ரெசிப்பிஸ்
Published:Updated:

ராமசேரி இட்லி - இது வேற லெவல்!

ராமசேரி இட்லி - இது வேற லெவல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ராமசேரி இட்லி - இது வேற லெவல்!

ராமசேரி இட்லி - இது வேற லெவல்!

ம் ஒவ்வொருவரின் வீட்டு உணவுப் பட்டியலிலும் தவிர்க்கவே முடியாத உணவு வகை எதுவென்று கேட்டால், சிம்பிளாக சொல்வோம் ‘இட்லி’ என்று. அதனால்தான் வெளியே உணவகங்களில் சாப்பிடச் செல்லும்போது பெரும்பாலும் நாம் இட்லிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதையும்மீறி இட்லி சாப்பிடுவதற்காகவே ஓர் உணவகத்தைத் தேடி நாம் செல்கிறோம் என்றால், அங்கு கிடைக்கும் இட்லியின் சுவையும், தரமும் `வேற லெவ’லில் இருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்படியோர் உணவகமாகத்தான் கேரளாவில் உள்ள `ராமசேரி இட்லி கடை’யைக் கொண்டாடுகிறார்கள் உணவுப் பிரியர்கள்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓர்உள்ளடங்கிய கிராமம் ராமசேரி. நூற்றுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் இந்தக் கிராமத்தில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது ஒரு தமிழ் குடும்பம். `சரஸ்வதி டீ ஸ்டால்’ என்ற பெயரில் அவர்கள் நடத்திவரும் உணவகத்தில், இப்போதையதுபோல அல்லாமல், பாரம்பர்ய முறைப்படியே இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த இட்லிகளை ருசி பார்ப்பதற்காகவே பல வெளியூர்களிலிருந்தும் வாடிக்கை யாளர்கள் ராமசேரி கிராமத்துக்குப் படையெடுக்கிறார்கள். இட்லிக்காக இத்தனை கிலோமீட்டர்கள் பயணிக்கிறார்களா என்ற ஆச்சர்யம் நமக்கு மேலோங்க, அடுத்தநொடியே ராமசேரி கிராமத்தை நோக்கி நாமும் பயணமானோம்.

ராமசேரி இட்லி - இது வேற லெவல்!

ஊரின் அடையாளமாகிப்போன ராமசேரி இட்லிக் கடைக்கு, யாரைக் கேட்டாலும் சிறப்பாக வழி சொல்கிறார்கள். கடைக்குள் நுழைந்ததும் கல்லாப் பெட்டியில் அமர்ந்து கொண்டிருந்த வயதான பாட்டி நம்மை வரவேற்றார். அவர் பாக்கியலட்சுமி. தன் முன்னோர்களின் வரிசையில், நான்காவது தலைமுறையாக இப்போது இந்தக் கடையை நடத்திக்கொண்டு இருக்கிறார். ‘`தொலைவிலிருந்து வந்திருக்கீங்க. முதலில் சாப்பிடுங்கள். மற்றதெல்லாம் அப்புறம் பேசுவோம்’’ என்று மலையாளம் கலந்த தமிழில் அவர் சொல்லிமுடிக்க,  சுடச்சுட இட்லிகள் நம் தட்டில் வந்து தரையிறங்கின. ‘`நேரமெல்லாம் கணக்கில்லை. இங்கே எப்போ வந்தாலும் சூடான இட்லிதான்’’ என்றவாறே தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியையும், காரச் சட்னியையும் வைத்த முதியவர் பாஸ்கரன், ‘`தக்காளி சாம்பாரும் தர்றேன். அதைவிட நம்ம கடையில் இட்லிப் பொடிதான் ரொம்பவே ஃபேமஸ்.பச்சரிசி, குருமிளகு, வரமிளகாய், சீரகம், உளுந்து, கறிவேப்பிலையை வறுத்து அரைத்துத் தயாரிக்கும் நம்ம கடை ஸ்பெஷல் இட்லிப்பொடிக்குத் தனி ரசிகர் கூட்டமே இருக்கு. அதற்காகவே தினமும் எட்டு கிலோ அளவுக்கு இங்கே இட்லிப்பொடி தயாராகுது. வெளியூர் பார்சல்களுக்குச் சட்னி, சாம்பார் எல்லாம் கொடுப்பதில்லை. வேண்டிய அளவுக்கு இட்லிப் பொடியைத்தான் வாங்கிச் செல்கிறார்கள். விறகு அடுப்பில் பாரம்பர்ய முறைப்படி இட்லி தயாராவதால் நான்கைந்து நாள்கள் வரை தைரியமாக வைத்துச் சாப்பிடலாம்’’ என்றார் சிரித்துக்கொண்டே.

இங்கு ஓர் இட்லி ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். பொதுவாக நாம் சாப்பிடும் இட்லியைப் போல அல்லாமல், சற்று நீளமாக ஊத்தப்பத்தின் அளவை ஒத்திருக்கிறது ராமசேரி இட்லி. ரொம்பவும் மிருதுவாக அட்டகாச சுவை. நான்கு இட்லிகளைச் சாப்பிட்டாலே வயிறு நிரம்புவது உறுதி. சுவையோ, மேலும் இரண்டு இட்லிகளை எக்ஸ்ட்ராவாக சாப்பிடத் தூண்டுகிறது. இட்லி தவிர ஆப்பம், வடை, பழம்பொரி, பக்கோடா என லிமிடெட் மெனுதான்.  எனினும், இட்லி மட்டுமே பிரதானம்.  அவசர தேவைக்காகச் செல்பவர்களுக்கு உதவ எந்த நேரமும் இங்கு இட்லி கிடைக்கிறது.

ராமசேரி இட்லி - இது வேற லெவல்!

100 முதல் 500 இட்லிகள் என்றால் நேராகவே சென்று வாங்கிக்கொள்ளலாம். அதற்கும் அதிகமாகத் தேவைப்பட்டால் தான் ஒருநாள் முன்னதாகவே ஆர்டர் கொடுத்தாக வேண்டுமாம். சாதாரண நாள்களில் 500 முதல் 700 இட்லிகள் வரையிலும், விடுமுறை நாள்கள், விசேஷ நாள்கள் என்றால் 5,000-க்கும் அதிகமான எண்ணிக்கையிலும் இட்லிகள் விற்பனையாகிறதாம்.

பார்சலுக்காகக் காத்திருந்தவர்களைக் கடந்துசென்று கிச்சனுக்குள் நுழைந்தோம். மண் அடுப்பில் விறகுகள் எரிந்துகொண்டிருக்க, அதன்மீது தண்ணீர் நிரம்பிய ஓர் அலுமினியப் பாத்திரம் கொதித்துக்கொண்டிருக்கிறது. அதற்குமேல் சல்லடைபோல நூல் கயிற்றால் பின்னப்பட்ட ஒரு மண் தட்டை வைத்து, அதன்மீது வெள்ளைத் துணியை விரித்து இட்லி மாவை ஊற்றுகிறார்கள்.

இவ்வாறு ஓர் அடுக்கில் நான்கு இட்லிகள் வீதம் ஊற்றப்படுகிறது. பின்னர் ஒரு பாத்திரத்தை மொத்தமாக அதன்மீது கவிழ்த்தவாறு மூடிவைக்கிறார்கள். அவ்வளவுதான். அடுத்த 5 நிமிடங்களில் ஆவி பறக்கும் ராமசேரி இட்லி தயார்!

சென்னை, பெங்களூரு, எர்ணாகுளம், கோழிக்கோடு என பல ஊர்களுக்கும் பார்சல்கள் பறக்கின்றன. கேரளாவுக்குச் சுற்றுலாவரும் வெளிநாட்டுப் பயணிகளின் டூர் லிஸ்ட்டிலும் ராமசேரிக்குத் தனி இடமுண்டு. இப்படி ராமசேரி இட்லிக்கு உள்ள மவுசைப் புரிந்துகொண்ட பல கேரள ஹோட்டல்களின் உணவுப் பட்டியலில் அதை உட்புகுத்திப் பார்த்திருக்கிறார்கள். எவ்வளவோ முயன்றும் அவர்களால் அசல் ராமசேரி இட்லியின் சுவையைக் கொண்டுவர முடியவில்லை. இறுதியாகப் பாக்கியலட்சுமி பாட்டியிடமிருந்தே தங்களது உணவகங்களுக்கான இட்லிகளை வாங்கிச் செல்வதை வழக்கமாக்கிவிட்டார்கள்.

ராமசேரி இட்லி - இது வேற லெவல்!

பாக்கியலட்சுமி பாட்டியிடம் பேசினோம், “எனக்குச் சொந்த ஊர் திருப்பூர். என்னைக் கட்டிக்கொடுத்த ஊர்தான் ராமசேரி. 16 வயதில் திருமணமாகி நான் இங்கு வந்தபோதே, இங்கு என் மாமியாரின் குடும்பம் மூன்றாவது தலைமுறையாக இட்லி வியாபாரத்தை நடத்திக்கொண்டு இருந்தார்கள். எங்களது வம்சாவழியினர் காஞ்சிபுரத்திலிருந்து பிழைப்புத் தேடி, கேரளாவுக்கு வந்ததாகச் சொல்வார்கள். ஆரம்பத்தில் இட்லியைச் சுட்டு, கூடையில் கொண்டுபோய் வயல்களில் வேலை செய்பவர்களிடம் விற்று வந்ததாகவும், அப்போதெல்லாம் ஓர் இட்லிக்குக்  கால் படி நெல் விலையாகத் தருவார்கள் என்றும் முன்னோர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

என் மாமியார் இறந்த பிறகு நானும் என் கணவர் லோகநாதனும் சேர்ந்து இட்லி வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினோம். என் கணவர் இறந்து 25 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு மொத்தம் ஐந்து பெண் பிள்ளைகள். இந்த இட்லியை விற்றுத்தான் ஐந்து மகள்களுக்குமே நல்லபடியாகத் திருமணம் முடித்துவைத்தேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து அடுப்பைப் பற்ற வைத்தால், மதியம் 12 மணி வரை இட்லி சுடுவதுதான் வேலை. ஒரு மணி நேரத்துக்கு 100 இட்லிகள் என்பது கணக்கு.

ராமசேரி இட்லி - இது வேற லெவல்!

இட்லிக்கான மாவை முந்தைய நாள் இரவே அரைத்து வைத்துக்கொள்வோம். திருமண விசேஷம் உள்ளிட்ட ஆர்டர்கள் அதிகமாக இருந்தால் வேலை இன்னும் கூடுதலாகவே இருக்கும். இதே ஊரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இங்கு மாவு அரைக்கவும், இட்லி சுடுவதற்கும் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள்.

இவர்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர் கடையில் இருக்கிறோம். எல்லோரையும் ஒரு குடும்பமாகத்தான் பார்க்கிறோம். இதே ஊரில் எங்களது உறவினர்கள் சிலரும் இட்லி வியாபாரம் செய்துவருகிறார்கள். அதுபோக என்னுடைய மூத்த மகள் ப்ரீதி பாலக்காட்டிலும், மற்றொரு மகள் ஸ்மிதா ஒட்டப்பாலத்திலும் இட்லி வியாபாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இட்லிதான் எங்கள் குடும்பத்தின் அடையாளம்” என்றார் பெருமிதத்தோடு.

- தி.ஜெயப்பிரகாஷ், படங்கள்: கே.அருண்

ராமசேரிக்கு எப்படி செல்வது?

பாலக்காட்டிலிருந்து சரியாக 11 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ராமசேரி கிராமம்.

பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் குன்னாச்சி என்ற ஊர் வருகிறது. அந்த ஊரிலிருந்து இடப்புறம் செல்லும் பாதையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் ராமசேரியை அடையலாம்.