Published:Updated:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மயக்குதே... மாம்பழ மேஜிக்!
பிரீமியம் ஸ்டோரி
News
மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மாம்பழத்தில் 100-க்கும் அதிக வகைகள் உள்ளன. செந்தூரம், அல்போன்சா, மனோரஞ்சிதம், நாட்டுக்காய், மல்கோவா, காளையபாடி,  காசா, கிளிமூக்கு, பங்கனபள்ளி, நார் மாம்பழம் (நீலம் மாம்பழம்), கல்லா மாங்காய், ருமேனியா, இமாயத் (இமாம் பசந்தி) ஆகியவை நமக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான சில வகைகள்.

இவற்றில் இமாயத் வகை அதிக இனிப்புச்சுவை கொண்டது.  அல்போன்சா, பங்கனபள்ளி, காசா, செந்தூரம், மனோரஞ்சிதம், ருமேனியா போன்றவை குறைந்த அளவிலான புளிப்பும் அதிக இனிப்பும் கொண்டவை. நார் மாம்பழம், காசா, காளையபாடி போன்றவற்றில் புளிப்பும் இனிப்பும் சம அளவில் இருக்கும். கல்லா, நாட்டுக்காய், கிளி மூக்கு மாம்பழம் போன்றவை அதிக புளிப்புச் சுவையுடன் இருக்கும்.

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புளிப்போ, இனிப்போ மாம்பழத்தின் அதீத சுவைக்கு மயங்காதவர்கள் நம்மில் யாருமில்லை. மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது ஒருவிதம் என்றால், இங்கு அவள் விகடன் கிச்சன் சமையற்கலைஞர்கள் அளித்துள்ள சூப்பர் ரெசிப்பிகளைச் செய்து சுவைப்பது புது விதம். இந்தக் கோடையை மாம்பழத்துடன் கொண்டாடலாம், வாருங்கள்!

மாம்பழ கீர்

தேவையானவை:
* இனிப்பான பெரிய மாம்பழம் – இரண்டு (தோல், கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கவும்)
* பால் – ஒரு லிட்டர்
* சர்க்கரை – அரை கப்
* கண்டன்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
* பாதாம் துருவல், பிஸ்தா துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

பாதியளவு மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதி அளவாக குறையும் வரை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும்.

நன்கு ஆறியவுடன் அரைத்த மாம்பழ விழுது, மாம்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா துருவல் சேர்த்துக் கலக்கவும். இதை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

- லஷ்மி வெங்கடேஷ்

*உலகில் வேறெந்த பழத்தையும்விட, மாம்பழமே மிக அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது.

மாம்பழ ஸ்குவாஷ்

தேவையானவை:
* மாம்பழக்கூழ் - 2 கப்
* சர்க்கரை - 4 கப்
* சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்
* கேசரி ஃபுட் கலர் - 2 சிட்டிகை
* மேங்கோ எசென்ஸ் - சில துளிகள்
* தண்ணீர் - 2 கப்

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இத்துடன் மாம்பழக்கூழைச் சேர்த்துக் கலக்கி, எசென்ஸ் மற்றும் கேசரி கலர் சேர்த்துக் கலக்கவும். இதை பாட்டில்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில்வைத்து பிறகு, ஐஸ் கட்டி, தண்ணீருடன் கலந்து பருக கொடுக்கலாம்.

 - கல்பகம் லஷ்மணன், ஆதிரை வேணுகோபால்

*இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே மாம்பழம் பயிரிடப்பட்டுள்ளது.

மாம்பழ-இளநீர்-நுங்கு புட்டிங்

தேவையானவை:

* கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
* இளநீர் - ஒரு கப் + கால் கப்
* பால் - ஒரு கப்
* ஃபுட் ஜெலட்டின் - மூன்றரை டீஸ்பூன்
* இளநீர் வழுக்கை - ஓர் இளநீருக்குரியது
* மாம்பழம் - ஒன்று (தோல் நீக்கி நறுக்கியது)
* நுங்கு - 8 (தோல் நீக்கி நறுக்கியது)

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் கால் கப் இளநீரில், ஃபுட் ஜெலட்டினை 5 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு மீதம் இருக்கும் இளநீர், பால், கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒரு பவுலில் ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் இளநீர் வழுக்கை, மாம்பழத் துண்டுகள் மற்றும் நுங்கு சேர்த்து கலக்கவும்.

ஊறிய ஜெலட்டின் பாத்திரத்தை மைக்ரோவேவ் அவனில் 30 விநாடிகள்வைத்து சூடாக்கவும். பிறகு வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சருக்கு வந்ததும் நுங்கு இளநீர் கலவையோடு சேர்த்து நன்கு கலக்கவும். விரும்பிய அலங்கார பாத்திரத்தில் புட்டிங்கை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் 6 மணி நேரம் வைக்கவும். புட்டிங் கெட்டியானதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

- ஹசீனா சையத்

*இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உடைகளில் மாம்பழ டிசைன் (Paisley Pattern) பழங்காலந்தொட்டே பயன்பாட்டில் உள்ளது.

மாம்பழ மில்க் ஷேக்

தேவையானவை:
* குளிரவைத்த பால் - 4 கப்
* மாம்பழக்கூழ் - ஒரு கப்
* சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
* மாம்பழ எசென்ஸ் - சில துளிகள்
* கேசரி ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
* ஐஸ் துண்டுகள் - தேவையான அளவு

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் போட்டு நுரை வரும் வரை அடித்து, கிளாஸில் ஊற்றி பரிமாறவும். தேவையானால், சில மாம்பழத்துண்டுகளை மேலே போட்டுக் கொடுக்கலாம்.

 - கல்பகம் லஷ்மணன், ஆதிரை வேணுகோபால்

*மகாராஷ்டிராவிலுள்ள கிழக்கு கந்தேஷ் பகுதியிலுள்ள 300 ஆண்டு பழைமையான மாமரம் இன்றும் காய்க்கிறது.

மாம்பழ குல்ஃபி

தேவையானவை:
* பால் – மூன்று கப் (காய்ச்சாதது)
* பால் பவுடர் – அரை கப்
* சர்க்கரை – அரை கப்
* மாம்பழக்கூழ் – ஒன்றேகால் கப்
* கண்டன்ஸ்டு மில்க் – கால் கப்
* பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகள் – முக்கால் கப்

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். பிறகு, பால் பவுடர், கண்டன்ஸ்டு மில்க், நட்ஸ் வகைகள் சேர்த்துக் கலந்து இறக்கவும். பால் நன்கு ஆறிய பிறகு மாம்பழக்கூழ் சேர்த்துக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகள் அல்லது சிறிய குல்ஃபி பானைகளில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்து, செட் ஆன பிறகு எடுத்துப் பரிமாறவும்.

- மீனா சுதிர்

*மாம்பழத்துக்கும் முந்திரி, பிஸ்தாவுக்கும் தாவரவியல் ரீதியாகத் தொடர்பு உண்டு. சந்தேகமிருந்தால் இவற்றின் வடிவத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்!

மாம்பழ மோர்க்குழம்பு

தேவையானவை:
* நறுக்கிய மாம்பழம் - ஒரு கப்
* தயிர் - ஒரு கப்
* உப்பு - தேவையான அளவு
* மஞ்சள்தூள் - சிறிது

அரைக்க:
* தேங்காய் - அரை கப்
* காய்ந்த மிளகாய் - 4
* சீரகம் - கால் டீஸ்பூன்
* பச்சரிசி - 2 டீஸ்பூன்

தாளிக்க:
* எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க்குழம்பில் ஊற்றி இறக்கவும்.

குறிப்பு: தயிர் சேர்த்தவுடன் அதிகம் கொதிக்க விடக் கூடாது. தயிர் திரிந்துவிடும்.

- அன்னம் செந்தில்குமார்

*மணமக்கள் மகப்பேறு பெற்று வாழ, மாவிலைகளைக் கொண்டே ஆசீர்வாதம் செய்யப்படுகிறது.

மாம்பழ ஜாம்

தேவையானவை:
* தித்திப்பான பழுத்த மாம்பழங்கள் - 6
* சர்க்கரை - 250 கிராம்
* மாம்பழ எசென்ஸ் - சில துளிகள்
* கேசரி ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
* சோள மாவு - அரை டீஸ்பூன்
* சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மாம்பழங்களைச் சுத்தப்படுத்தி பிழிந்து கொள்ளவும். அடிகனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயில் மாம்பழக்கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், ஃபுட் கலர் சேர்த்து இளம் தீயில் கொதிக்கவிடவும்.

சோள மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும். சிறிது கெட்டியானதும் எசென்ஸைச் சேர்க்கவும். சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை ‘சிம்’மில் வைத்தால் அடிபிடிக்காது).

 - கல்பகம் லஷ்மணன், ஆதிரை வேணுகோபால்

*ஒரு மாம்பழம் ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி, 35% வைட்டமின் ஏ மற்றும் 12% நார்ச்சத்தை அளிக்கக்கூடியது.

மாம்பழப் பச்சடி

தேவையானவை:
* பழுத்த மாம்பழம் - 2
* பொடித்த வெல்லம் - அரை கப்
* மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
* சிறிய பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று
* கடுகு - கால் டீஸ்பூன்
* அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
* அரைத்த தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மாம்பழத்தைக் கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர்விட்டு, மாம்பழத்துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும்.

இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அடுப்பை ‘சிம்’மில் வைத்து, அரிசி மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். அரைத்த தேங்காயையும் சேர்த்துக் கிளறி கீழே இறக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு போட்டு வெடித்ததும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, பச்சடியுடன் சேர்த்துக் கலக்கவும்.

 - கல்பகம் லஷ்மணன், ஆதிரை வேணுகோபால்

*மாம்பழத்திலுள்ள வைட்டமின் சத்துகளின் அளவானது, அதன் வகை மற்றும் கனியும் காலத்தைப் பொறுத்தே மாறுபடுகிறது.

மேங்கோ கூல் டிலைட்

தேவையானவை:
* மாம்பழம் - 4
* சர்க்கரை - 300 கிராம்
* பால் - ஒரு லிட்டர்
* ஜெலட்டின் பவுடர் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்
* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
* ரோஸ் எசென்ஸ் - 3 துளி

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மாம்பழத்தைத் தோல் சீவி, சதை பாகத்தைப் பொடியாக நறுக்கி, இரண்டு கப் அளவு வரும்படி எடுத்துவைக்கவும். ஜெலட்டின் பவுடருடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதித்ததும் ஊறிய ஜெலட்டினை ஊற்றி கொதிக்கவைத்து, சர்க்கரையைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பிறகு, மாம்பழத்துண்டுகள், குங்குமப்பூ, ரோஸ் எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சிறிய கப்களில் ஊற்றி, ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு, அதை எடுத்து `ஜில்’லென்று சாப்பிடலாம்.

- எஸ்.நித்தியப்பிரியா

*மாமரம் 100 அடி உயரம் வரை வளரக்கூடியது.

மாம்பழ லஸ்ஸி

தேவையானவை:

* தித்திப்பான மாம்பழக்கூழ் - ஒரு கப்
* புளிக்காத தயிர் - 4 கப்
* சர்க்கரை - அரை கப்
* ஐஸ் துண்டுகள் - தேவையான அளவு
* தண்ணீர் - ஒரு கப்
* ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
* தயிர் ஏடு - 4 டேபிள்ஸ்பூன்
* மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
* மேங்கோ எசென்ஸ் - சில துளிகள்

செய்முறை:

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

தயிர், மாம்பழக்கூழ், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக நுரை வரும்படி அடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடித்த ஐஸ் துண்டுகள், ஃபுட் கலர், மேங்கோ எசென்ஸ், பொடித்த முந்திரி, தயிர் ஏடு சேர்த்துக் கலக்கவும். கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கவும்.

 - கல்பகம் லஷ்மணன், ஆதிரை வேணுகோபால்

*ஒரு கப் மாம்பழத் துண்டுகளில் 100 கலோரி ஆற்றல் உள்ளது.