Published:Updated:

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

ம் வீட்டிலேயே பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்காத ஸ்டார்ட்டர், மெயின்கோர்ஸ், அபிடைசர், டெசர்ட், சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள், மசாலா கிரேவி, தால், சாம்பார், இட்லி, சட்னி முதலியவற்றுக்கான மிக்ஸ்களைத் தயாரிக்க முடியுமா? இவற்றை எப்படிப் பாதுகாப்பது, உபயோகப்படுத்துவது?

பேச்சிலர்களுக்கும், பயணத்தின்போதும், வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வேலைக்குச்  செல்பவர்களின் அவசரத் தேவைக்கும், விருந்தினர் வருகைக்கான முன்னேற்பாடாகவும், நாம் விருந்தினர் இல்லங்களுக்குப் போகும்போதும் அவர்களுக்கு உதவுமாறு இருக்கும்படி எடுத்துச்சொல்லவும் வீட்டிலேயே மிக்ஸ் தயாரிக்கலாம்.

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

* தாளிப்பு சேர்த்துத் தயாரித்தவற்றை வெளியிடங்களுக்குச் செல்லும்போது உடனடி உபயோகத்துக்கும், தாளிப்பு சேர்க்காதவற்றை நாம் வீட்டில் இருக்கும்போதும் உபயோகிக்கலாம் (காய்கறிகள் நறுக்கிசேர்த்து).

* விடுமுறையில் வெளியூர்களுக்குச் செல்லும்போது எலெக்ட்ரிக் குக்கர், எண்ணெய் மற்றும் காய்கறிகள் இருந்தாலே போதும்... பெரிய விருந்தே தயாரித்துவிடலாம். மிக்ஸ்களை வெளியூர்களுக்கு ஜிப்லாக் பையில் போட்டு நன்றாகப் பேக் செய்து கொரியரில்கூட போடலாம் (நன்னாரி சர்பத் சிரப் தவிர).

வீட்டிலேயே பீநட் பட்டர் தயாரிப்பது எப்படி?

எதற்கெல்லாம் உபயோகிக்கலாம்?

தேவையானவை:

* உப்பு சேர்க்காத வேர்க்கடலை - 2 கப்
* உப்பு - ஒரு டீஸ்பூன்
* சமையல் எண்ணெய், தேன் - தலா அரை டீஸ்பூன்

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

வேர்க்கடலையை வெறும் வாணலி யில், அடுப்பை சிம்மில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, தோலை முழுமையாக நீக்கிவிட்டு, நன்றாக உலர்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு உப்பும் சேர்த்து அடிக்கவும்.

பிறகு ஸ்பூனால் நன்றாகக் கலந்துவிட்டு தேன், சமையல் எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து ஸ்பூனால் கிளறிவிட்டு, க்ரீம் பதம் வந்ததும் எடுத்து ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாது.

பிரெட்டை ரோஸ்ட் செய்து பீநட் பட்டரை அதில் தடவி சாப்பிடலாம். கப் கேக் செய்வதற்கும், குக்கீஸ், ஃபட்ஜ் செய்வதற்கும் உபயோகிக்கலாம். இதில் நிறைய சத்துகள் நிரம்பியுள்ளன. எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம். இதற்கு பிரிசர்வேட்டிவ்கள் தேவையில்லை.

சுக்கு பவுடர் தயாரிப்பது எப்படி?

எதற்கெல்லாம் உபயோகிக்கலாம்?

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

500 கிராம் இஞ்சியை எடுத்து நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, கேரட் துருவியில் துருவி ஒரு தட்டில் போட்டு வெயிலில் மூன்று நாள்கள் வைக்கவும். கைகளால் நொறுங்கும் பதம் வந்ததும் உலர்ந்த மிக்ஸி ஜாரில் நைஸாக (நீர் விடாமல்) அரைக்கவும். இதை ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து பாதுகாக்கவும்.

இதை டீ போடும்போதும், மோர் தயாரிக்கும் போதும், மசாலா கறி வகைகள் சமைக்கும்போதும் தேவையான அளவு எடுத்து உபயோகிக்கலாம். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். மருத்துவக் குணங்கள்கொண்ட சுக்கு காபி தயாரிக்க பனங்கற்கண்டுடன் இதைத் தேவையான அளவு சேர்த்து உபயோகிக்கலாம்.

கார்லிக் பவுடர் தயாரிப்பது எப்படி?

எதற்கெல்லாம் உபயோகிக்கலாம்?

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

250 கிராம் பூண்டு எடுத்துத் தோலுரித்து மிக்ஸியில்(நீர் விடாமல்) இரண்டு சுற்று சுற்றி எவர்சில்வர் பிளேட்டில் போட்டு மூன்று நாள்கள் வெயிலில் நன்றாகக் காயவைத்து, கைகளால் நொறுங்கும் பதம்வந்ததும் உலர்ந்த மிக்ஸி ஜாரில் (நீர் விடாமல்) நைஸாக அரைத்து, ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து உபயோகிக்கலாம்.

கிரேவி தயாரிப்பிலும், சூப் தயாரிப்பிலும் உபயோகிக்கலாம். வடகம், சிப்ஸ் வறுத்து அதன் மேலே தூவலாம். ரசம் தயாரிக்கும் போதும், மஞ்சூரியன் தயாரிக்கும்போதும் உபயோகிக்கலாம்.

தக்காளி பவுடர் தயாரிப்பது எப்படி?

எதற்கெல்லாம் உபயோகிக்கலாம்?

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

நன்றாகப் பழுத்த கெட்டியான தக்காளியை ஒரு கிலோ எடுத்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி எவர்சில்வர் தட்டில் போட்டு நான்கு நாள்கள் வெயிலில் உலரவிடவும். நீர்வற்றி கைகளால் உடைக்கும் பதம்வந்ததும், உலர்ந்த மிக்ஸி ஜாரில் (நீர் விடாமல்) நைஸாக அரைத்து ஏர்டைட் கன்டெய்னரில் சேமித்து உபயோகிக்கலாம்.

இதை சூப் தயாரிக்கும்போதும், தக்காளி சாதம் தயாரிக்கும்போதும் நல்ல நிறம் கிடைக்க உபயோகிக்கலாம். ஜூஸ் தயாரிக்கும்போதும் உபயோகிக்கலாம்.

ஆனியன் பவுடர் தயாரிப்பது எப்படி?

எதற்கெல்லாம் உபயோகிக்கலாம்?

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி பிளேட்டில்வைத்து வெயிலில் மூன்று நாள்கள் நன்றாக உலரவிடவும். கைகளால் எடுத்தால் உடைக்கிற பதம் வந்ததும் எடுத்து, உலர்ந்த மிக்ஸி ஜாரில் நைஸாக (நீர் விடாமல்) அரைத்து ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து உபயோகிக்கலாம்.

இதை ஃப்ரைடு அயிட்டங்கள் தயாரிக்கும்போதும், கிரேவி செய்யும்போதும், மசாலா சேர்த்து செய்யும் குருமாக்கள் தயாரிப்பிலும், பஜ்ஜி செய்யும்போதும் உபயோகிக்கலாம்.

பால் இல்லாத நேரங்களிலும், வெளியூர் பயணத்தின்போதும் சத்தான சுவையான பானம் தயாரிப்பது எப்படி?

என்ன பொருள்கள் தேவை?

 பாதாம், வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா - தலா 50 கிராம்
 வால்நட் - 25 கிராம்
 பால் பவுடர் - அரை கப்
 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

வெறும் வாணலியில் வேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து சூடு ஆறிய பின் ஐந்து பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாகப் பவுடராக்கவும். இதை ஒரு பவுலில் போட்டு பால் பவுடரையும் சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கலந்துவைக்கவும். ஒரு காற்றுப்புகாத டப்பாவில்வைத்து ஒரு வாரம் வரை வெளியிலேயே வைத்திருக்கலாம்.

ஃப்ரிட்ஜில் வைத்தால் 15 நாள்களுக்கு மேல் வைத்திருக்கலாம். ஒரு டம்ளரில் 2 ஸ்பூன் இந்தப் பவுடரைப் போட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் ஊற்றிக் கலந்து பயணங்களின்போது குடிக்கலாம். வீட்டிலும் பால் இல்லாத நேரங்களில் வெந்நீர் சேர்த்து இதைப் பருகலாம்.

இதை ஒரு கப் மிதமான சூட்டில் உள்ள பாலில் 2 ஸ்பூன் சேர்த்துக் குடித்தால் இன்னும் சுவை அதிகம். தேவைப்பட்டால் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் (புரோட்டீன் பவுடர் என்று அழைக்கப்படும் இது, தயாரித்துவைக்கும்போது சர்க்கரை சேர்த்துவைப்பதால்தான் இந்த பவுடர் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்). இதை மில்க்‌ஷேக், ஜூஸ் தயாரிக்கும்போது ஒரு ஸ்பூன் சேர்த்துக் கலக்கலாம். கீர், பான் கேக் தயாரிக்கும்போதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு அல்லது தேவைக்கேற்ப சேர்த்துத் தயாரித்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை பவுடர் தயாரிப்பது எப்படி?

எதற்கெல்லாம் உபயோகிக்கலாம்?

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

நன்கு பழுத்த கெட்டியான 20 எலுமிச்சைப்பழங்களை எடுத்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி விதைகளை எடுத்துவிட்டு எவர்சில்வர் தட்டில் வைத்து நான்கு நாள்கள் வெயிலில் உலரவிடவும்.

நீர் வற்றி கைகளால் உடைக்கும் பதம் வந்ததும், உலர்ந்த மிக்ஸி ஜாரில் நன்றாக (நீர் விடாமல்) அரைத்து இறுதியில் ஒரு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுத்து ஏர்டைட் கண்டெய்னரில் வைத்து உபயோகிக்கலாம்.

இதை சாலட் தயாரிக்கும்போது மேலே தூவுவதற்கும், ஜூஸ், ரசம், மோர் தயாரிக்கும்போதும், ஊறுகாய் (எலுமிச்சை) தயாரிக்கும்போதும் உபயோகிக்கலாம்.

வீட்டிலேயே இன்ஸ்டன்ட் இட்லி மாவு மிக்ஸ் தயாரிக்கலாமா?

எவ்வளவு நாள்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்?

தேவையானவை:

* புழுங்கல் அரிசி - 4 கப்
* முழு வெள்ளை உளுந்து - ஒன்றரை கப்
* உடைத்த கறுப்பு உளுந்து - அரை கப்
* வெள்ளை அவல் - அரை கப்
* வெந்தயம், ஜவ்வரிசி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு  - தேவைக்கேற்ப

செய்முறை:

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

இட்லி ரவையை (புழுங்கல் அரிசியை ரவை பதத்துக்கு உடைக்கவும்) வெறும் வாணலியில் குறைந்த தணலில் லேசாக வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் வெள்ளை உளுந்து, கறுப்பு உளுந்து, அவல், வெந்தயம், ஜவ்வரிசி ஆகியவற்றை லேசாக வறுத்து நீர் விடாமல் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்தவற்றை உடைத்த இட்லி ரவையுடன் சேர்த்து உப்பும் சேர்த்துக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை இந்த மாவை வெளியிலேயே வைத்திருந்து உபயோகிக்கலாம்.

இந்த மாவில் இட்லி தயாரிப்பது எப்படி?

இட்லி ரவை மாவு ஒரு கப் எனில் அரை கப் தயிர், கால் டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து 20 நிமிடங்கள் கழித்து இட்லிகளாக ஊற்றி எடுக்கலாம். சமையல் சோடா, தயிர் சேர்க்க விருப்பப்படாவிட்டால் ஒரு கப் மாவுக்குத் தேவையான அளவு தண்ணீர் மட்டும் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, 3 மணி நேரம் கழித்து இட்லிகளாக ஊற்றி எடுக்கலாம்.

வீட்டிலேயே சட்னி மிக்ஸ் தயாரிப்பது எப்படி?

எவ்வளவு நாள்கள் வைத்திருந்து உபயோகிக்கலாம்?

தேவையானவை:

* வேர்க்கடலை - ஒரு கப்
* பொட்டுக்கடலை - கால் கப்
* காய்ந்த மிளகாய் - 4
* பூண்டு - 3 பல்
* புளி - ஒரு டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:
* நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 8 இலைகள்

செய்முறை:

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

வெறும் வாணலியில் வேர்க்கடலையைப் பொன்னிறமாக வறுத்து தோலை நீக்கித் தனியே வைக்கவும். அதே வாணலியில் பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி என ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து சற்று ஆறியவுடன் உப்பு, வேர்க்கடலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக (நீர் விடாமல்) பவுடராக்கவும்.

தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்துக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருந்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். தேவைப்படும்போது 6 டீஸ்பூன் இந்த பவுடர், ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு சட்னி பதத்துக்குக் கரைத்து இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

வேறுமுறை:

பவுடர் மட்டும் தயாரித்து வைத்துக்கொண்டு உபயோகிக்கும் நாளன்று தாளிப்பு சேர்த்து (அளவுக்கு ஏற்றவாறு) உபயோகிக்கலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது தாளிப்பு சேர்த்ததை எடுத்துச் சென்றால் உபயோகிப்பது எளிது. பொங்கல், உப்புமாவுக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடவும், சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும்...

சாம்பார்  மிக்ஸ் எப்படித் தயாரித்து வைத்துக்கொள்வது?

தேவையானவை:

* துவரம்பருப்பு - ஒரு கப்
* கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு -   தலா 8 டேபிள்ஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 8
* புளி (நசுக்கியது) - 3 டேபிள்ஸ்பூன்
* மல்லி (தனியா) - 4 டேபிள்ஸ்பூன்
* மிளகு, சீரகம், வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
* பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்
* கறிவேப்பிலை - 4 டேபிள்ஸ்பூன்
*  கோதுமை, கடுகு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
* எண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
* மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
* மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

வெறும் வாணலியில் துவரம்பருப்பை முதலில் போட்டு வறுத்து லேசாக கலர் மாற ஆரம்பித்ததும் எடுத்து, தனியேவைக்கவும். பிறகு கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வறுத்துவைக்கவும். பிறகு கோதுமையை வறுத்துவைக்கவும். பிறகு காய்ந்த மிளகாய் 6, மிளகு, சீரகம், மல்லி, வெந்தயம் ஆகியவற்றை வறுத்துவைக்கவும். பச்சரிசியை வறுத்துவைக்கவும். புளியை வறுத்துவைக்கவும்.

பிறகு, இவை அனைத்தையும் மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த பவுடருடன் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை தாளித்து அரைத்த பவுடருடன் சேர்த்து நன்றாகக் கலந்து ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை:

அடிகனமான பாத்திரத்தில் 2 கப் நீர்விட்டு முருங்கை, சுரைக்காய், பறங்கிக்காய், சிறிதளவு உப்பு சேர்த்து, காய்கள் பாதி வெந்ததும் தக்காளி நறுக்கிப் போட்டு, தயாரித்து வைத்த சாம்பார் பவுடரில் 4 டேபிள்ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் கரைத்து வேகும் காய்களில் ஊற்றி, கலந்து கொதிக்கவிடவும். காய்கள் வெந்து சாம்பார் பதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவற்றுக்கு தொட்டுச் சாப்பிடலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிடவும் ஏற்றது.