ரெசிப்பிஸ்
Published:Updated:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: அகிலா விமல்

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

கோடை வந்தாலே நம் காய்கறிக் கூடையில் எலுமிச்சையும் இடம் பிடிக்கும். ஜில்லுனு ஒரு சர்பத் சாப்பிட வேறென்ன வேண்டும்? சர்பத், ஜூஸ் மட்டுமா? எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தாலும் எலுமிச்சைப்பழம் செய்யக்கூடிய உணவு மற்றும் பான வகைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

வைட்டமின் சி சத்தை தன்னகத்தே நிறைத்துவைத்திருக்கும் எலுமிச்சையின் நற்பலன்களை நாளும் பொழுதும் பெறும் வகையில், ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல் அளிக்கும் உணவுகள் கோடைக் கொண்டாட்டமாக அணிவகுக்கின்றன. சூப், புடிங், புலாவ் (பயப்பட வேண்டாம்... இது நிச்சயமாக எலுமிச்சைச் சாதம் அல்ல!), லட்டு, சமோசா, கேக், பார்லி வாட்டர் என இந்தப் பட்டியல்  வித்தியாசமானது. அசைவப் பிரியர்களுக்காக சிக்கனோடும் கை கோக்கிறது நம் லெமன்.  கலையழகோடு சமைக்க விரும்புகிறவர்களுக்காக லெமன் ரோஜாவைப் படைக்கவும் சொல்லித் தருகிறது ஒரு ரெசிப்பி. ஜில் ஜில் லெமன்!

லெமன் லென்டில் சூப்

தேவையானவை:
* முழுப் பாசிப்பயறு - 2/3 கப்
* வெங்காயம் - 1 (பெரியது)
* தக்காளி - 1
* கேரட் - 1
* மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை  டீஸ்பூன்
* மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்- தலா ஒரு டீஸ்பூன்
* எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
* கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

பாசிப்பயறைக் கழுவிவைக்கவும். வெங்காயம், தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கவும். ஒரு குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பாசிப்பயறு, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, மிதமான  தீயில்  ஏழெட்டு விசில் வரும் வரையில் வேகவிடவும். விசில் அடங்கியவுடன் மூடியைத் திறந்து, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

*எலுமிச்சையின் பூர்வீகம் தெற்காசியாதான். மிகக் குறிப்பாக வடகிழக்கு இந்தியா.

மினி லெமன் புடிங்

தேவையானவை:
* வடிகட்டிய கெட்டித்தயிர் - முக்கால்  கப்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
* அகர் அகர் பொடி - 2 டேபிள்ஸ்பூன் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)
* தண்ணீர் – அரை கப்
* லெமன் ஜெஸ்ட் - 2 டீஸ்பூன்
* மினி சிலிக்கான் மோல்டு - ஒன்று

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

எலுமிச்சையின் மேல் தோலை மட்டும் துருவி எடுத்துக்கொள்ளவும். அதுதான் லெமன் ஜெஸ்ட். மேல் தோலுக்குப் பின்னால் இருக்கும் வெள்ளைப் பகுதியைத் துருவக் கூடாது. அதையும் சேர்த்துத் துருவினால் லெமன் ஜெஸ்ட் கசப்பாக இருக்கும். அகர் அகர் பொடியை அரை கப் தண்ணீரில் 10  நிமிடங்கள் ஊறவைக்கவும். வடிகட்டிவைத்திருக்கும் கெட்டித் தயிருடன் கண்டன்ஸ்டு மில்க், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்த அகர் அகர் கலவையை லேசாகச் சூடு செய்து, அது முழுதாக கரையும் வரை கலக்கவும்.

இக்கலவையைக் கெட்டித்தயிர் கலவையில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். சிலிக்கான் மோல்டின் உள்ளே சிறிது லெமன் ஜெஸ்டை தூவி, அதற்குமேல் தயாரித்துவைத்திருக்கும் இந்தக் கலவையை ஊற்றவும். பிறகு, ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம்வைத்து எடுத்து மோல்டிலிருந்து மெதுவாக எடுத்துச் சில்லென்று பரிமாறவும்.

*ஒருவகை புளிப்பு ஆரஞ்சுப்பழத்தோடு ஒருவகை சிட்ரன் கலக்கப்பட்ட வெரைட்டிதான் லெமன்.

லெமன் பொடேட்டோ ரோஸ்

தேவையானவை:
* உருளைக்கிழங்கு - அரை கிலோ
* எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
* ஆலிவ் எண்ணெய் – கால் கப்
* மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்
* இத்தாலியன் சீஸனிங் - 2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

உருளைக்கிழங்கைத் தோல் சீவி, வட்டமாக மிக மெலிதாக சீவிக்கொள்ளவும். இத்துடன் தேவையான பொருள்களைக் கலந்து 20  நிமிடங்கள் ஊறவிடவும். மைக்ரோவேவ் அவனை 160 டிகிரியில் அரை மணி நேரம் சூடேற்றவும். ஒரு நான்-ஸ்டிக் மஃபின் ட்ரேயில் (muffin tray) சிறிது ஆலிவ் எண்ணெய் தடவி, உருளைக்கிழங்கு சீவல்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அடுக்கவும். அதாவது ஒரு சீவலின் பாதியில் மற்றொரு சீவல் இருக்க வேண்டும். இப்படி முதல் 20 சீவல்களை அடுக்கவும். மீதம் சீவல்கள் இருந்தால் அதைத் தனியாக மேலே சொன்னபடி ஒன்றன் மீது ஒன்றுபடுவதுபோல் அடுக்கவும்.

இனி அடுக்கிய 20 சீவல்களை கீழிலிருந்து மேலாகக் கவனமாகச் சுருட்டவும். இறுதியாகப் பார்த்தால் ரோஜாப்பூ வடிவம் கிடைக்கும். இதேபோல மீதமிருக்கும் உருளைக்கிழங்கு சீவல்களையும் உருட்டிக்கொள்ளவும். பிறகு தயாரான உருளை ரோஜாக்களை மஃபின் ட்ரேயின் உள்ளே அடுக்கவும். மைக்ரோவேவ் அவனில் ட்ரேயை வைத்து 30 முதல் 40  நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*ஓர் எலுமிச்சை மரம் ஆண்டுதோறும் 250 - 300 கிலோ பழங்களைத் தரும்.

லெமன் மஷ்ரூம் பீஸ் சேமியா புலாவ்

தேவையானவை:
* நீளமான சேமியா - 350 கிராம்
* பெரிய வெங்காயம் - 3 (நடுத்தர அளவுள்ளது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, ஏலக்காய் - தலா 2
* எண்ணெய் – ஒரு  டேபிள்ஸ்பூன்
* காளான் - 200 கிராம்
* பச்சை பட்டாணி - முக்கால் கப்
* எலுமிச்சைச்சாறு - 4 டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் – அரை கப்
* மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
* கறி மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

வெங்காயத்தை நீளமாக, மெலிதாக நறுக்கவும். மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். காளானைக் கழுவி மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். சேமியாவை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். வறுத்த சேமியாவாக இருந்தாலும் லேசாக வறுத்துக் கொண்டால் நல்லது. பிறகு, ஒரு பாத்திரத்தில் நீரைக்கொதிக்க வைத்து உப்பு சேர்க்கவும். இதில் சேமியாவைப் போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து ஆறவைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துப் புரட்டவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, காளான், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு, கறி மசாலாத்தூள், தண்ணீர் சேர்த்து, மூடிப்போட்டு 3  நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். வேக வைத்திருக்கும்  சேமியாவை இதனோடு சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

*எலுமிச்சை மரத்தில் ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் நான்கு முறை காய்ப்பு இருக்கும்.

லெமன் ரோஸ்ட் சிக்கன்

தேவையானவை:

* தோலுடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 8
* எலுமிச்சை - 3 (பெரியது)
* மிளகு - ஒரு டீஸ்பூன்
* இத்தாலியன் சீஸனிங் - ஒரு  டேபிள்ஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 4
* பூண்டு - 4 பற்கள்
* எண்ணெய் - கால் கப்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

சிக்கனை நான்கு தொடைக்கறி, நான்கு லெக் பீஸ் என்கிற எண்ணிக்கையில் சுமார் ஒரு கிலோ அளவுக்கு வாங்கிக்கொள்ளுங்கள்.

சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்யவும். இரண்டு எலுமிச்சையிலிருந்து அதன் மேல் தோலை மட்டும் கவனமாகத்  துருவி எடுத்துக் கொள்ளவும். இதற்கு லெமன் ஜெஸ்ட் (LEMON  ZEST) என்று பெயர். இதைத்தவிர அந்த இரண்டு பழங்களிலிருந்தும் சாறு எடுத்துக் கொள்ளவும்.

மூன்றாவது எலுமிச்சையைத் துண்டுகளாக  நறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு, எண்ணெய், இத்தாலியன் சீஸனிங், எலுமிச்சைச்சாறு, லெமன் ஜெஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும். சிக்கன் துண்டுகள்மீது இந்த கலவையை பூசி அரைமணி நேரம் ஊறவிடவும். ஒரு நான்-ஸ்டிக் ஃப்ரையிங் பேனில் சிக்கன் துண்டுகளை அடுக்கி இடையிடையே நறுக்கி வைத்த எலுமிச்சை வில்லைகளை வைக்கவும். மிதமான தீயில் சிக்கன் வேகும் வரையில் இருபுறமும் புரட்டி ரோஸ்ட் செய்யவும்.

*எலுமிச்சைத்தோல் மற்றும் தோலையொட்டிய உட்பகுதிகூட `பேக்கிங்’ செய்முறையில் பயன்படுத்தப்படுகிறது.

லெமன் கர்ட் கோகனட் லட்டு

தேவையானவை:

* லெமன் கர்ட் - 5 டேபிள்ஸ்பூன்
* டெஸிக்கேடட் கோகனட்- 2 கப் (உலரவைக்கப்பட்ட தேங்காய்த்துருவலான இது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)

லெமன் கர்ட் (எக்லெஸ்) செய்ய தேவையானவை:
*  லெமன் ஜூஸ் - 1/3 கப்
* சர்க்கரை - ஒரு கப்
* டேபிள் பட்டர் (உப்பு சேர்த்தது ) - அரை கப்
* கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - இரண்டரை டேபிள்ஸ்பூன்
* தண்ணீர்- 1/3 கப்
* கண்டன்ஸ்ட் மில்க் - 100 கிராம்

லெமன் கர்ட் (எக்லெஸ்) செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

லெமன் ஜூஸ், சர்க்கரை, பட்டர், ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, பட்டர் கரையும் வரையில் கொதிக்கவிடவும். கால் கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து, லெமன் கலவையில் ஊற்றி, கெட்டியாக ஆகும் வரையில் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து கலக்கவும். இதை ஒரு ஜாடியில் எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு வாரம் வரையில் இதை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

லட்டு செய்முறை:

லெமன் கர்ட், டெஸிக்கேடட் கோகனட் இரண்டையும் ஒன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

*எலுமிச்சை இலைகளைக்கொண்டு தேநீர் தயாரிக்கலாம்.

லெமன் கர்ட் ஷார்ட்ப்ரெட்

தேவையானவை ஷார்ட்ப்ரெட் செய்ய:
* மைதா - இரண்டே கால் கப்
* வெண்ணெய் - ஒரு கப்
* உப்பு – ஒரு சிட்டிகை
* வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
* சர்க்கரை – அரை கப்
* பால் - சிறிதளவு (தேவைப்பட்டால்)
* லெமன் கர்ட் - 2/3 கப்

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

முன்பக்கத்தில் உள்ள செய்முறையின்படி லெமன் கர்ட்டை தயாரித்துக்கொள்ளவும். வெண்ணெயையும் சர்க்கரையையும் ஒன்றாகக் கலந்து நன்றாக அடிக்கவும். இப்படி அடிக்கும்போது வெண்ணெய் மிருதுவாக வேண்டும். ஆனால், உருகிவிடக் கூடாது. பின்னர் இந்த வெண்ணெய்க் கலவையில்  வெனிலா எசென்ஸ், உப்பு சேர்க்கவும்.

இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக மைதாவைச் சேர்த்து நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிது பால் தெளித்தும் பிசையலாம். பிசைந்த இந்தக் கலவையை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மைக்ரோவேவ் அவனை 180 டிகிரிக்கு சூடேற்றவும். பின்னர் ஃப்ரிட்ஜில் வைத்த மாவை வெளியில் எடுத்து, கைகளால் சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாகத் தட்டவும். பின்னர் இவற்றை  பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.

கட்டைவிரலை கொண்டு தட்டிவைத்த மாவின் நடுவில் அழுத்தமாக ஒரு குழியை பதிக்கவும். பின்னர் மாவு பொன்னிறமாக  வேகும் வரையில் மைக்ரோவேவ் அவனில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பிறகு கைகளால் அழுத்திய குழிகளில், முக்கால் டீஸ்பூன் லெமன் கர்ட் வைத்து, மேலும் சில நிமிடங்கள் லெமன் கர்ட் செட் ஆகும் வரையில் பேக் செய்து எடுக்கவும். ஆற வைத்துப் பரிமாறவும்.

*எலுமிச்சையிலுள்ள அதிக அமிலம் அதன் சுத்திகரிப்புத் தன்மைக்குக் காரணமாகிறது.

லெமன் கர்ட் சமோசா

தேவையானவை:
* மைதா - ஒன்றே முக்கால் கப் + கால் கப்
* உப்பு - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
* லெமன் கர்ட் - அரை கப்

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

முன்பக்கத்தில் உள்ள செய்முறையின்படி லெமன் கர்ட்டை தயாரித்துக்கொள்ளவும். ஒன்றே முக்கால் கப் மைதாவைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். கால் கப் மைதாவை தண்ணீர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போல ஆக்கவும். வாணலியில் எண்ணெயை மிதமான சூட்டுக்குக் காய வைக்கவும். பிசைந்துவைத்திருக்கும் மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். ஓர்  உருண்டையை மெலிதாக தேய்த்து, நடுவில் லெமன் கர்ட் 2 டீஸ்பூன் அளவுவைத்து, ஓரங்களில் மைதா பேஸ்ட்டை தடவி, மாவை இரண்டாக மடித்து மூடவும். எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து ஐசிங் சுகர் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
* வெனிலா ஐஸ்க்ரீமுடன் சேர்த்தும் இந்த சமோசாவைப்  பரிமாறலாம்.

*ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் தேவையான லெமன்களை கலிஃபோர்னியா, அரிசோனா ஆகிய இரு மாகாணங்களும் விளைவிக்கின்றன.

லெமன் செலிபிரேஷன் கேக் (எக்லெஸ்)

தேவையானவை:
* மைதா - 2 கப்
* பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்
* வெண்ணெய் – அரை கப்
* பால் - 2 கப்
* கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டின் (400 கிராம்)
* எலுமிச்சைச் சாறு- 5 டேபிள்ஸ்பூன்
* வெனிலா எசென்ஸ் - ஒரு  டீஸ்பூன்
* மஞ்சள் ஃபுட் கலர் - தேவைப்பட்டால் சில சொட்டுகள்
* விப்பிங் க்ரீம் – ஒன்றரை கப்
* எலுமிச்சைத் துண்டுகள்- அலங்கரிக்க
* எட்டு இன்ச் கேக் பேன்
*(eight inch cake pan) - 2
* பட்டர் பேப்பர் - 2

எலுமிச்சை சிரப் செய்ய:
* தண்ணீர் - அரை கப்
* சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்
* எலுமிச்சைச்சாறு - ஒரு  டேபிள்ஸ்பூன்
* மஞ்சள் ஃபுட் கலர் - சில சொட்டுகள்
* உப்பு - 2 சிட்டிகை

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

அவனை 180 டிகிரிக்குச் சூடேற்றவும். இரண்டு கேக் பேன்களிலும் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பரை வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், வெண்ணெயையும் சர்க்கரையையும் ஒன்றாகக் கலந்து, சர்க்கரை கரையும் வரையில் நன்கு அடிக்கவும் . பின்னர் அதில் பால், கண்டன்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில், மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து இரு முறை சலிக்கவும். சலித்த இந்தக் கலவையை பால் கலவையோடு சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இந்தக் கலவையைத் தயாராக வைத்திருக்கும் இரண்டு கேக் பேன்களிலும் ஊற்றவும். பின்னர் இவற்றை 30, 40  நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் பேக் செய்து எடுக்கவும். பின்னர் இவற்றை கூலிங் ராக்கில் (COOLING RACK) வைத்து ஆறவிடவும்.

லெமன் சிரப்புக்குத் தேவையான பொருள்களை ஒன்றாகக் கலந்து பாகு பதத்துக்குக் காய்ச்சவும். இதை ஆறவைத்து, செய்து வைத்திருக்கும் கேக்குகள் மீது பரவலாக தெளித்து விடவும்.கடைசியில் கொஞ்சம் போல லெமன் சிரப்பை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விப்பிங் க்ரீமை 5 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைத்து, ஹாண்டு பீட்டர் கொண்டு, நன்கு நுரைக்க அடிக்கவும். தட்டில் ஒரு கேக்கினை வைத்து, சிறிது க்ரீமைத் தடவவும். இதன் மேல் இன்னொரு கேக்கினை வைத்து, எல்லா பக்கங்களிலும் க்ரீமைத் தடவி சமப்படுத்தவும். மீதமுள்ள லெமன் சிரப்பை அதன்மேல் ஊற்றி, எலுமிச்சை வில்லைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

*மேயர், யுரேகா, லிஸ்பன் லெமன்... இவை புகழ்பெற்ற எலுமிச்சை ரகங்கள்.

லெமன் செராடூரா

தேவையானவை:
* விப்பிங் க்ரீம் - முக்கால் கப்
* கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
* எலுமிச்சைச்சாறு- 2 டேபிள்ஸ்பூன்
* டைஜெஸ்டிவ் பிஸ்கட் - 15
* ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) - சில துளிகள்
* செர்ரி பழங்கள்- அலங்கரிக்க

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

விப்பிங் க்ரீமை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 5 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். பிஸ்கட்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். பிறகு விப்பிங் க்ரீமை வெளியில் எடுத்து, ஹேண்டு பீட்டர் கொண்டு நன்றாக நுரைத்துப் பொங்கும் வரை அடிக்கவும்.

இதனுடன் எலுமிச்சைச்சாறு, ஃபுட் கலர், கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி மெதுவாகக் கலந்து வைக்கவும். ஒரு கண்ணாடி டம்ளரில் பொடித்த பிஸ்கட், க்ரீம் கலவை  என மாறி, மாறி லேயர்களாக வைக்கவும். செர்ரி பழங்கள் கொண்டு அலங்கரிக்கவும். ஃப்ரிட்ஜில் நன்கு குளிரவைத்துப் பரிமாறவும்.

*எடை குறைக்க உதவும் பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

லெமன் பார்லி வாட்டர்

தேவையானவை:

* எலுமிச்சைச்சாறு - கால் கப்
* சர்க்கரை - அரை  கப்
*  பார்லி - முக்கால் கப்
* தன்ணீர் - 7 கப்
* இஞ்சி - ஒரு துண்டு (துருவிக்கொள்ளவும்)
* லெமன் ஜெஸ்ட் – ஒரு எலுமிச்சையின் மஞ்சள் மேல் தோலை மட்டும் துருவிக்கொள்ளவும்.

செய்முறை:

லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

பார்லியை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். ஒரு பெரிய அடிகனமான  பாத்திரத்தில் பார்லி மற்ற தேவையான பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் மூடி ஒருமணிநேரம் காய்ச்சவும். பின்னர் காய்ச்சிய கலவையை  வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.தேவையானபோது பயன்படுத்தவும்.

குறிப்பு:
* வடிகட்டும்போது தேங்கும் வேகவைக்கப் பட்ட பார்லியை வீணாக்க வேண்டாம். அதனுடன் பால், சர்க்கரை, உலர் பழங்கள் சேர்த்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

*லெமன் ஜூஸ் நமது உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை அளிக்கும்.