தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கிச்சன் பேஸிக்ஸ்: காபி

கிச்சன் பேஸிக்ஸ்: காபி
பிரீமியம் ஸ்டோரி
News
கிச்சன் பேஸிக்ஸ்: காபி

விசாலாட்சி இளையபெருமாள்

ம்மில் பலருக்கு இப்படித்தான்... ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றைய பொழுது ஆனந்தமாக, சுறுசுறுப்பாகத் தொடங்குவதுபோல ஓர் உணர்வு.  விருந்தினர் உபசரிப்பிலும் காபிக்கே முதலிடம். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் ரிலாக்சேஷனுக்கு ஒரு காபி வேண்டும். போர் அடித்தாலும் மூளையைச் சுறுசுறுப்பாக்க ஒரு காபி வேண்டும்.  

கிச்சன் பேஸிக்ஸ்: காபி

காரணம் எதுவாக இருந்தாலும் மோகம் கொள்ளச் செய்யும் காபியில் ஏராளமான வகைகள் உண்டு. எஸ்பிரஸ்ஸோ, காப்புச்சினோ, கஃபே லாட்டே, இன்ஸ்டன்ட், பிளாக்... இப்படி எத்தனை வகை இருந்தாலும் நம்ம ஊரு ஃபில்டர் காபிக்கு நிகர் உண்டோ? அக்கம்பக்கம் வீட்டாரையும் சுண்டியிழுக்கும் விதத்தில் மணக்கும் ஃபில்டர் காபிக்கான டிகாக்‌ஷனை எப்படித் தயார் செய்வது?  

கிச்சன் பேஸிக்ஸ்: காபி

காபித்தூள் மற்றும் பால்... இவை இரண்டின் தன்மையைப் பொறுத்து டிகாக்‌ஷன் காபியின் ருசி மாறுபடும்.  காபியின் ருசி நல்ல காபிக்கொட்டையைப் பக்குவமாக வறுத்து அரைப்பதில் தொடங்குகிறது. காபிக்கொட்டையில் அராபிகா ஒசத்தி. அடுத்து, ரோபஸ்டா. ஒரே காபிச்செடியில் சில கொட்டைகள் மட்டும் உருண்டையாக இருக்கும். அதுதான் பீபெர்ரி (Peaberry). மற்றது தட்டையாக இருக்கும். அதை பிளான்டேஷன் `ஏ’ (Plantation ‘A’) என்கிறார்கள். பீபெர்ரி 40 சதவிகிதமும் பிளான்டேஷன் `ஏ’ 60 சதவிகிதமும் கலந்து காபித்தூள் வாங்கினால் நிறமும் மணமும் சுவையும் பிரமாதமாக இருக்கும்.

காபியின் விலை குறைப்புக்காகவே வணிகரீதியாக சிக்கரி கலக்கப்படுகிறது. காபியின் நிறம் மெருகேறுவதற்கு சிக்கரியே உதவுகிறது. ஒரு காபிக்கு ஒன்றரை ஸ்பூன் காபித்தூள் போதுமானது. சிக்கரி இல்லாவிடில் இரண்டரை ஸ்பூன் காபித்தூள் தேவைப்படும். சிக்கரி பிடிக்குமென்றால் 80 சதவிகிதம் காபித்தூளும் 20 சதவிகிதம் சிக்கரியும் கலந்து வாங்க வேண்டும். இதற்கு மேல் சிக்கரி கலப்பது நல்லதல்ல.  அதோடு, காபியின் சுவையும் மாறிவிடும்.

டிகாக்‌ஷன் ஃபில்டர்... நாம் பாரம்பர்ய ஃபில்டரில் நான்கு பாகங்கள் உண்டு. கீழ்ப்பாகம் டிகாக்‌ஷன் வந்து சேரும் பாகம்; மேல்பாகம் சிறுசிறு துளைகள் கொண்டது. குடை மற்றும் மூடி இருக்கும். காபி ஃபில்டர்கள் வெவ்வேறு அளவுகளில் பித்தளை மற்றும் ஸ்டீலில் கிடைக்கின்றன. நம் முன்னோர் பித்தளை பயன்படுத்தினார்கள். பித்தளைக்கு அதிக நேரம் வெப்பத்தைத் தக்கவைக்கும் தன்மை உண்டு. எனினும், பராமரிப்பது எளிது என்பதால் இப்போது பலரும் விரும்புவது ஸ்டீல் ஃபில்டரே.

எந்த ஃபில்டராக இருந்தாலும் மேல்பாகத்தில் இருக்கும் துளைகள் அடைசலின்றி சுத்தமாக இருக்க வேண்டும். அடைசல் இருந்தால் துளைகளை நேரடியாகத் தணலில் காண்பித்துத் தட்டினால் அடைப்பு நீங்கும். அல்லது ஓர் ஊசியால் குத்தி சுத்தம் செய்துகொள்ளலாம்.

பிறகு, கீழ்ப்பாகத்தின் மேல், மேல்பாகத்தை வைத்து, அதில் பாதியளவு நிரம்பும் வரை காபித்தூள் சேர்த்து ஸ்பூனால் மெதுவாக அழுத்திவிடவும் (ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டாம்). பிறகு குடையை மேலே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். கொதிவந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி சில நொடிகள் கழித்து, குடையின் மேல் மெதுவாக ஃபில்டர் கிட்டத்தட்ட நிரம்பும் வரை ஊற்றவும். பிறகு ஃபில்டரை முக்கால் பங்கு மூடி வைக்கவும். 10-ல் இருந்து 15 நிமிடங்கள் ஆகும், டிகாக்‌ஷன் இறங்கி வருவதற்கு.

இப்போது பால் காய்ச்ச வேண்டும். ஒரு கப் காபிக்கு, முக்கால் கப் பால்... தண்ணீர் சேர்க்கக் கூடாது. கறந்த பசும் பாலாக இருந்தால் உசிதம். எந்தப் பாலாக இருந்தாலும், முன்கூட்டியே காய்ச்சி வைக்கக் கூடாது. கரண்டியால் கிளறிக்கொண்டே காய்ச்ச வேண்டும். இல்லையென்றால் ஆடை படிந்து காபியின் சுவை குறைந்து போகும். பால் நன்கு கொதித்துவந்ததும், மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஒரு டம்ளரில் முதலில் சுவைக்கு ஏற்றாற்போல சர்க்கரையைப் போட வேண்டும். சர்க்கரை சற்றுக் குறைவாக இருந்தால்தான் காபிக்கே உரிய அந்த மென்கசப்பை அனுபவிக்க முடியும். சர்க்கரையின் மீது டிகாக்‌ஷன் ஊற்ற வேண்டும். டிகாக்‌ஷன் அளவை அதன் தன்மையைப் பொறுத்துத் தீர்மானிக்கலாம். நன்கு கெட்டியாக இருந்தால் ஓரிரு ஸ்பூன்கள் போதும். சற்று தளர்வாக இருந்தால் கால் கப் வரை தேவைப்படும். டிகாக்‌ஷன் சற்றுத் தூக்கலாக இருப்பதுதான் நல்ல ஸ்ட்ராங் காபியின் அடையாளம். பிறகு ஓரிரு முறை, சர்க்கரை கரையும் வரை, டிகாக்‌ஷனை ஆற்ற வேண்டும். இப்போது சூடான பால் சேர்க்க வேண்டும். நாம் விரும்பிய நிறம் வந்தவுடன் பால் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, மேலும் சில துளிகள் டிகாக்‌ஷன் ஊற்றிச் சுடச் சுட டபரா செட்டில் பரிமாறவும்.

இரண்டு பேருக்கு காபி தயாரிப்பதற்கு...

காபித்தூள் - சிக்கரி சேர்த்த காபித்தூள் என்றால் – 3 டீஸ்பூன்; நயம் காபித்தூள் என்றால் – 4 முதல் 5 டீஸ்பூன், பால் – ஒன்றரை கப், சர்க்கரை – 3 டீஸ்பூன். 

கிச்சன் பேஸிக்ஸ்: காபி

காபி பர்குலேட்டர்

இப்போது பர்குலேட்டர் என்கிற மேற்கத்திய பாணி காபி ஃபில்டர் கிடைக்கிறது. இதில் கீழ்ப்பாகத்தில் சாதாரண தண்ணீர் விட வேண்டும். பிறகு நடுவில் இருக்கும் பாகத்தில் காபித்தூள் சேர்க்க வேண்டும். மேல்பாகத்தில் டிகாக்‌ஷன் வந்து சேரும். இந்த ஃபில்டரின் மூன்று பாகங்களையும் பொருத்தி நேரடியாக அடுப்பில் வைத்து தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து உடனடியாக மேலே இருக்கும் காபித்தூள் வழியாகச் சென்று மேல்பாகத்தில் வந்து சேரும். மேல்பாகத்தில் டிகாக்‌ஷன் வருவது நின்றதும் அடுப்பை அணைத்துவிட்டு கீழே இறக்கி வைக்கவும். காபி பர்குலேடர் முறையில் டிகாக்‌ஷன் ஓரிரு நிமிடங்களில் சேர்ந்துவிடும். பிறகு மேற்கூறிய முறையில் காபி தயாரிக்கலாம்.

பிரெஞ்சு பிரஸ்

பிரெஞ்சு பிரஸ்ஸில் முதலில் காபித்தூள் சேர்த்து பிறகு, மேலே கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். மூன்று நிமிடங்கள் கழித்து மேலே இருக்கும் ஃபில்டரை அழுத்தி கீழே தள்ளவும். காபித்தூள் கீழே போய் தங்கிவிடும். மேலே இருப்பது டிகாக்‌ஷன். இதை வேறு ஒரு கப்பில் உடனடியாக மாற்றி வைத்து காபி செய்யப் பயன்படுத்தவும்.

படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்

கிச்சன் பேஸிக்ஸ்: காபி

இன்ஸ்டன்ட் காபி

இரண்டு பேருக்கு காபி தயாரிப்பதற்கு...


காபித்தூள் – 2 டீஸ்பூன், பால் – ஒன்றரை கப், தண்ணீர் – அரை கப், சர்க்கரை – 4 டீஸ்பூன்.

இன்ஸ்டன்ட் காபி செய்வதற்கும் கறந்த பால் அல்லது பாக்கெட் பால் உபயோகிக்கலாம். இதுவும் அப்போதைக்கு அப்போது காய்ச்சினால்தான் காபி சுவையாக இருக்கும். தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கரண்டியால் கிளறிக்கொண்டே கொதிக்க வைக்கவும். கொதித்ததும் சர்க்கரை கலந்து ஓரிரு முறை பாலை ஆற்றவும். பிறகு காபித்தூள் சேர்த்து ஒருமுறை ஆற்றி, சூடாகப் பரிமாறவும்.

ஏன் காபித்தூளை கடைசியாகச் சேர்க்க வேண்டும்? சில நேரங்களில் கொதிக்கும் பாலுடன் இன்ஸ்டன்ட் காபித்தூளை கலந்தால் பால் திரிந்துவிடும்.

கிச்சன் பேஸிக்ஸ்: காபி

காப்புச்சினோ

இரண்டு பேருக்கு காபி தயாரிப்பதற்கு...


காபித்தூள் – 3 டீஸ்பூன், பால் – ஒன்றரை கப், சர்க்கரை – 5 டீஸ்பூன்.

இதற்கும் முன்பு கூறியது போலவே பால் காய்ச்ச வேண்டும். ஓர் உயரமான கப்பில் காபித்தூள், சர்க்கரை மற்றும் ஓரிரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூனால் முட்டை அடிப்பது போல நன்கு அடிக்க வேண்டும். சிறிய விஸ்க் வைத்தும் அடிக்கலாம். அடிக்க அடிக்கக் காபித்தூள் முதலில் தண்ணீர்விட்டு வரும்; பிறகு, மெதுவாகப் பழுப்பு நிறமாக மாறி நுரைக்கத் தொடங்கும். இப்போது மீண்டும் ஒரு ஸ்பூன் தண்ணீர்விட்டு, காபி நன்கு நுரைத்துப் பொங்கி வரும் வரை அடித்துக்கொண்டே இருக்கவும் (விப்பிங் க்ரீம் போல நன்கு பொங்கி வர வேண்டும்). கப்பின் அளவில் அரை கப் முதல் முக்கால் கப் வரை நுரைத்து வர வேண்டும். அதுவரை அடித்துக்கொண்டே இருக்கவும். சிறிய விஸ்க் வைத்து அடித்தால் சீக்கிரம் நுரைத்து வந்துவிடும். ஸ்பூனால் அடித்தால் 7 முதல் 8 நிமிடங்கள் ஆகும். காபி பரிமாறும் இரண்டு கப்புகளில் இரண்டு டேபிள்ஸ்பூன் காபி க்ரீமை விட்டு அதற்கு மேல் கொதிக்கும் பால் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலந்துகொள்ளவும். மேலாக ஒரு டீஸ்பூன் காபி க்ரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

இதுதான் நாம் பெரிய பெரிய காபி கடைகளில் போய் குடிக்கும் காபி. பத்தே நிமிடங்களில் வீட்டிலேயே தயார் செய்துவிடலாமே காப்புச்சினோவை. செலவும் குறைவு... ருசியும் பிரமாதம்!