Published:Updated:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

விதவிதமான விதை ரெசிப்பிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
விதவிதமான விதை ரெசிப்பிகள்

சுதா செல்வகுமார்

விதவிதமான விதை ரெசிப்பிகள்

``சிறிய பொருளில் அதிக சக்தி இருக்கும் என்பதற்கு இன்னுமோர் உதாரணம் விதைகள். பொதுவாகவே சிறிய விதைகளில் பல வகையான ஊட்டச்சத்துகள் நிரம்பி உள்ளன. நம் முன்னோர் இந்த விதைகளை மருத்துவத்துக்கு அதிகம் பயன்படுத்தினர். நாமோ பூ, காய், கனி ஆகியவற்றின் பலன்களைப் பெற்றுக்கொண்டு விதையை வீணாக்கி விடுகிறோம். நம் ஆரோக்கியத்துக்கு வித்திடும் விதைகளைச் சமையலில் பயன்படுத்திப் பலன் பல பெறுவோம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுதா செல்வகுமார். 

விதவிதமான விதை ரெசிப்பிகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெள்ளரி விதை, பூசணி விதை, தாமரை விதை, சப்ஜா விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யக்கூடிய  பல தரப்பட்ட உணவு வகைகளை அவர் இங்கே வழங்குகிறார். வெண்பொங்கல், பர்ஃபி, புட்டு, சர்பத், லாலிபாப், மிக்ஸர் என சுவைமிகுந்த இந்த உணவுகள் உடல்நலத்துக்கு உதவும் என்பது உறுதி!

படங்கள்:  ப.சரவணக்குமார்

வெள்ளரி விதை வெண்பொங்கல்

தேவையானவை:
* பச்சரிசி - ஒரு கப்
* உலர் வெள்ளரி விதை - அரை கப்
* பாசிப்பருப்பு - கால் கப்
* உடைத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
* நெய் - சிறிதளவு
* மிளகு - ஒரு டீஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
* இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

அரிசி, பாசிப்பருப்பு, கால் கப் வெள்ளரி விதை ஆகிய மூன்றையும் நன்கு கழுவி ஒன்றாக 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய்விட்டு சூடாக்கி முந்திரிப்பருப்பு, மீதமுள்ள வெள்ளரி விதையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வடித்துவைத்திருக்கும் அரிசி - பருப்புக் கலவையுடன் தேவையான தண்ணீர்,  உப்பு சேர்த்து குக்கரில் 4 - 5 விசில் வரும்வரை நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சிறிய கடாயில் நெய்விட்டு சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை தாளித்து வெந்த பொங்கலில் சேர்த்துக் கிளறி, ஏற்கெனவே வறுத்துவைத்துள்ள முந்திரி, வெள்ளரி விதையையும் அதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

நார்ச்சத்து நிறைந்த இந்தப் பொங்கல் உடல் வறட்சியைப் போக்கும். வெள்ளரி விதை, கேன்சர் செல்களை வளரவிடாது தடுக்கும் தன்மை கொண்டது; சுவையும் அபாரம்.

குறிப்பு: பச்சரிசிக்குப் பதில் சிறுதானிய அரிசியும் (குதிரைவாலி, வரகரிசி போன்றவை) பயன்படுத்தலாம்.

*வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன.

ராஜ்கிரா புட்டு

தேவையானவை:
* ராஜ்கிரா மாவு - ஒரு கப்
* வெள்ளை அரிசி புட்டு மாவு - கால் கப்
* தேங்காய்த் துருவல் - ஒரு கப்
* முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
* நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல் - ஒரு கப்
* நெய் - சிறிதளவு
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* உப்பு - சிறிதளவு

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

ராஜ்கிரா மாவு, வெள்ளை அரிசி புட்டு மாவு இரண்டையும் சலித்து, வாய் அகன்ற பாத்திரத்தில்  போட்டு, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும். இதில் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து மாவுக் கலவையை  நன்கு பிசிறி வைக்கவும். பிறகு இதை ஆவியில் 10 - 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் மாவைக் கட்டியில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். கடாயில் நெய்விட்டு சூடாக்கி முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூளை வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை புட்டில் சேர்த்துக் கிளறிச் சாப்பிடவும்.

குறிப்பு:

* ராஜ்கிரா என்பது கீரை விதை ஆகும். அமரந்த் விதை என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு. இது, விதையாகவும் மாவாகவும் ஆர்கானிக் கடை, சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கிறது.

* இந்த விதை அதிக புரோட்டீன் சத்து கொண்டது. கால்சியம் நிறைந்தது. முடி உதிர்வைத் தடுக்கும்.

*ராஜ்கிராவில் அதிக அளவு புரதம் உள்ளது. நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

சீட்ஸ் சாக்கி லாலிபாப்

தேவையானவை:

* சியா விதை - கால் கப் (வறுத்துக் கொள்ளவும்)
* நறுக்கிய உலர் பழங்கள் (திராட்சை, அத்தி, பேரீச்சை போன்றவை) -  2 டேபிள்ஸ்பூன்
* லைட் சாக்லேட் பார் (மில்க் சாக்லேட்) - பாதியளவு
* வொயிட் சாக்லேட் பார் - பாதியளவு
* லாலிபாப் குச்சி - தேவையான அளவு
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* நெய்யில் வறுத்த உலர் சுரைக்காய் விதை - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பட்டால்)

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

இருவித சாக்லேட்டையும்  தனித்தனியாக துருவிக் கொண்டு டபுள் பாயிலிங் முறையில் தனித்தனியே உருக்கிக் கொள்ளவும். பின்னர் லைட் சாக்லேட் பாரில்  மற்ற பொருள்களை பாதியளவு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்திவிடவும். பிறகு இந்தக் கலவையை விருப்பமான மோல்டில் ஊற்றி லாலிபாய் குச்சி செருகி ஃப்ரிட்ஜில் 15  நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும். மீதியுள்ள பொருள்களைப் பயன்படுத்தி வொயிட் சாக்லேட் பாரிலும் இதேபோல லாலிபாப் செய்து கொள்ளவும்.

சியா விதை புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும், இதயம் பலப்படவும் இது உதவும்.

குறிப்பு:

*குறைந்த ரத்த அழுத்தம்  உள்ளவர்கள் சியா விதைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

*சியா விதையில் அமினோ அமிலங்களும் புரதமும் அதிக அளவில் உள்ளது. இது எடை குறைக்க விரும்புவோர்களுக்கு வரப்பிரசாதம்.

தர்ப்பூசணி விதைப்பொடி பூரி

தேவையானவை:

* உலர் தர்ப்பூசணி விதை - அரை கப்
* கோதுமை மாவு - ஒரு கப்
* வறுத்த ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
* ஓமம் - ஒரு சிட்டிகை
* உப்பு - சிறிதளவு
* எண்ணெய் - தேவையான அளவு

பூரியுடன் சேர்க்க:

* வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* சாட் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
* உப்பு - சிறிதளவு
* ரெடிமேட் ஓமப்பொடி - தேவையான அளவு

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

உலர் தர்ப்பூசணி விதையை வெறும் வாணலியில் வறுத்து நைஸாகப் பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் தர்ப்பூசணி விதைப் பொடி, வறுத்த ரவை, மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமம், உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசைந்து சிறிய பூரிகளாகத் திரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சாட் மசாலாத் தூள், உப்பு, ஓமப்பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி அதில் பூரியை உதிர்த்துப் போட்டு கொத்தமல்லித்தழை தூவி சாப்பிடவும்.

தர்ப்பூசணி விதை  நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் இரும்புச்சத்து வைட்டமின் பி, புரதச்சத்து ஆகியவை நிறைந்த விதை இது.

*தர்ப்பூசணி விதையில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.

தாமரை விதை ஃப்ரை

தேவையானவை:
* தாமரை விதை - ஒரு கப்
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
* சாட் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிதளவு
* மசாலா வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
* இந்துப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

வாணலியை அடுப்பில்வைத்து சூடாக்கி தாமரை விதையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். இதனுடன் வறுத்த தாமரை விதை, இந்துப்பு சேர்த்துக் கிளறி, சாட் மசாலாத்தூள் தூவி, மசாலா வேர்க்கடலை சேர்த்து இறக்கவும். மொறுமொறு கிரிஸ்பி தாமரை விதை ஃப்ரை ரெடி.

பேலியோ டயட்டில் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது இந்த ஃப்ரை. வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கல் வராமல் தடுக்கவும், ரத்தக் கொதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் தாமரை விதை உதவும்.

*தாமரை விதையில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளன.

சப்ஜா விதை சர்பத்

தேவையானவை:
* சப்ஜா விதை - 2 டேபிள்ஸ்பூன்
* இளநீர் - 2 கப்
* நாட்டுச் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
* நன்னாரி சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

தண்ணீரில் சப்ஜா விதையை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரை கப் தண்ணீரில் நன்னாரி சிரப் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின்னர் ஊறவைத்த சப்ஜா விதையிலிருந்து சிறிதளவு எடுத்து இந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கி ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ்கட்டிகளாக்கிக் கொள்ளவும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் மீதமுள்ள ஊறிய சப்ஜா விதை, நாட்டுச் சர்க்கரை, இளநீர், அதன் இள வழுக்கை சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் தயார் செய்துவைத்திருக்கும் ஐஸ் க்யூப்களைத் தேவையான அளவு போட்டு, ஓர் ஆற்று ஆற்றி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

சப்ஜா விதை பித்தத்தைக் குறைத்து உடல்சூட்டை நீக்கும். நெஞ்செரிச்சலைப் போக்கவும், மலச்சிக்கலை போக்கவும் உதவும்.

*சப்ஜா விதையில் துத்தநாகம், தாமிரம், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன.

எள் பிஸ்கட் உருண்டை

தேவையானவை:
* கறுப்பு எள் - அரை கப்
* வெல்லத் துருவல் - அரை கப்
* நெய் - சிறிதளவு
* ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
* விருப்பமான ஃப்ளேவர் கொண்ட பிளெய்ன் பிஸ்கட் - 5
* வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

அடுப்பில் கடாயைவைத்துச் சூடாக்கி எள்ளை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத் துருவலில் சிறிதளவு நீர்விட்டு பாகு காய்ச்சவும். உருட்டு பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகைச் சேர்த்து, ஏலக்காய்த்தூள், பொடித்த பிஸ்கட், பொடித்த முந்திரி சேர்த்துக் கிளறவும். கையில் நெய் தடவிக்கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான எள் பிஸ்கட் உருண்டை ரெடி.

வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது.

*கறுப்பு எள்ளில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

மிக்ஸ்டு சீட்ஸ் மிக்ஸர்

தேவையானவை:
* சூரியகாந்தி விதை, உலர் தர்ப்பூசணி விதை, உலர் பூசணி விதை - தலா 2 டேபிள்ஸ்பூன்
* ரெடிமேட் காராபூந்தி, ரெடிமேட் ஓமப்பொடி - தலா 3 டேபிள்ஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* அவல், பொட்டுக்கடலை - தலா 2 டேபிள்ஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிதளவு
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் – தேவையான அளவு
* உப்பு – சிறிதளவு

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி எல்லா விதைகளையும் ஒன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு  அவல், பொட்டுக்கடலை, கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

பின்னர், இவை அனைத்தையும் பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து அந்த சூட்டுடனே மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி காராபூந்தி, ஓமப்பொடி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

*சூரியகாந்தி விதையில் அமினோ அமிலம், வைட்டமின் பி, தாமிரம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், செலினீயம், துத்தநாகம் சத்துகள் உள்ளன.

டபுள்டெக்கர் சீட்ஸ் பர்ஃபி

தேவையானவை:
* உலர் மஞ்சள் பூசணி விதை - அரை கப்
* உலர் வெள்ளைப் பூசணி விதை - அரை கப்
* மைதா மாவு, பால் பவுடர் - அரை கப்
* சர்க்கரை - ஒரு கப்
* ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
* கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* நெய் - தேவையான அளவு

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

வாணலியில் நெய்விட்டு சூடாக்கி மைதா மாவைச் சிவக்க, மணக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இருவித பூசணி விதைகளையும் தனித்தனியே நெய்யில் வறுத்தெடுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் அரை கப் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு நீர்விட்டு பாகு காய்ச்சவும். சர்க்கரை கரைந்து பாகு பதம் வந்ததும் வறுத்துவைத்துள்ள மைதாவைச் சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். இதில் ஒரு சிட்டிகை  ஏலக்காய்த்தூள் தூவி, வெள்ளைப் பூசணி விதை பொடியையும் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் பரவலாக ஊற்றவும்.

மற்றொரு கடாயில் மீதமுள்ள அரை கப் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பாகு காய்ச்சவும். பிறகு இதில் அரைத்த மஞ்சள் பூசணிப் பொடி மற்றும்  பால் பவுடர் சேர்த்துக் கட்டி தட்டாமல் கிளறவும். இதனுடன் கோகோ பவுடர், ஒரு சிட்டிகை  ஏலக்காய்த்தூள், தேவையான அளவு நெய் சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு சுருண்டு வந்ததும் ஏற்கெனவே தட்டில் கொட்டிவைத்துள்ள பூசணிக் கலவை மீது இதைச் சேர்த்து ஆறவிடவும். கலவை நன்கு ஆறியதும் தட்டைத் தலைகீழாகக் கவிழ்த்து கத்தியால் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

*பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், ஒமேகா 3, வைட்டமின் இ ஆகியவை நிறைந்துள்ளன.

ஆளி விதை தோசை வித் பொடி

ஆளி விதைப் பொடி செய்ய:
* ஆளி விதை (Flax Seeds) - அரை கப்
* மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* காய்ந்த மிளகாய் - 2
* எள் - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப

ஆளி விதை தோசை செய்ய:

* தோசை மாவு - ஒரு கப்
* கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
* ஆளி விதைப் பொடி - 3 டேபிள்ஸ்பூன்
* மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு, நெய் – தேவையான அளவு

செய்முறை:

விதவிதமான விதை ரெசிப்பிகள்

வெறும் வாணலியை அடுப்பில்வைத்து சூடாக்கி ஆளி விதையைப் போட்டுப் பொரிக்கவும். மிளகு, சீரகம், எள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும். பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டும் சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் போட்டுப் பிசையலாம். சர்க்கரையின் அளவைக் குறைக்கும் இந்தப் பொடி ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

தோசை செய்முறை:

தோசை மாவுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல், ஆளி விதைப் பொடி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டுக் கலக்கவும். பிறகு தோசையாக வார்த்து சுற்றிலும் நெய்விட்டு வேகவிட்டு திருப்பிப் போட்டு எடுத்துப் பரிமாறவும்.

*ஆளி விதையில் ஓமேகா 3, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.