ரெசிப்பிஸ்
Published:Updated:

ஆனி மாத பிரசாதங்கள்

ஆனி மாத பிரசாதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனி மாத பிரசாதங்கள்

ஆனி மாத பிரசாதங்கள்

ஆனி மாத பிரசாதங்கள்

த்தராயண காலத்தின் கடைசி மாதம் ஆனி. கடுமையான கோடைக்காலம் நீங்கிக் குளிர்த் தென்றல் வீசத் தொடங்கும் காலம். இதனால் இந்த மாதத்தில் சகல தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் செய்விப்பார்கள். குறிப்பாக, சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனமும், திருவரங்கம் ரங்கநாதருக்கு ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேகமும் நடைபெறும். உறையூர்  வெக்காளிக்கு மாம்பழ அபிஷேகமும் திருச்சி தாயுமானவருக்கு வாழைப்பழப் படையலும் விசேஷமாக நடைபெறும். காரைக்கால் மாங்கனி திருவிழா ஆனி மாதத்தில் மற்றொரு சிறப்பான பண்டிகை. மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி உள்ளிட்ட பல ஆலயங்களில் ஆனி பௌர்ணமி நாளில் தெப்பத் திருவிழா நடைபெறும். ஆனி பௌர்ணமி நாளில் ஈசனுக்கு முக்கனிகள் படைத்து வேண்டுவது சகல சௌபாக்கியங்களையும் அருளும். இந்த மாதத்தில் சாவித்திரி விரதம் எனும் மங்கள கௌரி விரதம், நிர்ஜலா ஏகாதசி போன்ற விரதங்களும், ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி போன்றவையும் விசேஷமானவை.

ஆனி மாத பிரசாதங்கள்

விழாக்களுக்கும் விரதங்களுக்கும் பெயர்பெற்ற இந்த ஆனி மாதத்துக்குரிய விசேஷ நைவேத்தியங்களை அளிக்கிறார் சென்னை திருவான்மியூரில் வசிக்கும்  ரம்யா ஹரி. பாரம்பர்ய உணவு வகைகளைச் செய்வதில் நிபுணத்துவம் கொண்ட இவரது கைவண்ணத்தில் இதோ ஆனி மாத பிரசாதங்கள்...

  -மு.ஹரி காமராஜ், படங்கள்: பெ.ராக்கேஷ்

ஆனி பௌர்ணமி 17-6-19

ஆனி பௌர்ணமியில் ஈசனுக்கு முக்கனிகளைப் படைக்கும்போது நவதானியக் கொழுக்கட்டையையும் படைக்கலாம். நவகிரகங்களின் நாயகனான ஈசனின் ஆசியைப்பெற்று தோஷங்கள் நீங்கி வாழலாம்.

நவதானியக் கொழுக்கட்டை

தேவையானவை:
* நவதானியங்கள் - 2 கப்
* கேழ்வரகு - 2 கப்
* ஏலக்காய் - 10
* முந்திரி - 20
* நெய் - தேவையான அளவு
* துருவிய வெல்லம் - 2 கப்

ஆனி மாத பிரசாதங்கள்

செய்முறை:

அரிசி, துவரை, மொச்சை, எள், கோதுமை, பாசிப் பயறு, கொள்ளு, உளுந்து, கொண்டைக் கடலை போன்றவையே பொதுவாக நவதானியம் எனப்படும். இவற்றைச் சம அளவில் 2 கப் எடுத்து சுத்தம் செய்து மொத்தமாக வறுத்துக் கொள்ளவும். கேழ்வரகையும் சுத்தம் செய்து வறுத்துக்கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து ஓர் அகலமான பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சிக்கொள்ளவும். தானிய மாவில் பாகை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும்.

மாவுடன் பாகு சேரும்படி நன்கு பிசைந்து, அதில் பொடித்த ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரியைச் சேர்க்கவும். முந்திரியை வறுத்த நெய்யையும் சேர்க்கவும். கொழுக்கட்டை வாசனையாக இருக்கும்.

இப்போது மாவை உருண்டை அல்லது உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில்  வேகவைத்து  எடுக்கவும்.

ஆனி திருவோண விரதம் 21-6-19

திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. திருவோண நட்சத்திரத்தில்தான் வாமனர் அவதரித்தார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூதேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்து மணந்துகொண்டதும் திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலில் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

ராகு பகவானுக்கு உகந்த தானியம் உளுந்து. திருவோண விரத நாளில் முழு கறுப்பு உளுந்தால் செய்யப்பட்ட பலகாரங்களைப் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தால் ராகுவின் அருளும் ஆசியும் பெற்று நினைத்த காரியத்தில் வெற்றி பெறலாம் என்கின்றன ஆன்மிக நூல்கள். இன்றும் ஒப்பிலியப்பன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் உப்பு சேர்க்காமல் செய்யப்படும் கறுப்பு உளுந்து வடை, உடலுக்கு வலிமை சேர்க்கக்கூடியது.


கறுப்பு உளுந்து வடை

தேவையானவை:
* முழு கறுப்பு உளுந்து - ஒரு கப்
*பாதியாகப் பொடித்த மிளகு - 2 டீஸ்பூன்
* ஓமம் - ஒரு டீஸ்பூன்
* உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஆனி மாத பிரசாதங்கள்

செய்முறை:

தோல் நீக்காத முழு உளுந்தை 5 மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வடை மாவு பதத்தில் எடுத்துக்கொண்டு, அதில் பொடித்த மிளகு, ஓமம், உப்பு சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து நைவேத்தியம் செய்யவும்.

குறிப்பு:

நைவேத்தியத்துக்கு உப்பு சேர்க்க மாட்டார்கள்.

கூர்ம ஜயந்தி 29-6-19

செல்வங்களையும் பதவிகளையும் இழந்த தேவர்கள் திருமாலின் ஆணைப்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற விழைந்தனர். அப்போது மேரு மலையைத் தாங்கி பாற்கடலில் நீந்தி அந்தப் பரந்தாமன் கூர்ம வடிவெடுத்து தேவர்களைக் காத்தார்.

பரந்தாமன் பாற்கடலில் கூர்ம வடிவெடுத்த இந்தப் புனித நாளில் விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு அஷ்டோத்திரம் போன்றவற்றைப் பாராயணம் செய்து, பாலில் செய்யப்பட நைவேத்தியங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் செல்வங்களையும் பதவிகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

பால் கருப்பட்டி பணியாரம்

தேவையானவை:
* புழுங்கல் அரிசி - ஒரு கப்
* பச்சரிசி - ஒரு கப்
* உளுத்தம்பருப்பு - ஒரு கப்
* எள் - 2 டீஸ்பூன்
* தேங்காய் - ஒன்று
* ஏலக்காய் - 5
* கருப்பட்டி அல்லது சர்க்கரை - 2 கப்
* எண்ணெய் - அரை லிட்டர்
* உப்பு - தேவையான அளவு

ஆனி மாத பிரசாதங்கள்

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு இவை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்துக்கு கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும். இதில் உப்பு, எள் சேர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும் அதில்  மாவைச் சிறிய கரண்டியில் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு பொன்னிறப் பணியாரங்களாகப் பொரித்தெடுக்கவும். 

தேங்காயைத் துருவி பால் எடுக்கவும். கருப்பட்டி அல்லது  சர்க்கரையைப் பாகு எடுத்து வடிகட்டி, அதைத் தேங்காய்ப்பாலில் சேர்க்கவும். இதில் ஏலக்காயைப் பொடித்துச் சேர்த்துக் கலக்கவும். இந்தப் பாலில், பொரித்தெடுத்த பணியாரங்களைச் சேர்த்து ஊறவைத்து, படையலுக்கு வைக்கவும்.

ஆனி உத்திர தரிசனம் 8-7-19

ஆனி மாத சஷ்டி திதியும் உத்திர நட்சத்திரமும் சேர்ந்த ஆனி உத்திர தரிசனம் ஆயுளைக் கூட்டும் என்பார்கள். ஆண்டுக்கு ஆறு முறை வரும் நடராஜர் அபிஷேக நாள்களில் இந்நாளே வெகுவிசேஷமானது என்பர். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இந்நாளில் நடைபெறும் திருமஞ்சன வைபோகம் அற்புதமானது.

இந்நாளில் ஈசனின் மனம் குளிர செய்விக்கப்படும் அபிஷேகங்களைச் சிவாலயங்களில் கண்டு தரிசிக்கலாம். நம் இல்லங்களில் பன்னிரு திருமுறைகள் பாடியும் திருவாதிரைக் களி, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நைவேத்தியம் செய்தும் வழிபட்டு சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

சிவப்பு அரிசி பொங்கல்

தேவையானவை:
* பச்சரிசி - அரை கிலோ
* சிவப்பு பச்சரிசி - அரை கிலோ
* வெல்லம் - ஒரு கிலோ
* நெய் - தேவையான அளவு
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 20
* ஏலக்காய் - 20
* பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

ஆனி மாத பிரசாதங்கள்

செய்முறை:

ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். முந்திரி, உலர் திராட்சையை  நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இரண்டு அரிசிகளையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குழைய வேகவைக்கவும்.

வெல்லத்தைப் பாகு காய்ச்சி, வெந்த சாதத்தில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர்  நெய்யைச் சேர்த்து மேலும் குழைத்துக் கிளறி இறக்கவும்.

அதில் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, பொடித்த ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி படைக்கவும் (பூவன்பழத்தை மசித்து இதில் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்).

ஸ்ரீசுதர்சன ஜயந்தி 10-7-19

ஆனி மாதம் தசமி திதி, சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் அவதரித்தார். திருமாலின் திருக்கரத்தில் திகழும் ஸ்ரீசக்கரமே சுதர்சன ஆழ்வார் என்று துதிக்கப்படுகிறது.

திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் துதிக்கும் இந்த திருவாழியாழ்வான் தன்னைத் துதிக்கும் பக்தர்களைக் காப்பவர்; பக்தர்களுக்கு இன்னல் தரும் துஷ்ட எதிரிகளை விரட்டுபவர் என்று புராணங்கள் கூறுகின்றன. நோய், கவலை, பயம், தொல்லை, விரயம், மரணம் என சகல தீமைகளையும் களையும் சுதர்சன மூர்த்தியை வழிபட்டு இனிப்பான நைவேத்தியங்கள் படைத்துக் கொண்டாடலாம்.

தினை பாயசம்

தேவையானவை:

* தினை - 2 கப்
* வெல்லம் - 3 கப்
* தேங்காய் - ஒன்று (பெரியது)
* நெய் - தேவையான அளவு
* முந்திரி - 10
* உலர்திராட்சை - 20
* ஏலக்காய் - 5

ஆனி மாத பிரசாதங்கள்

செய்முறை:

ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி ஒரு பிடி எடுத்து வைத்துவிட்டு மீதியில் பாலெடுத்துக் கொள்ளவும். முந்திரி, உலர்திராட்சையை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். தினையைக் கழுவி சுத்தம் செய்து குழைய வேகவிடவும்.

ஆனி மாத பிரசாதங்கள்

வெல்லத்தைப் பாகு காய்ச்சி வடிகட்டவும். குழைந்த தினையில் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும். இதில் எடுத்துவைத்துள்ள தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும்.

பின்னர் நெய்யைச் சேர்த்து அடிப் பிடிக்காமல் கிளறி இறக்கவும். இந்தப் பாயசத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கலக்கவும்.

இத்துடன் ஆப்பிள், அன்னாசி பழத் துண்டுகளையும் சேர்த்தும் நைவேத்தியம் செய்யலாம்.