ரெசிப்பிஸ்
Published:Updated:

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

றிமுகமே தேவையில்லாதவர்... ‘ஒரு கைப்பிடி அளவு’ என்று சொல்லி, முதன்முறை சமைப்பவர்களுக்குக்கூட புரிந்துவிடக்கூடிய எளிய மொழியில் சமையல் படைக்கும் வாத்தியார். இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜியில் பிஹெச்.டி பெற்ற முதல் செஃப் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். தனியார் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி ஹிட்டடித்து வருபவர் டாக்டர் செஃப் தாமு. 2018-ம் ஆண்டு அவள் விகடன் கிச்சன் யம்மி விருது விழாவில் ‘பெஸ்ட் செஃப்’ மகுடம் இவருக்கே சூட்டப்பட்டது.

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

தான் பயணித்த பாதைகள், அங்கு நடந்த சுவையான சம்பவங்கள், அங்கே கற்ற புது ரெசிப்பிகள் என்று உண(ர்)வுபூர்வமாகப் பகிர்கிறார் செஃப் தாமு. இது சபரிமலை, பொள்ளாச்சி, முட்டம், துபாய், லண்டன் என உள்ளூர் முதல் உலகம் வரை தொடரும் சுவைப் பயணம்!

- செஃப் தாமு

ஆனந்த அனுபவம்


93-ம் வருஷம் ஐயப்பனுக்கு முதன்முறையா மாலை போட்டேன். ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி 1-ம் தேதி மாலை போட்டு மார்ச் 18-ம் தேதி மலைக்குப் போவேன். செப்டம்பர் மாசமும் போவேன்.

48 நாள்கள் மாலை போடுறதே ஒரு சுகானுபவம். 18 படியேறி ஐயப்பனை தரிசிக்கிற அந்த நிமிஷம் இருக்கே... அப்பப்பா, வார்த்தையில விளக்க முடியாத மெய்சிலிர்க்கிற தருணம் அது!

அப்படியே கோயில்ல கொடுக்குற கைக்குத்தல் அரிசிக் கஞ்சியை சாப்பிட்டுட்டு இன்னபிற அபிஷேகங்களைப் பார்த்துட்டு கீழ இறங்கினா அகோர பசியெடுக்கும். வயிறு காலியாகி வரும் பக்தர்களுக்கு சுடச்சுட பரோட்டாவும் கடலைக்கறியும் தருவாங்க. தக்காளி சேர்க்காத அந்த கடலைக்கறியை, பரோட்டாவோட சேர்த்து பிசைஞ்சு சாப்பிடுறப்ப அருமையா இருக்கும். இ்தை அவங்க எப்படி செய்றாங்கனு நான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்கும் அதையே சொல்லி தர்றேன். அந்த பரோட்டாவைச் சாப்பிட்டு, கோட்டயம் வந்து அங்கிருந்து சென்னை வந்தால், ஹப்பா சொல்ல முடியாத ஆனந்தத்தை அனுபவித்துவிட்டுவந்த அனுபவம் கிடைக்கும்.

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

பரோட்டா

தேவையானவை:
* மைதா மாவு - 2 கப்
* தயிர் - 4 டீஸ்பூன்
* எண்ணெய் - அரை குழிக்கரண்டி
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
* வாழைப்பழம் - ஒன்று
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

எண்ணெய் நீங்கலாக மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் மிருதுவாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அந்த மாவை எடுத்து உருண்டை பிடித்து பரோட்டாவாகத் திரட்டி கையால் நன்கு மடித்து அடித்து உருட்டி ஊற வைக்கவும். பதினைந்து நிமிடங்கள் ஊறிய மாவை எடுத்து பரோட்டாவாகத் திரட்டவும்.  அடுப்பில் தோசை தவாவை வைத்து எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் புரட்டிப்போட்டு வேகவைத்து எடுத்தால், பஞ்சு பஞ்சான பரோட்டா ரெடி.

கடலைக்கறி

தேவையானவை:

* கறுப்பு கொண்டைக்கடலை - 2 கப்
* நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கைப்பிடி
* மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

செய்முறை:

கடலையை ஒரு நாள் இரவு ஊறவைத்து தண்ணீர் வடித்து புதுத்தண்ணீர் ஊற்றி குக்கரில் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த நீரை தனியாக ஒரு கப்பில் ஊற்றிவைத்துக் கொள்ளவும். அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் எண்ணெய்விட்டு அதில் சீரகம், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், கடலை வேகவைத்த நீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கடலையில் பாதியை கைகளால் மசித்து இத்துடன் சேர்க்கவும். மீதி கடலையை அப்படியே சேர்த்து வேக விடவும். மசித்த கடலை இந்த கிரேவியோடு சேர்த்து வேகும்போது கிரேவி சிறிது கெட்டியாக இருக்கும்.

ஹெல்த்தி... டேஸ்ட்டி!

லண்டன் போயிருந்தேன்... அப்ப அங்க ‘சைனீஸ் கார்டன்’னு ஒரு தெரு. அந்தத் தெருவைச் சுற்றி பழைய காலத்து சர்ச், அரண்மனை எல்லாம் அழகா இருக்கும். அதை எல்லாம் ரசிச்சிட்டு ‘சைனீஸ் கார்டன்’ என்ற அந்தத் தெருவுக்குள்ள போனா, முழுக்க சைனீஸ் ரெஸ்டாரன்ட்தான்.

அங்க சாப்பிடற உணவு எல்லாம் வித்தியாசமாவும், செம ருசியாவும் இருந்துச்சு. ‘சுவையூட்டி’ எதுவும்  சேர்க்காத, ரொம்ப ஹெல்த்தியான உணவுகள் அங்கே கிடைக்கும். நான் முந்திரி சிக்கன் வித் லைட் சோயா சாஸ் சாப்பிட்டேன். அட, அடடா... செம்ம டேஸ்ட்! இந்த டேஸ்ட்டான டிஷ்ஷோட ரெசிப்பியை உங்களுக்குச் சொல்றேன்...

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

முந்திரி சிக்கன் வித் லைட் சோயா சாஸ்

தேவையானவை:
* சிக்கன் - அரை கிலோ
* முந்திரி - ஒரு கைப்பிடி அளவு
* கேரட் - 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
* முளைகட்டிய பயறு - ஒரு கைப்பிடி அளவு
* பீன்ஸ் - 5 (நீளவாக்கில் நறுக்கவும்)
* பட்டாணி - 4
* லைட் சோயா சாஸ் -  4 டீஸ்பூன்
* இடித்த மிளகு - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - அரை டீஸ்பூன்
* எலுமிச்சைப்பழம் - பாதி அளவு
* சோள மாவு - 4 டீஸ்பூன்
* மைதா மாவு - ஒரு கைப்பிடி அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
* காய்ந்த மிளகாய் - 8
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

மைதா மாவு, உப்பு கலந்து அதில் சிக்கனைப் புரட்டிவைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி அதில் சிக்கனைப் போட்டு வதக்கவும். மைதா மாவு காரணமாகப் பாத்திரத்தில் சேர்த்து ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும். கவலைப்படாமல் நன்கு கிளறவும். இதில் முந்திரிப் பருப்பைப் போட்டு வதக்கவும். சிக்கன் வெந்ததும் கேரட், காய்ந்த மிளகாய், பீன்ஸ், முளைகட்டிய பயறு, பட்டாணி சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து லைட் சோயா சாஸ், உப்பு, மிளகு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, சோள மாவைச் சேர்த்துக் கலக்கி இறக்கி, எலுமிச்சைச்சாறு பிழிந்துவிட்டுப் பரிமாறவும். மொத்தமே 10 நிமிடங்களுக்குள் செய்து முடித்துவிட முடியும். இதை சாதம், சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

அனுபவம் புதுமை

நாகர்கோவிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் ஒரு படப்பிடிப்பு.

ஒருநாள் அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய் மீன் ஃப்ரை, கிரேவி, கருவாடு, மாசிப் பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க.

இது எனக்கு புது அனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃப்ரெஷ் மீன் சாப்பிடும்போது அவ்வளவு டேஸ்ட்டா இருந்தது.

கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே அலாதியானது. ‘கனவாய் மீன் வறுவல்’ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை ‘கடம்பா மீனு’ன்னும் சொல்லுவாங்க. இந்த ரெசிப்பியைத்தான் இதோ உங்களுக்குச் சொல்றேன்.

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

கனவாய் மீன் வறுவல்

தேவையானவை:
* கனவாய் மீன் - கால் கிலோ
* மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை மாவு - 2 கைப்பிடி அளவு
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு
* பச்சை மிளகாய் - 6
* எண்ணெய் - ஒரு குழிகரண்டி அளவு
* எலுமிச்சைப்பழம் - 1 (சாறு எடுக்கவும்)
* மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

மீனைச் சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.

இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய்விட்டு 2 நிமிடங்கள் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடங்களுக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டுத் தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும்.

 பரிமாறும் முன்பு  மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

திகிலில் ஓர் உணவு!

ஒரு கான்ஃபரன்ஸுக்காக துபாய் போயிருந்தேன். வாழ்க்கையில முதன்முறையா கண்ணுக்கெட்டின தூரம் வரைக்குமான பாலைவனம், அங்கங்க ஒட்டகத்தைப் பார்த்த அனுபவம் ஆசம் ஆசம். பாலைவனத்துலேயே ஓர் இடத்துல ஹால்ட். துபாய் பாரம்பர்ய நடனத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே அங்கேயே அடுப்பு வெச்சு சமைச்சுக்கிட்டு இருந்தாங்க. அங்க வீசின காற்று, மணல் எதையும் தங்களை பாதிக்காதபடி அருமையான ஏற்பாடுகளோட அவங்க சமையல் செய்துட்டு இருந்ததையே ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருந்தேன். துபாயைப் பொறுத்தவரை அரபு உணவுகள் - குறிப்பா தந்தூரி உணவுகள் மிக பிரபலம். 

மனநிறைவோடு டின்னரை முடிச்சுட்டு  ஹோட்டலுக்குத் திரும்பிப் போற வழியில தடம் மாறின எங்க ஜீப், பாலைவனத்துல மாட்டிகிருச்சு. எங்க திரும்பினாலும் பாலைவனம் மட்டும்தான் தெரியுது, பாதை சுத்தமா தெரியலை. போச்சுடா நம்ம வாழ்க்கை இன்னிக்கு இங்கதானானு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப முன்னாடி போன ஜீப் எப்படியோ எங்களைக் கண்டுபிடிச்சிட்டாங்க. இந்த திகிலுக்கு நடுவுல ஓர் ஆறுதல்... நான் அங்கே கத்துக்கிட்ட வெஜிடபிள் ஷாஷ்லிக் டிஷ்!

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

வெஜிடபிள் ஷாஷ்லிக் டிஷ்

தேவையானவை:
* பனீர் - 200 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
* தயிர் - ஒரு கப்
* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய இலை- சிறிதளவு
* சாட் மசாலா - அரை டீஸ்பூன்
* சன்னா மசாலா - அரை டீஸ்பூன்
* குங்குமப்பூ - ஒரு கிராம் (விருப்பப்பட்டால்)
* வெங்காயம், குடமிளகாய் - 150 கிராம் (க்யூப் சைஸில் நறுக்கவும்)
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

தேவையானவற்றில் உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். ஒரு பூந்தொட்டியை எடுத்து அதில் கால்வாசி மண், கால்வாசி அடுப்புக்கரியைப் போட்டு நிரப்பவும். அடுப்புக் கரியைப் பற்ற வைக்கவும்.

ஒரு குச்சியில் ஊறிய ஒரு வெங்காயம், குடமிளகாய், பனீர் என வரிசையாகச் செருகவும். இப்படி அனைத்து வெங்காயம், குடமிளகாய் பனீர் துண்டு என அனைத்தையும் படத்தில் உள்ளது போல ஒன்றன் பின் ஒன்றாகச் செருகி வைக்கவும். குச்சியின் இரண்டு முனைகளிலும் சிறிது இடைவெளி விட வேண்டும். இந்தக் குச்சியை நெருப்பு எரியும் பூந்தொட்டியின் மீது குறுக்குவாக்கில் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து குச்சியை லேசாகத் திருப்பி விடவும். வேகும்போது பனீர், வெங்காயம், குட மிளகாயின் மீது லேசாக எண்ணெயை ஃபுட் ஃபிரஷால் தடவி விடவும். இந்த டிஷ்ஷில் பனீர் இருப்பதால், ‘பனீர் டிக்கா’ என்றும் சொல்லலாம்.

கூழ் மகத்துவம்

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு டிரிப்பும், ஒவ்வொரு அனுபவத்தைத் தந்துட்டேதான் இருக்கு. பொள்ளாச்சி பக்கத்துல உள்ள மாசாணி அம்மனைக் கும்பிட்டு வரணும்கிறது ரொம்ப நாளா மனசுக்குள்ள ஓடிட்டே இருந்த விஷயம். சரியா ஏழே முக்கால் மணிக்கு கோயிலுக்குள்ள நுழைஞ்சு, கண் குளிர சாமி தரிசனம் முடிச்சு வெளியில வந்தேன். அந்தக் காலை வேளையிலேயும் கடை எல்லாம் திறந்து வெச்சிருந்தாங்க. அங்க கம்மங்கூழ் கடை வெச்சிருந்த அண்ணாதுரை, என்னைக் கைபிடிச்சு தன் கடைக்குக் கூட்டிட்டு போய், கம்மங்கூழ் கொடுத்தார். அதைக் குடிச்சுட்டு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்னு பிளான்ல இருந்தேன். ஆனா, அதுக்கு தேவையே இல்லாம போயிட்டுது!

ஒரு குட்டி மண் கலயத்துல கம்மங்கூழ், கடிச்சுக்க மோர் மிளகாய், கொத்தவரங்காய் வத்தல்... கூடவே புதினா துவையல் வெச்சுக் கொடுத்தார். ஒரு வாய் கம்மங்கூழ் குடிச்சு, ஒரு கடி மோர் மிளகாய். அப்புறம் ஒரு மடக்கு கூழ், ஒரு கடி கொத்தவரங்காய் வத்தல்.

ஒரு மடக்கு கூழ், கொஞ்சம் புதினா துவையல்னு மொத்தக் கூழும் போன இடம் தெரியல. அமிர்தம்னா என்னன்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நம்ம முன்னோர் கொடுத்த அற்புதத்துல ஒண்ணுதான் இந்த கம்மங்கூழ். நான் குடிச்சதுக்கு கடைசி வரை காசு வாங்கிக்கவே இல்லை அண்ணாதுரை. ‘உடலுக்கு இதமான உணவைக் கொடுத்த அவர் நல்லாயிருக்கணும்’னு மாசாணி அம்மன்கிட்ட வேண்டிக்கிட்டேன்.

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

கம்மங்கூழ்

தேவையானவை:
* கம்பு - 2 கப்
* மோர் - 6 கப்
* உப்பு - தேவையான அளவு
* சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
* பச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை:

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

கம்பை உடைத்து உமியை நீக்கிக் கொள்ளுங்கள். கம்பை தண்ணீரில் அலசி எடுத்து பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும்போது (தொட்டுப் பார்த்தால் கைகளில் ஒட்டக்கூடாத பதம்) அதை எடுத்து உருட்டித் தண்ணீரில் போட்டு விட வேண்டும்.  தண்ணீரில் கரையாமல் அப்படியே இருக்கும் கம்பு உருண்டை. மற்றொரு பாத்திரத்தில் மோரை ஊற்றிக் கடைந்து... உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் இருக்கும் கம்பு உருண்டையை தேவைக்கேற்ப எடுத்து, மோரில் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்கு கரைத்து சின்ன வெங்காயம், மோர் மிளகாய், கொத்தவரங்காய் வத்தலோடு பரிமாறுங்கள்.

இந்த கூழ், மனதிருப்தி, உடல் குளுமை தந்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும் உங்களை!

அட... அட... அற்புதம்!

மார்த்தாண்டத்துல ஒரு கல்யாணம். போற வழியில தக்கலைங்கற ஊர்ல தங்கினோம். வீட்டுக்கு முன்ன சலசலனு ஓடை. அதுல இறங்கி ஆசை தீர குளிச்சு முடிச்சுட்டு வந்தா... சுக்குக் காபி, ஆப்பம் வித் மட்டன் கறி, வெஜிடேரியன்களுக்கு வெஜ் தோசை, வெஜிடபிள் ஸ்டூனு கேரளா ஸ்டைல்ல கொடுத்தாங்க. செம சூப்பரா இருந்துச்சு. அப்படியே திற்பரப்பு அருவியில போய் கண்ணு சிவக்க சிவக்க குளியலைப் போட்டுட்டு, மறுபடியும் கார்ல பயணம்.

ஒரு பெரிய சர்ச்சுல கல்யாணம். மதிய விருந்து ஆரம்பமாச்சு. உப்புல ஆரம்பிச்சு சாப்பாடு, அவியல், அடை, ரசம், மோர், நேந்திரங்காய் சிப்ஸ், நேந்திரன்பழ சிப்ஸ், பொரியல்னு வளைச்சு வளைச்சு சாப்பிட்டு, ‘அவ்ளோதான் முடிஞ்சுது அப்பாடா’னு நிமிர, ‘இல்லைங்க இன்னும் இருக்கு’னு சொல்லி மறுபடியும், அடை பிரதமன், சக்கப்பிரதமன், பால் பாயசம்னு ஆரம்பிச்சு மொத்தம் 28 வெரைட்டி உணவுகள். அட அட அடடா... ஒவ்வொண்ணும் அவ்வளவு சுவை.

எனக்கு ரொம்பப் பிடிச்சது சக்கப்பிரதமன். அதை வாழையிலையில ஊத்தி, வாழைப்பழத்தைப் பிசைஞ்சு, கூடவே அப்பளத்தையும் உடைச்சுப் போட்டு பிசைஞ்சு சாப்பிடுறாங்க. நாங்களும் அதே ஸ்டைலில் சாப்பிட்டோம். தேவாமிர்தமா இருந்துச்சு. இந்த சக்கப்பிரதமனை எப்படி செய்றாங்கனு ஸ்பாட்லேயே கேட்டு மனசுல ஏத்திக்கிட்டேன்!

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

சக்கப்பிரதமன்

தேவையானவை:

* பலாச்சுளை - 10 (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)
* வெல்லம் - 200 கிராம்
* தேங்காய்ப்பால் - 4 கப்
* நெய் - 100 கிராம்
* முந்திரிப் பருப்பு - 20 கிராம்
* உலர்ந்த திராட்சை - 20 கிராம்
* ஏலக்காய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்
* சின்னச்சின்ன தேங்காய்
*சில்லுகள் - அலங்கரிக்க

செய்முறை:

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

கனமான அடிபாகமுள்ள பாத்திரத்தை அடுப்பில்வைத்துச் சூடானதும், வெல்லத்தை இட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். பாகை வடிகட்டி, ஓர் உருளியில் ஊற்றி (வெங்கலப்பாத்திரம்), கூடவே பலாச்சுளைகளைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் வைக்கவும்.

பலாச்சுளை முக்கால் பாகம் வதங்கியதும் அதில் தேங்காய்ப்பால், ஏலக்காய்ப்பொடி, நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறக்குவதற்கு முன்பு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் சில்லு சேர்த்துக் கிளறி இறக்குங்கள். தேங்காய்ப்பால் ஊற்றிய 5 நிமிடங்களில் சக்கை பிரதமனை இறக்கிவிட வேண்டும் என்பது முக்கியம்.