Published:Updated:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!
பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

பிரீமியம் ஸ்டோரி
பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

லெட்யூஸ் சாலட்

தேவை: லெட்யூஸ் கீரை, வெங்காயம், தக்காளி, சிவப்பு குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட் – தலா ஒன்று  கொரகொரப்பாகப் பொடித்த மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  
 

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

லெட்யூஸ் கீரையில் இருக்கும் கனமான தண்டுகளை நீக்கிவிட்டு கீரையை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டைப் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு குடமிளகாயில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். ஓர் அகலமான பவுலில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் லெட்யூஸ் இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் உப்பு மற்றும் கொரகொரப்பாகப் பொடித்த மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: துருவிய சீஸ் மற்றும் வறுத்த வால்நட் ஆகியவற்றை சாலட்டின் மேலே தூவிப் பரிமாறலாம்.

ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட்

தேவை: ஸ்வீட் கார்ன் – ஒன்று  மாதுளை முத்துகள் – ஒரு கப்  தேங்காய்த் துருவல் – அரை கப்  பச்சை மிளகாய் – ஒன்று  கடுகு – அரை டீஸ்பூன்  கொத்தமல்லி இலை – சிறிதளவு  தேங்காய் எண்ணெய் – அரை டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

ஸ்வீட் கார்ன் கதிர்களை நீக்கிவிட்டு ஆவியில் 7 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். பின்பு முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஓர் அகலமான பவுலில் வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள், மாதுளை முத்துகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு மற்றும் பச்சை மிளகாயைத் தாளிக்கவும். அதை ஸ்வீட் கார்ன் - மாதுளை கலவையோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவற்றுடன் உப்பு, தேங்காய்த் துருவல் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி நன்கு கலந்து கொள்ளவும். சாலட்டை வெள்ளை பவுல் அல்லது தட்டில் வைத்துப் பரிமாறவும்.

மரவள்ளிக்கிழங்கு போண்டா

தேவை: மரவள்ளிக்கிழங்கு – 2  கடலை மாவு - ஒரு கப்  அரிசி மாவு - அரை கப்  மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்  சமையல் சோடா - கால் டீஸ்பூன்  வெங்காயம் – ஒன்று  பச்சை மிளகாய் – 2  இஞ்சி - சிறிய துண்டு  கறிவேப்பிலை – சிறிதளவு  கொத்தமல்லி இலை – சிறிதளவு  கடுகு – அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்  எண்ணெய் - 400 மில்லி  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

மரவள்ளிக்கிழங்கை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய கிழங்குகளைப் போட்டு நன்கு வேகவிடவும். வெந்ததும் ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் ஒரு கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கரைத்து, இட்லி மாவு பதத்துக்குக் கலந்து கொள்ளவும். இப்போது ஆறவைத்த மரவள்ளிக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மசித்த மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு புரட்டி இறக்கவும். பின்னர் இவற்றைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து காயவைக்கவும். மரவள்ளிக்கிழங்கு உருண்டைகளைக் கடலை மாவுக் கலவையில் நன்கு இருபுறமும் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். போண்டாக்களை விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

பனீர் கோஃப்தா பிரியாணி

தேவை: பாஸ்மதி அரிசி - 2 கப்  வெங்காயம் - 2  பச்சை மிளகாய் - 5  இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்  தக்காளி - 2  பச்சைப் பட்டாணி - அரை கப்  கொத்தமல்லி இலை, புதினா இலை - தலா அரை கப்  பிரியாணி மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்  பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 3  பிரியாணி இலை - ஒன்று  குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன்  பால் - 2 டேபிள்ஸ்பூன்  எலுமிச்சைப்பழம் - ஒன்று  நெய், எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.பனீர் கோஃப்தாவுக்கு:  பனீர் - 200 கிராம்  பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்பு - சிறிதளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

முதலில் பாஸ்மதி அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். அகலமான தட்டில் பனீரை கைகளால் நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அதில் பொட்டுக்கடலை மாவு, கொத்தமல்லி இலை, புதினா இலை, இஞ்சி - பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து மெதுவாகப் பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில்வைத்து, பனீர் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

கனமான கடாயில் நெய் மற்றும் எண்ணெய்விட்டு சூடாக்கி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். வாசனை நன்கு வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் புதினா இலை, கொத்தமல்லி இலை, பச்சைப் பட்டாணி மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தக்காளி லேசாக வதங்கியதும் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் 6 கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் ஊறவைத்த அரிசி சேர்த்து குறைந்த தீயில் 20 நிமிடங்கள் மூடிபோட்டு வேகவிடவும். சாதம் வேகும் இடைவெளியில் குங்குமப்பூவைச் சிறிது பாலில் கலந்து வைக்கவும்.

அரிசி முக்கால் பாகம் வெந்ததும் பாலில் கலந்த குங்குமப்பூ மற்றும் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும். பனீர் கோஃப்தா பிரியாணி ரெடி. இதற்குத் தயிர்ப் பச்சடி அல்லது சால்னா பொருத்தமாக இருக்கும்.

பனீர் முளைப்பயறு சமோசா

தேவை: மைதா மாவு – ஒன்றரை கப்  கோதுமை மாவு – அரை கப்  முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப்  பனீர் - 150 கிராம்  கேரட் – ஒன்று  வெங்காயம் – 2  கொத்தமல்லி இலை – சிறிதளவு  புதினா – சிறிதளவு  சீரகம் – அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 500 மில்லி.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கலந்து 5 நிமிடங்கள் அழுத்தி பிசைந்து 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முளைகட்டிய பச்சைப் பயற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, சூடானதும் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், கேரட்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு வேகவைத்த பச்சைப் பயறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.

பிறகு உதிர்த்த பனீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். கலவை ஆறியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவோடு இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டு கலந்து கொள்ளவும்.

முன்பே பிசைந்து வைத்திருக்கும் மைதா - கோதுமை மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை மெல்லிய சப்பாத்திகளாகச் செய்து, பின்பு சதுரமாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு சதுரத்தின் மேல் சிறிதளவு மாவைத் தூவிவைக்கவும். நான்கு சப்பாத்திகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கவும். இப்போது அடுக்கிய சப்பாத்திகளை சூடான தோசைக்கல்லில் ஒரு நிமிடம் வரை இரண்டு பக்கங்களிலும் லேசாக வாட்டி எடுக்கவும். பின்பு மெதுவாக ஒவ்வொரு சதுரமாக பிரித்துக் கொள்ளவும். பிரித்த ஒவ்வொரு சதுரத்தையும் மீண்டும் முக்கோண வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். முக்கோணத்தைச் சுற்றி கரைத்துவைத்திருக்கும் மைதா பேஸ்ட்டைத் தடவிக் கொள்ளவும்.

ஒவ்வொரு முக்கோணத்தையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே பனீர் - முளைப்பயறு கலவையை நிரப்பி ஓரங்களை மடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி மிதமான சூட்டில் சமோசாக்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதற்குப் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் வைத்துப் பரிமாறவும்.

பட்டாணிப் பருப்பு கார போண்டா

தேவை:பட்டாணிப் பருப்பு - ஒன்றேகால் கப்  உளுத்தம்பருப்பு - கால் கப்  அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்  வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா – சிறிதளவு  சமையல் சோடா – கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்  கடலை எண்ணெய் - 400 மில்லி  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

அகலமான பாத்திரத்தில் பட்டாணிப் பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை எடுத்துக் கொள்ளவும். இவற்றை 2 கப் தண்ணீர் ஊற்றி ஒன்றாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பருப்புகளை மூன்று முறை நன்கு கழுவிவிட்டு தண்ணீரை முழுவதும் வடித்துவைக்கவும். பிறகு இந்தப் பருப்புக் கலவையை கிரைண்டரில் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பொங்கப் பொங்க அரைத்துக் கொள்ளவும்.

மாவு வெண்ணெய் போல் நன்கு அரைபட்டதும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின்பு அதில் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா, பெருங்காயத்தூள், சமையல் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வாணலியில் கடலை எண்ணெய்விட்டு சூடாக்கவும். பிசைந்துவைத்திருக்கும் மாவை ஈரமான கைகளால் சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

போண்டாக்களை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்துப் பரிமாறவும்.

சிவப்புக் குடமிளகாய் சூப்

தேவை: சிவப்புக் குடமிளகாய் – 2  தக்காளி – 4 (நறுக்கவும்)  மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்  பூண்டு – 7 பல்  இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்) பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்  மக்காச்சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்  பால் – அரை கப்  வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

குடமிளகாயை நன்கு கழுவி விதைகளை நீக்கிவிட்டு சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான வாணலியைச் சூடாக்கி அதில் நறுக்கிய குடமிளகாயைப் போட்டு எண்ணெயில்லாமல் லேசாக வதக்கவும். பின்பு, அதில் நறுக்கிய தக்காளி, மிளகு, பூண்டு, இஞ்சி சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். இஞ்சியை எடுத்துவிட்டு மற்ற பொருள்களை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பவுலில் சோள மாவைப் பால்விட்டு நன்கு கரைத்து தனியாகவைத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு அதனுடன் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை மிதமான தீயில் கொதிக்கவிடவும். சூப் சிறிது கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்த சோள மாவைச் சேர்த்து நன்கு கலந்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும். சூப்பின் மேலே வெண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.

பச்சைப் பட்டாணி சூப்

தேவை: பச்சைப் பட்டாணி - 2 கப்  தக்காளி – 3 (நறுக்கவும்) எலுமிச்சைப்பழம் – ஒன்று  பூண்டு – 10 பல்  கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்  மக்காச்சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்  பால் - கால் கப்  மிளகுத்தூள்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

பச்சைப் பட்டாணியை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, பூண்டு, தக்காளியை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மூன்று கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவும். பட்டாணி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவைக்கவும். பின்பு பெரிய மிக்ஸி ஜாரில் வேகவைத்தவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் மக்காச்சோள மாவைப் பால்விட்டு நன்கு கரைத்து தனியாக எடுத்துவைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பின்னர் இதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சூப் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் மக்காச்சோள மாவுக் கரைசலை மெதுவாகக் கலந்து மேலும் 7 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியான பிறகு இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கவும். சூப்பை நன்றாகக் கலந்து மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

மினி மசாலா சப்பாத்தி

தேவை: கோதுமை மாவு - 4 கப்  உருளைக்கிழங்கு – 4  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லி இலை, புதினா இலை – சிறிதளவு  நெய் - 3 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

உருளைக்கிழங்கைத் துண்டுகளாக்கி குக்கரில் 7 விசில் வரும்வரை வேகவைத்து, தோலை உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு கை எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 30 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் இந்த மாவைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளின்மேல் சிறிதளவு மாவு தூவி சிறு சிறு சப்பாத்திகளாகத் திரட்டி, விரும்பிய வடிவில் அவற்றை வெட்டிக் கொள்ளவும்.

சூடான தோசைக்கல்லில் சிறிது எண்ணெய்விட்டு அதில் வெட்டிய சப்பாத்தி துண்டுகளைப் போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டுச் சுட்டெடுக்கவும். வெட்டிய வடிவங்கள் சிறிய அளவில் இருப்பதால் மூன்று அல்லது நான்கு சப்பாத்திகளாக தோசைக்கல்லில் போட்டுச் சுடலாம். இவை சீக்கிரமாகவும் வெந்துவிடும். இதனுடன் தக்காளி தொக்கு அல்லது ஏதேனும் ஓர் ஊறுகாய் வைத்துப் பரிமாறவும்.

பச்சை மொச்சை பிதுக்கு பருப்பு உப்புமா

தேவை:ரவை - 2 கப்  பச்சை மொச்சை – ஒரு கப்  தண்ணீர் - 5 கப்  பச்சை மிளகாய் – 4 (வட்டமாக நறுக்கவும்)  தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்  பட்டை - 3 சிறிய துண்டுகள்  கிராம்பு – 3  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

பச்சை மொச்சையை 2 கப் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் மொச்சையின் மேலே இருக்கும் தோலைப் பிதுக்கி எடுத்துவிடவும். இதேபோல் அனைத்து மொச்சையின் தோலையும் பிதுக்கி எடுத்துவிட்டுப் பருப்பை மட்டும் எடுக்கவும்.

வெறும் வாணலியைச் சூடாக்கி அதில் ரவையை நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும். வாசம் நன்கு வந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கறிவேப்பிலை மற்றும் பிதுக்கிய மொச்சைப் பருப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். பிறகு தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் வறுத்த ரவையைச் சிறிது சிறிதாகக் கிளறிக்கொண்டே சேர்க்கவும். ரவை முழுவதையும் சேர்த்துக் கிளறி சிறிது நேரம் மூடிவைத்து வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். நெய் தடவிய கிண்ணத்தில் தேவையான உப்புமாவை வைத்துப் அதைப் பரிமாறும் தட்டில் கவிழ்க்கவும். டேட்ஸ்டி உப்புமா உங்களைப் பார்த்துக் கண்சிமிட்டும்.

தேங்காய்ப்பால் காய்கறி இடியாப்பம்

தேவை:அரிசி மாவு - 4 கப்  தேங்காய் – ஒன்று  சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) ‌‌- அரை கப்  கேரட் – 2 (பொடியாக நறுக்கவும்) பீன்ஸ் – 10 (பொடியாக நறுக்கவும்)  உருளைக்கிழங்கு – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சைப் பட்டாணி – அரை கப்  இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)  பச்சை மிளகாய் – 5  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் பட்டை - 3 சிறிய துண்டுகள்  கிராம்பு – 4  கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு  எலுமிச்சைப்பழம் – ஒன்று  தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

தேங்காயைத் துருவி இரண்டு முறை பால் எடுத்து, இரண்டு பாலையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சிறிது தண்ணீர்விட்டு அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இளம் சூடான நீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். பிறகு இடியாப்ப அச்சில் இந்த மாவை வைத்துப் பிழிந்து ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். கைகளில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு இடியாப்பத்தை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிர்த்துக் கொள்ளவும்.

அகலமான கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு இரண்டாம் தேங்காய்ப்பாலை சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து காய்கறிகளை வேகவிடவும். நன்கு வெந்ததும் இஞ்சி - பச்சை மிளகாய் சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இஞ்சியின் பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

இப்போது முதல் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். லேசாகக் கொதிவந்ததும் உதிர்த்து ஆறவைத்திருக்கும் இடியாப்பத்தை சேர்த்து மெதுவாகக் கலக்கவும். கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து இறக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் பக்கோடா

தேவை: ஸ்வீட் கார்ன் - 2 கப்  கடலை மாவு – ஒரு கப்  அரிசி மாவு, மக்காச்சோள மாவு – தலா கால் கப்  வெங்காயம் – ஒன்று  பச்சை மிளகாய் – 2  சில்லி ஃபிளேக்ஸ் - 2 டீஸ்பூன்  கொத்தமல்லி இலை – கால் கப்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 400 மில்லி.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

ஒரு சிறிய குக்கரில் ஸ்வீட் கார்ன் முத்துகளைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடிக்கவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் வேகவைத்த ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கடலை மாவு, அரிசி மாவு மற்றும் மக்காச்சோள மாவு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிதமான சூட்டில் காய்ந்ததும், பிசைந்து வைத்திருக்கும் ஸ்வீட் கார்ன் கலவையை எண்ணெயில் உதிர்த்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பனீர் பட்டாணிக் குருமா

தேவை: பனீர் - 200 கிராம்  காய்ந்த பட்டாணி – அரை கப்  வெங்காயம் – ஒன்று  தக்காளி – 2  முந்திரிப்பருப்பு – 8  கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்  கொத்தமல்லி இலை – சிறிதளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய்த் துருவல் - ஒரு கப்  பூண்டு - 10 பல்  இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)  பச்சை மிளகாய் – 7  சீரகம் – ஒரு டீஸ்பூன்  மிளகு – அரை டீஸ்பூன்  சோம்பு – ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - 20 இலைகள்  எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

பட்டாணியை 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கரில் ஊறவைத்த பட்டாணியைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும்வரை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியை லேசாகச் சூடாக்கி அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும். பின்னர் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து லேசாக வறுக்கவும். பிறகு இதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இவற்றை ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும். அடுத்து ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

வதக்கி தட்டில்வைத்திருக்கும் பொருள்களை முந்திரிப்பருப்பை அரைத்த அதே ஜாரில் போட்டு அரைக்கவும். பின்பு வறுத்த தேங்காய்த் துருவலையும் இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும். கனமான கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு மசிந்து வரும்வரை கையை எடுக்காமல் வதக்கவும். பின்பு அரைத்துவைத்திருக்கும் தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேகவைத்த பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். பிறகு இவற்றுடன் நறுக்கிய பனீர் துண்டுகள் மற்றும் முந்திரி விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து லேசாகக் கொதிக்கவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சீரக சாதம், சப்பாத்தி, நாண் போன்ற உணவு வகைகளுக்கு இதை சைடிஷ்ஷாகப் பரிமாறவும்.

வாழைக்காய் பராத்தா

தேவை: கோதுமை மாவு - 2 கப்  வாழைக்காய் – 2  பச்சை மிளகாய் – 2 இஞ்சி - சிறிய துண்டு  சீரகம் - கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை – சிறிதளவு  கொத்தமல்லி இலை – சிறிதளவு  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றி மாவை மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். சிறிதளவு எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, பாதியாக நறுக்கிய வாழைக்காயைப் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் அடுப்பை அணைத்து வாழைக்காயை ஒரு தட்டில் போட்டு ஆறவைத்துக் கொள்ளவும். வாழைக்காய் நன்கு ஆறியதும் தோலை உரித்து பொடியாகத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயின் விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, சூடானதும் சீரகத்தைப் போடவும். சீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு தேங்காய்த் துருவல், வாழைக்காய்த் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். பிசைந்துவைத்திருக்கும் கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்பு இவற்றைச் சிறிய சப்பாத்திகளாகத் தேய்த்து ஒவ்வொரு சப்பாத்தியின் நடுவிலும் ஒரு டேபிள்ஸ்பூன் வதக்கிய வாழைக்காய் கலவையை வைக்கவும். பின்பு சப்பாத்தியைக் கிண்ணம் போல் மடக்கிக் கொள்ளவும். பிறகு, இதை வட்டமாகச் செய்து சிறிதளவு கோதுமை மாவு தூவி சப்பாத்திக் குழவியால் மெதுவாக இடவும். தோசைக்கல்லை நன்கு சூடாக்கிக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் பராத்தாவைப் போடவும். சிறிது எண்ணெய் அல்லது நெய்விட்டு இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.

பராத்தாக்களைப் பரிமாறும் வரை ஒரு வெள்ளைத்துணியால் மூடி வைக்கவும். பின்பு அரை வட்டமாக அல்லது முக்கோண வடிவில் பராத்தாவை வெட்டி, காய்கறி சப்ஜி அல்லது தயிர் வைத்துப் பரிமாறவும்.

கோங்கூரா சேனை கிரேவி

தேவை:சேனைக்கிழங்கு - 200 கிராம்  புளிக்கரைசல் – கால் கப்  வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பட்டை - 2 சிறிய துண்டு  கிராம்பு – 3  பிரியாணி இலை, ஏலக்காய் – தலா ஒன்று  கறிவேப்பிலை – சிறிதளவு  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  புளிச்சக்கீரை இலைகள் - 2 கப்  வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)  பச்சை மிளகாய் – 5  தக்காளி – ஒன்று (நறுக்கவும்)  இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)  முந்திரிப்பருப்பு - 7.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

சேனைக்கிழங்கை நன்றாக மண்போகக் கழுவிவிட்டு, தோல் சீவிக் கொள்ளவும். பின்பு இதைச் சிறு சிறு கனசதுரங்களாக (க்யூப்ஸ்) நறுக்கிக் கொள்ளவும். சேனைக்கிழங்கை புளிக்கரைசலில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, சூடானதும் அரைக்கக் கொடுத்துள்ள முந்திரிப்பருப்பைச் சேர்த்து வறுக்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை, முந்திரிப்பருப்புடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு தக்காளியைச் சேர்த்து லேசாக வதக்கி கூடவே புளிச்சக்கீரை இலைகளையும் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை கைவிடாமல் வதக்கி இறக்கவும். இந்தக் கலவை நன்கு ஆறியதும் ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சதுரமாக நறுக்கிய சேனைக்கிழங்கு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும். சேனைக்கிழங்கு வெந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து நன்கு கலந்து மேலும் சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். கிரேவி நன்றாகக் கொதித்ததும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இந்த கிரேவி சப்பாத்தி, பூரி மற்றும் நாண் போன்ற உணவு வகைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

சிறுகீரை பூரி

தேவை:கோதுமை மாவு - 2 கப்  சிறுகீரை இலைகள் - 2 கப்  பச்சை மிளகாய் – 2  சீரகம் – ஒரு டீஸ்பூன்  ரவை - 2 டேபிள்ஸ்பூன்  நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 400 மில்லி.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

சிறுகீரை இலைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். இந்த நீரில் சிறுகீரை இலைகள், பச்சை மிளகாய் சேர்த்து 7 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு ஓர் அகலமான பாத்திரத்தில் குளிர்ந்த நீர் ஊற்றி அதில் சிறுகீரை இலைகளை மட்டும் போட்டு 5 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். இப்படிச் செய்வதால் சிறுகீரையின் பச்சை நிறம் மாறாது.

பிறகு ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் கீரை இலைகள், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஓர் அகலமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ரவையை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அதில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, நெய் மற்றும் அரைத்த கீரை விழுதைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இதன்மேல் சிறிதளவு மாவு தூவி அல்லது எண்ணெய் தடவி சிறு சிறு பூரிகளாகத் திரட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பூரிகளைப் போட்டு நடுவில் லேசாக அழுத்திப் பொரித்து எடுக்கவும். பூரிக்குத் தேங்காய் சட்னி அல்லது குருமா, மசாலா வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதில் சிறுகீரைக்குப் பதிலாக அரைக்கீரை அல்லது முளைக்கீரை பயன்படுத்தியும் செய்யலாம். கீரையை விழுதாக அரைத்துச் சேர்ப்பதால் பிசையும் மாவில் தண்ணீரைக் கவனமாகச் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் பூரி அதிக எண்ணெயை உறிஞ்சும்.

பச்சைப் பட்டாணி மசாலா

தேவை: பச்சைப் பட்டாணி - 250 கிராம்  வெங்காயம் - 3  தக்காளி - 5  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்  சர்க்கரை - ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லி இலை - கால் கப்  வெண்ணெய், எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

வெங்காயம் மற்றும் தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, நன்கு கொதித்ததும் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டுவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி அதில் அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதனுடன் தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பட்டாணி நன்கு கலந்ததும் கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கலவை லேசாகக் கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். பச்சைப் பட்டாணி மசாலாவைப் பூரி, சப்பாத்தி மற்றும் புலாவ் வகைகளுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

குறிப்பு: பச்சைப் பட்டாணி மசாலாவுக்கு நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை விழுதாக அரைத்தால் சுவையாக இருக்கும்.

மொச்சை உருளைக்கிழங்கு சாகு

தேவை:பச்சை மொச்சை – 250 கிராம்  உருளைக்கிழங்கு – 3 (பொடியாக நறுக்கவும்)  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)  தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை, புதினா இலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  தேங்காய்த் துருவல் - முக்கால் கப்  பச்சை மிளகாய் – 3 பட்டை - 2 சிறிய துண்டு  கிராம்பு – 4  சோம்பு - ஒரு டீஸ்பூன் மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்  பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்  பூண்டு - 5 பல்  இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்).

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

ஒரு சிறிய குக்கரில் பச்சை மொச்சை மற்றும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய சட்னி ஜாரில் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும். கனமான, அகலமான வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்து வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது நேரம் கைவிடாமல் வதக்கவும். இதனுடன் வேகவைத்த மொச்சை மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். பிறகு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் மூடி வைத்துக் கொதிக்கவிடவும். கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை தூவி மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.

இதை பூரி, பரோட்டா மற்றும் இடியாப்பம் போன்ற உணவு வகைகளுடன் பரிமாறலாம்.

வெஜிடபிள் தால் கிச்சடி

தேவை:புழுங்கல் அரிசி - 2 கப்  பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப்  கேரட் - 2  பீன்ஸ் - 10  பச்சைப் பட்டாணி - அரை கப் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா 2  பச்சை மிளகாய் - 3  பூண்டு - 10 பல்  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லி இலை - கால் கப் எலுமிச்சைப்பழம் - ஒன்று  நெய் - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை நன்கு கழுவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி, பாசிப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாகச் சேர்த்து தண்ணீரில் இரண்டு முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சூடாக்கி அதில் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பூண்டு சேர்க்கவும். பூண்டு சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். காய்கறிகள் லேசாக வதங்கியதும் பச்சைப் பட்டாணி மற்றும் 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் களைந்து வைத்திருக்கும் அரிசி - பாசிப்பருப்பு - துவரம்பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு குக்கரை மூடிவைத்து மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். குக்கரில் இருக்கும் ஆவி நின்ற பின்னர், குக்கரைத் திறந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் சிறிதளவு நெய்யைச் சாதத்தின் மேல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்துக் கிளறவும்.

இந்த சாதத்தை பூண்டு ஊறுகாய் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்துப் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

தேவை: பெரிய உருளைக்கிழங்கு - 4  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 500 மில்லி  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி, தோல் சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தோல் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, மீண்டும் ஒருமுறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நிரப்பிக் கொள்ளவும். அதற்கு மேலே சிப்ஸ் கட்டையை வைத்துக்கொண்டு மெலிதான வட்டங்களாக உருளைக்கிழங்கைச் சீவிக் கொள்ளவும். பின்பு இதைத் தண்ணீரில் நன்கு மூழ்கும்படி செய்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு பெரிய வெள்ளைத்துணியைத் தரையில் விரித்துக் கொள்ளவும். அதில் சீவிய கிழங்கை ஒவ்வொரு வட்டமாகப் பரப்பிவைக்கவும். 2 மணி நேரம் மின்விசிறியின் காற்றில் உலரவைக்கவும். எல்லா வட்டங்களிலும் ஈரம் இல்லாமல் நன்கு உலர்ந்த பின்னர் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

அகலமான வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வட்டமாகச் சேர்த்துப் பொரிக்கவும். உருளைக்கிழங்கு வட்டங்களை அவ்வப்போது திருப்பிவிட்டு எண்ணெயின் `உஷ்’ என்ற சத்தம் நின்ற பிறகு எடுக்கவும். பிறகு இவற்றை எண்ணெய் உறிஞ்சும் தாளில் போட்டு வடியவிடவும். இதேபோல் அனைத்து வட்டங்களையும் செய்து கொள்ளவும். ஒரு டப்பாவில் பொரித்த சிப்ஸ்களைப் போட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு குலுக்கிக் குலுக்கி கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். இதைக் கலவை சாதங்கள், புலாவ் மற்றும் பிரியாணி உணவு வகைகளுடன் பரிமாறலாம்.

குறிப்பு: சிப்ஸ் நடுவில் மென்மையாக இருந்தால் மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சீவிய வட்டங்களில் ஈரம் இருந்தால் சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்காது.

குடமிளகாய் மசாலா ரைஸ்

தேவை:பாஸ்மதி அரிசி - 2 கப்  சிவப்பு குடமிளகாய், பச்சை குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று  பச்சை மிளகாய் - 3  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்  பட்டை - 2 சிறிய துண்டு  கிராம்பு - 3  பிரியாணி இலை - ஒன்று  சீரகம் - ஒரு டீஸ்பூன்  ஏலக்காய் - 2  கொத்தமல்லி இலை - சிறிதளவு  வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

பாஸ்மதி அரிசியை இருமுறை கழுவிக் கொள்ளவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். குடமிளகாய்களை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். அரிசி நன்கு வெந்ததும் தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.

அகலமான, கனமான வாணலியில் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அதில் சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். இவற்றின் வாசனை நன்கு வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நீளமாக நறுக்கிய குடமிளகாய்களைச் சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில்வைத்து லேசாக வதக்கவும். மஞ்சள்தூள் மற்றும் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து லேசாகப் புரட்டவும். இதனுடன் ஆறவைத்த பாஸ்மதி சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாக்கள் சமமாக சாதத்தோடு கலக்கும் வரை மெதுவாகக் கிளறவும். பிறகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இந்த சாதத்துக்கு காய்கறி குருமா அல்லது தயிர்ப் பச்சடி பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு: குடமிளகாயை அதிகமான எண்ணெய் அல்லது வெண்ணெய்விட்டு வதக்கினால் அதன் சுவை மற்றும் நிறம் மாறிவிடும். நிறம் மாறாமல் குடமிளகாயை வதக்கினால்தான் சாதத்தில் அதன் சுவை நன்றாக இருக்கும்.

கத்திரிக்காய் கடப்பா

தேவை:பாசிப்பருப்பு - அரை கப்  சிறிய கத்திரிக்காய் - 6  வெங்காயம் - ஒன்று  தக்காளி - 2  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  பட்டை - 2 சிறிய துண்டுகள்  கிராம்பு - 3  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  பச்சை மிளகாய் - 4  சோம்பு - ஒரு டீஸ்பூன்  பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - அரை கப்.

செய்முறை:

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

வாணலியைச் சூடாக்கி அதில் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு சிறிய குக்கரில் வறுத்த பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி, பச்சை மிளகாய், சோம்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருள்களைத் தேங்காய்த் துருவலோடு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் மறுபடியும் எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் பட்டை, கிராம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில்வைத்து கைவிடாமல் வதக்கவும். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

இதனுடன் அரைத்த விழுதைச் சேர்க்கவும். கூடவே சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிவிடவும். கடப்பா நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவு வகைகளுடன் பரிமாறவும்.

குறிப்பு: அரைக்கும் மசாலாவில் சிறிது பூண்டு மற்றும் இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டால், கடைசியில் சிறிதளவு எலுமிச்சைச்சாறும் கலந்துகொள்ளலாம்.

பாட்லக் பார்ட்டி... பரவச சுவை அனுபவம்!

பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு!

``பாட்லக் (Potluck) என்பது விருந்தினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் சமைத்த உணவை ஒரே இடத்தில் கொண்டுவந்து தங்களுக்குள் பகிர்ந்து உண்ணும் சாப்பாடு. வெளிநாடுகளில் வசிப்பவர்கள்... அலுவலகத்தில், அப்பார்ட்மென்ட்டுகளில் இது போன்று ஒன்றுகூடி பகிர்ந்து உண்ணும்போது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் பாட்லக் பார்ட்டி தொடங்கும் முன் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைப் பற்றி முன்பே ஆலோசித்துக் கொள்ளவும். பாட்லக் பார்ட்டியில் ஸ்டார்டர்ஸ், சூப், சாலட், முக்கிய உணவுகள், சைடிஷ் வகைகள் மற்றும் இனிப்பு ஆகியவை அடங்கும்.

பெரும்பாலும் பாட்லக் பார்ட்டிக்கு எல்லா உணவையும் முன்கூட்டியே சமைக்க வேண்டும். ஒவ்வோர் உணவும் பரிமாறுவதற்கு சுலபமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் உணவைப் பரிமாறிக்கொள்வதற்கு உரிய பொருள்களைக் கொண்டுவர வேண்டும்’’ என்று `பாட்லக்’ பற்றி விவரிக்கும் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன் இங்கே பாட்லக் சமையலுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கக்கூடிய சுலபமான சமையல் குறிப்புகளைத் தந்துள்ளார். ``இதன் மூலம் எல்லோரும் பயனடைவீர்கள் என நம்புகிறேன்’’ என்று பரிந்துரைக்கிறார் முத்துலட்சுமி.

தொகுப்பு: ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு