
காலிஃப்ளவர் வெண்ணெய் மசியல்
தேவை: காலிஃப்ளவர் - கால் கிலோ பூண்டு - 2 பல் உப்பு தேவையான அளவு வெண்ணெய்த் துண்டுகள் - 10 கிராம் தண்ணீர் - வேகவைக்கத் தேவையான அளவு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை:
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்துகொள்ளவும். பின்பு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் பூண்டு சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவும். காலிஃப்ளவர், பூண்டு இரண்டும் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டிவிடவும். பின்னர் காலிஃப்ளவர், பூண்டுடன் வெண்ணெய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். காலிஃப்ளவர் வெண்ணெய் மசியல் தயார். தேவைப்பட்டால் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
சிறப்பு: எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த உணவு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
காலிஃப்ளவர் க்ரீம் சூப்
தேவை: காலிஃப்ளவர் - 200 கிராம் வெண்ணெய் - 10 கிராம் இஞ்சி - பூண்டு விழுது – கால் டீஸ்பூன் வெங்காயத்தாள் - சிறிதளவு மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 2 கப்.

செய்முறை:
நன்கு கழுவி நறுக்கிய காலிஃப்ளவரை உப்பு, மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது, வெண்ணெய் சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவும். பின்பு மிக்ஸி அல்லது பிளெண்டரில் நன்கு அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தாள் மற்றும் ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்துப் பரிமாறவும்.
சிறப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு உகந்த உணவாகும் இது.
காலிஃப்ளவர் தோரன்
தேவை: காலிஃப்ளவர் - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) காய்ந்த மிளகாய் – 2 கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் காலிஃப்ளவரைச் சேர்த்துக் கிளறவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். காலிஃப்ளவர் வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி 2 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் தயிர் சாதம்
தேவை: காலிஃப்ளவர் - கால் கிலோ கெட்டியான தயிர் - ஒன்றரை கப் காய்ந்த மிளகாய் – 2 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சுத்தம் செய்த காலிஃப்ளவரை நன்கு துருவிக்கொள்ளவும் பின்பு அதை 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதில் உப்பு மற்றும் கெட்டியான தயிரைச் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு , உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்துக்கொள்ளவும். பின்பு அதை காலிஃப்ளவர் - தயிர் கலவையில் சேர்த்துக் கலக்கவும். சுவையான காலிஃப்ளவர் தயிர் சாதம் தயார்.
சிறப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை உண்ணலாம். இதில் குறைந்த அளவு மட்டுமே கலோரிகள் இருக்கின்றன.
பேக்டு விங்ஸ் காலிஃப்ளவர்
தேவை: காலிஃப்ளவர் - 300 கிராம் மைதா - ஒரு கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் தயிர் - அரை கப் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன் தேன் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மைதா, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைத் தயிரில் நன்கு கலக்கவும். பின்பு சுத்தம் செய்து துண்டுகளாக்கிய காலிஃப்ளவரை தயிர் கலவையில் தோய்த்து பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும். பின்பு அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணத்தில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் சில்லி சாஸ், தேன், எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்பு பேக் செய்த காலிஃப்ளவரின் மேலே இதைத் தடவி மீண்டும் 200 டிகிரி செல்ஷியஸில் 5 நிமிடங்கள் பேக் செய்யவும். சுவையான பேக்டு விங்ஸ் காலிஃப்ளவர் ஃப்ரைஸ் தயார். மயோனைஸ் உடன் பரிமாறவும்.
காலிஃப்ளவர் 65
தேவை: காலிஃப்ளவர் - 500 கிராம் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள், உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரைப் பெரிய துண்டுகளாக நறுக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரைப் போட்டு அதன் மீது (எண்ணெய், வெங்காயத்தாள் நீங்கலாக) மற்ற பொருள்கள் அனைத்தையும் தூவிக் கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகக் கலந்து சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் ஊறவைத்த காலிஃப்ளவரைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பான காலிஃளவர் 65 தயார். வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.
கேரள காலிஃப்ளவர் குருமா
தேவை: காலிஃப்ளவர் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கவும்) தக்காளி - 2 (நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி அளவு பட்டை - 2 சிறிய துண்டு லவங்கம், ஏலக்காய் – தலா 2 பிரியாணி இலை – ஒன்று கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி (அரை தேங்காய்) பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய், பெருஞ்சீரகம் இரண்டையும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். பின்னர் நறுக்கிய தக்காளி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதிக்கும்போது நறுக்கிய காலிஃப்ளவரைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
காலிஃப்ளவர் தந்தூரி
தேவை: காலிஃப்ளவர் - 500 கிராம் தயிர் - ஒரு கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் வினிகர் - அரை டீஸ்பூன் சிவப்பு ஃபுட் கலர் (தேவைப்பட்டால்) - ஒரு சிட்டிகை எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) தந்தூரி குச்சிகள் – 4 குடமிளகாய் - 2 (பெரியதாக, சதுரமாக நறுக்கவும்) எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி - பூண்டு விழுது, வினிகர், மிளகாய்த்தூள், உப்பு, சிவப்பு ஃபுட் கலர், எலுமிச்சைச்சாறு, எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்பு அதில் காலிப்ளவரைச் சேர்த்து 45 முதல் 60 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். கலவை ஊறிய பின்பு சதுரமாக நறுக்கிய குடமிளகாயைத் தயிர்க் கலவையில் சேர்க்கவும். பின்பு தந்தூரி குச்சிகளில் முதலில் ஒரு குடமிளகாய் துண்டைக் குத்தவும். பின்பு இரண்டு காலிஃப்ளவரை ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் குச்சியில் குத்தவும். மீண்டும் ஒரு குடமிளகாய்த் துண்டைக் குத்தவும். மீண்டும் காலிஃப்ளவர் துண்டுகளைக் குத்தவும். இறுதியாக மீண்டும் ஒரு குடமிளகாய்த் துண்டைக் குத்தவும். இதேபோல் அனைத்து காலிஃப்ளவரையும் குச்சிகளில் குத்திக்கொள்ளவும். பின்னர் காலிஃப்ளவர் குச்சிகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணத்தில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். இறுதியாக பேக் செய்த காலிஃப்ளவர் குச்சிகளை நெருப்பில் ஒரு நிமிடம் வாட்டவும். சுவைமிகுந்த காலிஃப்ளவர் தந்தூரி தயார். மயோனைஸ் உடன்
பரிமாறவும்.
காலிஃப்ளவர் உப்புமா
தேவை: துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப் சிறிய சைஸ் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 வேர்க்கடலை – 2 டீஸ்பூன் எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு தண்ணீர் - அரை கப்.

செய்முறை:
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் வேர்க்கடலை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பின்னர் துருவிய காலிஃப்ளவர் மற்றும் உப்பைச் சேர்க்கவும். 5 முதல் 8 நிமிடங்கள் வரை அல்லது தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும். உதிரி உதிரியாக வரும்போது அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.
சிறப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை காலை நேர உணவாக உண்ணலாம். கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கும் உணவு இது.
கீட்டோ காலிஃப்ளவர் ரைஸ்
தேவை: காலிஃப்ளவர் - 300 கிராம் வெண்ணெய் - 10 முதல் 20 கிராம் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்கி, துருவிய காலிஃப்ளவரைச் சேர்த்து சிறு தீயில் வதக்கவும். பின்பு இதனுடன் உப்பு சேர்த்து, காலிஃப்ளவரை வதக்கி, மூடிவைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். கீட்டோ காலிஃப்ளவர் சாதம் தயார். ஏதேனும் ஒரு கீட்டோ கிரேவியுடன் பரிமாறவும்.
சிறப்பு: கீட்டோஜெனிக் டயட் என்பது ஒரு வகையான ஆரோக்கிய உணவுப் பழக்கம். இந்த உணவுமுறையில் மிகக் குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு காலிஃப்ளவரைச் சொல்லலாம்.
காலிஃப்ளவர் புலாவ்
தேவை: காலிஃப்ளவர் - 300 கிராம் பாஸ்மதி அரிசி - 2 கப் பட்டை - 2 சிறிய துண்டு பிரியாணி இலை – 2 அன்னாசிப் பூ – ஒன்று ஏலக்காய் – 2 லவங்கம் - 3 வெங்காயம் - 2 (நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி அளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (கீறவும்) கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் தண்ணீர் - 3 கப் எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாஸ்மதி அரிசியைக் களைந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, புதினா சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் உப்பு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், பெரியதாக நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து வேகவைக்கவும். அரிசி வெந்து உதிரி உதிரியாக ஆனவுடன் இறக்கிப் பரிமாறவும். தேவைப்பட்டால் இறக்கும்போது நெய் மற்றும் பொரித்த முந்திரியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
காலிஃப்ளவர் மஞ்சூரியன்
தேவை:காலிஃப்ளவர் - 300 கிராம் மைதா - ஒரு கப் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கான்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
கிரேவி செய்ய: பூண்டு - 4 பல் சோயா சாஸ் - 2 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் கான்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு - தேவையான அளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை:
மைதா, மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து தண்ணீரில் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். சுத்தம் செய்த காலிஃப்ளவரை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின்பு ஒரு பானில் (pan) எண்ணெய்விட்டு சூடாக்கி, அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கார்ன்ஃப்ளாரை கால் கப் தண்ணீரில் கலந்துகொள்ளவும். பின்பு இந்தக் கலவையையும் சாஸ் கலவையில் ஊற்றி நன்கு கலக்கவும். பின்பு பொரித்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து இறக்கவும். வெங்காயத்தாள், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் மிளகு வறுவல்
தேவை: காலிஃப்ளவர் 300 கிராம் பூண்டு - 5 பல் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவரைச் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.
பட்டர் டாஸ் காலிஃப்ளவர்
தேவை: காலிஃப்ளவர் - 300 கிராம் வெண்ணெய் - 25 கிராம் உப்பு - தேவையான அளவு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – அரை டீஸ்பூன்.

செய்முறை:
பானில் (pan) வெண்ணெயைச் சூடாக்கி, சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவரை சேர்க்கவும். வெண்ணெய் எல்லா இடத்திலும் படும் வரை காலிஃப்ளவரை நன்கு வதக்கவும். பின்னர் உப்பு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து டாஸ் செய்யவும். 3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து சுடச்சுடப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் தந்தூரி பட்டர் மசாலா
தேவை: தந்தூரி காலிஃப்ளவர், குடமிளகாய்த் துண்டுகள் - 200 கிராம் (`காலிஃப்ளவர் தந்தூரி’ (பக்க எண் 109) செய்முறையைப் பின்பற்றி காலிஃப்ளவர், குடமிளகாய்த் துண்டுகளை செய்து எடுத்துக்கொள்ளவும்) பெரிய சைஸ் வெங்காயம் - 2 (நறுக்கவும்) தக்காளி - 2 (நறுக்கவும்) கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – கால் டீஸ்பூன் வெண்ணெய் துண்டுகள் - 30 கிராம் முந்திரி – 10 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப் உப்பு - தேவையான அளவு.
அலங்கரிக்க: வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு.

செய்முறை:
கடாயில் வெண்ணெயை உருக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு முந்திரிப்பருப்பு, கஸூரி மேத்தி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பை அணைத்து கலவை சிறிது ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையை ஊற்றி அதில் ஃப்ரெஷ் க்ரீமை சேர்க்கவும். பின்பு காலிஃப்ளவர், குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். வெண்ணெய் மற்றும் ஃப்ரெஷ் க்ரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் கார்ன்ஃப்ளேக்ஸ் ஃப்ரை
தேவை: காலிஃப்ளவர் – 500 கிராம் மைதா - ஒரு கப் தயிர் - ஒன்றரை கப் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - ஒரு டீஸ்பூன் மைதா (பேஸ்ட் செய்ய) - கால் கப் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், எலுமிச்சைச்சாறு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துக்கொள்ளவும். காலிஃப்ளவரை அதில் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். மற்றோர் அகன்ற பாத்திரத்தில் கார்ன்ஃப்ளேக்ஸை நொறுக்கிக்கொள்ளவும். அதில் மைதா, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் சேர்த்துக் கலந்துவைக்கவும். ஒரு கிண்ணத்தில் கால் கப் மைதா மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து பேஸ்ட் போலக் கலந்து வைக்கவும். பின்பு ஊறவைத்த காலிஃப்ளவரை கார்ன்ஃப்ளேக்ஸ் கலவையில் தோய்த்து, பின்னர் மைதா கலவையில் தோய்த்து, பின்பு மீண்டும் கார்ன்ஃப்ளேக்ஸ் கலவையில் தோய்த்து வைக்கவும். பின்பு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் கார்ன்ஃப்ளேக்ஸ் ஃப்ரை தயார்.
முழு காலிஃப்ளவர் ரோஸ்ட்
தேவை:காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று தயிர் - அரை கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சிவப்பு ஃபுட்கலர் (தேவைப்பட்டால்) - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முழு காலிஃப்ளவரை இலை நீக்கிச் சுத்தம் செய்துகொள்ளவும். பின்பு கொதிக்கும் நீரில் 5 முதல் 7 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தயிர், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், சிவப்பு ஃபுட் கலர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்னர் இந்தக் கலவையை காலிஃப்ளவர் மேல் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணத்தில் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். முழு காலிஃப்ளவர் ரோஸ்ட் தயார். மயோனைஸ் உடன் பரிமாறவும்.
காலிஃப்ளவர் ஃப்ரைடு ரைஸ்
தேவை:காலிஃப்ளவர் - 300 கிராம் (துருவியது) பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், பீன்ஸ் (சேர்த்து) - கால் கப் வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) நறுக்கிய வெங்காயத்தாள் – அலங்கரிக்கத் தேவையான அளவு பூண்டு - 3 பல் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கிளறவும். பின்பு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். காய்கறிகள் அதிகமாக வேகக் கூடாது. பின்பு துருவிய காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.
சிறப்பு: இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை உண்ணலாம்.
காலிஃப்ளவர் கோஃப்தா கறி
தேவை: கோஃப்தா உருண்டை செய்ய: காலிஃப்ளவர் - 300 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்) பொட்டுக்கடலை (மிக்ஸியில் பொடித்தது) - ஒரு கப் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
குருமாவுக்கு: வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி அளவு பச்சை மிளகாய் – 4 தேங்காய் – ஒரு மூடி (அரை தேங்காய்) சோம்பு - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். அதில் அனைத்து உலர் பொருள்கள் மற்றும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகச் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கோஃப்தா தயார். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் அரைத்த கலவை, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கலவை கொதித்ததும் பொரித்த கோஃப்தா உருண்டைகளை இந்தக் குருமாவில் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் வேகவைக்கவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
காலிஃப்ளவர் சீஸ் பராத்தா
தேவை: காலிஃப்ளவர் - 250 கிராம் (வேக வைத்து மசிக்கவும்) வெங்காயம் – ஒன்று மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு சீஸ் துருவல் - கால் கப் வெண்ணெய் - 20 கிராம் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பராத்தா மாவுக்கு: கோதுமை மாவு - 2 கப் சர்க்கரை - ஒரு டீஸ்பூன் நெய் - ஒரு டீஸ்பூன் தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை, நெய், தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வேகவைத்து மசித்த காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும். பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி சப்பாத்திக் குழவியால் லேசாகத் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு காலிஃப்ளவர் பூரணத்தை வைத்து, அதில் சிறிது சீஸ் துருவல் வைத்து, மீண்டும் உருட்டி பராத்தா போல் திரட்டவும். தவாவில் எண்ணெய்விட்டு பராத்தாவைச் சுட்டு எடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் சீஸ் பராத்தா தயார்.
செட்டிநாடு காலிஃப்ளவர் பிரட்டல்
தேவை: காலிஃப்ளவர் - 500 கிராம் வெங்காயம் – 2 (நறுக்கவும்) தக்காளி – 2 (நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் செட்டிநாடு மசாலா - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, செட்டிநாடு மசாலா, மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொதிக்கவிடவும். கலவை கொதித்து எண்ணெய் பிரியும்போது சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் பிரட்டல் தயார்.
காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை
தேவை: காலிஃப்ளவர் - 300 கிராம் மைதா – 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன் தேன் - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 10 கிராம் தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் வினிகர் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைக்கவும். பின்பு சுத்தம் செய்த காலிஃப்ளவர் துண்டுகளை அதில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பானில் (pan) வெண்ணெயைச் சூடாக்கி, அதில் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ், தேன், வினிகர், சோயா சாஸ், ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். பின்பு பொரித்த காலிஃப்ளவரை இந்த சாஸ் கலவையில் சேர்த்து டாஸ் செய்து பரிமாறவும்.
காலிஃப்ளவர் டிக்கா
தேவை:காலிஃப்ளவர் - 300 கிராம் பொட்டுக்கடலை மாவு - ஒரு கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்) தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். பின்பு இதனுடன் பொட்டுக்கடலை மாவு, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், தயிர், எலுமிச்சைச்சாறு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். மாவு பதம்போல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பின்னர், மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல லேசாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
காலிஃப்ளவர் பாப்கார்ன்
தேவை:காலிஃப்ளவர் - 300 கிராம் மைதா - ஒரு கப் ஒரிகானோ - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் - அரை கப் முட்டை – 2 மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் மைதா, ஒரிகானோ, மிளகாய்த்தூள், உப்பு, ஓட்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்துவைக்கவும். சுத்தம் செய்த காலிஃப்ளவர் துண்டுகளை முட்டைக் கலவையில் தோய்த்து, பின்பு ஓட்ஸ் கலவையில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் பாப்கார்ன் தயார்.
ஸ்பைசி காலிஃப்ளவர் மஃபின்
தேவை: காலிஃப்ளவர் - 100 கிராம் முட்டை – 2 ஒரிகானோ – அரை டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன் பீட்சா சாஸ் - ஒரு டீஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள், தக்காளித் துண்டுகள் - அலங்கரிக்கத் தேவையான அளவு சீஸ் துருவல் - கால் கப் வெண்ணெய் - 20 கிராம் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து துண்டுகளாக்கி அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு துணியில் போட்டு அதிலிருக்கும் தண்ணீரைப் பிழிந்து எடுத்துவிடவும். பிறகு அரைத்த காலிஃப்ளவருடன் முட்டையை உடைத்து ஊற்றி, சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகானோ, பீட்சா சாஸ், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். மஃபின் ட்ரேயில் வெண்ணெய் தடவி அடித்துவைத்திருக்கும் இந்தக் கலவையை அதில் ஊற்றவும். பிறகு, அதன் மேல் நறுக்கிய தக்காளி, வெங்காயத்தாள் மற்றும் சீஸ் துருவல் தூவி, அவனில் (oven) 180 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணத்தில் 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் மஃபின் தயார்.
கிரில்டு சீஸ் காலிஃப்ளவர்
தேவை: துருவிய காலிஃப்ளவர் - 100 கிராம் முட்டை – 2 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் வெண்ணெய் - 10 கிராம் சீஸ் ஸ்லைஸ் - 2 உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முட்டையை நன்கு அடித்து அதில் துருவிய காலிஃப்ளவர், மஞ்சள்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து அடித்துக்கொள்ளவும். பின்பு தவாவில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, அதில் காலிஃப்ளவர் கலவையை ஒரு கரண்டியால் ஊற்றி இருபக்கமும் சுட்டு எடுக்கவும். இதேபோல் மேலும் மூன்று காலிஃப்ளவர் அடைகளைச் செய்துகொள்ளவும். காலிஃப்ளவர் அடைகள் சிறிது ஆறியதும், ஓர் அடை மேல் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து, மற்றோர் அடையால் அதை மூடவும். பிறகு, மீண்டும் அதன் மேல் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து மீண்டும் மற்றோர் அடையால் மூடவும். பின்பு அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணத்தில் 2 நிமிடங்கள் இதை கிரில் செய்தால் சுவையான கிரில்டு சீஸ் காலிஃப்ளவர் தயார்.
ஹனி கார்லிக் பேக்டு காலிஃப்ளவர்
தேவை: காலிஃப்ளவர் - 250 கிராம் முட்டை - 2 (உடைத்து நன்கு அடித்துக்கொள்ளவும்) பிரெட் தூள் - ஒரு கப் தேன் - 2 டீஸ்பூன் சோயா சாஸ் - 3 டீஸ்பூன் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கவும்) எள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக்கொள்ளவும். பின்பு, துண்டுகளை அடித்துவைத்திருக்கும் முட்டையில் தோய்த்து பின்பு பிரெட் தூளில் புரட்டி, பேக்கிங் ட்ரேயில் வைத்து அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணத்தில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும். பின்பு ஒரு பானில் (pan) சோயா சாஸ், சில்லி சாஸ், தேன், நறுக்கிய பூண்டு, எள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சூடாக்கி அடுப்பை அணைக்கவும். பின்னர் பேக் செய்த காலிஃப்ளவரை அதில் சேர்த்து டாஸ் செய்து பரிமாறவும்.
காலிஃப்ளவர் பொடிமாஸ்
தேவை: காலிஃப்ளவர் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் முட்டை - 2 எண்ணெய் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து மேலும் வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். காலிஃப்ளவர் வெந்தவுடன் அதை ஓரமாக அகற்றி, கடாயின் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வதக்கவும். முட்டை வெந்தவுடன் கடாயின் ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்த காலிஃப்ளவரையும் முட்டையுடன் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான காலிஃப்ளவர் பொடிமாஸ் தயார்.
காலிஃப்ளவர் சீஸ் பால்ஸ்
தேவை: காலிஃப்ளவர் - 500 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - கால் டீஸ்பூன் பிரெட் கிரம்ப்ஸ் (பிரெட் தூள்) - ஒன்றரை கப் முட்டை – ஒன்று பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) சீஸ் துண்டுகள் - 50 கிராம் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு உப்பு - தேவையான அளவு

செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து நன்கு துருவிக்கொள்ளவும். பின்பு அதில் இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரை கப் பிரெட் கிரம்ப்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மாவு பதம் போல் வரும் வரை நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. பின்பு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, அவற்றின் நடுவில் சிறிய சீஸ் துண்டை வைத்து மூடவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் மீதமுள்ள பிரெட் கிரம்ப்ஸை எடுத்துக்கொள்ளவும். செய்துவைத்திருக்கும் காலிஃப்ளவர் உருண்டைகளை முட்டையில் தோய்த்து பின்பு, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் சீஸ் பால்ஸ் தயார். டொமேட்டோ சாஸ் வைத்துப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் சிக்கன் லசான்யா
தேவை: காலிஃப்ளவர் - 300 கிராம் (வேகவைக்கவும்) சிக்கன் கீமா - 250 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - அரை கப் க்ரீம் சீஸ் - 100 கிராம் துருவிய சீஸ் - ஒரு கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு சிக்கன் கீமா, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். சிக்கன் வெந்தவுடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வேகவைத்த காலிஃப்ளவர் மற்றும் க்ரீம் சீஸ் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். பின்னர், சில்வர் ஃபாயில் அல்லது பேக்கிங் ட்ரேயில் முதலில் சிக்கன் கலவையைப் பரப்பவும். பின்பு மேலே சீஸ் துருவலைத் தூவவும். அதன் மேலே காலிஃப்ளவர் கலவையைப் பரப்பவும். பின்பு மீண்டும் சீஸ் துருவலைத் தூவி, அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணத்தில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் காலிஃப்ளவர் சிக்கன் லசான்யா தயார்.
ரசிக்கலாம்... ருசிக்கலாம்... இளைக்கலாம்!
காணும்போதே கண்களைக் கவர்ந்து வாங்கிச் சுவைக்கத் தூண்டும் காய்கறிகளின் பட்டியலில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின்கள், நார்ச்சத்து, கால்சியம், புரதம் எனப் பல்வேறு சத்துகளை உள்ளடக்கி, ஆரோக்கியத்தின் பாதுகாவலானாகத் திகழ்கிறது காலிஃப்ளவர். கால் மூட்டு முதல் மூளை வரை உடலின் பல பாகங்களுக்கும் நன்மைகளை வாரி வழங்குவதுடன், பருமனிலிருந்தும் பாதுகாக்கிறது.

காலிஃப்ளவரில் தயாரிக்கப்படும் உணவுகள் இளம் வயதினரை மிகவும் கவர்ந்திழுக்கின்றன. ஆரோக்கியம், சுவை இரண்டின் அசத்தல் காம்பினேஷனாக விளங்கும் காலிஃப்ளவரில் 30 வகை ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார், WAHE’s DIARY என்ற பெயரில் முகநூல் பக்கத்தை நிர்வகிக்கும் வஹீதா அசாருதீன்.
சூப், சீஸ் பால்ஸ், பட்டர் மசாலா, ஃப்ரை, மிளகு வறுவல், புலாவ், பராத்தா, மஃபின் என இங்கே வரிசைகட்டி நிற்கும் அட்டகாசமான ரெசிப்பிகள், நாவின் சுவை நரம்புகளைச் சுண்டியிழுக்கும்; உங்கள் குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்தும்.
தொகுப்பு: ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்