தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

30 வகை மலர் சமையல்

30 வகை மலர் சமையல்
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை மலர் சமையல்

எஸ்.மீனாட்சி

30 வகை மலர் சமையல்

முருங்கைப்பூ கட்லெட்

தேவை: முருங்கைப்பூ - ஒரு கப்  வெங்காயம் - 50 கிராம் (நறுக்கவும்)  துருவிய கேரட், வேகவைத்து மசித்த முருங்கைக்காய் சதை (இரண்டும் சேர்ந்து) - 250 கிராம்  பீன்ஸ் - 10 (நறுக்கவும்)  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  ஓட்ஸ் (தூள் செய்தது) - 100 கிராம்  ரஸ்க்தூள் - 50 கிராம்  மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்  உப்பு - தேவைக்கேற்ப  எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:
   
வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம், முருங்கைப்பூ, துருவிய கேரட், முருங்கைக்காய் சதை, பீன்ஸ் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி எடுத்து, அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும். அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்துக் கலந்து நன்கு பிசைந்து, தேவையான வடிவத்தில் கட்லெட்டுகளாகத் தட்டிவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை ரஸ்க் தூளில் புரட்டியெடுத்து வாணலியில் வைத்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

முருங்கைப்பூ வடை

தேவை: முருங்கைப்பூ - ஒரு கப்  வேகவைத்து மசித்த முருங்கை சதை - ஒரு கப்  பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்  புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி அளவு (வறுத்துப் பொடிக்கவும்)  வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்  துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 6 (நறுக்கவும்)  சோம்பு - அரை டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

முருங்கைக்காய் சதையுடன் முருங்கைப்பூ, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். பின்னர் பொட்டுக்கடலை மாவு, வறுத்துப் பொடித்த புழுங்கல் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும். இரும்புச் சத்து நிறைந்த சுவையான முருங்கைப்பூ வடை தயார்.

முருங்கைப்பூ பொரித்த கூட்டு

தேவை: முருங்கைப்பூ - ஒரு கப்  ஊறவைத்த காராமணி - ஒரு கப்  ஊறவைத்த பச்சைப் பயறு - 100 கிராம்  மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - அரை கப்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2  கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு  கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு  காய்ந்த மிளகாய் - ஒன்று  உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

குக்கரில் காராமணி, பச்சைப் பயற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்பு வேகவைத்த கலவையை வெளியே எடுத்து அதனுடன் முருங்கைப்பூ, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். மிக்ஸியில் தேங்காய்த் துருவல், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அந்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைத் தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

குறிப்பு: தேவையானால் கூட்டில் வெங்காயத்தை வதக்கிச் சேர்க்கலாம். தோசை, சப்பாத்திக்குச் சுவையான சைடிஷ் இது. சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.

முருங்கைப்பூப் பொரியல்

தேவை: முருங்கைப்பூ - ஒரு கப்  முருங்கைக்கீரை (உருவியது) - ஒரு கப்  வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்  பூண்டு - 4 பல்  வேர்க்கடலை - 50 கிராம் (வறுத்து, தோல் நீக்கியது)  காய்ந்த மிளகாய் - 4  கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பின்பு கடாயில் மீதமுள்ள எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பூண்டு, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பூண்டு, வெங்காயம் பாதி வதங்கியவுடன் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை சேர்த்து நன்கு புரட்டவும். கலவை நன்கு வெந்தவுடன் வேர்க்கடலை - மிளகாய்ப் பொடி தூவிக் கிளறவும். சுவையான பொரியல் தயார்.

சிறப்பு: பால் கொடுக்கும் தாய்மார்களும் வளரிளம் பருவத்தினரும் சூடான சாதத்தில் நெய், முருங்கைப்பூப் பொரியல் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவது நல்லது.

முருங்கைப்பூ கேழ்வரகு அடை

தேவை: முருங்கைப்பூ - ஒரு கப்  ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப்  கேழ்வரகு மாவு - 250 கிராம்  நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  பச்சை மிளகாய் - 6 (நறுக்கவும்)  இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்)  பூண்டு - 4 பல் (நறுக்கவும்)  சீரகம் - ஒரு டீஸ்பூன்  சர்க்கரை - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப  எண்ணெய் - 50 கிராம்  வாழையிலைத் துண்டுகள் - 4.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, சீரகம், சர்க்கரை, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். பின்னர் மாவை வாழையிலையில் அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சுட்டெடுக்கவும்.

சிறப்பு: நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. இந்த அடையைக் கம்பு, சோள மாவிலும் செய்யலாம்.

முருங்கைப்பூ நெய் சாதம்

தேவை: உதிரியாக வடித்த சாதம் - 2 கப்  முருங்கைப்பூ - ஒரு கப்  நறுக்கிய வெங்காயம் - அரை கப்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு - சிறிதளவு  கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு  முந்திரிப்பருப்பு – 10  உலர்திராட்சை – 10  எள் - ஒரு டீஸ்பூன்  நெய் - 4 டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  உப்பு – தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதில் எள், முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், முருங்கைப்பூ, உப்பு சேர்த்து மேலும் வதக்கி ஆறிய சாதத்தில் போட்டுப் புரட்டி எடுக்கவும். முருங்கைப்பூ நெய் சாதம் ரெடி.

சிறப்பு: பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்தது இந்த சாதம்.

வாழைப்பூ பருப்பு உசிலி

தேவை: ஆய்ந்து, நறுக்கிய வாழைப்பூ - 2 கப்  கடலைப்பருப்பு - 100 கிராம்  துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு  காய்ந்த மிளகாய் - 6  மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்  பெருங்காயம் – சிறிய துண்டு  மஞ்சள்தூள் - சிறிதளவு  எண்ணெய் - 4 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு

30 வகை மலர் சமையல்

செய்முறை:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைத்து அத்துடன் காய்ந்த மிளகாய், மல்லி, சிறிதளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வாழைப்பூ, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். அரைத்த பருப்புக் கலவையை சிறிய உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து உதிர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வேகவைத்து உதிர்த்த பருப்புக் கலவையையும், வதக்கிய வாழைப்பூக் கலவையையும் சேர்த்துப் புரட்டியெடுக்கவும். சுவையான வாழைப்பூ உசிலி தயார்.

குறிப்பு: அரைத்த பருப்புக் கலவையை ஆவியில் வேகவைக்காமல் எண்ணெயில் வதக்கி எடுத்தாலும் சுவையாக இருக்கும்.

வாழைப்பூத் துவையல்

தேவை: சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்  காய்ந்த மிளகாய் - 6  புளி - சிறு துண்டு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, எண்ணெய் - சிறிதளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

கடாயில் எண்ணெய்விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும். பின்னர் அதே வாணலியில் வாழைப்பூ சேர்த்து வதக்கவும். வாழைப்பூவுடன் புளி, உப்பு மற்றும் வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் தெளித்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

குறிப்பு: இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மற்ற டிபன் வகைகளுக்கும் சைடிஷாகப் பயன்படுத்தலாம். விரும்பினால் தேங்காய், பூண்டு வதக்கி சேர்த்தும் அரைக்கலாம்.

வாழைப்பூ வடை

தேவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்  கடலைப்பருப்பு - 200 கிராம் (ஊறவைக்கவும்)  காய்ந்த மிளகாய் - 4  நறுக்கிய வெங்காயம் - அரை கப்  இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)  சோம்பு - ஒரு டீஸ்பூன்  நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை (இரண்டும் சேர்த்து) - அரை கப்  எண்ணெய் - 500 மில்லி  உப்பு – தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். ஊறிய கடலைப்பருப்புடன் இஞ்சி, சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சூடான எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும்

சிறப்பு: பெண்களின் கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது.

வாழைப்பூக் கூட்டு

தேவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்  பயத்தம்பருப்பு (பாசிப்பருப்பு) - 100 கிராம் (சுத்தம் செய்யவும்)  வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)  தக்காளி - 4 (நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (கீறவும்)  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  பெருங்காயத் தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

பயத்தம்பருப்புடன் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பின்பு கலவையை வெளியே எடுத்து மசித்து உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மசித்த கலவையில் சேர்க்கவும். வாழைப்பூக் கூட்டு ரெடி. சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு நல்ல சைடிஷ் இது.

வாழைப்பூ மசாலா தொக்கு

தேவை: சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா ஒரு கப்  மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - அரை கப்  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு  கடுகு - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வாழைப்பூ, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். வாழைப்பூ நன்கு வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான வாழைப்பூ மசாலா தொக்கு தயார். இது தயிர் சாதம் மற்றும் தோசை வகைகளுக்குச் சிறந்தது.

வாழைப்பூ கார அடை

தேவை: பச்சரிசி - 200 கிராம்  கடலைப்பருப்பு - 50 கிராம்  பச்சைப் பயறு - 50 கிராம்  உளுத்தம்பருப்பு - 50 கிராம்  துவரம்பருப்பு - 50 கிராம்  சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்  இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)  காய்ந்த மிளகாய் - 4  பூண்டு - 4 பல்  வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
 நறுக்கிய புதினா அல்லது கொத்தமல்லித்தழை - அரை கப்  எண்ணெய் - 50 கிராம்  உப்பு - தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

பச்சரிசி - பருப்புகளை ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய வாழைப்பூ, புதினா அல்லது கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து, அடை மாவு பதத்துக்கு நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு மாவை மெல்லிய அடைகளாக வார்த்து இரண்டு பக்கமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.இதற்குத் தொட்டுக்கொள்ள தயிர் போதும்.

வாழைப்பூப் பக்கோடா

தேவை: ஆய்ந்து நீளவாக்கில் வாக்கில் நறுக்கிய வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப்  கடலை மாவு - 200 கிராம்  அரிசி மாவு - 50 கிராம்  பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கவும்)  இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்  பூண்டு - 10 பல் (நசுக்கவும்)  கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு  வெண்ணெய் - 50 கிராம்  சோம்பு - அரை டீஸ்பூன்  எண்ணெய் - அரை லிட்டர்  உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசிறிக்கொள்ளவும். பின்பு அதில் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, சோம்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசிறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பிசறிய கலவையை உதிர் உதிராகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான வாழைப்பூப் பக்கோடா தயார்.

குறிப்பு: இந்த வாழைப்பூப் பக்கோடாவை கேழ்வரகு மற்றும் சிறுதானிய மாவிலும் செய்யலாம்.

வாழைப்பூப் பக்கோடா காரக்குழம்பு

தேவை: வாழைப்பூப் பக்கோடா - ஒரு கப் (இதன் செய்முறை எதிர்ப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது)  புளிக்கரைசல் - ஒரு கப்  நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா ஒரு கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  கடுகு - சிறிதளவு  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு  உப்பு - தேவைக்கேற்ப  நல்லெண்ணெய் - 50 கிராம். அரைக்க:  தேங்காய் - ஒரு துண்டு  கசகசா - 2 டீஸ்பூன்  பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

அரைக்கக்கொடுத்துள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்தவுடன் அரைத்த தேங்காய் - கசகசா - பொட்டுக்கடலை விழுதைச் சேர்த்து மேலும் நன்றாகக் கொதிக்கவிட்டு தயாரித்த பக்கோடாவைச் சேர்த்து இறக்கவும். சுவையான பக்கோடா காரக்குழம்பு தயார்.

வாழைப்பூ கட்லெட்

தேவை: நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்  வெங்காயம் - 50 கிராம் (நறுக்கவும்)  கேரட் - 100 கிராம் (நறுக்கவும்)  உருளைக்கிழங்கு - 100 கிராம் (வேகவைத்து மசிக்கவும்)  பீன்ஸ் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)  பச்சைப் பட்டாணி - 50 கிராம்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  ரஸ்க்தூள் - 50 கிராம்  சோம்பு - ஒரு டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வாழைப்பூ, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். பின்னர் ரஸ்க் தூள் கலந்து பிசைந்து கட்லெட் வடிவத்தில் தட்டிவைக்கவும். கட்லெட்டுகளை சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ஆவாரம்பூ காய்கறிப் பொரியல்

தேவை: ஆவாரம்பூ, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப்  துருவிய கேரட் - ஒரு கப்  வேகவைத்த பட்டாணி - அரை கப்  தேங்காய்த் துருவல் - அரை கப்  நறுக்கிய தக்காளி - அரை கப்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  மஞ்சள்தூள் - சிறிதளவு  உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு  சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை – சிறிதளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பின்னர் துருவிய கேரட், வேகவைத்த பட்டாணி, நறுக்கிய ஆவாரம்பூ, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும். கலவை நன்கு வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.

குறிப்பு: இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடிஷாகவும் பயன்படுத்தலாம்.

ஆவாரம்பூக் கூட்டு

தேவை: ஆவாரம்பூ - ஒரு கப்  பயத்தம்பருப்பு (பாசிப்பருப்பு) - 50 கிராம்  கடலைப்பருப்பு - 50 கிராம்  வெங்காயம் - 3 (நறுக்கவும்)  தக்காளி – 2 (நறுக்கவும்)  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. அரைக்க:  துருவிய தேங்காய் - அரை கப்  பச்சை மிளகாய் – 4  சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:  எண்ணெய் - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் – 2  கறிவேப்பிலை - சிறிதளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

அரைக்கக்கொடுத்துள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். பயத்தம்பருப்பு, கடலைப்பருப்புடன் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, அவற்றுடன் ஆவாரம்பூ சேர்த்து மேலும் வதக்கவும். நன்கு வதங்கியவுடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். கலவை நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

சிறப்பு: டயட்டில் இருப்பவர்களுக்கு இந்தக் கூட்டு மிகவும் நல்லது.

ஆவாரம்பூ அடை

தேவை: ஆவாரம்பூ - ஒரு கப்  கோதுமை ரவை - ஒரு கப்  நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை - தலா அரை கப்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு (எல்லாம் சேர்த்து) - 200 கிராம்  காய்ந்த மிளகாய் - 4  இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)  பூண்டு - 4 பல்  சோம்பு - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப  எண்ணெய் - 50 மில்லி.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

பருப்புகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அவற்றுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். பிறகு கோதுமை ரவையை ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்த பருப்புக் கலவையுடன் கலக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், ஆவாரம்பூ, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசை தவாவில் மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: கோதுமை ரவைக்குப் பதில், ஓட்ஸ், சிறு தானியங்களை ஊறவைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த அடை மிகவும் நல்லது.

ஆவாரம்பூ கோதுமை மாவு பக்கோடா

தேவை: ஆவாரம்பூ, கோதுமை மாவு - தலா ஒரு கப்  அரிசி மாவு - 2 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்)  பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப  கறிவேப்பிலை - 2 ஆர்க்கு  ஓமம் அல்லது சோம்பு - அரை டீஸ்பூன்  எண்ணெய் - 500 மில்லி  வெண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறிக்கொள்ளவும். இதனுடன் ஓமம் அல்லது சோம்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஆவாரம்பூ, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பிசறிய மாவை உதிர் உதிராகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இது மாலை நேர ஸ்நாக்ஸாகச் சாப்பிட ஏற்றது.

குறிப்பு: வெங்காயத்துக்குப் பதில் கோஸ், கேரட்டும் சேர்க்கலாம். கோதுமை மாவுக்குப் பதில் கேழ்வரகு மாவு, கடலை மாவும் பயன்படுத்தலாம்.

ஆவாரம்பூ காய்கறி ஊத்தப்பம்

தேவை: ஆவாரம்பூ - ஒரு கப்  தோசை மாவு - அரை கிலோ  நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  துருவிய கோஸ், கேரட் (சேர்ந்து) - ஒரு கப்  முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்  பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 100 மில்லி  உப்பு – தேவைக்கேற்ப. தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - சிறிதளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

தோசை மாவில் உப்பு, சீரகம் மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் முளைகட்டிய பச்சைப் பயறு, கோஸ், கேரட், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி தோசை மாவில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்பு தோசை தவாவில் கொஞ்சம் எண்ணெய்விட்டு ஆவாரம்பூவை வதக்கவும். இதை தோசை மாவுக் கலவையில் சேர்க்கவும். தோசை தவாவில் மாவை சிறிது கனமாக ஊற்றி, எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு ஊத்தப்பமாக எடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

 செம்பருத்திப்பூ ஜூஸ்

தேவை: ஒற்றை அடுக்கு சிவப்பு செம்பருத்தி இதழ்கள் - 10 தேங்காய்த் துருவல் - அரை கப்  காய்ச்சி ஆறவைத்த பால் - 100 மில்லி  ஐஸ்கட்டி - 2  தேன் - 2 டீஸ்பூன்  சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

தேங்காய்த் துருவலை நன்கு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதில் செம்பருத்தி இதழ், தேன், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்து மறுபடியும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதனுடன் காய்ச்சி ஆறவைத்த பாலைக் கலக்கவும். சுவையான செம்பருத்தி ஜூஸ் ரெடி.

சிறப்பு: இதயநோயாளிகளுக்கு இந்த ஜூஸ் மிகவும் உகந்தது. சிறுவர்களும் அருந்தலாம்.

செம்பருத்தி எலுமிச்சை புதினா ஜூஸ்

தேவை: ஒற்றை அடுக்கு சிவப்பு செம்பருத்தி இதழ்கள் - ஒரு கப்  புதினா இலை - ஒரு கப்  இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்)  எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்  ஐஸ்கட்டி - 2  நறுக்கிய வெள்ளரிக்காய் - அரை கப்  உப்பு - ஒரு சிட்டிகை  தண்ணீர் - 200 மில்லி.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

இஞ்சி, வெள்ளரிக்காய், செம்பருத்தி இதழ்களுடன் புதினா, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்துக் கலந்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச்சாறு, தேவையான தண்ணீர், ஐஸ்கட்டி சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

சிறப்பு: உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ் இது. இதயநோயாளிகளுக்கும் உகந்தது.

செம்பருத்தி வெந்தய தோசை

தேவை: காம்புடன் கூடிய செம்பருத்திப்பூ - 10  முளைகட்டிய வெந்தயம் - 50 கிராம்  பச்சரிசி - 100 கிராம்  சிவப்பு அவல் - 100 கிராம்  பச்சை மிளகாய் - 2  தேங்காய்த் துருவல் - அரை கப்  சீரகம் (அல்லது) சோம்பு - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப  எண்ணெய் - 50 மில்லி.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். சிவப்பு அவலையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் ஊறிய பச்சரிசி, சிவப்பு அவல், பச்சை மிளகாய், சீரகம் (அல்லது) சோம்பு, தேங்காய்த் துருவல், முளைகட்டிய வெந்தயம், செம்பருத்தி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை 6 மணி நேரம் புளிக்கவைக்கவும். தோசை தவாவில் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.

ரோஜாப்பூ மில்க்‌ஷேக்

தேவை: பன்னீர் ரோஜா அல்லது சிவப்பு ரோஜா இதழ்கள் - ஒரு கப்  பால் - அரை லிட்டர்  சர்க்கரை - 50 கிராம்  துருவிய பாதாம், முந்திரி (இரண்டும் சேர்ந்து) - அரை கப்  பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்)  ஐஸ் கட்டிகள் - 5.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும். ரோஜா இதழ்களை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பின்னர் அதில் ஊறிய பாதாம் பிசின் சேர்த்து 50 மில்லி பால்விட்டு நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலில் இந்தக் கலவையை கலந்து, துருவிய பாதாம், முந்திரி சேர்க்கவும். ஜூஸ் டம்ளரில் இதை ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும். கோடைக்கு ஏற்ற குளிர்பானம் இது.

ரோஜா நட்ஸ் ரைஸ்

தேவை: பன்னீர் ரோஜா அல்லது சிவப்பு ரோஜா இதழ்கள் - ஒரு கப் பாதாம், முந்திரி - தலா 10 (துருவவும்)  வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 50 கிராம்  பிஸ்தா - 10  ஏலக்காய் - 2  பட்டை, லவங்கம் - சிறிதளவு  சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன்  நறுக்கிய வெங்காயம் - அரை கப்  பூண்டு - 4 பல்  பாஸ்மதி அரிசி - 100 கிராம் (சாதமாக வடித்து ஆறவைக்கவும்)  நெய் - அரை டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும்.பிறகு இதனுடன் வெங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். அதில் ரோஜா இதழ்களைப் பொடியாக நறுக்கிப் போடவும். பிறகு துருவிய முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கிளறவும். பின்னர் ஆறிய சாதத்தை இதனுடன் கலந்து நெய்யைவிட்டுக் கிளறி எடுக்கவும். சுவையான ரோஜா நட்ஸ் ரைஸ் தயார்.

குலாபி ஃப்ரூட்ஸ் ரைஸ்

தேவை: பன்னீர் ரோஜா அல்லது சிவப்பு ரோஜா இதழ்கள் - ஒரு கப்  ஆப்பிள் துண்டுகள் - அரை கப்  மாம்பழத் துண்டுகள் - ஒரு கப்  உலர்திராட்சை - 20  ஆரஞ்சு சுளைகள் - அரை கப் (கொட்டை நீக்கவும்)  மாதுளை முத்துகள் - அரை கப் பேரீச்சை - 10 (நறுக்கவும்)  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  பச்சைக் கற்பூரம் - சிறிதளவு  தேன் - 2 டீஸ்பூன்  பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன்  வடித்து ஆறவைத்த பாஸ்மதி அரிசி சாதம் - 2 கப்  நெய் - 4 டீஸ்பூன்.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு ரோஜா இதழ்கள், பழங்கள், ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், பொடித்த சர்க்கரை சேர்த்துப் புரட்டவும். 2 நிமிடங்கள் கழித்து இறக்கி அதில் ஆறவைத்த பாஸ்மதி சாதத்தைக் கலக்கவும். பின்னர் அதில் தேன் சேர்த்து மீதமுள்ள நெய்யையும்விட்டு கிளறி எடுக்கவும். சுவையான குலாபி ஃப்ரூட்ஸ் ரைஸ் தயார்.

வேப்பம்பூ ரசம்

தேவை: வேப்பம்பூ (காய்ந்தது) - 4 டீஸ்பூன்  தக்காளி - 2 (நறுக்கவும்)  பூண்டு - 6 பல் (நசுக்கவும்)  கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  புளித்தண்ணீர் - ஒரு கப்  கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - ஒன்று  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  நெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு, மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். பின்னர் இதில் கறிவேப்பிலை சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு, வேப்பம்பூ சேர்த்து நன்கு வறுக்கவும். இதைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான வேப்பம்பூ ரசம் தயார்.

சிறப்பு: நல்ல ஜீரண சக்தி கிடைக்கவும், உடல் கொழுப்பைக் குறைக்கவும், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவும் வேப்பம்பூ உதவும்.

வேப்பம்பூத் துவையல்

தேவை: வேப்பம்பூ (காய்ந்தது) - ஒரு கைப்பிடி அளவு  எள் - 4 டீஸ்பூன்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு  தேங்காய்த் துருவல் - அரை கப்  காய்ந்த மிளகாய் - 8  கறிவேப்பிலை - 2 ஆர்க்கு  புளி - சிறிதளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு, எள், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே வாணலியில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்துக்கொள்ளவும். வேப்பம்பூவையும் வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் வேப்பம்பூ தவிர மற்ற வறுத்த பொருள்களை புளி, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும். கடைசியில் வேப்பம்பூ சேர்த்து ஒருமுறை அரைக்கவும். சுவையான வேப்பம்பூத் துவையல் தயார். இது பித்தம் நீக்கி, பசியைத் தூண்டும் சக்திகொண்டது.

வேப்பம்பூ காரக்குழம்பு

தேவை: வேப்பம்பூ (காய்ந்தது) - 4 டீஸ்பூன் (வறுக்கவும்)  நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  பூண்டு - அரை கப்  தக்காளி (நறுக்கியது) - ஒரு கப்  புளிக்கரைசல் - ஒரு கப்  கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  கடுகு – ஒரு டீஸ்பூன்  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  சீரகம் – ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - சிறிதளவு  நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி  உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர் அதில் வறுத்த வேப்பம்பூ சேர்த்து, புளிக்கரைசல் விட்டு, அதனுடன் மீதமிருக்கும் எண்ணெயையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். வேப்பம்பூ காரக்குழம்பு தயார். பொரித்த அப்பளம், வற்றலுடன் சாப்பிட்டால், இது மிகவும் சுவையாக இருக்கும்.

வேப்பம்பூ கறிவேப்பிலை சாதம்

தேவை: வேப்பம்பூ (காய்ந்தது) - அரை கப்  வடித்து ஆறவைத்த சாதம் - 2 கப்  கறிவேப்பிலை - அரை கப்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  எள் - 2 டீஸ்பூன்  சீரகம், மல்லி (தனியா) - தலா அரை டீஸ்பூன்  காய்ந்த சுண்டைக்காய் - 10  நெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப.

30 வகை மலர் சமையல்

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், எள், சீரகம், மல்லி ஆகியவற்றை வறுத்து தனியாக வைக்கவும். பிறகு அதே வாணலியில் கறிவேப்பிலை, சுண்டைக்காய், வேப்பம்பூ சேர்த்து வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் முதலில் கறிவேப்பிலை, சுண்டைக்காய், வேப்பம்பூவைப் பொடி செய்துகொள்ளவும். பின்பு அதிலேயே வறுத்த கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், எள், சீரகம், மல்லி, உப்பு சேர்த்து கொரகொரப்பாகப் பொடி செய்யவும். ஆறிய சாதத்தில் நெய்விட்டு இந்தப் பொடியைக் கலக்கவும். சுவையான வேப்பம்பூ கறிவேப்பிலை சாதம் தயார்.

சிறப்பு: இது பித்தம் நீக்கும், பசியைத் தூண்டும் சக்திகொண்டது.

மணம் பரப்பும்... மனம் கவரும் மலர் சமையல்!

``காய்கனிகளைப் போலவே சில வகை பூக்களைப் பயன் படுத்தியும் சுவையான, ஆரோக்கியமான உணவு வகைகளைத் தயாரிக்கலாம். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகம் சுரக்கவும், குழந்தைகளுக்கு இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஆண்களின் ஆண்மைத்தன்மைக்கும் முருங்கைப்பூ உகந்தது.

வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறவும், கர்ப்பப்பை பலம் பெறவும் வாழைப்பூ உதவும்.

30 வகை மலர் சமையல்

உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், மேனி பளபளப்புக்கும் ஆவாரம்பூ உறுதுணைபுரியும்.

இதயத்தைப் பலப்படுத்தவும், மூட்டுகளில் உள்ள வழவழப்புத் தன்மையை அதிகரிக்கவும், மனப்பதற்றம் குறைக்கவும் செம்பருத்திப்பூ உகந்தது.

மன அழுத்தம் குறையவும், சருமம் பளபளக்கவும் ரோஜாப்பூ உதவும்.

பித்தம் நீக்கி, பசியைப் பெருகவைப்பதோடு, மந்தத் தன்மையை போக்கவும், உடலில் உள்ள புழுக்களை அகற்றவும் வேப்பம்பூ உதவிபுரியும்’’ என்று கூறும் வேலூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.மீனாட்சி இந்தப் பூக்களைக்கொண்டு செய்யக்கூடிய ருசியான உணவு வகைகளை இங்கே வழங்குகிறார்.

படங்கள்: ச.வெங்கடேசன்