ரெசிப்பிஸ்
Published:Updated:

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

படங்கள்: ஜோதிவேல்

ரலாற்றில் பஞ்சம் மக்களுக்கு என்ன கற்றுத்தந்ததோ இல்லையோ, கையிருப்பில் உள்ள எஞ்சிய பொருள்களைக்கொண்டு எளிய உணவு சமைக்கக் கற்றுத்தந்துள்ளது. அப்படி அமெரிக்காவை 1929-ம் ஆண்டு தாக்கிய `தி கிரேட் டிப்ரஷன்’ என்கிற கொடும் பஞ்சம், மீந்துபோன வாழைப்பழங்களைக்கொண்டு செய்யப்பட்ட `பனானா பிரெட்’ மற்றும் `பனானா கேக்’ போன்ற உணவுகளுக்கு வித்திட்டது. 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களால் அமெரிக்காவுக்கு அறிமுகம் செய்யப் பட்டன வாழைப்பழங்கள்.

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

1933-ம் ஆண்டு வெளிவந்த பில்ஸ்பரி குக் புக் முதல் பல சமையல் புத்தகங்களில் `பனானா பிரெட்’ செய்முறை இடம்பெற்றது.

`1930-களில் அமெரிக்கச் சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்ட பேக்கிங் சோடா, ஈஸ்ட் மற்றும் கேக் மாவைப் பிரபலப்படுத்த பெருநிறுவனங்கள் செய்த சதி அது!’ என்று சொல்லும் வரலாற்று ஆய்வாளர்களும் உண்டு. எது எப்படியோ, இன்றும் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 23 அன்று `தேசிய பனானா பிரெட் தினம்’ கொண்டாடிவருகிறது அமெரிக்கா!

ஞாயிற்றுக்கிழமைகள் ஆசீர்வதிக்கப் பட்டவை. கொஞ்சம் சோம்பல், நிறைய உணவு, தொலைக்காட்சி, ஓய்வு என ஞாயிறு பொழுதுகளில் ஓர் ஆனந்தம் இருந்துகொண்டே இருக்கும். மரபு நடைகள், உணவு நடைகள் போன்றவை பெரும்பாலும் சனிக்கிழமைகளில் நடத்துவது வழக்கம். அதையொட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்ற நல்லெண்ணம்தான் காரணம். ஆனால், ``இம்முறை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு உணவு நடை’’ என்று ஸ்ரீதர் வெங்கட்ராமன் அறிவித்ததும் `ஐயைய்யோ... ஞாயிறு உறக்கம்போச்சே’ என்ற கவலைதான் எனக்கு. உணவு நடை, அண்ணா நகரின் முக்கியத் திடல்களில் ஒன்றான டவர் பார்க்கில் தொடங்குவதாக ஏற்பாடு. கிட்டத்தட்ட 20 பேர் 5 மணிக்குள் ஆஜராகிவிட்டிருந்தனர். தோழி நெல்லை உலகம்மாள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டியில் வந்திருந்தது இன்ப அதிர்ச்சி. அரட்டைக் கச்சேரி களைகட்ட, ஒவ்வொருவராக 5.15 வரை வந்துகொண்டே இருந்தனர்.

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

``அண்ணா நகர், இன்றைய நகரின் பிரமாண்டத்தின் சிகரம் என்றால் மிகையல்ல. ஆனால், 1950-களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகள், மழை பெய்தால் நாள்கணக்கில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று இருந்த நடுவக்கரை என்னும் சிறு கிராமம், இன்று தலைநகரின் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்றாகக் கோலோச்சுகிறது’’ என்று ஸ்ரீதர் கூற, அதன் பழைய புகைப்படங்கள் கொண்டு விளக்கினார், வரலாற்று மற்றும் சமூக ஆர்வலர் திரிபுரசுந்தரி. ``என்னதான் `பாஷ்’ ஏரியா என்று சொல்லப்பட்டாலும், இங்கு உள்ள சின்னஞ்சிறிய டீக்கடைகள் பள்ளி மாணவர்களிடம் வெகுபிரபலம்’’ என்று கூறியவர், `பாஸ்டன்’, `ஜப்பான்’, `லண்டன்’ என்று இந்தக் கடைகளுக்கு பள்ளி-கல்லூரி மாணவர்கள் சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்க, குபீர் சிரிப்பு!

``அண்ணா நகரைப் பொறுத்தவரை தரம் மற்றும் வித்தியாச முயற்சியாக இல்லையென்றால், உணவகங்களைச் சட்டென மறந்துவிடுகிறார்கள் மக்கள்’’ என்று கூறிய ஸ்ரீதர், ``ஐந்து ஆண்டுகளுக்குமேல் இயங்கும் எந்த உணவகத்தின் வியாபார பாணியும், ஒரு வெற்றிக்கதைதான்” என்றபடி நடையைத் தொடங்கினார்.

நாங்கள் எதிர்பார்த்துவந்த டவர் பார்க்கின் எதிரில் உள்ள சமோசா பேக்டரி மூடப்பட்டிருக்க, வருத்தத்துடன் தொடர்ந்தோம். சாந்தி காலனி ஏழாவது மெயின் ரோட்டில் இருக்கிறது அரங்க விலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ். பெரிய வண்ணப் பலகை இல்லை, அலங்கார விளக்குகளோ. தோரணங்களோ இல்லை. ஒரு சிறிய வீட்டின் ஹால்தான் வியாபாரம் நடைபெறும் கவுன்ட்டர். ``இங்கே தவலை வடை பிரபலம். நான்கு வடைகளே இருக்கின்றன. வேண்டுபவர்கள், பணம் கொடுத்து உடனே வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்று ஸ்ரீதர் சொல்ல, அவசரமாக ஒரு வடையை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். வெண்கலத் தவலையில் (பானை) தட்டிப்போடப்பட்ட தவலை அடைதான், எண்ணெயில் பொரிக்கப்பட்டு `தவலை வடை’ ஆனது. எண்ணெய் அதிகம் புழக்கத்தில் இல்லாத காலத்தில் இன்றைய வடக்கத்திய தந்தூர் அடுப்பைப்போல சிறு தீயில் வெண்கலப் பானை ஒன்றைவைத்து அதன் உட்புறத்தில் லேசாக எண்ணெய் தடவுவர். மெல்லிய அடைபோல கெட்டியாக அரைத்துவைத்துள்ள அடை மாவை கைகளில் தட்டி பானையின் உட்புறம் ஆங்காங்கே ஒட்டிவிடுவர். தவலையை மூடிவைத்தால், சிறிது நேரத்தில் அடிப்புறம் மொறுமொறுப்பான அடைகள் பக்கவாட்டிலிருந்து தவலையின் அடிப்பகுதியில் விழுந்துவிடுகின்றன. இதே பொருள்களைக்கொண்டு அடை மாவை அரைத்து, மெல்லிய தீயில் இளஞ்சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் தவலை வடை தயார்.

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

வெளிப்பக்கம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் உள்ள தவலை வடையை விழுங்கிவிட்டு, கடையின் மேற்பார்வையாளரிடம் கடை பற்றி தகவல் கேட்கச் சென்றேன்.

32 ஆண்டுகளாக அரங்க விலாஸ் அண்ணா நகரைச் சுற்றியே இயங்கிவருவதாகச் சொன்னவர், எட்டு ஆண்டுகளாக இதே சாந்தி காலனி வீட்டில் உள்ளதாகத் தெரிவித்தார். ``எங்க கடையில எல்லாமே ஸ்பெஷல்தான். குறிப்பா சொல்லணும்னா மிக்ஸர், தட்டை, சமோசா, தவலை வடை இதெல்லாம் ரொம்ப பேமஸ்” என்றவர், துபாயில் பணிபுரிந்து திரும்பிய பத்மநாபன் என்பவர் தொடங்கிய கடையை, அவரது பேத்தி இப்போது நடத்திவருவதாகக் கூறினார்.

இதன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தொடர்ச்சியாக வருபவர்கள்தான் என்று கூறியவர், அடையாறு, நீலாங்கரை, நங்கநல்லூர் என எங்கு வாடிக்கையாளர்கள் மாறிச் சென்றாலும், தங்களிடம் வந்தே பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள் என்கிறார். அதில் பலர் மூன்றாம் தலைமுறையினர். தங்கள் தாத்தா-பாட்டி காலம் முதலாக இங்கே வந்து செல்பவர்கள். ``ரங்க விலாஸ் லட்டுதான் வேணும். ரங்க விலாஸ் சிப்ஸ்தான் வேணும்னு அடம்பிடிச்சு வந்து வாங்கிட்டு போற குட்டீஸ்கூட இருக்காங்க” என்கிறார்.

வெளிநாடு செல்வோருக்கு என அருமையான பேக்கிங்குடன் வடகம், வற்றல், ஊறுகாய் போன்றவையும் இங்கே விற்கப்படுகின்றன. ஊறுகாய் வேறு பிராண்டுகள் வாங்கி விற்றாலும் வற்றல், வடகம் போன்றவை திருநெல்வேலியில் உள்ள உரிமையாளர் குடும்பத்திலிருந்தே வரவழைக்கப்படுகின்றன. ஆறு பேர் இங்கு பணியாற்றுகிறார்கள். தீபாவளி போன்ற பிஸியான நேரத்தில் இரண்டு அல்லது மூன்று ஷிஃப்டுகள்கூட வந்து பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வோர் உணவுப்பொருளுக்கும் தனி சமையற்கலைஞர் உண்டு. அவர் வராத அன்று, அந்த உணவைச் செய்வதில்லை. தட்டை மற்றும் கைமுறுக்குக்கு மட்டும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் இவர்கள், மற்ற உணவுப்பொருள்களுக்கு ரீபைண்ட் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள்.

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

``இந்தக் கடையில 33 வருஷங்களா வேலை செய்றேன்” என்றபடி முன்னே வந்தார் அலமேலு மாமி. 33 வருடங்களுக்கு முன் யாரோ சொல்லி இவரை இங்கே வேலையில் சேர்த்துவிட, இன்றுவரை இங்கே பணியாற்றிவருகிறார். ``வேலை பண்ற மாதிரி இல்லை… நான் அவா மனுஷா மாதிரி” என்று சின்னச் சிரிப்புடன் சொல்கிறார். ``இவங்கதான் இங்கே எல்லாம்… சேல்ஸ்ல இருந்து புரொடக்‌ஷன் வரை பார்த்துப் பார்த்துச் செய்வாங்க” என்று கடையில் உள்ள மற்ற பணியாளர்கள் அலமேலு மாமிக்குச் சான்றிதழ் தருகின்றனர்.

அங்கிருந்து திரும்பி, நடையை நான்காவது அவென்யூவில் தொடர்ந்தோம். முதலில் கண்ணில்பட்டது `பிரிமாஸ் பேக்கரி’. கடையின் முன் நாங்கள் இருபது பேர் நின்றதும், கடையிலிருந்து வெளியே வந்த வாடிக்கையாளர் ஒருவர் தயக்கத்துடன், ``யார் சார் நீங்க, கூட்டமா என்ன பண்றீங்க இங்கே?” என்றார். உணவு நடையை விளக்கி, ``பிரிமாஸில் என்ன பெஸ்ட்?’’ எனக் கேட்டதும், ``என் கடைக்கு இங்கே இருந்துதான் சான்ட்விச்  வாங்கிப் போவேன். இவர்களது மஃபின்ஸ் மற்றும் பனானா கேக் ரெண்டும் செம டேஸ்ட்” என்று சொல்லிச் சென்றார்.

``இந்தக் கடைக்குள்ளே போக வேண்டுமா?” என்ற ஸ்ரீதரின் கேள்விக்கு, ``நான் மஃபின்ஸ் சாப்பிடப்போறேன்” என்ற பதிலுடன் முதல் ஆளாகக் கடைக்குள் நுழைந்துவிட்டேன். புதிதாகச் செய்யப்பட்ட கேக்கின் வாசம் மூக்கைத் துளைக்க, வண்ண வண்ணமாக வரிசைகட்டி நின்றன கேக்குகள். வெனிலா மஃபின்ஸ் ஒன்றும், பிரிமாஸ் ஸ்பெஷல் எனச் சொல்லப்பட்ட பனானா கேக் ஒன்றுமாக நைஸாக ஓரம் கட்டிவிட்டேன். கடை பற்றிய நம் கேள்விகளுக்கு, பொறுமையாகப் பதில் சொல்கிறார் பிரிமாஸின் மேலாளர் பன்னீர்செல்வம்.

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

1989-ம் ஆண்டு, மதுரையை அடுத்த நத்தம் என்ற சிற்றூரைச் சேர்ந்த கே.லோகநாதன் என்பவர் தியாகராய நகரில் 100 சதுரஅடி இடத்தில் பிரிமாஸ் பேக்கரியைத் தொடங்கினார். கேட்டரிங் படிப்பு முடித்து, பிரபல ஹோட்டல்கள், வெளிநாட்டில் மேல்படிப்பு, அங்கு உள்ள நிறுவனங்களில் பணி என்று தான் அனுபவத்தால் கற்றுக்கொண்ட பேக்கிங் கலையைக்கொண்டே தொழில் தொடங்கினார் அவர். தயாரிப்புக்கு என அமைந்தகரையில் சிறிய தொழிற்சாலையைத் தொடங்கினார். அவரது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால், இன்று நகர் முழுக்க ஏழு கிளைகள் இருக்கின்றன. தயாரிப்பு மையம், மேல அயனம்பாக்கத்தில் உள்ளது. அங்கிருந்துதான் மொத்தமாகத் தயாரிக்கப்படுகிற உணவு வகைகள் பிரிமாஸின் கிளைகளுக்குச் செல்கின்றன.

இன்று இவர்களது சாந்தி காலனி மற்றும் முகப்பேர் கடைகள் தலா 1,200 சதுரஅடி பரப்பளவில் பிரமாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

``எல்லாமே எங்க சாருடைய உழைப்புதான். 120 பேர் இன்னிக்கு இந்தக் கடையை நம்பி இருக்கோம். நாங்கெல்லாம் இதுல சின்ன இழைதான்” என்று சொல்லும் பன்னீர்செல்வம், 25 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ``பிளம் கேக், பனானா கேக் மற்றும் வெட்டிங் கேக்குகள் எங்கள் ஸ்பெஷல். எல்லாமே பேக்டரியில் இருந்தே வருகின்றன’’ என்றார்.

``அடுத்த ஸ்டாப் எங்கே?’’ எனக் கேட்டுக்கொண்டே இருபுறமும் கடைகளை நோட்டம்விட்டபடி நடந்தோம். அண்ணா நகரின் இந்த நான்காவது அவென்யூ ஒரு ஷாப்பிங் சொர்க்கம். ஒருபக்கம், கேக் முதல் மதுரை மீல்ஸ் வரை போட்டிபோட்டு அள்ளித்தரும் உணவகங்கள். மறுபக்கம், விதவிதமான ஆடை ஆபரணக் கடைகள். இதில் வேடிக்கை பார்த்தபடி ஒரு ஞாயிறு மாலை நடந்து செல்ல கசக்குமா என்ன? திறந்த வாய் மூடாமல் நடந்தோம்.

ரசித்து ருசிப்போம்!

  -நிவேதிதா லூயிஸ்