Published:Updated:

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்
பிரீமியம் ஸ்டோரி
News
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

மாம்பழத்தை உலகின் ஆதி கனி எனலாம். அதாவது, இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே மாமரங்கள் இருந்ததற்கான படிமங்கள் கிடைத்திருக்கின்றன. அதுவும் இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்கள், மியான்மர், பங்களாதேஷ் போன்ற பகுதிகள் மாமரங்களின் பிறப்பிடமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்தப் பகுதிகளிலிருந்துதான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் காலப்போக்கில் மா பரவியிருக்கிறது.

பொதுவாக ஒரு தாவரம் ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்துக்குப் பரவுதல் எப்படி நிகழும்? தாவர விதைகள் காற்றில் பரவும். அல்லது பழத்தோடு விதைகளை உண்ணும் பறவைகள், வேறு இடங்களுக்குச் சென்று போடும் எச்சங்களால் பரவும்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

மாம்பழம் பெரியது. அதுவும் ஆதி கால மாம்பழங்கள் மிகப் பெரியதாக, தடித்த தோலுடன், குறைந்த சதைப்பற்றுடன், அளவில் பெரிய கொட்டைகளுடன் இருந்தனவாம். அவ்வளவு பெரிய மாங்கொட்டைகள் காற்றில் பறந்து பரவியிருக்க வாய்ப்பில்லை. அழிந்துபோன ராட்சதப் பறவையினங்களில் ஏதேனும் இந்தப் பரவலுக்கு உதவியிருக்கலாம். மற்றபடி மனிதர்கள் மூலமாகத்தான் மா, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் பரவியிருக்க வேண்டும் என்பது தாவரவியலாளர்களின் கருத்து.

புத்த மதத்தைப் பரப்பும் விதமாக இந்தியாவுக்கு வந்து சென்ற துறவிகள் மூலமாகவும், இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்குச் சென்ற புத்தத் துறவிகள் மூலமாகவும்தான் ஆசியாவின் பல நாடுகளுக்கு மாம்பழங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதில் அயல்தேச வணிகர்களுக்கும் பங்குண்டு.

கி.பி நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் ஆசிய கண்டத்தின் பல இடங்களிலும் மாமரங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குவந்த சீனப் பயணியான யுவான் சுவாங், இந்தியாவிலிருந்து மாம்பழங்களை, ஆசியாவின் வேறு பகுதிகளுக்குக்கொண்டு சென்றார் என வரலாறு சொல்கிறது.

பாரசீகத்திலிருந்து வணிக நோக்கத்துடன் இந்தியாவுக்கு வந்த வியாபாரிகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் இந்திய மாம்பழத்தைக் கொண்டு சென்றார்கள். 15-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வியாபாரிகளாக அடியெடுத்துவைத்த போர்ச்சுக்கீசியர்கள், நமது மாம்பழங்களின் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். மாம்பழக் காதல் முற்றி, அது இன்றி வாழவே முடியாது என்ற நிலைமையில் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் மாம்பழத்தையும் கொண்டுசெல்ல ஆரம்பித்தார்கள்; பயிரிட்டார்கள். அப்படியாக ஐரோப்பிய கண்டத்தின் சில பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளுக்கும், தென்அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் மாம்பழம் பரவியது. இந்துக்களின் வேதங்களில் மாம்பழம் புனிதமான பொருளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவர்கள் உண்ணும் பழமாக இதைப் போற்றியிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

முக்கனிகளுள் முதற்கனி, மாம்பழம். இந்தியாவின் தேசியப் பழம், மாம்பழம். உலகில் அதிகம் விளைவிக்கப்படும் பழம், மாம்பழம். உலகில் அதிக மக்களால் விரும்பிச் சாப்பிடப்படும் பழம், மாம்பழம். இந்தியாவில் அதிகம் விளையும் பழம், மாம்பழம். பழங்களின் அரசர், அதாவது King of Fruits மாம்பழம்தான்!

மாமரங்கள் பொதுவாக பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் வளருகின்றன. அதாவது, மிதமான தட்ப வெட்பநிலை, மாமரங்கள் வளரச் சாதகமானது. அதனால்தான் இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் விளைகிறது.

முன்பே குறிப்பிட்டதுபோல, பண்டைக் கால மாம்பழங்கள் அதிக சதைப்பிடிப்பு இன்றியே காணப்பட்டிருக்கின்றன. இந்த நோஞ்சான் மாம்பழங்களை, அதிக சதையுள்ளதாக, மேலும் சுவையானதாக எப்படி மாற்றலாம் என்னும் ஆராய்ச்சியில் முதன்முதலாக இறங்கியவர்கள் முகலாயர்களே. அடுத்ததாக போர்ச்சுக்கீசியர்களைச் சொல்லலாம். இவர்களது ஆராய்ச்சிகளின் பலன்களைத்தான் இன்று நாம் அனுபவிக்கிறோம். உலக அளவில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புஷ்டி ரக மாம்பழங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் ஒன்றுதான் `ஒட்டுமா’. அது என்ன?

மூங்கில் குழாய்கள் அல்லது சிறு பைகளில் மண்ணை நிரப்பி, மாங்கொட்டையை விதைப்பார்கள். பின் அது முளைத்து, சிறு மரமாக வரும்போது, அதன் நுனிப்பகுதியை வெட்டி, ஏற்கெனவே முதிர்ச்சி பெற்ற மாமரத்தின் கிளைகளை வெட்டி ஒட்ட வைப்பார்கள். இதைத்தான் ‘ஒட்டுமா’ என்கிறார்கள். விதையிலிருந்து வரும் மா ஒரு ரகமாக இருக்கும். வெட்டி ஒட்டி வைக்கப்பட்ட கிளை, ஏற்கெனவே சுவையான கனிகளைத் தருவதாக இருக்கும். இவ்விரண்டையும் ஒட்டுப் போட்டு புதிய சுவையில் கனிகளை விளைவிப்பதுதான் நம் விவசாயிகள் செய்யும் மாமேஜிக்!

பொதுவாகவே மாம்பழங்கள் அந்தக் காலம் முதலே சாமானியர்களுக்கான பழமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதேநேரம் சாமானியர்களுக்கு எட்டாத கனியாக சில உயர்ரக மாம்பழங்களும் இருந்திருக்கின்றன. அதற்குக் காரணம் மன்னர்களுக்கு மாம்பழம் மேல் இருந்த காதல்தான். லக்னோ சமஸ்தானத்தை ஆண்ட நவாப்களின் அரண்மனைச் சமையலறையில் வருடத்தில் பெரும்பாலான நாள்கள் மாவாசம் பலமாக வீசும். சீஸன் இல்லாத நேரங்களில்கூட நவாப்கள், ‘யாரங்கே! எப்பாடுபாட்டாவது, எந்தத் தேசம் சென்றாவது மாம்பழம் கொண்டுவாருங்கள்!’ என்று கட்டளையிட்டு, வேறு பகுதிகளிலிருந்து மாம்பழங்களை வரவழைத்து ரசித்து ருசித்துச் சாப்பிட்டிருக்கிறார்கள்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

முகலாயர்களின் ஆட்சிக்காலம் ‘மாம்பழங்களின் பொற்காலம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. அவர்களுக்கு மாம்பழப் பாசம் ஜாஸ்தி. அதிலும் பேரரசர் அக்பர், மாம்பழப் பித்தர். அவரது உடலைச் சற்றே கீறிப் பார்த்திருந்தால் ரத்தத்தோடு சேர்த்து மாம்பழச்சாறும் ஓடியிருக்கக் கூடும்! கோடைக்காலங்களில் அக்பரது மூன்று வேளை உணவிலும் மாம்பழம், மாங்காய், மாம்பழச்சாறு என ஏதாவது ஒன்றோ, மூன்றுமோ நிச்சயம் இடம்பெற்றிருந்தது. எண்ணெய் அல்லது வினிகர் கலந்து செய்யப்பட்ட மாங்காய் ஊறுகாயும் முகலாய சமையலறைகளில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அக்பர், புதுப்புது மாங்கனி வகைகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம்காட்டியிருக்கிறார். பீகாருக்கு கிழக்கே உள்ள தர்பங்கா என்ற பகுதியில், Lakh-Bagh என்னுமிடத்தில் மாபெரும் மாந்தோப்பு ஒன்று அக்பரால் உருவாக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாமரங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அக்பர் காலத்தில் முகலாய அரண்மனைகளுக்கான மாம்பழ விநியோகம் மொத்தமும் இந்தத் தோப்பில் இருந்துதான் நடந்தது. அக்பர் காலத்தில் சந்தையில் மாம்பழத்தின் விலை என்ன தெரியுமா? நான்கு செப்புக் காசுகள் சேர்ந்தது ஒரு Dam. ஒரு செப்புக் காசுக்கு ஒரு மாம்பழம் கிடைத்திருக்கிறது. ஆக, நூறு மாம்பழங்களின் விலை 40 Dam.

மா, நம் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்தது என்று நிரூபிக்கும்விதமாக நம் இலக்கியங்களில் பல பாடல்கள் இருக்கின்றன.

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்

உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை...


`குரங்குகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாந்தோப்புகளை உடைய மாந்துறையில் எழுந்தருளியுள்ள இறைவனே’ என்பது இந்த வரிகளின் பொருள். இது பன்னிரு திருமுறையில், திருமாந்துறை பற்றிப் பாடப்பட்ட இரண்டாம் திருமுறைப் பாடல்.

பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்

கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும்
யாணர் ஊரை...


இது ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள 87-வது பாடல். `பல பசுக்களுக்குச் சொந்தக்காரர்களாகிய, பகன்றை மாலையை அணிந்த இடையர்கள் கரும்பையே கோலாகக்கொண்டு, மாங்கனிகளை உதிர்க்கிறார்கள்’ என்பது இந்த வரிகளின் பொருள்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

`மண்ணிய சென்ற...’ என குறுந்தொகையின் 292-வது பாடல் ஆரம்பமாகும். இந்தப் பாடலின் பின்னணியில் ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணமும், அதற்குக் காரணமாக ஒரு மாங்காயும் இருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. குளிக்கச் சென்ற ஒரு பெண், நீரில் மிதந்துவந்த மாங்காயை எடுத்து ஆசையுடன் கடித்துத் தின்றுவிட்டாள். அதற்கு அவள் கைது செய்யப்பட்டாள். அது அரசன் நன்னனின் காவல் மரத்து மாங்காயாம். அது அறியாமல் அவள் தின்றதை ஏற்றுக்கொள்ளாத அரசன், அந்தப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றினான். ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்ற அவப்பெயரும் பெற்றான். பின் நரகலோகத்துக்குச் சென்றான் என்று செய்தி சொல்கிறது இந்தக் குறுந்தொகைப் பாடல்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ - மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் - மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம் - கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம் - பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய் - மந்திரத்தால் மாங்காய் காய்க்காது... இப்படி மா குறித்த பழமொழிகளும் சொலவடைகளும் நம் வாழ்வோடு கலந்தவை.

இதில் கடைசியாகச் சொன்ன பழமொழி மட்டும் பொய் என்று நிரூபித்திருக்கிறார்கள் நம் இந்திய வித்தைக்காரர்கள். ஒரு மாங்கொட்டையை காலி பானைக்குள் போட்டு, அதில் கொஞ்சம் மண்ணும் உரமும் தூவி, அதை மந்திரம் போட்டு, மகுடி ஊதி, உடனே மாஞ்செடியாக முளைக்கவைத்து, மேலும் மந்திரம் போட்டு, புதரளவுக்கு வளரவிட்டு, அதில் மாங்காய்கள் காய்க்கவைத்து, அதைப் பழுக்கவும் வைத்து, பறித்து பார்வையாளர்களுக்கு உண்ணவும் கொடுத்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிகழ்த்தப்பட்டு வரும் இந்த மாங்காய் மேஜிக்கை, ஐரோப்பியப் பயணிகள் பலர் வியப்புடன் பதிவு செய்து வைத்துள்ளனர். இன்றும் இந்திய மேஜிக்காரர்கள் சிலர், இந்த வித்தையை நிகழ்த்திக்காட்டுகிறார்கள்.

வீட்டு விசேஷங்களில் மாவிலைத் தோரணம் கட்டும் வழக்கம் நம்முடையது. அது ஏன்? மாமரக் காற்றுக்கு கிருமிகள் பரவாமல் தடுக்கும் சக்தி உண்டு. விசேஷங்களில், வீடுகளில் கூட்டம் கூடும்போது, ஒருவருக்கு இருக்கும் நோய் இன்னொருவருக்குக் காற்று மூலமாகப் பரவாமல் தடுப்பதற்குத்தான் நம் முன்னோர் இந்த வழக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதேபோலதான், கிராமங்களில் மாவிலையைக் கொண்டு வாசலில் கோமியத்தைத் தெளிக்கின்ற வழக்கத்தை இன்றைக்கும் கடைப்பிடிக்கிறார்கள்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

`ஆம் பானா’ – மாங்காய்ப் பானம், இந்தியாவின் பல பகுதியில் கோடைக்காலத்தில் சூட்டைத் தணிப்பதற்காக அவித்த மாங்காயையும் புதினாவையும் சர்க்கரையையும் கொண்டு தயாரிக்கப்படும் பானம். மேங்கோ லஸ்ஸி தெற்காசியா முழுவதும் அருந்தப்படும் பானம். மாங்காய்ச் சட்னி வடமாநிலங்களில் பிரபலம். மாங்காய் மாவடு, ஆவக்காய் ஊறுகாய் எல்லாம் தென்மாநிலங்களில் பிரபலம். மாங்காய் சாதமும் பரவலான உணவாக உள்ளது. ஆம்சூர் என்ற மாங்காய்ப்பொடி வடஇந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஆம்ராஸ் – மாம்பழத்தின் சதை, சாற்றுடன் பால், நெய் எல்லாம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ராஜஸ்தானின் இனிப்புக் கறி. மார்வாரிகள் சப்பாத்தி, பூரிக்கெல்லாம் இதைத் தொட்டுச் சாப்பிடுகிறார்கள்.

மாம்பழச்சதையுடன் பால் சேர்த்துக் கிண்டித் தயாரிக்கப்படும் ஆம்பா பர்பியும், மாம்பழச்சதையுடன் சர்க்கரை கலந்து வெயிலில் உலரவைத்து துண்டுகளாக்கப்படும் ஆம்பா போலியும் மகாராஷ்டிராவின் முக்கியமான இனிப்புகள். இஞ்சி முரபா போன்று மாம்பழ முரபாவும் தெற்காசியா முழுவதும் பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. தவிர, தெற்காசியாவின் பல்வேறு உணவுக் கலாசாரங்களில் மா இரண்டறக் கலந்திருக்கிறது.

மாவிலை, மாம்பிஞ்சு, மாங்காய், மாம்பழம், மா வித்து, மாமரப்பட்டை, மாமர வேர், மாம்பிசின் - இப்படி மாமரத்தின் ஒவ்வொரு பாகமுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மாவடு, ஜீரண சக்தியை அதிகமாக்கும். மாங்காய் பசியின்மையைப் போக்கும். மாம்பழம் வாய்ப்புண், வயிற்றுப்புண்களை நீக்கும். மூலநோய் பாதிப்பைக் குறைக்கும்.

மாம்பிசின், காலில் இருக்கும் பித்த வெடிப்புகளைக் குணமாக்கும். மாங்கொட்டையில் இருக்கும் மாம்பருப்பைக் காயவைத்து, பொடித்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெண்களுக்கான பிரத்யேகப் பிரச்னைகள் தீரும். இப்படி மொத்த மாமரமுமே ஆல்-இன்-ஆல் ஆரோக்கிய ராஜாதான்.

பல சிவன் கோயில்களில் தல விருட்சம் மாமரம்தான். தமிழகத்தின் பழைமையான மாமரமும் ஒரு கோயிலில்தான் அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் தல விருட்சமாக சுமார் 3500 வருடப் பழைமையான மாமரம், நான்கு பக்கக் கிளைகளுடன் இன்றும் காய்க்கிறது. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு வேதங்களையும் குறிப்பதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பக்கக் கிளையிலும் ஒவ்வொரு விதமான சுவையில் மாங்காய்கள் காய்ப்பதும் இந்த மரத்தின் சிறப்பு.

மாமரத்துடன் இணைந்த புத்தர் சர்ச்சை ஒன்று உண்டு. போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம் கிடைத்தது என்றாலும், அவர் அதிகமாகத் தங்கியதும், தவம் செய்ததும் மாமரத்தடியில்தான் என்று பல கதைகள் சொல்லப்படுவதுண்டு. அப்படித்தான் பழைமையான சில ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. ஆசையைத் துறந்த புத்தர்கூட ஆசையுடன் விரும்பிச் சாப்பிட்டது மாங்கனியைத்தான்!

-முகில்

அல்போன்ஸாவின் வரலாறு

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

ல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், செந்தூரம், கிளிமூக்கு... இவையெல்லாம் தமிழ்நாட்டில் விளையும் புகழ்வாய்ந்த மா ரகங்கள். தோட்டாபுரி, சுவர்ணரேகா (ஆந்திரா), பைரி, மல்கோவா (கர்நாடகா), கேஸர், ராஜபுரி, ஜமதார் (குஜராத்), லங்க்ரா, ஃபஸ்லி (மத்திய பிரதேசம்), குலாப்கஸ், ஹிம்சாகர் (மேற்கு வங்கம்), கிஷன் போக், ஜர்தாலு (பீகார்), சௌஸா (இமாசல பிரதேசம்), பாம்பே கிரீன் (ராஜஸ்தான்), மால்டா (பஞ்சாப்) - இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ரகம் சிறப்பாக விளைகிறது.

இவற்றில் அதிக தித்திப்பு கொண்ட மாம்பழ ரகத்தில் ஒன்று அல்போன்ஸா. சுண்டியிழுக்கும் இந்தப் பெயர் பிறந்ததற்குப் பின்னால் சிறிய வரலாறு இருக்கிறது.

Afonso De Albuquerque என்பவர் போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் காலனி அமைத்தபோது கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர். இவர், கோவா மக்களுக்கு புது சுவையுள்ள, அழகான மாம்பழ ரகம் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். அந்த மாம்பழங்கள் கோவா மண்ணில் விளைய ஆரம்பித்தன. அப்படியே பக்கத்திலிருக்கும் மகாராஷ்டிரத்திலும் பரவின. அந்தச் சுவையான அழகிய மாம்பழ ரகத்துக்கு அஃபோன்ஸோவைக் கௌரவிக்கும்விதமாக அவர் பெயரே வைக்கப்பட்டது. அது நாளடைவில் மருவி அல்போன்ஸா என்றானது. கோவா மக்களும், மகாராஷ்டிர மக்களும் அல்போன்ஸாவைச் செல்லமாக ‘அப்பூஸ்’ அல்லது ‘ஹப்பூஸ்’ என்கிறார்கள்.

கர்ப்பமான பெண்களுக்கு மாங்காய் மேல் ஆசை வருவதற்கு ஏதாவது பிரத்யேகக் காரணம் உண்டா?

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

ண்டு. வயிற்றில் கரு வளரும்போது முதலில் இதயம்தான் வளரும். அதற்குத் தேவையான சத்துகள் பலவும் மாங்காயில் அடங்கியிருக்கிறது. `அதை எனக்குக் கொடு’ என நாக்கின் சுவையரும்புகள், கர்ப்பிணிகளை மாங்காய்ப் பக்கமாக இழுக்கின்றன. அதனால்தான் கர்ப்பிணிகள் மாங்காயை விரும்பி உண்கிறார்கள்.