நெல், கோதுமை, பாசிப் பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை ஆகியவையே நவதானியங்கள். புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளின்போது வீடுகளின் முன்பு பந்தல் அமைக்க ச்ில வழிபாடுகள் செய்வது உண்டு. அப்போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடுவது வழக்கம். எத்தனையோ தானியங்கள் இருந்தாலும், மேற்கூறிய ஒன்பது தானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ‘நவதானியங்கள்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பதிலிருந்தே இவற்றின் பெருமையை அறியலாம்.

நெல் நம் மண்ணின் முதன்மைத் தாவரம். கோதுமை நார்ச்சத்துடன் கூடிய இணை உணவுப் பயிர். எள்ளும் கொள்ளும் பழமொழிகள் முதல் உணவுத் திட்டம் வரை இடம்பிடித்துள்ள சத்துத் தானியங்கள். பயறு, துவரை, மொச்சை ஆகியவற்றில் நிறைந்து காணப்படும் சத்துகளைப் பட்டியலிட இந்தப் பக்கமே போதாது. தாளிப்பதில் தொடங்கி, தலைவாழை விருந்துப் பட்டியல் வரை உளுந்து நம் உணவில் இடம்பெறாத நாளே கிடையாது. காந்தி காலம் தொட்டு எளிய முறையில் பசியாற துணை நிற்பது கடலை. இப்படி சிறப்புகள் கொண்டவை இந்த நவதானியங்கள்.

இந்தத் தானியங்களை வழக்கமாக நாம் பயன்படுத்துவதைத் தாண்டி என்னென்ன செய்ய முடியும்? இதோ... சுவையான உணவு வகைகளை எளிமையாகச் செய்ய வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுதா செல்வகுமார்.

படங்கள்: தி.குமரகுருபரன்

கோதுமை சாக்லேட் உருண்டை

தேவையானவை:
* முழு சம்பா கோதுமை - அரை கிலோ
* உடைத்த முந்திரிப்பருப்பு (நெய்யில் வறுத்தது) - 2 டேபிள்ஸ்பூன்
* நெய் - 100 கிராம் (உருக்கவும்)
* சாக்லேட் சாஸ் – கால் கப்
* பொடித்த சர்க்கரை - கால் கிலோ
* ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

வெறும் வாணலியை அடுப்பில்வைத்துச் சூடாக்கவும். அதில் சம்பா கோதுமையைச் சிவக்க வறுத்து, மாவு மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு, அதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கலக்கவும்.

உருக்கிய நெய், சாக்லேட் சாஸ் இரண்டையும் சிறிது சிறிதாக மாவில் சேர்த்துப் பிசிறி, கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும் (இனிப்பு விரும்பிகள் சற்று கூடுதலாக சாக்லேட் சாஸ் சேர்த்துக்கொள்ளலாம்).

குறிப்பு:
சம்பா கோதுமைக்கு உடலின் சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கும் திறன் இருக்கிறது.

*நீரிழிவாளர்களின் உணவுப்பட்டியலில் சம்பா கோதுமை இடம்பெறுவது சிறப்பு.

பச்சைப் பயறு வடை

தேவையானவை:
* பச்சைப் பயறு - ஒரு கப்
* சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* தோல் நீக்கிய இஞ்சி - கால் அங்குலத் துண்டு
* பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சைப் பயறைத் தண்ணீரில் 5 - 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை நன்கு வடித்து இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

பச்சைப் பயறு, புரோட்டீன் மற்றும் ஃபைபர் நிறைந்தது. உடல் சூட்டைத் தணிக்கும்; கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

*முளைகட்டிய பச்சைப் பயறு, தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள். இதுவே குழந்தைகள் விரும்பும் க்ரீன் தோசை!

பச்சை மொச்சை பிரியாணி

தேவையானவை:
* பாஸ்மதி அரிசி - ஒரு கப்
* பச்சை மொச்சை - அரை கப்
* நறுக்கிய குடமிளகாய் - அரை கப்
* பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
* தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
* சின்ன வெங்காயம் - 5

* கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பிரெட் ஸ்லைஸ் - 2
* கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
* பிரியாணி இலை - ஒன்று
* அன்னாசிப்பூ - சிறிதளவு
* எண்ணெய், நெய் - தேவையான அளவு
* உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசியைக் கழுவி நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்துக்கொள்ளவும். பிரெட் துண்டின் ஓரங்களை நீக்கி, சின்ன சதுரங்களாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். தோல் நீக்கிய சின்ன வெங்காயம், இஞ்சியுடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும், ஊறிய அரிசியைப் போட்டு லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் குக்கரில் சிறிதளவு எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கவும். அதில் பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்த்து வறுக்கவும். இதனுடன் பெரிய வெங்காயம் குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்துக் கிளறி, பச்சை மொச்சை, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் கிளறவும். இதனுடன் இரண்டு கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். பின்னர் அரிசியைச் சேர்த்துக் கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பச்சை மொச்சை பிரியாணி தயார். மேலே பிரெட் துண்டுகளைத் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

* பிரெட் துண்டுகளைச் சாப்பிடும் நேரத்தில் பிரியாணியில் சேர்க்கவும். அப்போதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.

* பச்சை மொச்சை கிடைக்கவில்லை யென்றால் காய்ந்த மொச்சையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்தவும்.

*இட்லி, தோசை, சூடான சாதத்துக்கு நல்ல துணை பச்சை மொச்சை குழம்பு. பச்சை மொச்சையோடு தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள்தூள், கடுகு, உளுந்து, உப்பு ஆகியவற்றைக் கொண்டு இக்குழம்பைத் தயாரிக்கலாம்.

எள்ளுப்பொடி மினி இட்லி ஃப்ரை

தேவையானவை:
* எள் - அரை கப்
* மினி இட்லி - ஒரு கப் (எண்ணிக்கையில் 15 இட்லிகள்)
* காய்ந்த மிளகாய் - 10
* நெய் - சிறிதளவு
* பூண்டு - 6 பல்
* பெருங்காயத்தூள் - சிறிதளவு
* முழு உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* கறிவேப்பிலை – சிறிதளவு

* எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாயை வறுத்து தனியே எடுத்துவைக்கவும். பிறகு வாணலியில் மீண்டும் சிறிதளவு எண்ணெய்விட்டு எள், உளுத்தம்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியைக் காற்றுப்புகாத டப்பாவில் எடுத்துவைத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது தேவையான அளவு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்றொரு வாணலியில் சிறிது நெய்விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மினி இட்லிகளைச் சேர்த்து, 2 டேபிள்ஸ்பூன் எள்ளுப்பொடி போட்டுக் கிளறி , கொத்தமல்லி தூவிக் கலந்து இறக்கவும்.

குறிப்பு:

எள்ளுப்பொடி செய்வதற்கான பொதுவான செய்முறைக்குறிப்பு மேலே தரப்பட்டுள்ளது. எனவே, தயாரித்த பொடி முழுவதையும் இட்லியில் போட்டுவிடக் கூடாது. எவ்வளவு இட்லிகள் எடுத்துக்கொள்கிறோமோ, அதற்கேற்ப எள்ளுப்பொடியைப் போட வேண்டும்.

*பழங்காலத்தில் எள் ஓர் இயற்கையான கருத்தடை முறையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொள்ளு ரசம்

தேவையானவை:
* கொள்ளு - 50 கிராம்
* தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* மிளகு - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு
* பூண்டு - 3 பல்
* உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
* ரசப்பொடி - ஒரு டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* பொடித்த வெல்லம் - ஒரு சிட்டிகை
* புளித்தண்ணீர் - அரை கப்
* காய்ந்த மிளகாய் - 3
* நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொள்ளை அலசி 4 - 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் மஞ்சள்தூள், உப்பு போட்டு, குக்கரில் சேர்த்து நான்கு விசில்விட்டு மெத்தென்று வேகவிடவும். சற்று ஆறவைத்து, கொள்ளில் இருக்கும் தண்ணீருடனேயே மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டவும். பின்னர் பெரிய கண் உடைய வடிகட்டியில் அரைத்த கொள்ளு விழுதைப் போட்டு தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியே வைக்கவும். இதில்தான் ரசம் வைக்கப் போகிறோம் (வெந்த கொள்ளை வீணாக்காமல் துவையல் செய்து சாப்பிடலாம்).

அம்மி அல்லது மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி... புளித்தண்ணீர், கொள்ளுத் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அரைத்த மிளகு - சீரகப் பொடி, உப்பு, ரசப்பொடி பெருங்காயத்தூள் சேர்த்து, ரசம் பொங்கி நுரைத்து வரும்போது பொடித்த வெல்லம், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:

கொள்ளு ரசம் ஜலதோஷத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். ஊளைச்சதையைக் குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளது.

*எலும்புக்கும் நரம்புக்கும் வலு சேர்க்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு.

நவதானியக் கஞ்சி

தேவையானவை:
* நவதானிய மாவு - அரை கப்
* நாட்டுச்சர்க்கரை, வறுத்த முந்திரிபருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* காய்ச்சிய பால் - 2 கப்

செய்முறை:

நவதானிய மாவுடன் தேவையான நீர்விட்டு கரைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் ஊற்றி நன்கு கிண்டவும். மாவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். இதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, முந்திரிப்பருப்பு தூவி, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பருகவும்.

குறிப்பு:

* நவதானிய மாவு, கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது; அல்லது நாமே நவதானியங்களைச் சரிசம அளவு வாங்கி தனித்தனியே வாணலியில் சிவக்க, மணக்க வறுத்து மாவு மெஷினில் கொடுத்து அரைத்துவைத்துப் பயன்படுத்தலாம்.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கஞ்சியைப் பருகலாம். இந்தக் கஞ்சி, உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்விக்கும். நவதானியத்தில் மட்டுமல்லாமல் சிறுதானியத்திலும் இது போலக் கஞ்சி செய்து பருகலாம்.

*ஏலக்காயில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை.

நெல் பொரி உருண்டை வித் சுகர் பால்ஸ்

தேவையானவை:
* நெல் பொரி - 3 கப்
* சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* வெல்லம் (பொடித்தது) - ஒரு கப்
* கலர் சுகர் பால்ஸ், தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - தலா 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். திக்கான பாகுபதம் வந்ததும் குறைந்த தீயில் அடுப்பை வைத்து, இதனுடன் நறுக்கிய தேங்காய்ப் பல், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கிளறவும். பின்னர் நெல் பொரி சேர்த்துக் கிளறி அனைத்தும் சேர்ந்து வந்ததும் அடுப்பை நிறுத்தி, கலர் சுகர் பால்ஸ் போட்டுக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு:

* இது எளிதில் செய்யக்கூடிய சத்தான உருண்டை. கலர் சுகர் பால்ஸ் சேர்ப்பது குழந்தைகளைக் கவர்வதற்கே. இது பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சுகர் பால்ஸ் கிடைக்கவில்லையென்றால் கலர் கலராகக் கிடைக்கும் சீரக மிட்டாயையும் பயன்படுத்தலாம்.

* வெல்லப்பாகு திக்காக வரும்போது அதனுடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். பாகின் பதம் மாறாது.

*அருணகிரிநாதரின் திருப்புகழில் பொரி பற்றிய குறிப்புகள் உள்ளன.

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை:
* பச்சை வேர்க்கடலை (வறுக்காத வேர்க்கடலை) - ஒரு கப்
* கடலை மாவு – 50 கிராம்
* அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* தோல் சீவிய இஞ்சி - கால் அங்குலத் துண்டு
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிதளவு
* சோம்பு - அரை டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 2
* பொரித்த அப்பள கோன் – தேவையான அளவு
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்ந்த மிளகாயைப் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பச்சை வேர்க்கடலையை ஈரப்பதம் போக மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சியுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து மையாக அரைத்துக்கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவைச் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும்.

பிறகு வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி மூடி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வேர்க்கடலை மசாலா கலவையை உதிரி உதிரியாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது அப்பள கோனில் போட்டும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

குறிப்பு:

பொரித்த அப்பள கோன் டிபார்ட்மென்டல் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. அல்லது ஈர அப்பளம் கொண்டும் கோன் செய்யலாம்.

அது நெகிழும் தன்மை வாய்ந்தது. பிறகு அதை நாமே எண்ணெயில் பொரித்தும் பயன்படுத்தலாம். வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள் இதைச் சாப்பிட்டால் நல்ல பலன் அடையலாம். புரதச்சத்து நிறைந்த கடலை நெஞ்சுச் சளியை நீக்கும் வல்லமை பெற்றது.

*தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது வேர்க்கடலை.

துவரை உருளை மசாலா சாட்

தேவையானவை:
* பச்சைத் துவரை - ஒரு கப்
* பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று
* தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 2
* சோம்பு - ஒரு டீஸ்பூன்

* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலைப் பொடி - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* உலர் மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - ஒரு சிட்டிகை
* கொத்தமல்லித்தழை - கால் கப்
* பச்சை மிளகாய் - 2
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சைத் துவரையைக் கழுவி தண்ணீர்விட்டு மெத்தென்று வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கைக் கழுவி தோல் சீவி, உப்பு சேர்த்து வேகவிட்டு சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, சோம்புடன் சிறிது தண்ணீர் தெளித்து மையாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கு, துவரை சேர்க்கவும். இதில் உப்பு, மாங்காய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி வேர்க்கடலைப் பொடி தூவி இறக்கவும்.

இதை பிரெட், சப்பாத்தி தோசை நடுவே வைத்து சாப்பிடலாம். சாதத்துக்கும் சைடிஷ் ஷாக தொட்டுச் சாப்பிடலாம்.

குறிப்பு:

பச்சைத் துவரை கிடைக்கவில்லையென்றால் காய்ந்த துவரையை 8 மணி நேரம் ஊற வைத்து பிறகு வேகவைத்துப் பயன்படுத்தவும்.

*துவரை ஆசியாவில்தான் முதன்முதலில் பயிரிடப்பட்டது.

உளுந்து இடியாப்பம்

தேவையானவை:
* இடியாப்பம் (வெந்தது) - 2 கப் (உதிரியாக்கிக்கொள்ளவும்)
* முழு உளுத்தம்பருப்பு - அரை கப்
* தேங்காய்த் துருவல் - கால் கப்
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* காய்ந்த மிளகாய் - 2
* இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* கடுகு - அரை டீஸ்பூன்
* நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
* பச்சை மிளகாய் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
* எண்ணெய் - சிறிதளவு
* உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முழு உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து மிக்ஸியில் போட்டு, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை உதிர்த்துவிட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். வெந்த இடியாப்பதை நன்றாக உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு வேகவைத்த உளுந்து சேர்த்துக் கிளறவும். இதனுடன் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மிகவும் சத்தான சுவையான உளுந்து இடியாப்பம் தயார்.

குறிப்பு:

இந்த உளுந்து பூரணத்தைக் கொழுக்கட்டை உள்ளே வைத்து காரக்கொழுக்கட்டையாகவும் சாப்பிடலாம். உடல் பலவீனமானவர்களுக்கு உளுந்து ஒரு வரப்பிரசாதம். எலும்பு, தசை, நரம்பு வலுவடைய உளுந்து மிகவும் உதவும்.

*இந்தியாவில் கேரள மாநிலத்திலும் இலங்கையிலும் இடியாப்பம் அதிக அளவு உண்ணப்படுகிறது.