ரெசிப்பிஸ்
Published:Updated:

கலர்ஃபுல் கலக்கல்!

கலர்ஃபுல் கலக்கல்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலர்ஃபுல் கலக்கல்!

மெனுராணி செல்லம்

கலர்ஃபுல் கலக்கல்!

சுவை, மணம், தரம் ஆகியவற்றைப் போலவே உணவுகளின் நிறமும் முக்கியமாகக் கருதப்படுகிறது. சமைக்கப் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு இயற்கையிலேயே பிரத்யேக நிறம் உண்டு.சமைக்கிற முறையில் சத்துகளை விட்டுக்கொடுப்பது போலவே அவற்றின் நிறங்களையும் நாம் தவறவிடுகிறோம். ஆரோக்கியத்தின் குறியீடான இயற்கையான நிறத்தை இழந்துவிட்டு செயற்கையாக  ஃபுட் கலர்களைச் சேர்த்து நோய்களையும் விரும்பி வரவழைத்துக்கொள்கிறோம்.

கலர்ஃபுல் கலக்கல்!

பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களில் குளோரோபில் சத்து இருக்கிறது. பிங்க், ப்ளூ, பர்ப்பிள் மற்றும் கறுப்பு நிறக் காய்கறிகள், பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த ஆந்தோசயனின் இருக்கிறது.மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறக் காய்களிலும் கனிகளிலும் புற்றுநோயைத் தடுக்கும் கரோட்டீனாய்டு  இருக்கிறது.

இயற்கையின் படைப்பின் அற்புதம் இது. கலர்ஃபுல் காய்கறிகள் மற்றும் பழங்களைக்கொண்டு அறுசுவையும் ஆரோக்கியமும் சேர்ந்த வானவில் விருந்து படைத்திருக்கிறார் மெனுராணி செல்லம்.

 படங்கள்: ப.சரவணகுமார்

மெக்ஸிகன் சூப்

தேவையானவை:

* துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒரு கப்
* பொடியாக நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
* நறுக்கிய சிவப்பு, மஞ்சள், குடமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா ஒரு கப்
* தண்ணீர் - 4 கப்
* வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* துருவிய சீஸ் - அரை கப்
* பால் - அரை கப்
* பேசில் இலைகள் - ஒரு கைப்பிடி அளவு அல்லது ஒரிகானோ - ஒரு சிட்டிகை
* உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

ஒரு வாணலியில் வெண்ணெயைப் போட்டுச் சூடாக்கவும். பின்னர் இதனுடன் நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதில் நான்கு கப் தண்ணீர்விட்டு மிதமான தீயில் வதக்கிய காய்கறிகளை வேகவிடவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் கலவையைக் கீழே இறக்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், பால், துருவிய சீஸ், பேசில் இலைகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

*அமெரிக்கர்கள் ஒவ்வோர் ஆண்டும் 40 லட்சம் டன் உருளைக்கிழங்கு நொறுக்குத்தீனி வகைகளை உட்கொள்கிறார்கள்.

கேக் ஐஸ்க்ரீம்

தேவையானவை:
* மைதா - 100 கிராம்
* பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
* பொடித்த சர்க்கரை - 100 கிராம்
* சூடான பால் - ஒரு கப்
* வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
* ஐஸ்க்ரீம் - தேவைக்கேற்ப
* முட்டை - ஒன்று

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

மைதா மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாகச் சேர்த்துச் சலித்து எடுத்துக்கொள்ளவும். உயரமான ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதன்மேல் ஒரு வெறும் பாத்திரத்தை வைக்கவும். இப்படிச் செய்வதன் மூலம் உயரமான பாத்திரத்தில் இருக்கும் கொதிக்கும் தண்ணீரிலிருந்து வெளிவரும் ஆவியானது வெறும் பாத்திரத்தின் மேல் படும்.

இப்போது அந்த வெறும் பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும். இதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். அதன்பிறகு இதனுடன் சிறிது சிறிதாக சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். பிறகு பாத்திரத்தைக் கீழே இறக்கிவைத்து அதனுடன் சலித்த மைதா கலவையைச் சேர்க்கவும்.

பின்னர் இதனுடன் சூடான பாலை ஊற்றிக் கலந்து பட்டர் பேப்பர் வைத்த ட்ரேயில் கொட்டி,  அவனில்  180 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் `பேக்’ செய்யவும். பின்னர்  சூடாக இருக்கும்போதே கேக்கை ஒரு பட்டர் பேப்பரின் மேல் கவிழ்த்து அதன் மேல் இன்னொரு பட்டர் பேப்பரைப் போட்டு, சுருட்டி கேக்கை ஆறவைக்கவும். கேக் நன்றாக ஆறிய பிறகு, பட்டர் பேப்பரிலிருந்து கேக்கை வெளியே எடுத்து அதன்மேல்  ஐஸ்க்ரீமை சேர்க்கவும். பிறகு கேக்கை மீண்டும் பட்டர் பேப்பரில் சுருட்டி ஃப்ரீசரில் 4 மணி நேரம்  வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.

*மனிதனின் முதல் உணவுகளில் பால் முக்கியமானது. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பால் வரலாறு தொடங்கிவிட்டது.

புரொக்கோலி உசிலி

தேவையானவை:
* துருவிய புரொக்கோலி - 2 கப்
* பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
* துவரம்பருப்பு - 2 கப்
* காய்ந்த மிளகாய் - 2
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

துவரம்பருப்பைச் சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் இதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் அரைத்த பருப்பு விழுதைப் போட்டுக் கைவிடாமல் கிளறவும். பருப்பு விழுது உதிர் உதிராக வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும்.

இதற்குள் துருவிய புரொக்கோலியை கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் வேகவிட்டு, நீரை வடிக்கவும். வெந்த புரொக்கோலியை பருப்பு உசிலிக் கலவையுடன் கலந்து சில நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்துக் கிளறி, பின்னர் பரிமாறவும்.

*வைட்டமின் கே மிகுந்து காணப்படுவதால், புரொக்கோலி எலும்புகளின் நலத்துக்கு உதவுகிறது.

கேபேஜ் கோல்ஸ்லா (cabbage coleslaw)

தேவையானவை:
* மெல்லியதாக நீளமாக நறுக்கிய வயலட் கலர் கோஸ் - 2 கப்
* நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப்
* வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

கோஸ், ஆப்பிள், உப்பு,  மிளகுத்தூள், வினிகர் ஆகியவற்றை நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
* கோஸை நறுக்கிய பின் குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து, பின்பு சாலட் செய்தால், சாலட்  நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*கோஸில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. பச்சை, சிவப்பு, வயலட் கோஸ்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சைனா கிராஸ் புடிங்

தேவையானவை:
* சைனா கிராஸ் (அகர் அகர்) - ஒரு பாக்கெட்
* தண்ணீர் - 8 கப்
* சுண்டக்காய்ச்சிய  பால் - 2 கப் (விருப்பப்பட்டால் பாலைச் சிறிது குறைத்து கண்டன்ஸ்டு மில்க் *சேர்த்துக்கொள்ளலாம்)
* சர்க்கரை - ஒரு கப்
* சிவப்பு, பச்சை கேக் கலர்கள் - சிறிதளவு
* வெனிலா எசென்ஸ் - சிறிதளவு

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

ஒரு பாத்திரத்தில் சுண்டக்காய்ச்சிய பாலை எடுத்துக்கொள்ளவும். இதனுடன்  சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும்வரை அடுப்பில் வைத்துக் கிளறி இறக்கவும். சைனா கிராஸை எட்டு கப் தண்ணீரில் சுமார் 2 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த சைனா கிராஸை அதே தண்ணீருடன் அப்படியே எடுத்து  அடிகனமான பாத்திரத்தில் போட்டு வேகவைக்கவும். சைனா கிராஸ் வெந்தவுடன், அதனுடன் சுண்டக்காய்ச்சி வைத்த பால், சர்க்கரை கலவையைச் சேர்க்கவும்.

இவை எல்லாம் சேர்ந்து  கெட்டியாகும் வரை கிளறி, வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். பின்னர் இந்தக் கலவையை ஒரு பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். கலவை பாதி செட் ஆகும்போது அதன் நடுவில் ஒரு இன்ச் வட்டத்துக்கு சிவப்பு கலர் ஊற்றவும். கலவை நன்றாக செட் ஆனபின் ஃப்ரிட்ஜில் இருந்து பவுலை வெளியே எடுத்து ஒரு தட்டில் கவிழ்த்து அதன் மேலே பச்சைக் கேக் கலர் ஊற்றவும். ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.

*வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெற சைனா கிராஸ் துணைபுரியும்.

ஜுஜிப்ஸ்

தேவையானவை:
* சர்க்கரை - 500 கிராம்
* ஜெலட்டின் - 50 கிராம்
* தண்ணீர் - 500 மி.லி
* கலர் மற்றும் எசென்ஸ் - அவரவர் விருப்பப்படி

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைத் தண்ணீருடன் கலந்து சிறிது நேரம் வைக்கவும். மற்றொரு  கனமான பாத்திரத்தில் ஜெலட்டினுடன் 500 மி.லி தண்ணீர்விட்டு ஊறவைக்கவும்.

சர்க்கரை நன்கு கரைந்ததும் கொதிக்கவிடவும். பிசுக்குப் பதம் வந்தவுடன் சர்க்கரைப் பாகில் சிறிதளவு பால்விட்டு அழுக்கு நீக்கவும்.அடுத்து கனமான பாத்திரத்தில் இருக்கும் ஊறவைக்கப்பட்ட ஜெலட்டின் நன்கு கரைந்தவுடன் அதை  நுரைக்க அடிக்கவும். பின்னர் இந்த ஜெலட்டினை சர்க்கரைப் பாகில் கொட்டவும். பிறகு இந்தக் கலவையை  அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கரண்டியில் எடுத்துப் பார்க்கும்போது விழுதாகக் கீழே விழும் பதம் வந்தவுடன் கீழே இறக்கிவைத்து, ஆறவிடவும் பின்னர் இதனுடன் கலர் மற்றும் எசென்ஸ் சேர்க்கவும்.

இந்தக் கலவையை  ட்ரே அல்லது மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் சுமார் நான்கு மணி நேரம் செட் செய்யவும். பிறகு துண்டு துண்டாக வெட்டி பொடிக்காத சர்க்கரையில் புரட்டிப் பரிமாறவும்.

*இரண்டாம் உலகப் போரின்போது `ரேஷன் முறை’ அமலில் இருந்ததால், நபர் ஒருவருக்கு ஒரு வாரத்துக்கு 120 கிராம் சர்க்கரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

காஷ்மீரி புலாவ் (சுமார் 8 பேருக்கு சாதம் ரெடி செய்ய)

தேவையானவை:
* பாஸ்மதி அரிசி - கால் கிலோ
* வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* ஷாஜீரா - 2 டீஸ்பூன் (ஷாஜீரா என்று சொல்லப்படும் சீரகம், சோம்பு, சாதாரண சீரகத்தைவிட அளவில் *சிறியதாக இருக்கும்)
* ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 4
* குடமிளகாய் - 2
* வெங்காயம் - 2
* பட்டாணி - கால் கிலோ
* கேரட் - 2
* பீன்ஸ் - 100 கிராம் 
* தக்காளி - 2 (நறுக்கிக்கொள்ளவும்)
* இஞ்சி (மெலிதாக நறுக்கியது) - ஒரு துண்டு
* பச்சை மிளகாய் (நீளமாக நறுக்கியது) - 10
* கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
* தனியா (மல்லி) தூள் - 4 டீஸ்பூன்
* பனீர், முந்திரி, திராட்சை, வால்நட் - தேவைக்கேற்ப
* ஆப்பிள், ஆரஞ்சு, விதையில்லாத பச்சை திராட்சை, அன்னாசிப்பழத் துண்டுகள், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிதளவு
* எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

அரிசியைக் கழுவி தண்ணீரில் 15 நிமிடங் களுக்கு ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டால் ஈர அரிசி உடைந்து விடும்.

கனமான வாணலியில் வெண்ணெயை உருக்கி சூடானதும் ஷாஜீரா, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வெடித்தவுடன் ஊறவைத்த அரிசி சேர்த்து, லேசாக வறுத்து இரு மடங்கு தண்ணீர் ஊற்றி (அரிசி எந்த பாத்திரத்தில் அளந்தோமோ, அதே பாத்திரத்தில் தண்ணீரும் அளக்க வேண்டும்) உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு தட்டு போட்டு மூடி வைத்தால் சுமார் 20 நிமிடத்தில் ரெடியாகி விடும்.

குடமிளகாயை மெல்லிதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியைத் தோலுரித்து வேகவைத்துக் கொள்ளவும். காரட், பீன்ஸ் இவற்றை மெல்லிதாக நீளநீளமாக நறுக்கி, குக்கரில் வேக விடவும்.

வாணலியில் கால் கப் எண்ணெய்விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து உடனே நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். சிறிது வதங்கிய உடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி, பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்க்கவும். மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நறுக்கிவைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கி, கீழே இறக்கி வைக்கவும். மஞ்சள் பொடி, காரப் பொடி சேர்க்க கூடாது. புளியும் தேவையில்லை. தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கினால் போதும்.

இப்போது தயாராகவைத்துள்ள புலாவ் சாதத்திலிருந்து சிறிதளவை ஒரு தட்டில் பரத்தவும். அதன் மேல் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளைப் பரப்பவும். இப்படியே மாறி மாறி சாதம் காய்கறியை ஒன்றன் மேல் ஒன்றாகப் பரப்பி கடைசியில் மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக நன்றாகக் கலக்க வேண்டும்.

பனீர், முந்திரி, திராட்சை, வால்நட் ஆகியவற்றை வனஸ்பதி அல்லது நெய்யில், தனித்தனியாக வறுத்துத் தட்டில் ரெடியாக வைத்துக்கொள்ளவும்.

ஆப்பிள், ஆரஞ்சு, விதையில்லாத பச்சை திராட்சை, அன்னாசித் துண்டுகளைத் துண்டு துண்டாக வெட்டி ரெடியாக வைத்துக் கொள்ளவும். இவற்றிற்கு அளவு தேவையில்லை. நம் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம். கடைசியில் தயாராகவைத்துள்ள காஷ்மீரி புலாவில், முந்திரி, திராட்சை முதலியன கலந்து, பழங்கள் கொண்டு அலங்கரித்து கொத்தமல்லி தூவி, பரிமாறவும்.

*சர்வதேச சந்தையில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. 70% இந்தியா, 30% பாகிஸ்தான்!

பேரீச்சை ஆரஞ்சு சாலட்

தேவையானவை:
* துருவிய கேரட் - 2 கப்
* பொடியாக நறுக்கிய ஆரஞ்சு - 2 கப்
* பொடியாக நறுக்கிய பேரீச்சை - 2 கப்
* கெட்டித் தயிர் - 2 கப்
* மிளகுத்தூள் - சிறிதளவு
* ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்
* மிகவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை அல்லது பார்ஸ்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* லெட்டூஸ் இலைகள் - தேவையான அளவு

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

கெட்டித் தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். தண்ணீர் வடிந்தவுடன், ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், பேரீச்சை சேர்த்து பீட்டரால் (beater) நுரைக்க  அடித்தால் க்ரீம் சீஸ் தயார்.

துருவிய கேரட்டுடன்  தயாராகவைத்துள்ள இந்த க்ரீம் சீஸைக் கலக்கவும். பின்னர் இதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக இதன் மேலே  ஆரஞ்சு துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லித்தழை அல்லது பார்ஸ்லி இலை தூவி, லெட்டூஸ் இலைகளைப் பிய்த்துபோட்டு அலங்கரித்து  ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும் (விருப்பப்பட்டால் லெட்டூஸ் இலைகளைப் பரப்பி அதில் க்ரீம் சீஸ் கலவையைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பரிமாறலாம்).

*கேரட்டில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசி அடங்கும். எடை குறைக்கவும் உதவும்.

வொயிட் பனீர் கிரேவி

தேவையானவை:
* பனீர் - ஒரு கப்
* ஏலக்காய் - 2
* தயிர் - அரை கப்
* மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
* கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
* பிரிஞ்சி இலை, சீரகம், எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு

விழுதாக அரைக்க:
* நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
* இஞ்சி - ஒரு சிறிய துண்டு
* பூண்டு - 10 பல்
* முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
* கசகசா - 2 டீஸ்பூன்

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கசகசா, முந்திரியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பிரிஞ்சி இலை, சீரகம்  தாளிக்கவும். இதனுடன்  வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் (அதிக நேரம் வதக்க வேண்டாம்).

பிறகு உப்பு, மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையுடன் தயிர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியில் கொதிக்கும் கலவையுடன் நறுக்கிய பனீர் மற்றும் சிறிதளவு தண்ணீர்  சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

*பனீரில் அதிக அளவு புரதச்சத்தும், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், கொழுப்புச் சத்துகளும் காணப்படுகின்றன.

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

தேவையானவை:
* ஸ்ட்ராபெர்ரி - 2 கப்
* ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - ஒரு கப்
* பால் - ஒரு கப்
* க்ரீம் - அரை கப்

செய்முறை:

கலர்ஃபுல் கலக்கல்!

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் கலந்து மிக்ஸியில் (விப்பர் பிளேடைப் பயன்படுத்தி) நுரைக்க அடிக்கவும். டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

*ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தில் சராசரியாக 200 விதைகள் இருக்கும்.