ரெசிப்பிஸ்
Published:Updated:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

சுதா செல்வகுமார்

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

சாறு நிறைந்த பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் ஜூஸ் தயாரிக்கலாம் அல்லது ஊறுகாய் மட்டும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார் வழங்கும் ரெசிப்பிகள், நிச்சயம் மாறுபட்ட சுவையைத் தரும்!

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

அந்தந்த சீஸனுக்குத் தகுந்த மாதிரி கிடைக்கும் பழத்தைவைத்து சாஸ், சூப், ரசம், பாத் என விதவிதமாக செய்து சுவைக்கலாம். வைட்ட மின் சி சத்து நிறைந்ததும், உடலுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடியதுமான  இதுபோன்ற ஜூஸி பழ ரெசிப்பிகளின் செய்முறை விளக்கங்கள் அடுத்தடுத்த பக்கங்களின் அணிவகுக்கின்றன.

சுவைக் கொண்டாட்டம் தொடரட்டும்!

படங்கள்: தி.குமரகுருபரன்

நாரத்தை தீயல்

தேவையானவை:
* நாரத்தங்காய் அல்லது பழம் - ஒரு கப் (விதை நீக்கி துண்டுகளாக நறுக்கியது)
* சிறிய மாங்காய் - ஒன்று
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கவும்)
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4 (இரண்டாகக் கீறவும்)
* மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
* மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் - தலா அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளவும்)
* நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

மாங்காயின் கொட்டையை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், நாரத்தங்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். நறுக்கிய மாங்காயையும் சேர்த்து வதக்கி, சோம்புத்தூளையும் சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவையை நன்கு  கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் மூடிபோட்டு வேகவிட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு பிரிந்து அனைத்தும் வெந்து சுருள வரும்போது அடுப்பை நிறுத்தவும். நாரத்தை தீயல் ரெடி

குறிப்பு:
* இதைச் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கு சைடிஷ்ஷாகத் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

* இது மூன்று, நான்கு நாள்கள் வரை நன்றாக இருக்கும்.

* நாரத்தை வாதம், பித்தம், வாய்வுப் பிரச்னைகளைத் தீர்க்கும்.

*நாரத்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. இதன் வேர், மலர், காய், கனி அனைத்தும் பயன்தரக் கூடியவை.

நாரத்தை இனிப்புப் பச்சடி

தேவையானவை:

* நாரத்தங்காய் - ஒன்று
* வெல்லம் (பொடித்தது) - அரை கப்
* புளிக்கரைசல் (கெட்டியானது) - அரை கப்
* தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
* கடுகு - அரை டீஸ்பூன்
* வெந்தயம் - கால் டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். வெந்நீரில் நாரத்தங்காயைப் பதினைந்து நிமிடங்கள் போட்டு வைக்கவும். பிறகு விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, சூடாக்கி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

பிறகு இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர்  நாரத்தங்காயையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். இப்போது குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும்.

வெல்லப்பாகை வதங்கிக்கொண்டிருக்கும் நார்த்தங்காயுடன் சேர்க்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறவும்.

15  நிமிடங்கள் கொதிக்கவிடவும். நார்த்தங்காய் நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

குறிப்பு:
* இந்த இனிப்புப் பச்சடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.

* தோசை, சப்பாத்திக்குக்கூட சைடிஷ்ஷாகப் பயன்படுத்தலாம்.

* வயிற்றுப்புண்ணை ஆற்றும், பசியை அதிகரிக்கும் ஆற்றல் நாரத்தைக்கு உண்டு. ரத்தத்தைச் சுத்தம் செய்யும் மருத்துவக் குணமும் இதற்கு இருக்கிறது.

*நாரத்தையை அடிக்கடி உணவில் சேர்த்துவர, ரத்தம் சுத்தமடையும்.

கடாரங்காய் உருளை பாத்

தேவையானவை:
* கடாரங்காய் - ஒன்று
* சின்ன உருளைக்கிழங்கு - 100 கிராம்
* பச்சரிசி சாதம் அல்லது பாஸ்மதி அரிசி சாதம் - ஒன்றரை கப்
* நெய் - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - சிறிதளவு
* சோம்பு, பட்டை - சிறிதளவு
* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 4
* வெந்தயம் - அரை டீஸ்பூன்
* பொடித்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்
* கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
* கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
* மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* எண்ணெய், உப்பு - சிறிதளவு

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

உருளைக்கிழங்கை  உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து  மிக்ஸியில் பொடித்து எடுத்துக்கொள்ளவும். கடாரங்காயை இரண்டாக நறுக்கிப் பிழிந்து சாறெடுத்து விதைகள் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் மீதமுள்ள இரண்டு மிளகாய், சோம்பு, பட்டை, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் கடாரங்காய் சாறு ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், நெய், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வறுத்துப் பொடித்துவைத்துள்ள மிளகாய் - பெருங்காயம் - வெந்தயப் பொடியை மேலே தூவிக் கிளறிப் பரிமாறவும்.

குறிப்பு:

* சாதம் குழைந்துவிடக் கூடாது. பொலபொலவென்று உதிரியாக வடித்து எடுத்துக்கொள்ளவும்.

* அவரவர் புளிப்புச்சுவை மற்றும் தேவைக்கேற்ப சிறிய கடாரங்காய், பெரிய கடாரங்காய் என்று எது வேண்டுமோ அதைத் தேர்வு செய்துகொள்ளவும்.

*கடாரங்காயில் காணப்படும் ஃபிளவோனாய்டுகள் மரபணு செயல்பாடுகள் மேம்பட உதவுகின்றன. சரும நோய்களையும் தடுக்கின்றன.

கடாரங்காய் பூண்டு ஊறுகாய்

தேவையானவை:

* கடாரங்காய் - ஒன்று
* நல்லெண்ணெய் - அரை கப்
* கல் உப்பு - ஒரு கைப்பிடி அளவு
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 15
* பூண்டு - 15 பல் (தோல் நீக்கி உரித்தது)

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

கடாரங்காயை நன்றாகக் கழுவி, ஈரம் போகத் துடைத்து, விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஈரம் இல்லாத பீங்கான் அல்லது கண்ணாடி ஜாரில் நறுக்கியதைப் போட்டு அதனுடன் கல் உப்பு சேர்க்கவும். சுத்தமான காட்டன் துணியால் கண்ணாடி ஜாரின் வாய்ப் பகுதியைக் கட்டி அதன்மேலே மூடி போட்டு மூடி மூன்று நான்கு நாள்கள் அப்படியே விடவும். நடுநடுவே ஈரம் இல்லாத கரண்டியால் ஒவ்வொரு நாளும் கிளறி ஜாரை குலுக்கி மூடவும். அப்போதுதான் உப்பு எங்கும் பரவலாகும்.

பிறகு வெறும் வாணலியில் வெந்தயம், 7 காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, மீதமுள்ள 8 காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தாளிக்கவும். பிறகு இதனுடன்  ஊறிய கடாரங்காயைச் சேர்த்து வதக்கவும். பின்னர்  வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் பொடியைச்  சேர்த்துக் கிளறி அனைத்தும் சுருள வந்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:
* இந்த ஊறுகாய் மாதக்கணக்கில் கெடாது.

* தயிர் சாதத்துக்கு இது வெகுபொருத்தமாக இருக்கும்.

*கடாரங்காயில் உள்ள ஃபிளவோனாய்டுகள் நம் உடலில் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

சாத்துக்குடி ரசம்

தேவையானவை:
* சாத்துக்குடிச்சாறு (விதைகள் நீக்கியது) - அரை கப்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* வெந்தயம் - அரை டீஸ்பூன்
* துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 2
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)
* கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* புளிக்கரைசல் (நீர்க்கக் கரைத்தது) - ஒரு கப்
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

தனியா, வெந்தயம், துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு, இதன்மேல் கொத்தமல்லி தூவி, அடுப்பை நிறுத்தும் சமயம் சாத்துக்குடிச்சாறு ஊற்றி அடுப்பை அணைக்கவும். சுவையான சாத்துக்குடி ரசம் ரெடி. இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சூப் மாதிரியும் சூடாகப்  பருகலாம்.

குறிப்பு:
* சிறு நெல்லி அளவு புளி எடுத்து நீர்க்கக் கரைக்கவும். சாத்துக்குடியும் புளிப்பு என்பதால் புளிப்புத்தன்மை அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

*ரத்த சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்மருந்தாகச் செயல்படும்.

சாத்துக்குடி பவேரியன் க்ரீமி

தேவையானவை:
* நன்கு பழுத்த சாத்துக்குடி - 2
* லிக்விட் ஃபுட் கலர் - ஒரு துளி (மஞ்சள் (அ) ஆரஞ்சு)
* கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
* சாத்துக்குடிச்சாறு - அரை கப்
* காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப்
* ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
* பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
* ஜெலட்டின் - ஒரு பாக்கெட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர் அல்லது சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

சாத்துக்குடியை மேல் தோல், வெளித் தோல், விதைகள் நீக்கி சுளைகளாக உரித்துக் கொள்ளவும். காய்ச்சி ஆறவைத்த பாலில் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும். ஒரு பாத்திரத்தில் சாத்துக்குடி சாற்றுடன் ஜெலட்டினைச் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் டபுள் பாயிலிங் முறையில் இதைச் சூடுபடுத்தவும். அதாவது அகலமான பாத்திரத்தில் நீர் ஊற்றி சூடாக்கி அதன் மேல் ஜெலட்டின் - சாத்துக்குடி கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து ஜெலட்டின் கரையும் வரை கரண்டியால் கலக்கி சூடுபடுத்தவும். ஜெலட்டின் முழுவதுமாகக் கரைந்ததும் அடுப்பை நிறுத்தவும் .

பிறகு இந்தச் சாத்துக்குடி - ஜெலட்டின் கலவை ஆறியதும் இதனுடன் ஃபுட் கலர் சேர்க்கவும். இதை உங்களுக்கு விருப்பமான வடிவத்திலுள்ள மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

பிறகு பெரிய கிண்ணத்துக்கு அந்த ஜெல்லியை மாற்றி அதில் ஃப்ரெஷ் க்ரீம் கலவை ஊற்றி, சாத்துக்குடி சுளைகளைப் போடவும். மீண்டும் அரை மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தெடுக்கவும். பின்னர் இதைப் பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றி ஜில்லென்று பரிமாறவும்.

*சாத்துக்குடியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

லெமன் மின்ட் பாப்சிகல்

தேவையானவை:
* எலுமிச்சைப்பழம் - 6
* கரும்புச்சாறு - ஒரு கப்
* இஞ்சிச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
* சப்ஜா விதை - 2 டீஸ்பூன் (தண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும்)
* புதினா இலை - ஒரு டேபிள்ஸ்பூன்
* சர்க்கரை - கால் கப்
* உப்பு - ஒரு சிட்டிகை
* பாதாம் பிசின் - 10 கிராம் (தண்ணீரில் ஆறு  மணி நேரம் ஊறவைக்கவும்)
* மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
*  கலர் சுகர் பால்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

எலுமிச்சைப்பழத்தை இரண்டாக நறுக்கிப்  பிழிந்து விதைகள் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். இதைப் பெரிய பாத்திரத்தில் ஊற்றி இதனுடன் தேவையான தண்ணீர் விட்டுக்கொள்ளவும். பிறகு கரும்புச்சாறு, இஞ்சிச்சாறு, உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை ஆகியவற்றை இதனுடன் சேர்த்து மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி எடுத்துக்கொள்ளவும்.பின்னர் இதில் புதினா இலை, ஊறிய பாதாம் பிசின், சப்ஜா விதை, சுகர் பால்ஸ் போட்டுக் கலக்கவும். பாப்சிகல் மோல்டில் இதை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

பிறகு இதன் பின்புறம் ஜஸ் குச்சி செருகி மீண்டும் 6 முதல் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து மோல்டிலிருந்து எடுத்துச் சாப்பிடவும். உடனடி புத்துணர்ச்சி தரும் பாப்சிகல் இது.

குறிப்பு:
*கரும்புச்சாற்றுக்குப் பதில் சாதாரண தண்ணீரும் பயன்படுத்தலாம். மோல்டிலிருந்து ஐஸை அப்படியே எடுக்காமல் குழாய் நீரில் மோல்டை காட்டினால் சுலபமாக எடுக்க வரும். வண்ணமயமாக வேண்டுமெனில் மஞ்சள் லிக்விட் ஃபுட் கலரை எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

*இந்தியாவின் அசாம் மாநிலம், வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே எலுமிச்சைப்பழம் தோன்றியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் அனுமானம்.

லெமன் சாஸ்

தேவையானவை:

* எலுமிச்சைப்பழம் - 6 (இரண்டாக நறுக்கி விதை நீக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்)
* சர்க்கரை - கால் கப்
* மக்காச்சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
* லெமன் யெல்லோ ஃபுட் கலர் - சிறிதளவு
* துருவிய எலுமிச்சைத்தோல் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

அடிகனமான பாத்திரத்தில் தேவையான தண்ணீர், சர்க்கரை, மக்காச்சோள மாவைச் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும் கீழே இறக்கி, சிறிது ஆறவிட்டு வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்துக் கெட்டியாகவும் பளபளப்பாகவும் வரும் வரை கொதிக்கவிடவும்.

பிறகு இதை அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைப்பழச்சாற்றையும், ஃபுட் கலரையும், எலுமிச்சைத்தோல் துருவலையும்  சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான, ஹெல்த்தி யான எலுமிச்சை சாஸ் ரெடி. இந்த லெமன் சாஸை புடிங் உடன் பரிமாறலாம். பிரெட் நடுவில் தடவியும், சிப்ஸுடன் தொட்டும் சாப்பிடலாம். இது வித்தியாசமான சுவையில் இருக்கும்.

*ஸ்கர்ப், வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு எலுமிச்சைப்பழம் மருந்தாகப் பயன்படுகிறது.

ஆரஞ்சு ஸ்பினச் சூப்

தேவையானவை:
* ஆரஞ்சுப்பழம் - ஒன்று (மெல்லிய தோல் உடையது)
* அலசி ஆய்ந்த பசலைக்கீரை - அரை கப்
* ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெள்ளை வெங்காயம் - ஒன்று
* வெண்ணெய், சீஸ் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு, சர்க்கரை - சிறிதளவு

மஸ்லின் துணியில் கட்டத் தேவையான பொருள்கள்:
* கிராம்பு - 2
* பட்டை - சிறிய துண்டு
* மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

மஸ்லின் துணியில் கட்டத் தேவையான அனைத்தையும் ஒன்றாகப் போட்டு கொர கொரப்பாக இடித்துக்கொள்ளவும். பின்னர் இவற்றை மஸ்லின் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ளவும். ஆரஞ்சுப்பழத்தின் வெளித்தோல், உள்தோல் உரித்து விதைகள் நீக்கி சுளைகளாக வைத்துக்கொள்ளவும்.வெங்காயத்தைத் தோலுரித்து நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பிறகு அதனுடன் பசலைக்கீரை சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சுருள வதக்கவும். பிறகு வதக்கிய இந்தக் கலவை மூழ்கும்வரை தண்ணீர்விடவும். பின்னர் இதில் ஆரஞ்சு சுளைகளைப் போட்டுக் கிளறவும். பிறகு இதில் மஸ்லின் துணி மூட்டையைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். இப்போது மஸ்லின் மூட்டையில் உள்ள மசாலாவின் எசென்ஸ் சூப்பில் இறங்கிவிடும்.

பிறகு அடுப்பை நிறுத்தி மஸ்லின் துணி மூட்டையைப் பிழிந்து எடுத்துவிடவும். கீரை - ஆரஞ்சுக் கலவையை மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடித்தெடுக்கவும். தேவைப்பட்டால் இதனுடன் நீர் சேர்த்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் சிறிதளவு உப்பு, சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டுக் கிளறி அடுப்பை நிறுத்தவும். இதைப் பருகும் கிண்ணத்துக்கு மாற்றி மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, சீஸ் துருவல் தூவி, சூப் பிஸ்கட்டுடன் பரிமாறவும்.

*ரத்தநாளங்களில் கொழுப்புப் படிவதை ஆரஞ்சுப்பழம் தடை செய்கிறது.

ஆரஞ்சு கேரட் கூல் சாக்லேட்

தேவையானவை:
* ஆரஞ்சுப்பழம் - 2
* கேரட் - ஒன்று
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* தேன் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)
* கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
* சாக்லேட் மோல்டு - விருப்பமான வடிவத்தில்
* விருப்பமான நட்ஸ் (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
* ஆரஞ்சு எசென்ஸ் - ஒரு துளி (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஜூஸி ஃப்ரூட்டி ரெசிப்பி

கேரட்டைத் தோல் சீவி வேகவிட்டு எடுத்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஓர் ஆரஞ்சுப் பழத்தின் வெளித்தோல், உள்தோல், கொட்டைகள் நீக்கி அதன் சுளைகளை எடுத்துக்கொள்ளவும். மற்றொரு பழத்தை ஜூஸாக எடுத்துக்கொள்ளவும். அரைத்த கேரட் விழுதோடு இந்த ஜூஸை ஊற்றி அதனுடன் நட்ஸ் சேர்க்கவும். விருப்பப்பட்டால் ஆரஞ்சு எசென்ஸ் சேர்க்கவும்.

இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். சாக்லேட் மோல்டில் உரித்த சுளை சிறிதளவு வைத்து அதனுள் இந்த கேரட் ஆரஞ்சுக் கலவையை ஊற்றவும். எல்லா சாக்லேட் மோல்டுகளிலும் இதே மாதிரி செய்யவும். இதை ஃப்ரிட்ஜில் இரண்டு  மணி நேரம் வைத்து எடுக்கவும். வேண்டுமெனில் மேலே தேன் தடவிப் பரிமாறவும். சுலபமாகச் செய்யக்கூடிய ஹெல்த்தியான சாக்லேட் இது.

*ஆரஞ்சுப்பழத்தின் தோலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும், சருமப் பாதுகாப்புப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.