ரெசிப்பிஸ்
Published:Updated:

பிரசாத உணவுகள்!

பிரசாத உணவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரசாத உணவுகள்!

பிரசாத உணவுகள்!

பிரசாத உணவுகள்!

ன்றாடம் உண்ணும் சாதம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும்போது அது பிரசாதமாகிறது. ‘பிர’ என்றால் ‘கடவுள் தன்மை’ என்கின்றன ஆன்மிக நூல்கள். இப்படி, கடவுள் தன்மை கொண்ட உணவுகளே பிரசாதம். `ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்படும் எந்த உணவும் புனிதம் பெற்று நம் மனதையும் உடலையும் தூய்மைப் படுத்தும்’ என்கிறார் வாரியார் சுவாமிகள்.

கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும்போது மட்டும் அது பிரசாதம் அல்ல... உண்மையில் கடவுளின் பிரசாதம் ஏழை எளிய மக்களோடு பகிர்ந்து உண்ணும்போதுதான் பிரசாதம் என்ற பெருமையைப் பெறுகிறது என்றும் ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். தெய்விகத் தன்மை கொண்ட பிரசாதங்கள் நம்முடைய குணத்தை சாத்விக மயமாக்குகின்றன.

இவ்வளவு அருமை பெருமைகளைக் கொண்ட பிரசாதங்கள் ஆலயம்தோறும் வித்தியாசப்படுகின்றன. புற்று மண், வெறும் நீர், வேப்பிலை எனத் தொடங்கி, லட்டு, பஞ்சாமிர்தம் என வகை வகையாகப் பிரமாதப்படுகின்றன பிரசாதங்கள். இங்கு ஆலயம்தோறும் வழங்கப்படும் பிரசாதங்களின் மகிமைகள், அவை தயாரிக்கப்படும் முறைகள் குறித்துக் காண்போம்.

பிரசாத உணவுகள்!

சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஓர் இல்லத்தி்ல் சிவன், சக்தி, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் எனப் பஞ்சமூர்த்தி மூர்த்தங்களோடு பல்வேறு வகையான தெய்வச் சிலைகளை வைத்து ஆகம விதிகளின்படி மாதம்தோறும் விழாக்களும் உற்சவங்களும் நடத்துகிறார்கள். ஒவ்வொரு விழாவுக்கும் சிறப்பான நைவேத்தியங்களைப் படைத்து ஆண்டவனை ஆராதிக்கிறார்கள்.

இந்த  இல்லத்தில் நைவேத்தி யங்கள் செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த வத்சலா ராஜன் மற்றும் அவருடைய மருமகள் ஆஷா ராஜன் ஆகியோர் சித்திரை மாதத்துக்கான சிறப்பான பிரசாதங்களுக்கான செய்முறையை வழங்குகிறார்கள்.
 பக்தி மணம் கமழட்டும்!

 -ஹரி காமராஜ்

 சொ.பாலசுப்ரமணியன்


சித்திரை பிரார்த்தனை   
 
சித்திரை விஷுவுக்கான பிரசாதம் இது. தமிழ்ப் புத்தாண்டு (2019 ஏப்ரல் 14) நாளிலும் இந்த நைவேத்தியத்தைப் பெருமாளுக்குப் படைத்து இனிமையான வாழ்வைப் பெறப் பிரார்த்திப்பார்கள். 

பலாப்பழப் பாயசம்

தேவையானவை:
* பலாச்சுளை - 10
* ஊறவைத்த பச்சைப் பயிறு - ஒரு டேபிள்ஸ்பூன்
* பொடித்த வெல்லம் - அரை கிலோ
* தேங்காய் - அரை மூடி (பால் எடுத்துக்கொள்ளவும்)
* முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் - தலா 10
* நெய் - சிறிதளவு

செய்முறை:

பிரசாத உணவுகள்!

நெய்யில் முந்திரிப்பருப்பையும் திராட்சை யையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். பலாச்சுளையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் இதைப் பொடித்த வெல்லத்தோடு கலந்து மிதமான தீயில் கிளறவும். பிறகு இதனுடன் ஊறவைத்த பச்சைப் பயிற்றையும் சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவை பதமாக இளகிக் கொதிக்கும் போது பொடித்த ஏலக்காய், வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை சேர்க்கவும். பிறகு அதனுடன் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

திருக்கல்யாணம்

அருள்மிகு மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும் (2019 ஏப்ரல் 17) நாளில் இந்தப் பருப்புக்களியை பிரசாதமாகப் படைப்பது தென்மாவட்ட மக்களின் வழக்கம். திருவாதிரைக் களியைப் போலவே இருந்தாலும் இது சுவையில் கொஞ்சம் வித்தியாசமானது. ஈசனுக்கு விருப்பமான இந்தக் களியை பக்தர்களுக்கு வழங்கி பிரார்த்தித்தால் எண்ணியவை யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பருப்புக்களி

தேவையானவை:

* பச்சரிசி – அரை கிலோ
* பச்சைப் பயிறு - கால் கிலோ
* வெல்லம் - முக்கால் கிலோ (பொடிக்கவும்)
* முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் - தலா 10 (பொடிக்கவும்)
* பச்சைக் கற்பூரம் – சிறிதளவு
* நெய் - சிறிதளவு

செய்முறை:

பிரசாத உணவுகள்!

நெய்யில் முந்திரிப்பருப்பையும் திராட்சையையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அரிசி, பச்சைப் பயிற்றை ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். பொடித்த வெல்லத்துடன் முக்கால் டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். வெல்லம் முழுவதுமாகக் கரைந்ததும் வெல்லக்கரைசலை வடிகட்டிக்கொள்ளவும் இதனுடன் ரவை பதத்தில் உடைத்த அரிசி - பருப்பைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை கொதித்து மாவு வெந்து வரும்போது, அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, பொடித்த ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு:
* இந்தப் பருப்புக்களியில் மாதுளை, திராட்சை போன்ற பழங்களைச் சேர்த்தும் பரிமாறலாம்.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கியமாக, ஆற்றில் அழகர் இறங்கும் (2019 ஏப்ரல் 19) நாளில் மதுரை வட்டாரம் முழுக்க அமர்க்களப்படும் நைவேத்தியம் இது. சொக்கநாதப் பெருமான் இந்த நெய் அப்பத்தை விரும்பி உண்பார் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் இந்த நாளில் மதுரை மக்கள் இந்த அப்பத்தை ஈசனுக்குப் படைத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு விநியோகித்து நலம் பெறுவர்.

நெய் அப்பம்


தேவையானவை:
* பச்சரிசி – அரை கிலோ
* வெல்லம் - அரை கிலோ
* மஞ்சள் வாழைப்பழம் - 4
* தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
* ஏலக்காய் – 5 (பொடிக்கவும்)
* சுக்கு – சிறிதளவு (பொடிக்கவும்)
* நெய் - தேவையான அளவு

செய்முறை:

பிரசாத உணவுகள்!

சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி எடுத்துவைத்துக் கொள்ளவும். அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இந்த அரிசியுடன் தண்ணீர் சேர்க்காமல் வெல்லம், வாழைப்பழம் ஆகியவற்றை மட்டும் சேர்த்து மையாக அரைத்தெடுக்கவும். இந்தக் கலவையை எட்டு மணி நேரம் வரை புளிக்கவிடவும். பின்னர் இதனுடன் நெய்யில் வதக்கிய தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காய், பொடித்த சுக்கு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பணியாரச் சட்டியில் நெய் தடவி மாவைப் பணியாரங்களாகச் சுட்டெடுக்கவும்.

ஐஸ்வர்யம் 

அட்சய திருதியை (2019 மே 7) நன்னாளுக்கான பிரசாதம் இது. பரசுராமர் அவதரித்த நாளும், புனித கங்கை பூமிக்கு வந்த நாளும் இதுவே. குபேரன் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்ற நாளும், திரௌபதி அட்சயப் பாத்திரம் பெற்ற நாளும் இதுவே என்பதால், இது செல்வம் பொங்கும் திருமகள் நாளாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் பால் பொங்கல் பொங்கி திருமகளை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் வீட்டில் நிறைந்து செல்வ வளம் சிறப்புறும் என்பது நம்பிக்கை.

பால் பொங்கல்

தேவையானவை:
* பால் – ஒரு லிட்டர்
* பச்சரிசி - கால் கிலோ
* முந்திரிப்பருப்பு, திராட்சை (நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய் - தலா 10 (பொடிக்கவும்)
* பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
* சர்க்கரை - 500 கிராம்
* நெய் - தேவையான அளவு

செய்முறை:

பிரசாத உணவுகள்!

அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாலைப் பாதியாகச் சுண்டும் வரை நன்கு காய்ச்சி, அதில் ஊறவைத்த சுத்தமான பச்சரிசி, சர்க்கரையைச் சேர்த்து பதமாக அடிப்பிடிக்காமல் கிளறவும். குழைந்து இறுகும் வேளையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பொடித்த ஏலக்காய், சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து, ஒரு கரண்டி நெய்யும் சேர்த்து இறக்கவும்.