இருக்கும் பக்கம் கீழே இருக்கும்படி போடவும். தீயை மிதமாக்கிக்கொள்ளவும். ஒருபக்கம் வெந்ததும், தவாவையே திருப்பி, நாணின் மறுபக்கத்தைக் காட்டி சுடவும். கவனமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் வெண்ணெயைத் தடவி, சூடாகப் பரிமாறவும்.

கீரை பனீர் பிரியாணி

தேவை:  சுக்காங்கீரை - ஒரு கட்டு, பாஸ்மதி அரிசி - 2 கப், பனீர் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்), வெங்காயம் - 4, தக்காளி - 3, பட்டை - 3 சிறிய துண்டுகள், ஏலக்காய், கிராம்பு - தலா 3, பிரிஞ்சி இலை - 2 , அன்னாசிப்பூ - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - 4 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா (இரண்டும் சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், முந்திரி - 8  தேங்காய்ப்பால் - அரை கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

அரிசியைக் கழுவி, இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவிடவும். கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கவும். வெங்காயத்தை மெலிதாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ போட்டு வறுக்கவும். பின்னர் வெங்காயம், கீரை, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி தயிர் ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை குறைந்த தீயில் வதக்கவும். இதில் அரிசியைத் தண்ணீரோடு கலந்து, தேங்காய்ப்பால் ஊற்றி, பனீர் துண்டுகளைச் சேர்க்கவும். குக்கரை மூடி அடுப்பை `சிம்’மில் வைத்திருக்கவும். ஒரு விசில் வந்தவுடன், மிக மிகக் குறைந்த தீயில், 5 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பின்னர் மூடியைத் திறந்து, மெதுவாகக் கிளறிவிட்டு, தயிர்ப் பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும்.

கீரை மலாய் கோஃப்தா

தேவை - கோஃப்தா செய்ய: முருங்கைக்கீரை - 2 கப் (அழுத்தி அளந்தது), பனீர் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2 அல்லது 3, மைதா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

கிரேவி செய்ய:  வெங்காயம் - 3 (நறுக்கிக்கொள்ளவும்) ,தக்காளி - 4 (நறுக்கிக்கொள்ளவும், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், முழு முந்திரி - 6 - 8, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்யவும். உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசிக்கவும். பனீரைத் துருவவும். மூன்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மைதா சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த கலவையை எடுத்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். கோஃப்தாக்கள் தயார்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, முந்திரியைப் போட்டு ஒரு புரட்டுப் புரட்டி இறக்கி ஆறவிடவும். இதைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவும். மீண்டும் இதைக் கடாயில் ஊற்றி, கொதிவந்தவுடன் கோஃப்தாக்களை போட்டு, மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும். நாண்/சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

கீரை பொட்டேட்டோ ஸ்கின்ஸ்

தேவை: பெரிய உருளைக்கிழங்கு - 3, சிறுகீரை (அ) பாலக்கீரை (அ) நாட்டுப்பசலைக்கீரை - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துகள் - அரை கப், பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், துருவிய சீஸ் - 1/3 கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கைக் கழுவி முழுதாக குக்கரில் வேகவிடவும் (மசிந்துவிடக் கூடாது). பின்னர் அதை ஆறவைத்து, இரண்டாக நறுக்கி, கவனமாக உள்ளிருக்கும் கிழங்கை ஸ்கூப் செய்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். கீரை வெந்தவுடன், ஸ்வீட்கார்ன், மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும். ஸ்கூப் செய்த உருளைக்கிழங்கைக் கீரைக் கலவையோடு கலந்து ஆறு பங்குகளாகப் பிரிக்கவும். ஒவ்வொரு பாதி உருளைக்கிழங்கின் உள்ளேயும் இந்தக் கலவையை வைத்து, மேலே துருவிய சீஸ் தூவி, 3 நிமிடங்கள் கிரில் செய்து சூடாகப் பரிமாறவும். கிரில் செய்ய இயலாதவர்கள், சூடான தோசைக்கல்லில் கிழங்குகளை அடுக்கி, மூடி சீஸ் இளகும் வரையில் வைத்திருந்து எடுக்கவும்.

கீரை க்ரில்டு சீஸ் வித் காரமலைஸ்டு ஆனியன் ஜாம்

தேவை: நாட்டுப்பசலைக்கீரை - ஒரு கட்டு, பிரெட் ஸ்லைஸ் - 8, பெல்லாரி வெங்காயம் (சிறிய சைஸ்) - 3 , சர்க்கரை - 4 டீஸ்பூன்,  சீஸ் ஸ்லைஸ் - 4,  எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை நீளமாக மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை வதக்கவும். பொன்னிறமானதும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, சர்க்கரை தூவி அடுப்பிலிருந்து இறக்கி நன்கு கிளறவும். ஆனியன் ஜாம் தயார். இதைத் தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கீரை, உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரையில் வதக்கி ஆறவிடவும். 4 பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஆனியன் ஜாம் தடவி, அதன்மீது கீரையைச் சமமாகப் பரப்பவும். பின்னர் ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸ் மீதும் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடான தோசைக்கல்லில் டோஸ்ட் செய்யவும்.

கீரை மணி பேக்ஸ்

தேவை: பாலக்கீரை - ஒரு கட்டு,  க்ரீம் சீஸ் - அரை கப்,   ஸ்ப்ரிங் ரோல் ஷீட் - 10,  மைதா பேஸ்ட் - அரை கப்,  மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,  எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

பாலக்கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பாலக்கீரையைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். தண்ணீரை வடித்து ஒட்டப் பிழிந்து, உப்பு, மிளகுத்தூள், க்ரீம் சீஸை இதோடு கலக்கவும். இந்தக் கலவையை 10 சிறிய உருண்டைகளாக உருட்டிவைக்கவும். வாணலியில் மிதமான சூட்டுக்கு எண்ணெயைக் காயவைக்கவும். ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டின் நடுவில் கீரைக்கலவையை வைத்து, சுற்றிலும் மைதா பேஸ்ட்டைத் தடவி, ஒரு சுருக்குப்பை போல மூடி, லேசாக முறுக்கிவிடவும் எண்ணெயில் பொரித்தெடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

கீரை சீஸ் க்ராகெட்ஸ்

தேவை: உருளைக்கிழங்கு - 4 (பெரியது)  நாட்டுப்பசலைக்கீரை அல்லது பாலக்கீரை - அரை கட்டு (இலைகள் மட்டும்) பனீர் - 100 கிராம்  சீஸ் க்யூப் - 2  மைதா - 2 டேபிள்ஸ்பூன்  ரஸ்க் தூள் - அரை கப்  எண்ணெய் - அரை கப்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்துக் கட்டியில்லாமல் மசிக்கவும். கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பனீரையும் சீஸையும் துருவவும். இவை அனைத்துடனும் உப்பு, மைதா சேர்த்து ஒன்றாகக் கலந்து பிசையவும். ஒரு ஃப்ரையிங் பானில் (frying pan) எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். பிசைந்துவைத்த கலவையிலிருந்து பெரிய எலுமிச்சை அளவு எடுத்து, சிலிண்டர் வடிவில் உருட்டவும். ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். க்ராகெட்ஸை கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

க்ரீம் ஆஃப் பாலக் சூப்

தேவை: பாலக்கீரை - ஒரு கட்டு  வெங்காயம் (நடுத்தர சைஸ்) - ஒன்று  பூண்டு - 4 பல்  ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  ஃப்ரெஷ் க்ரீம் - 1/3 கப்  மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்து தண்டுகளோடு நறுக்கவும். வெங்காயத்தைச் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயைக் காயவைத்து, சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், கீரை, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். மீண்டும் இதைக் கடாயில் ஊற்றி, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதிவந்தவுடன் இறக்கி, சூப் பவுல்களில் ஊற்றிப் பரிமாறவும்.

கீரை கோதுமை வடை

தேவை: முருங்கைக்கீரை இலை - அரை கப்  கோதுமை மாவு - ஒரு கப்  தண்ணீர் - முக்கால் கப்  சின்ன வெங்காயம் - 5 - 6  பச்சை மிளகாய் - ஒன்று  சமையல் சோடா - ஒரு சிட்டிகை  உப்பு - தேவைக்கேற்ப  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைக் கழுவி ஒரு சுத்தமான துணியில் உலர்த்தவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியான மாவு போல் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

கீரை டோக்ளா

தேவை: ஏதேனும் ஒரு கீரை ப்யூரி - அரை கப்  கடலை மாவு - ஒரு கப்  தயிர் - அரை கப்  தண்ணீர் - 1/3 கப்  சமையல் சோடா - ஒரு சிட்டிகை  உப்பு - தேவைக்கேற்ப.

சிரப் செய்ய:  தண்ணீர் - அரை கப்  சர்க்கரை - 2 டீஸ்பூன்  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:  எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

விருப்பமான கீரையைக் கொதிநீரில் வேகவைத்து, தண்ணீரை வடித்து நைஸாக அரைக்கவும். இதுவே கீரை ப்யூரி ஆகும். கடலை மாவோடு, கீரை ப்யூரி, தயிர், உப்பு, தண்ணீர், சமையல் சோடா சேர்த்துக் கலந்து, எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்தில் விரும்பிய வடிவில் / அச்சில் ஊற்றி, 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இதுதான் டோக்ளா.தண்ணீர், சர்க்கரை, எலுமிச்சைச்சாற்றை  ஒன்றாகக் கலந்து, 2 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். இந்த சிரப்பை டோக்ளாவின் மேலே பரவலாக ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து, துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

கீரை அரான்சினி

தேவை: வேகவைத்து மசித்த சாதம் - 2 கப்  சீஸ் - 3 ஸ்லைஸ்  மைதா - அரை கப்  ரஸ்க் தூள் - முக்கால் கப்  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. கீரைக்கடைசல் செய்ய:  ஏதேனும் ஒரு வகை கீரை - அரை கட்டு
 சின்ன வெங்காயம் - 6 - 8 (தோலுரிக்கவும்)  தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை, சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து மசிக்கவும் அல்லது மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். கீரைக்கடைசல் தயார். இதை மசித்த சாதத்தோடு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்தக் கலவையை ஆறு பங்குகளாகப் பிரிக்கவும். சீஸ் ஸ்லைஸ்களை பாதிப்பாதியாக வெட்டி, ஆறு சிறு உருண்டைகளாக உருட்டவும். கீரை சாதத்தில் ஒரு பங்கு எடுத்து, அதனுள் சீஸ் உருண்டை வைத்து மூடி, பந்துபோல் உருட்டிவைக்கவும். மைதாவில் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, சாத உருண்டையை மைதா கரைசலில் முக்கி, ரஸ்க் தூளில் புரட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மீதமுள்ள கீரை சாதத்தையும் இதேபோல் செய்துகொள்ளவும். கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

கீரை மஷ்ரூம் பீட்சா டோஸ்ட்

தேவை: பிரெட் ஸ்லைஸ் - 8  மஷ்ரூம் - 100 கிராம்  நாட்டுப் பசலைக்கீரை / பாலக்கீரை ஏதேனும் ஒன்று - ஒரு கட்டு  பீட்சா சாஸ் - ஒரு கப்  துருவிய சீஸ் - அரை கப்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - சிறிதளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கவும். மஷ்ரூமை இரண்டாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கீரை, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில், ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, மஷ்ரூம் சேர்த்து வேகும் வரை வதக்கிக்கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான சூட்டுக்குக் காயவைத்து, பிரெட்டை ஸ்லைஸ்களை அடுக்கி, அதன் மீது பீட்சா சாஸ் தடவவும், பின்னர் அதன் மேல் கீரை, மஷ்ரூம், சீஸ் வைத்து, மூடி போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து சீஸ் இளகும் வரையில் டோஸ்ட் செய்யவும். சூடாகப் பரிமாறவும்.

கீரை டிப்

தேவை: பாலக்கீரை - அரை கட்டு  மயோனைஸ் சாஸ் - கால் கப்  ஹங் கர்ட் - அரை கப்  பூண்டு - ஒரு பல் (நசுக்கவும்)  மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

பரிமாற: கேரட், வெள்ளரி, குடமிளகாய், பிரெட் துண்டுகள் - தேவையான அளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

பாலக்கை சுத்தம்செய்து தண்டுகளை நீக்கி, பொடியாக நறுக்கவும். இதை மற்ற பொருள்களுடன் நன்றாகக் கலந்து நறுக்கிய கேரட், வெள்ளரி, குடமிளகாய், பிரெட் துண்டுகளோடு ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு:
தயிரை ஒரு டீ வடிகட்டியில் போட்டு அரை மணி நேரம் வைத்திருந்து கிடைக்கும் கெட்டித்தயிரை எடுத்துக்கொள்ளவும். ஹங் கர்ட் தயார்.

கீரை ஆலு சன்னா

தேவை: சுக்காங்கீரை / பாலக்கீரை / நாட்டுப்பசலைக்கீரை / சிறுகீரை ஏதேனும் ஒன்று - அரை கட்டு  வெள்ளைக் கொண்டைக்கடலை - 150 கிராம்  உருளைக்கிழங்கு - 2  சீரகம் - ஒரு டீஸ்பூன்  சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  வெங்காயம் - 2  தக்காளி - 3  இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்  தேங்காய்ப்பால் - ஒரு கப்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 4 - 5 விசில் வரும் வரையில் வேகவைத்து வடிக்கவும். உருளைக்கிழங்கைத் தனியாக வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, சீரகத்தைத் தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கொண்டைக்கடலை, கீரை, உருளைக்கிழங்கு சேர்த்துப் புரட்டி, தேங்காய்ப்பால் ஊற்றி, ஒரு கொதிவந்ததும், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி / இடியாப்பம் / ஆப்பம் உடன் சூடாகப் பரிமாறவும்.

கீரை குஜராத்தி கடி

தேவை: நாட்டுப்பசலைக்கீரை / பாலக்கீரை / சிறுகீரை ஏதேனும் ஒன்று - ஒரு சிறிய கட்டு  தயிர் - 2 கப்  கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2  இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (துருவவும்)  வெங்காயம் (நடுத்தர சைஸ்) - 2  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம்செய்து நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். மஞ்சள்தூள், கடலை மாவு, உப்பைத் தயிரில் கலந்துவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கீரை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர், தயிர்க் கலவையை ஊற்றி, கடலை மாவின் பச்சை வாசனை போகும் வரையில் கொதிக்க வைத்து இறக்கவும். இதை சப்பாத்தி / பூரியுடன் பரிமாறலாம்.

கீரை ஆஃப்கன் போலனி

தேவை: கோதுமை அல்லது மைதா மாவு - ஒன்றரை கப்  நாட்டுப் பசலைக்கீரை / பாலக்கீரை - 2 கட்டு  பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்து, தண்டுகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெயைக் காயவைத்து கீரை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நீரை ஒட்டப்பிழிந்து, ஆறு பங்குகளாகப் பிரிக்கவும். மாவை உப்பு, வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைக்கவும். பின்னர் ஆறு பங்குகளாகப் பிரித்து உருட்டி வைக்கவும். ஓர் அகலமான ஃப்ரையிங் பானில் (frying pan) 1/3 கப் எண்ணெய் ஊற்றி, காயவைக்கவும். மாவு உருண்டையை எடுத்து, சப்பாத்தி கனத்துக்குத் தேய்க்கவும். இதன் கீழ்ப்பகுதியில், ஒரு பங்கு கீரைக்கலவையை வைத்து சமமாகப் பரப்பிவிடவும். மேல் பகுதியை இதன் மீது மூடி ஓரங்களை அழுத்திவிடவும். இந்த `போலனி’க்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தயிருடன் பரிமாறவும்.

கீரை இட்லி மிளகாய்ப் பொடி

தேவை: பொன்னாங்கண்ணிக்கீரை இலைகள் - முக்கால் கப்  உளுந்து, கடலைப்பருப்பு - தலா அரை கப்  காய்ந்த மிளகாய் - 10 - 12  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையை நன்றாக அலசி, துணியில் துடைத்து, வெயிலில் ஒரு மணி நேரம் உலர்த்தவும். பின்னர் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, கீரையை மிகவும் குறைந்த தீயில் மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுக்கவும். அதை எடுத்துவிட்டு, மற்றுமொரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வறுத்து ஆறவைக்கவும். இதனுடன் கீரை, உப்பு சேர்த்து அரைக்கவும்.

இதை மூன்று வாரங்கள் வரை வைத்திருக்கலாம் பொன்னாங்கண்ணிக்கீரைக்குப் பதிலாக வல்லாரைக்கீரை / முடக்கத்தான்கீரையைப் பயன்படுத்தலாம்.

கீரை பிரேக்ஃபாஸ்ட் மஃபின்ஸ் (எக்லெஸ்)

தேவை: பாலக்கீரை இலைகள் (அழுத்தி அளந்தது) - ஒன்றே கால் கப்  வாழைப்பழம் - ஒன்று (பெரியது)  சர்க்கரை, மைதா, கோதுமை மாவு - தலா ஒரு கப்  வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்  பால் - 1/3 கப்  பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்  பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்  எண்ணெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன்  உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

மைதா, கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். அவனை (oven) 180 டிகிரிக்குச் சூடேற்றவும். கீரை, வாழைப்பழம், எண்ணெய், வெனிலா எசென்ஸ், பாலை ஒன்றாக மிக்ஸியில் அடித்து, மாவுக்கலவையில் ஊற்றி, மெதுவாகக் கலக்கவும். இதை மஃபின் கப்களில் ஊற்றி, 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

கிடைக்கும் அளவு: சுமார் 8 மஃபின்கள்.

கீரை ஸ்பைசி வடகம்

தேவை: ஜவ்வரிசி - கால் கிலோ  ஏதேனும் ஒரு கீரை - ஒரு கப்  புதினா - ஒரு கைப்பிடி அளவு  பச்சை மிளகாய் - ஒன்று  எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். கீரை, புதினாவைச் சுத்தம் செய்யவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஜவ்வரிசியுடன் கீரை, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து 5 - 6 நிமிடங்கள் காய்ச்சவும். கண்ணாடி போல வந்ததும் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறவைத்து, வெள்ளை துணியில் வடகமாக ஊற்றி 2 - 3 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

கீரை சுகர்ஃப்ரீ ஸ்மூத்தி

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

தேவை: பாலக் இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  நன்றாகப் பழுத்த பச்சை வாழைப்பழம் - ஒன்று  ஆப்பிள் - பாதியளவு (தோல் சீவி, விதை நீக்கவும்).

செய்முறை: கீரையைக் கழுவி சுத்தம் செய்யவும். கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, கண்ணாடி கிளாஸில் ஊற்றி உடனடியாகப் பரிமாறவும்.

கீரை பீட்ரூட் பொரியல்

தேவை: முருங்கைக்கீரை இலைகள் - ஒன்றரை கப்  பீட்ரூட் - கால் கிலோ  சின்ன வெங்காயம்  - 10  பச்சை மிளகாய் - 2  தேங்காய்த் துருவல் - கால் கப்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைக் கழுவி சுத்தம் செய்யவும். பீட்ரூட்டைத் தோல் சீவி, நறுக்கி தனியே வேகவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுக் காயவைத்து நறுக்கிய சின்ன வெங்காயம், கீரை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் தெளித்து மூடி போட்டு வைக்கவும். தீயை மிதமாக வைத்து நன்கு வேகவிடவும். பிறகு வெந்த பீட்ரூட் துண்டுகள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.

கீரை வீகன் ஆம்லெட்

தேவை: கடலை மாவு - ஒரு கப்  ஏதேனும் ஒரு கீரை - ஒரு பெரிய கைப்பிடி அளவு  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று  கேரட் - ஒன்று (சிறியது)  இஞ்சி - ஒரு இன்ச் துண்டு  பச்சை மிளகாய் - பாதியளவு  சமையல் சோடா - ஒரு சிட்டிகை
 எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளி, கீரை, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட், இஞ்சியைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். மாவைச் சூடான தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி, இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். சாப்பாட்டுடன் சூடாகப் பரிமாறவும்.

முடக்கத்தான்கீரை துவையல்

தேவை: முடக்கத்தான்கீரை -  ஒன்றரை கப்  உளுந்து - கால் கப்  கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் - 2  புளி - சிறிய எலுமிச்சை அளவு  பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை  உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரை, கொத்தமல்லித்தழையைச் சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து பெருங்காயத்தூள், உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்து வறுபட்டதும் கீரை, கொத்தமல்லித்தழை சேர்த்து நீர் வற்றும் வரையில் வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்துப் புரட்டி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இதை மிக்ஸியில் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.

கீரை பக்கோடா

தேவை: ஏதேனும் ஒரு வகை கீரை இலைகள் - ஒரு கப்  கடலை மாவு - ஒரு கப்  அரிசி மாவு - அரை கப்  இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை  உப்பு - தேவைக்கேற்ப  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு  தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் சுத்தம் செய்து எண்ணெய், தண்ணீர் நீங்கலாக மற்ற பொருள்களை ஒன்றாகக் கலந்து, தண்ணீர் தெளித்து, சற்றுத் தளர்வாகப் பிசிறி வைக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைக்கவும். மாவுக் கலவையைக் கையில் எடுத்து எண்ணெயில் தெளித்தாற்போல் (தூவினாற்போல்) போட்டு பொன்னிறமாக, மொறுமொறுப்பாக ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.

கீரை ஸ்ட்ராபெர்ரி தினை சாலட்

தேவை: ஸ்ட்ராபெர்ரி (பெரியது) - 4  பாலக்கீரை - அரை கட்டு தினை - கால் கப்  பாதாம் பருப்பு - 4.

டிரஸ்ஸிங் செய்ய: மயோனைஸ் - கால் கப்  எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்  மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

பாலக்கைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். ஸ்ட்ராபெர்ரி பழத்தைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். பாதாம் பருப்பை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். தினையை வேகவைத்து, தண்ணீரை வடித்துக் குளிர்ந்த நீரில் அலசிக்கொள்ளவும். டிரஸ்ஸிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகக் கலக்கவும். கீரை, ஸ்ட்ராபெர்ரி, தினை, பாதாம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, டிரஸ்ஸிங் கலவையை மேலே ஊற்றி, லேசாகக் கிளறிவிட்டுப் பரிமாறவும்.

கீரை ஸ்வீட் பொட்டேட்டோ பர்கர்

தேவை - கட்லெட் செய்ய: 
அரைக்கீரை / சிறுகீரை / பாலக்கீரை / நாட்டுப் பசலைக்கீரை ஏதேனும் ஒன்று - ஒரு கட்டு  சர்க்கரைவள்ளிக்கிழங்கு - அரை கிலோ  வெங்காயம் - 2  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 4 டீஸ்பூன்  மிளகாய்த்தூள், சீரகத்தூள் தலா - ஒரு டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  உப்பு  - தேவைக்கேற்ப.

பர்கர் அடுக்க:  பர்கர் பன் - 6  தக்காளி - 2  வெங்காயம் - ஒன்று (பெரிய சைஸ்)  சீஸ் ஸ்லைஸ் - 6

பரிமாற:  டோமேட்டோ கெட்சப் - தேவையான அளவு.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

கீரையைச் ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் 5 - 6 விசில் வரை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் மசித்துவைத்திருக்கும் கிழங்குடன் கீரையைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். ஆறிய பின்னர், ஆறு பெரிய உருண்டைகளாக உருட்டி, கட்லெட் போல தட்டவும். ஒரு நான்-ஸ்டிக் தவாவில் போட்டு, இருபுறமும் அரை ஸ்பூன் எண்ணெய்விட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். தக்காளி, வெங்காயத்தை, மெல்லிய வில்லைகளாக வெட்டவும். பர்கர் பன்னை இரண்டாக வெட்டி, நடுவில் வெங்காயம், தக்காளி, கட்லெட், சீஸ் ஸ்லைஸ் என்கிற முறையில் அடுக்கவும். டோமேட்டோ கெட்சப்புடன் பரிமாறவும்.

கீரை காலிஃப்ளவர் பேக்

தேவை: காலிஃப்ளவர் (சிறிய பூ) - ஒன்று  சிறுகீரை / நாட்டுப்பசலைகீரை / பாலக்கீரை ஏதேனும் ஒன்று - அரை கட்டு  பூண்டு - 2 பல்  வெங்காயம் (பெரியது) - ஒன்று பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று  மைதா - 2 டேபிள்ஸ்பூன்  சீஸ் க்யூப் - 2 (துருவவும்)  மொசரெல்லா சீஸ் - 100 கிராம் (துருவவும்)  பால் - ஒரு கப்  ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  வெள்ளை மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

காலிஃப்ளவரை, சிறிய துண்டுகளாக்கி, கொதிக்கும் நீரில் போட்டு உப்பு சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவிடவும். கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் காலிஃப்ளவர், கீரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், ஜாதிக்காய்த்தூள், துருவிய சீஸ் சேர்த்து வதக்கவும். தீயைக் குறைத்து, மைதாவைத் தூவி, கட்டியில்லாமல் கிளறிவிட்டு, பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கெட்டியான பின்னர், ஒரு அலுமினிய பாத்திரம் அல்லது கண்ணாடி பேக்கிங் டிஷ்ஷில் அதை மாற்றவும். துருவிய மொசரெல்லா சீஸை மேலே சேர்த்து அவனில் (oven) 5 - 6 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகும் வரையில் `பேக்’ செய்து எடுக்கவும்.

பீட்சா, பர்கர் மக்ரோனி, மஃபின்ஸ் செய்து அசத்தலாம் கீரையிலும்!

30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்!

டைகளில் கீரைக் கட்டுகள் பச்சைப் பசேல் என்று அடுக்கி வைக்கட்டிருக்கும் அழகே கண்ணைக் கவரும். தோற்றத்தில் மட்டுமல்லாமல் சத்து நிறைந்தது என்ற வகையிலும் கீரை சிறப்புமிக்கது.

கீரையை வழக்கமான முறையில் செய்து பரிமாறும்போது, சிறியவர்கள் பலரும், பெரியவர்கள் சிலரும் பேருக்குக் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டோ, சாப்பிடாமலோ `எஸ்கேப்’ ஆகிவிடுவார்கள். இவர்களை கீரை சாப்பிடவைப்பது எப்படி?

``நான் சொல்லித் தருகிறேன் வாருங்கள்’’ என்று அழகிய படங் களுடன் உற்சாமாக  உதவிக்கரம் நீட்டுகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் அகிலா விமல். ``கீரையை மசியல், பொரியல் என்று மட்டும் செய்யாமல், கீரையைப் பயன்படுத்தி பீட்சா, பர்கர், நாண், கபாப், மக்ரோனி,  பிரெட் டோஸ்ட், ஸ்மூத்தி எனக் குழந்தைகள் விரும்பும் டிஷ்களை யும், பிரியாணி, வடை, பக்கோடா, டோக்ளா என அனைவரும் விரும்பும் உணவு வகைளையும் செய்து பரிமாறலாம். பிறகு உங்கள் வீட்டு டைனிங் அறையில் `ஒன்ஸ் மோர் ப்ளீஸ்’ என்ற குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்’’ எனப் புன்சிரிப்புடன் கூறுகிறார் அகிலா.