Published:Updated:

சோறு முக்கியம் பாஸ் - 61

சோறு முக்கியம் பாஸ் - 61
பிரீமியம் ஸ்டோரி
சோறு முக்கியம் பாஸ் - 61

சோறு முக்கியம் பாஸ் - 61

சோறு முக்கியம் பாஸ் - 61

சோறு முக்கியம் பாஸ் - 61

Published:Updated:
சோறு முக்கியம் பாஸ் - 61
பிரீமியம் ஸ்டோரி
சோறு முக்கியம் பாஸ் - 61
சோறு முக்கியம் பாஸ் - 61

சிலர், சாப்பாட்டில் அப்படியொரு கட்டுப்பாடு வைத்திருப்பார்கள். தினமும் இரண்டு இட்லி, தக்காளிச் சட்னியென்றால் அதுமட்டும்தான். கூடவோ, குறையவோ கூடாது.  சிலருக்குத் தினமும் அசைவம் வேண்டும்.குறைந்தபட்சம் கருவாடாவது. முப்பதாண்டுகளாகத் தன் உணவகத்துக்கு வந்துபோகும் ஒரு நாட்டாமைக்காரர் பற்றி மிகவும் சுவாரஸ்யமாகச் சொன்னார், மதுரை, கீழ ஆவணி மூல வீதியில், நந்தி சிலை அருகில் இருக்கும் ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் உரிமையாளர் அய்யாக்கனி.

சோறு முக்கியம் பாஸ் - 61

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வாரத்துக்கு ரெண்டுநாள் வருவார். ஒரு கரண்டி சாதம், பாதி நாட்டுக்கோழி சாப்பிடுவார். வந்து உட்கார்ந்தவுடனே சாப்பாடு கொண்டு போயிடணும். பத்து நிமிஷத்துக்கு மேல, யாரும் அவரைக் கவனிக்கலேன்னா எழுந்து வெளியே போயிடுவார். கோழி, பெட்டைக்கோழியாகத்தான் இருக்கணும். இறைச்சியைத் தொட்டுப்பார்த்தே சேவலா, பெட்டையான்னு கண்டுபிடிச்சுடுவார். ஒருநாள், பெட்டைக்கோழி கிடைக்கலே. சேவலைச் சமைச்சிருந்தோம். அப்படியே வெச்சுட்டு வெளியே போனவர்தான்...அதுக்குப்பிறகு வரவேயில்லை. அதற்கப்புறம் நேரா போய்ப் பார்த்து வருத்தம் தெரிவிச்சு அழைச்சுக்கிட்டு வந்தேன்...”

இப்படி இன்றும், உணவு வைராக்கியம் கொண்ட பலர் மதுரை வட்டாரத்தில் இருக்கிறார்கள்.  புதிது புதிதாக, மாட மாளிகைகளாக உணவகங்கள் வந்தாலும் பழைமை மாறாத கிளப் கடைக்குப் போய், கருமைபடர்ந்த நாற்காலியில் அமர்ந்து, விரும்பும் உணவை சாவகாசமாகச் சாப்பிட்டால்தான் அவர்களுக்குச் சாப்பிட்டதுபோல இருக்கும்.

ஜெயவிலாஸ் சாப்பாட்டுக் கடையில் அப்படி நிறைய பெரியவர்களைப் பார்க்கமுடிகிறது. 1950-ல் தொடங்கப்பட்ட உணவகம். அந்தக்காலத்தில், மீனாட்சியம்மன் கோயில் வட்டாரத்தில் ‘தவமணி விலாஸ் சாப்பாட்டு கிளப்’ என்றொரு உணவகம் ரொம்பவே பிரபலம். அங்கு சமையலுக்குப் பொறுப்பாக இருந்த பெருமாள் ஆரம்பித்த உணவகம்தான் ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப். உணவகத்தின் எனாமல் பெயர்ப்பலகையே பழைமைக்குச் சான்றாக இருக்கிறது.

அந்தக்காலத்தில் உணவகத்தை கிளப் என்றுதான் மக்கள் அழைத்திருக்கிறார்கள். உரிமையாளர் என்ன பெயர் வைத்தாலும், மாடி கிளப், கொட்டகை கிளப் என அடையாளப்பெயர்கள்தான் நிலைக்கும். அந்த வகையில் ஜெயவிலாஸுக்கு மக்கள் வைத்த பெயர், சந்து கிளப். இரண்டு கட்டடங்களுக்கு இடையிலான சிறிய சந்துக்குள் இருக்கிறது உணவகம்.
 
தொடக்கத்தில், உணவகத்திற்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லையாம். பெருமாள் ஓர் உத்தியைக் கையாண்டிருக்கிறார். ‘மிகக்குறைந்த விலைக்குக் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பாடு. மாதாமாதம் பணம் கொடுத்தால் போதும்.  உணவகத்துக்கு மேலேயே தங்கியும் கொள்ளலாம்.’ இந்த மாதச் சாப்பாட்டு பிளான் சரியாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. காலப்போக்கில், மக்கள் தேடிவர ஆரம்பித்து விட்டார்கள். நகைக்கடை பஜார், கீழமாசி வீதி பலசரக்கு வணிகம், வளையல்காரத்தெரு, எழுகடல் தெருவுக்கு வணிகத்திற்காக வருகிற சம்சாரிகள் எல்லோரும் மதியச்சாப்பாட்டை இங்கேயே முடித்துக்கொள்ள, ‘சந்து கிளப்’ பிரபலமாகிவிட்டது.

மதியம் 11 மணிக்கெல்லாம் உணவகம் களைகட்டிவிடுகிறது. விறகடுப்பு, புழங்கு பொருள்கள், இருக்கைகள், பரிமாறும் மனிதர்கள் என எல்லாவற்றிலுமே பழைமை படிந்திருக்கிறது. மதியச் சாப்பாடு 90 ரூபாய். அளவு சாப்பாடுதான். கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய் தருவார்கள். சாப்பாட்டில் கைவைப்பதற்கு முன்பாகப் பெரிய தாம்பாளம் கண்முன்னால் வருகிறது. அதில் வகைவகையாக அடுக்கப்பட்டிருக்கின்றன தொடுகறிகள். கோழிச் சுக்கா, சிவகாசி சிக்கன், நாட்டுக்கோழி சாப்ஸ், மிளகுச் சுக்கா, கொத்துக்கறி, கோலா உருண்டை, நண்டு லாலிபாப், காடை ரோஸ்ட், விரால் மீன் ரோஸ்ட்... பார்க்கும்போதே நாவூறத்தான் செய்யும்.

 நண்டு லாலிபாப் மிகச்சிறப்பு. நண்டின் சதையெடுத்து மாவில் புரட்டி உருண்டையாகப் பொரித்து, சிறிய நண்டுக்காலில் செருகி அழகாக அடுக்கித் தருகிறார்கள். வித்தியாசமாக இருக்கிறது.

சோறு முக்கியம் பாஸ் - 61

மிளகுச் சுக்கா, மதுரைப் பாரம்பர்யம். நல்லெண்ணெய் விட்டு மிளகுதூவி ஆட்டிறைச்சியைச் சுருள வறுத்து எண்ணெய் ததும்ப செமி கிரேவியாக அள்ளிவந்து வைக்கிறார்கள்.செமையாக இருக்கிறது.

கொத்துக்கறி, கொத்து பரோட்டா மாதிரி இருக்கிறது. சிக்கனைப் பிய்த்துப்போட்டு, முட்டையை உடைத்து ஊற்றிச் சிறிதாகக் கொத்தி, கறிவேப்பிலை பாதி, இறைச்சி பாதியென ஆவிபறக்க அள்ளித்தருகிறார்கள். சிவகாசிச் சிக்கன் கொஞ்சம் காரம்.

எல்லாத் தொடுகறிகளுமே 140 ரூபாய். விரால்மீன் குழம்பு, மதுரைக் கறிக்குழம்பு தனியாக வாங்கிக்கொள்ளலாம்.  அவையும் அதே விலைதான். விரால் மீன் குழம்பில் இரண்டு துண்டு மீன்கள் தருகிறார்கள். கறிக்குழம்பிலும் இறைச்சி நிறைந்திருக்கிறது.  நெய் பிரியாணி இந்த உணவகத்தின் இன்னொரு அடையாளம். சாப்பாடு விரும்பாதவர்கள் சிக்கனோ மட்டனோ... பிரியாணியைத் தேர்வு செய்யலாம்.

“எங்க அப்பா தொடங்கி வெச்ச தொழில்.இடத்தைக்கூட மாத்தாம அப்படியே அவரோட வழியில நடத்திக்கிட்டிருக்கேன். எதுக்கும் மெஷினைப் பயன்படுத்துறதில்லை.  அவர் சொல்லிக்கொடுத்துட்டுப் போன மசாலாக்கள் தான். நிறைய சம்சாரிங்க தினமும் வந்து சாப்பிடுறாங்க. அளவு சாப்பாடுங்கிறது பேருக்குத்தான். தேவைன்னா எவ்வளவு கேட்டாலும் கொடுப்போம். சாப்பிட வர்றவங்க வயிறும் மனசும் நிறைஞ்சு போகணும்...’’ நெகிழ்ந்து பேசுகிறார் அய்யாக்கனி.

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார் 

பலாப்பழம் உடல் சூட்டை அதிகரிக்குமா?

சோறு முக்கியம் பாஸ் - 61

கோடைக்காலத்தில் உடல் அதிகமாக பலவீனமடையும். அந்த பலவீனத்தை ஈடுகட்ட இயற்கை கொடுத்த கொடைதான் பலாப்பழம். ‘பலாப்பழம் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும்’ என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய பழம். உடல் மெலிந்தவர்களைத் தேற்றும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தப் பித்த நோய் எனப்படும் ரத்தப்போக்கு தொடர்பான நோய்களைத் தடுக்க உதவும். மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வு தரும். செரிமானப் பிரச்னை  உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் இதை அதிகம் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகளும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, பலாப்பழம் மரத்திலேயே பழுக்க வேண்டும். பறித்து, பழுக்கவைக்கப்படும் பலாப்பழம் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பசியின்மை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்! 

ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்