சினிமா
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 56

சோறு முக்கியம் பாஸ்! - 56
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 56

சோறு முக்கியம் பாஸ்! - 56

சோறு முக்கியம் பாஸ்! - 56

ம் மூதாதைகள் சாப்பிட்ட உணவுகளில் இன்னும் நம் வாழ்க்கையோடு ஒட்டிப் பயணிக்கும் ஒன்று, உப்புக் கண்டம். நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு உப்புக் கண்டம் பற்றி தெரிந்திருக்குமா தெரியவில்லை. கிராமங்களில் இன்னும் பல வீடுகளில் வற்றல், ஊறுகாய் பாட்டில்கள் வரிசையில் உப்புக்கண்டமும் இருக்கிறது. பண்டிகை, விருந்துக் காலங்களில் கிடா வெட்டும்போது கொஞ்சம் இறைச்சியை உப்புக் கண்டத்துக்காக எடுத்து வைத்துக்கொள்வார்கள். உப்புப்போட்டுப் பிசைந்து  உச்சிவெயிலில் காயவைத்துப்

சோறு முக்கியம் பாஸ்! - 56

பதப்படுத்தினால் கல்மாதிரி ஆகிவிடும்.

உணவகங்களில் உப்புக் கண்டம் சாப்பிடுவதை யெல்லாம் கற்பனைகூட செய்யமுடியாது. அதுவும் சென்னை மாதிரி நகரத்தில் வாய்ப்பேயில்லை. ‘சரி, தேடித்தான் பார்க்கலாமே’ என்று உப்புக்கண்டத்தை இலக்குவைத்து சுற்றியலைந்ததில் சிக்கியது, `ஷிவன்யாஸ் கும்பகோணம் கிச்சன் உணவகம்.’ சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில்  5-வது தெருவில் சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது இந்த உணவகம். வெளிப்புறத் தோற்றமே உள்ளே இழுக்கிறது. பெரிய வீடு... அழகிய வேலைப் பாடுகளோடு முகப்பில் ஒரு கயிற்றுக்கட்டில் போட்டு வெற்றிலை, பாக்கு வைத்திருக் கிறார்கள். சுற்றிலும் சோபா செட். டைனிங் உள்ளறையில் இருக்கிறது. 20 பேர் அமர்ந்து சாப்பிடலாம். பல்லாங்குழி, உப்பு, புளிவைக்கிற ஜாடி என பழமையான பொருட்களை யெல்லாம் சேகரித்து அழகாக ஒரு பக்கம் காட்சிப்படுத்தியி ருக்கிறார்கள். டேபிள், சேரிலேயே கலைநயம் ததும்புகிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 56

உரிமையாளர் சங்கீதா பிறந்து வளர்ந்ததெல்லாம் கும்பகோணத்தில். சமையல்மீது தீராத ஆர்வம். கும்பகோணத்து சமையலையே பிரதானமாக்கி உணவகத்தை ஆரம்பித்து விட்டார்.

கசகசவென்று ஆட்கள் இல்லை. சமையல் முதல் பரிமாறுவது வரை எல்லாமே சங்கீதாதான். உதவிக்கு நான்கைந்து பேர் இருக்கிறார்கள். ஆர்டர் செய்து 20 நிமிடம் கழித்துதான் சாப்பாடு மேசைக்கு வரும். குவியலாகச் செய்துவைத்து அள்ளிவந்து வைக்கிற வேலையெல்லாம் இல்லை. சுடச்சுடச் செய்து தருகிறார்கள். அதுவரைக்கும் அமர்ந்து உணவகத்தின் உள்ளழகை ரசிக்கலாம்.

மதியம் நான்கு விதமான சாப்பாடுகள் வைத்திருக்கி றார்கள். மீன் குழம்பு சோறு, கோழிக்குழம்பு சோறு, கறிக்குழம்பு சோறு, கருவாட்டுக் குழம்பு சோறு. பருப்புப் பொடி-நெய், முட்டை, கூட்டு, பொரியல், ஊறுகாய், ரசம், அசோகா இனிப்பு, அப்பளம்... இவையெல்லாம் எல்லாச் சாப்பாட்டுக்கும் பொதுவானவை. மீன்குழம்புச் சோற்றில், 2 வறுத்த மீன் துண்டுகளும் மீன் குழம்பும் தருவார்கள். குழம்பிலும் மீன்துண்டுகள் உண்டு. கோழிக்குழம்புச் சோற்றில் சிக்கன் வறுவலும், சிக்கன் குழம்பும். கறிக்குழம்புச் சோற்றில் மட்டன் குழம்பு, ஈரல் வறுவல். கருவாட்டுக் குழம்பு சோற்றில் கருவாட்டு தொக்கு, கருவாட்டுக் குழம்பு.

சோறு முக்கியம் பாஸ்! - 56

மீன் குழம்பு சோறும், கருவாட்டுக் குழம்பு சோறும் பிரமாதம். வறுவலுக்கு சிவப்பு சங்கரா மீன் பயன்படுத்து கிறார்கள். தளும்ப மசாலாவில் தோய்த்து, நல்லெண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டு நன்கு வறுத்து சுடச்சுட எடுத்து வருகிறார்கள். மீன் குழம்பும் நன்றாக இருக்கிறது.

சென்னையில் இப்படியொரு நாட்டுக் கருவாட்டுக் குழம்பைச் சாப்பிட முடியாது. அசத்தலாக இருக்கிறது. மீன்மாதிரி பெரிய பெரிய கருவாட்டுத் துண்டுகளைப் போட்டுக் குழம்பு வைத்திருக்கிறார்கள். கருவாட்டு வறுவலும் நிறைவாக இருக்கிறது. கோழி குழம்பு சோறும், கருவாட்டுக் குழம்புச் சோறும் 180 ரூபாய். மீன் குழம்புச்சோறு, கறிக்குழம்பு சோறு 240 ரூபாய். 

சோறு முக்கியம் பாஸ்! - 56

கோழி கறிவேப்பிலை வறுவல் நல்ல தேர்வு. கறிவேப்பிலை மசாலாவில் ஊறிய இறைச்சியை செமி கிரேவியாக செய்து தருகிறார்கள். ‘செல்பி கோழி’ என்று ஒரு தொடுகறி இருக்கிறது. கோழியை மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, மிளகு, பட்டை, கிராம்பு மசாலாவில் தோய்த்து தாவாவில் ப்ரை செய்து தருகிறார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடு வார்கள். கோழிக்கால் வறுவலும் குழந்தைகளை ஈர்க்கும். பிரட்தூள் சேர்த்து ப்ரை செய்கிறார்கள். கேக் மாதிரி இருக்கிறது. நல்லிக்கறி பிரட்டலும் வித்தியாசமான தொடுகறி.  நிறைய மிளகு, கறிவேப்பிலையெல்லாம் சேர்த்து எலும்பும் கறியுமாக தருகிறார்கள்.

இந்த உணவகத்துக்கேயான பிரத்யேக உணவுகள் சில இருக்கின்றன. ஒன்று உப்புக் கண்டம். கும்பகோணத்திலிருந்து வருகிறதாம். நிறையக் கறிவேப்பிலை சேர்த்து நெய்யில் வறுத்துத் தருகிறார்கள். ஒரு பிளேட் 190 ரூபாய். தாராளமாகத் தரலாம். உப்புக்கண்டம் போட்டு குழம்பும் வைக்கிறார்கள். தேவையென்றால் தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

காடை சாப்பிட்டிருப்பீர்கள். இங்கு காடை முட்டை தொக்கு சாப்பிடலாம். ஆறு காடை முட்டைகள் கொண்ட தொக்கு 100 ரூபாய். சுறா புட்டை கும்பகோணம் தயாரிப்பில் சாப்பிடுவது சிறப்பு. இஞ்சியும் பூண்டும் நிறைந்து வித்தியாசமான சுவை. மீன் கட்லெட்டும் இங்கு கிடைக்கிறது. போண்டா மாதிரியிருக்கிறது.

காலையிலேயே சொல்லிவைத்தால் முயல், வான்கோழி, நண்டு, விறால் மீனெல்லாம் கூட சமைத்துத் தருவார்களாம்.

சோறு முக்கியம் பாஸ்! - 56

“அம்மாக்கிட்ட இருந்து வந்த சமையல்... வீட்டுல நடக்கிற எல்லா விசேஷங்களுக்கும் நான்தான் சமைப்பேன். சாப்பிடுறவங்க, ‘நீ ஹோட்டல் வச்சா நல்லாப் போகும்’னு சொன்னாங்க. அதை சீரியஸா எடுத்துக்கிட்டேன். பெரிசா செய்யப் பயம். படிப்படியா, ஒவ்வொரு உணவா கொண்டு வந்தேன். ஒருமுறை சாப்பிடுறவங்க அடுத்தடுத்து வர்றது நம்பிக்கையை அதிகரிக்குது.  சென்னையில, பாரம்பரியமான உணவைக் கொடுக்கிற உணவகங்கள் கம்மியா இருக்கு. அந்த இடத்தை நிரப்பணும். தரமான எண்ணெய்... அதுவும் ஒருமுறைக்கு மேல பயன்படுத்துறதில்லை. நிறைய செய்யணும்கிறதுக்காக மொத்தமா சமைக்கிறதில்லை. அப்பப்போ சூடா செஞ்சு கொடுப்போம். நிம்மதியா உக்காந்து, தயக்கமில்லாம வயிறு நிறைய சாப்பிட்டுப் போகணும்... அதுக்கான இடமா இந்த உணவகம் இருக்கும்...” என்கிறார் சங்கீதா.

பிரியாணியும் இருக்கிறது. நாட்டுக்கோழி சீரகச்சம்பா பிரியாணி நல்ல சாய்ஸ். தவிர, ஆலிவ் ஆயிலெல்லாம் சேர்த்து ‘கோழி மஜ்பூஸ்’ என்றொரு சாதவகை தருகிறார்கள். மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. பிரியாணிக்கு மாற்று. ஆனால், பலருக்கு ஆலிவ் ஆயிலின் வாசனை ஏற்காது.

இரவு சிற்றுண்டியும் உண்டு. கும்பகோணத்துப் பொடி இட்லி, கோதுமை பரோட்டா, சாப்பாடு, தொடுகறி வகைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். கும்பகோணத்து ஸ்பெஷல் ரோஸ்மில்க்கும் அருந்தலாம்.

- பரிமாறுவோம்

-வெ.நீலகண்டன்

படங்கள்: பா.காளிமுத்து

கிழங்கு வகைகளைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?

சோறு முக்கியம் பாஸ்! - 56

“கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது. கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரை இரண்டும் அதிகமாக இருக்கிறது. தினமும் சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடற்பருமன் உண்டாகும். செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். அதிகப்பட்சம் வாரத்தில் இரண்டு வேளை மட்டும் சாப்பிடலாம். ஒருவர், ஒரு வேளைக்கு 50 கிராம் கிழங்கு சாப்பிடலாம். எல்லோரும் உருளைக்கிழங்கை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால், அதில்தான் அதிக சர்க்கரை இருக்கிறது. மிகக்குறைந்த அளவே உருளைக்கிழங்கைச் சாப்பிட வேண்டும். அதற்குப் பதிலாக, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் உருளைக் கிழங்கை  முழுமையாகத் தவிர்த்து விடுவது நல்லது. உடற்பருமனாக இருப்பவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.”