ரெசிப்பிஸ்
Published:Updated:

இது வேற கிச்சடி!

இது வேற கிச்சடி!
பிரீமியம் ஸ்டோரி
News
இது வேற கிச்சடி!

இது வேற கிச்சடி!

இது வேற கிச்சடி!

கிச்சடி என்றதும் நமக்குச் சட்டென நினைவுக்கு வருவது ரவா கிச்சடிதான். உப்புமாவை அறவே வெறுப்பவர்கள்கூட கிச்சடியை சத்தமே இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். ரவா கிச்சடியும் சேமியா கிச்சடியும் தென்னிந்திய ஸ்பெஷல். கர்நாடகாவில் இதுவே `ரவாபாத்’ என்று பெயர் சூட்டப்பட்டு, காலை உணவாக அத்தனை ஹோட்டல்களிலும் மணக்கும். இங்கே பிரியா அளிக்கும் இரண்டு கிச்சடிகளோ, நம் கிச்சடியிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. சாமை அரிசி கிச்சடி, பச்சைப் பயிறு கிச்சடி... இந்த இரண்டும் குஜராத்தி ஸ்பெஷல். கிச்சடிதான்... ஆனால், உட்பொருள்களும் சுவையும் ரொம்பவே வித்தியாசம். அரிசியும் பருப்பும்தான் குஜராத்தி கிச்சடிகளின் பலம். ரவை அறவே ஆகாது!

இது வேற கிச்சடி!

கிச்சடிகளோடு இன்னபிற குஜராத்தி ஸ்பெஷல் ரெசிப்பிகளையும் அளிக்கிறார் பிரியா ஐயர். பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப்பெண்... குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர். thephotowali.wordpress.com என்ற வலைப்பூவை நிர்வகிப்பவர். இவரது ரெசிப்பிகள் நம் சமையலறைகளையும் அலங்கரிக்கட்டும்!

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

பச்சைப் பட்டாணி உருளைக்கிழங்கு கிரேவி

தேவையானவை:
* உருளைக்கிழங்கு - 6
* தக்காளி - 4
* பச்சைப் பட்டாணி - 4 கப்
* வெங்காயம் - 2 
* இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
* பச்சை மிளகாய் - 4
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் 
* மிளகாய்த்தூள் - தேவையான அளவு
* வெல்லம் (பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன்
* சன்னா மசாலா - முக்கால் டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
* எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இது வேற கிச்சடி!

உருளைக்கிழங்கை நறுக்கி நான்கு விசில் வரும்வரை குக்கரில் வேகவைக்கவும். பின்னர்  தோலுரித்து, பிசைந்து வைத்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை குக்கரில் வேகவிடவும். பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். இஞ்சி, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு நான்-ஸ்டிக் பானில் (pan) எண்ணெயைச் சூடாக்கி, கடுகு தாளிக்கவும். இதனுடன் சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சியைச் சேர்க்கவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் பிரவுன் நிறமாக மாறும்வரை வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சன்னா மசாலா, பொடித்த வெல்லம், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு கலவையில் ஒரு  கப் தண்ணீர்விட்டு நன்றாகக் கிளறவும். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கலவையைக் கொதிக்கவிட்டு அவ்வப்போது கரண்டியால் கிளறிவிடவும். கலவை நன்கு கொதித்து, கொஞ்சம் கெட்டியான பிறகு அடுப்பை அணைக்கவும். பின்பு எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.

இந்த கிரேவியை தோசை, பூரி, ரொட்டி, பரோட்டாவுடன் சாப்பிடலாம்.

*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை பச்சைப் பட்டாணிக்கு உண்டு.

சுக்டி அல்லது கோல் பப்டி(Sukhdi or Gol Papdi)

தேவையானவை:

* கோதுமை மாவு - அரை கப்
* நெய் - 1/3 கப் + சிறிதளவு
* பொடித்த வெல்லம் - 1/3 கப் 
* ஏலக்காய்த்தூள் அல்லது சுக்குப்பொடி - 2 அல்லது 3 சிட்டிகை
* பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு - தேவையான அளவு

செய்முறை:

இது வேற கிச்சடி!

ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் நெய் தடவி தயாராக வைத்துக்கொள்ளவும். நான்-ஸ்டிக் பானில் (non-stick pan) 1/3 கப் நெய்விட்டுச் சூடாக்கவும். நெய் சூடான பின்பு கோதுமை மாவைப் போடவும். நன்றாக வாசனை வரும்வரை கோதுமை மாவை வறுக்கவும். கோதுமை மாவு பொன்வறுவலாக வரும் வரை கைவிடாமல் கிளறி பின்பு அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்த உடனேயே மாவில் ஏலக்காய்த்தூள் அல்லது சுக்குப்பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து  நன்றாகக் கலக்கவும். இப்படிச் செய்யும்போது நான்-ஸ்டிக் பேனில் இருக்கிற சூட்டில் வெல்லம் உருகிவிடும்.

பிறகு வறுத்த இந்த கோதுமை மாவை நெய் தடவி தயாராக வைத்துள்ள தட்டில் சேர்க்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தால் கோதுமை மாவை பிரஸ் பண்ணவும். பாதாம் மற்றும் முந்திரிப்பருப்பைச் சின்ன சின்னதாக நறுக்கி கோதுமை மாவின் மேல் தூவவும். மறுபடியும் ஒரு சிறிய  கிண்ணத்தால் பாதாம் மற்றும் முந்திரியைக் கோதுமை மாவுடன் ஒட்டிக்கொள்ளும் வகையில் பிரஸ் பண்ணவும். கோதுமை மாவு கொஞ்சம் ஆறிய பிறகு சதுரம் அல்லது டைமண்டு வடிவத்தில்  வெட்டி எடுக்கவும். சூடு ஆறியபின்பு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்துப் பயன்படுத்தவும்.

*உலக அளவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக விளங்குவது கோதுமையே.

சாமை அரிசி கிச்சடி (Moraiya Ni Khichdi)

தேவையானவை:  
* சாமை அரிசி - அரை கப்
* உருளைக்கிழங்கு - ஒன்று
* வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப)
* காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
* இஞ்சி – ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)
* கறிவேப்பிலை - 8 -10 இலைகள்
* புளித்த தயிர் – முக்கால் கப்
* தண்ணீர் – அரை கப் + இரண்டரை கப்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – ஒரு  டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இது வேற கிச்சடி!

வேர்க்கடலையை வெறும் வாணலியில் பொன்வறுவலாக வறுத்துப்  பொடித்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சாமை அரிசியை தண்ணீர்விட்டு இரண்டு முறை களைந்துகொள்ளவும்.

நான்-ஸ்டிக் பானில் (pan) எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் அரை கப் தண்ணீர்விட்டு, சிறிதளவு உப்பு சேர்க்கவும். பின்னர் இதில்  நறுக்கிவைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து வேகவைக்கவும்.  இதில் இன்னும் இரண்டரை கப் தண்ணீர்விட்டு, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீரைக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது சாமை அரிசியைச் சேர்க்கவும். அரிசி நன்றாக வேகும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் அடுப்பை `சிம்’மில் வைத்து, புளித்த தயிரை இதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும். கிச்சடிப்பதம் வரும்போது அடுப்பை அணைக்கவும். பின்னர் அதன் மேலே பொடித்துவைத்த வேர்க்கடலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

*எலும்புகளுக்கு இடையிலுள்ள தசைகளை வலிமை பெறச் செய்யும் குணம் சாமைக்கு உண்டு.

குஜராத்தி தால்

தேவையானவை:

* துவரம்பருப்பு - அரை கப்
* பச்சை வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
* தக்காளி - ஒன்று  (நறுக்கவும்)
* இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* பொடித்த வெல்லம் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் 
* மிளகாய்த்தூள் - தேவையான அளவு
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* வெந்தயம் - ஒரு சிட்டிகை 
* பட்டை - ஒரு இன்ச் துண்டு
* லவங்கம் - 4
* காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
* பிரிஞ்சி இலை - 2 
* பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
* எலுமிச்சைச்சாறு - தேவையான அளவு
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – ஒரு  டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இது வேற கிச்சடி!

துவரம்பருப்பைத் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். தண்ணீர் வடித்து, பெரிய பாத்திரத்தில் சேர்த்து தேவையான நீர் ஊற்றிவைக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் வேர்க்கடலையைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் ஒரே குக்கரில் வைத்து ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். வெந்த துவரம்பருப்பை  நன்றாக மசித்துக்கொள்ளவும். வெந்த வேர்க்கடலையைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஒரு நான்-ஸ்டிக் பானில் (non-stick pan) அரை கப் தண்ணீர், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி நன்றாக வேகும் வரை கொதிக்கவிடவும். தக்காளி  வெந்ததும், இதனுடன் வேகவைத்த துவரம்பருப்பு, வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு, பொடித்த வெல்லம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து கலவையை ஒரு கொதிவிடவும். தால் கொதித்து  வருவதற்குள், மற்றுமொரு நான்-ஸ்டிக் பானில் எண்ணெயைச் சூடாக்கவும். கடுகு, சீரகம், வெந்தயம், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தாளிக்கவும். தாளிப்பைக் கொதிக்கிற தாலுடன் சேர்க்கவும். தால் நன்றாகக் கொதித்தபின் அடுப்பை அணைக்கவும். தேவையான அளவு எலுமிச்சைச்சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும். குஜராத்தி தால் தயார். இதை ரொட்டி, சாதம் இரண்டுக்கும் பயன்படுத்தலாம்.

*துவரை ஆசியாவில்தான் முதன்முதலில் பயிரிடப்பட்டது.

வகரிலோ பாத்

தேவையானவை:
* ஆறிய சாதம் - ஒன்றரை கப்
* வெங்காயம் - ஒன்று
* சிறிய குடமிளகாய் - ஒன்று
* கேரட் - ஒன்று
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் – ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* கரம் மசாலாத்தூள், சர்க்கரை - தேவையான அளவு
* எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)
* நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இது வேற கிச்சடி!

கேரட், குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய்  சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும். பின்னர் அடுப்பை `சிம்’மில் வைத்து, ஆறிய சாதம், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். கரம் மசாலாவின் வாசனை குறைந்தபின் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் எலுமிச்சைச் சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். வகரிலோ பாத் ரெடி.இந்த சாதத்தை தயிர் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

குறிப்பு:
* மீந்துபோன சாதத்தைப் பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்.

*சாதத்தைக் குறிக்க `அன்னம்’ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. அன்னமிட்ட கை!

கோதுமை ரவை லெப்ஸி

தேவையானவை:
* கோதுமை ரவை - ஒரு கப்
* பால் - ஒரு கப்
* தண்ணீர் - இரண்டரை கப் + இரண்டு கப்
* பொடித்த வெல்லம் - 2 கப்
* நெய் - 2 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
* முந்திரிப்பருப்பு - 10
* பாதாம்பருப்பு - 10
* உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன் 

செய்முறை:

இது வேற கிச்சடி!

கோதுமை ரவையை இரண்டு மூன்று முறை தண்ணீர்விட்டுக் களையவும். பின்னர்  தண்ணீரை வடித்து தயாராக வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை ரவை, இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்க்கவும். குக்கரில் இந்தக் கலவையை நான்கு விசில் வரும்வரை வேகவைக்கவும். ஆவி வெளியேறும்வரை காத்திருக்கவும். பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

இதற்கிடையில் பொடித்த வெல்லத்தை ஒரு நான்-ஸ்டிக் பேனில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாகத் தண்ணீரில் கரைந்தபின் அடுப்பை  அணைக்கவும். கம்பிப்பாகு வரும்வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பின்னர் குக்கரில் வேகவைத்த கோதுமை ரவையை வெல்லத் தண்ணீரில் சேர்த்து நன்றாகக் கிளறவும். நெய்யில் பாதாம், முந்திரி, உலர்திராட்சையை வறுக்கவும். இவற்றை வெல்லக் கரைசலில் சேர்த்த கோதுமை ரவையுடன் சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூளைத் தூவவும். சுவையான கோதுமை ரவை லெப்ஸி ரெடி.

இதைச் சூடாகவும் சாப்பிடலாம்; ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் சாப்பிடலாம். 

*எடை குறைக்க கோதுமை ரவை உட்கொள்வது இப்போது அதிகரித்து வருகிறது. ஓட்ஸைவிட இதில் பன்மடங்கு பலன் கிடைக்கும்.

வாழைப்பழம் வெந்தயக்கீரை பகோடா   

தேவையானவை:
* கடலை மாவு - ஒன்றரை கப்
* பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை – ஒன்றரை கப்
* பழுத்த ரோபஸ்டா வாழைப்பழம் - 2
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை 
* இஞ்சி – ஒரு இன்ச் துண்டு
* பச்சை மிளகாய் - ஒன்று
* சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது தேவையான அளவு
* முழு தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
* கறுப்பு மிளகு - ஐந்து அல்லது ஆறு
* மிளகாய்த்தூள் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்)
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இது வேற கிச்சடி!

கடலை மாவை ஒரு பெரிய மிக்ஸிங் பவுலில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு, மிக்ஸியில் மையாக அரைக்கவும். இந்த விழுதைக் கடலை மாவுக் கலவையில் சேர்க்கவும். பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும். கறுப்பு மிளகு, முழு தனியா ஆகிய இரண்டையும்  சேர்த்து, கொஞ்சம் தண்ணீர்விட்டு மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும்.இதையும் பவுலில் சேர்க்கவும். பிறகு வாழைப்பழங்களையும் நன்றாகப் பிசைந்து மிக்ஸிங் பவுலில் போடவும். கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் சூடாக்கி இந்த மிக்ஸிங் பவுலில் சேர்க்கவும்.

இப்போது  மிக்ஸிங் பவுலில் இருக்கிற எல்லாப் பொருள்களையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். சுவைத்துப் பார்த்து, தேவையிருந்தால் மிளகாய்த்தூள் கொஞ்சம்  சேர்க்கவும். பிறகு தேவையான அளவுக்குத் தண்ணீர்விட்டு, கெட்டியான பக்கோடா மாவு போலப் பிசைந்து கொள்ளவும். மாவை 10 - 15 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, மாவை பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். ஒரே நேரத்தில் நிறைய பக்கோடாக்களைப் பொரித்தெடுக்காமல் நான்கைந்தாகப் போட்டுப் பொரித்தால், எல்லா பக்கோடாவும் ஒரே சீரான சுவையில் இருக்கும்.

*கடலை மாவிலுள்ள நார்ச்சத்தும் புரதமும் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்யும்.

பச்சைப் பயறு கிச்சடி

தேவையானவை:
* பச்சைப் பயறு - அரை கப்
* அரிசி - முக்கால் கப்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* கறுப்பு மிளகு - 8 முதல் 10
* தண்ணீர் - 4 கப்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
* பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
* நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இது வேற கிச்சடி!

பச்சைப் பயற்றை நன்கு கழுவி எடுக்கவும். இதைச் சுத்தமான தண்ணீரில் சுமார் 10 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரை வடிக்கவும். அரிசியைத் தண்ணீர் ஊற்றி நன்கு களைந்து, தண்ணீரை வடிக்கவும். பிறகு பச்சைப் பயறு, அரிசி, உப்பு, மஞ்சள்தூள், மிளகு இவற்றுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். பிறகு இவற்றை வெந்து தயாராக இருக்கும் பயறு மற்றும் அரிசிக் கலவையில் சேர்த்துக் கிளறவும். கிச்சடி தயார். பச்சடி அல்லது தயிருடன் கலந்து இந்தக் கிச்சடியைச் சாப்பிடலாம்.

*உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தைப் பெறவும், ரத்த சோகையைத் தடுக்கவும் பச்சைப் பயறு உதவுகிறது.