பள்ளி, கல்லூரிகள் விடுமுறை முடிந்து திறந்துவிட்டன. பணிபுரியும் பெண்களுக்கும் விடுமுறை, சுற்றுலா செல்வது எல்லாம் முடிந்து குடும்பப்பணியோடு அலுவலகப்பணிகளும் சேர்ந்துவிட்டன. அவர்களுக்குச் சமையலில் கைகொடுக்கும் விதத்திலான மிக்ஸ் வகைகளை வீட்டிலேயே தயாரிக்கக் கற்றுத்தருகிறார் சமையற்கலைஞர் எஸ்.ராஜகுமாரி. இவை பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்காதவை என்பது இன்னும் சிறப்பு!

காபி, டீ தயாரிப்பின்போதும், இனிப்புகள் செய்யும்போதும் நாம் உபயோகிக்கும் மில்க் பவுடரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
* திக்கான பால் - 2 லிட்டர் சர்க்கரை - 200 கிராம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை:
சர்க்கரையைப் பொடித்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். அடுப்பை `சிம்’மில் வைத்துக் கரண்டியால் கைவிடாமல் கிளறவும். பால் பாதியாக சுண்டிவந்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கி இரண்டு பெரிய தட்டுகளில் கொட்டி ஆறவிடவும். 5 மணி நேரம் வெயிலில் வைக்கவும். பிறகு, அதைக் கரண்டியால் சுரண்டி அடி மேலாகப் புரட்டி மேலும் 5 மணி நேரம் வெயிலில் வைக்கவும்.
5 மணி நேரம் கழித்து நன்றாகக் காய்ந்த துகள்களை (நீர்விடாமல்) மிக்ஸியில் பவுடராக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் மீண்டும் ஒரு முறை நைஸாக அடித்து சல்லடையில் சலித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கவும். தேவையானபோது தேவையான அளவுகளில் இந்த மில்க் பவுடரை எடுத்துப் பயன்படுத்தலாம்.
வீட்டிலேயே ரபடி மிக்ஸ் தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
* மில்க் பவுடர் - ஒரு கப் பொடித்த சர்க்கரை - கால் கப்
* கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன் சீவிய பாதாம், பிஸ்தா - தலா 2 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம்.

ரபடி தயாரிக்கும் முறை
தேவையானவை:
* ரபடி மிக்ஸ் - கால் கப்
* பால், தண்ணீர் - தலா 250 மில்லி
* பிரெட் க்ரம்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் (ஒரு பிரெட் துண்டை மிக்ஸியில் அடித்தால் பிரட் க்ரம்ஸ் தயார்).
ஒரு பாத்திரத்தில் ரபடி மிக்ஸ் கால் கப் போட்டு தண்ணீர், பால் சேர்த்து ஒன்றாகக் கலந்து அடுப்பில்வைத்து, அடுப்பை `சிம்’மில் வைத்து கரண்டியால் கிளறிவிடவும். இரண்டு கொதிவந்ததும் பிரெட் கிரம்ஸ் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிடவும். சேர்ந்து வந்ததும் இறக்கி ஆறவிட்டு, குளிரவைத்துப் பருகலாம்.
பிரேக்ஃபாஸ்ட்க்கும் விசேஷத்துக்கும் பான் கேக் மிக்ஸ் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
* கோதுமை மாவு - 2 கப் மைதா மாவு - முக்கால் கப்
* உப்பு - கால் டீஸ்பூன்
* பட்டைத்தூள் - கால் டீஸ்பூன் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து பிறகு சலித்து காற்றுப்புகாத டப்பாவில் ஃப்ரிட்ஜில் வைத்து குறைந்த பட்சம் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
பான் கேக் தயாரிப்பது எப்படி ?
செய்துவைத்த பான் கேக் மிக்ஸிலிருந்து ஒரு கப் எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய், ஒரு கப் பால் சேர்த்துக் கலக்கவும் (தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்). தவாவில் எண்ணெய் தடவி, இந்த மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இதே முறையில் ஊற்றி எடுக்கவும்.
எப்படிப் பரிமாறுவது?
வெந்த ஒவ்வொரு பான் கேக்கின் மீதும் சிறிதளவு வெண்ணெய் தடவி, அதன் மேலே சிறிதளவு தேன் தடவி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி கேக் மாதிரி கட் செய்து பரிமாறவும்.
வீட்டிலேயே குலாப் ஜாமூன் மிக்ஸ் தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
* மில்க் பவுடர் - 2 கப்
* மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெள்ளை ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
* சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்
கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

எப்படிப் பயன்படுத்துவது?
அந்த குலாப் ஜாமூன் மிக்ஸ் ஒன்றரை கப் எடுத்து ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கைகளால் பிசிறி கால் கப் வெதுவெதுப்பான நீர்விட்டுப் பிசைந்து (தேவைப்பட்டால் சிறிதளவு கூடுதலாக நீர்விட்டுப் பிசையலாம்) நீளவாக்கில் உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும்.
ஒரு கப் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, கால் கப் நீர்விட்டு பாகு வைக்கவும் (பாகு, பிசுக்குப்பதம் இருக்க வேண்டும்). பாகில் கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கி பொரித்துவைத்துள்ள ஜாமூன்களைப் போட்டு அதன் மேலே மெலிதாகச் சீவிய பாதாம், பிஸ்தா, முந்திரியைத் தூவி ஊறியதும் சுவைக்கவும்.
குழந்தைகள் விரும்பும் கோகோ மில்க்ஷேக் செய்வதற்கான மிக்ஸை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
* சர்க்கரை - 10 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
* கார்ன்ஃளார் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கவும்.
கோகோ மில்க்ஷேக் தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் பாலை ஊற்றிக் கொதிக்கவைத்து கால் கப் கோகோ மில்க்ஷேக் மிக்ஸைச் சேர்த்துக் கலக்கி, கொதித்துவந்ததும் இறக்கி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து ஹேண்ட் பிளெண்டரால் கலக்கி குவளைகளில் ஊற்றி மெலிதாகச் சீவிய டார்க் சாக்லேட் சிறிதளவு தூவிப் பரிமாறவும். விருந்தினர் வருகையின்போதும், வீட்டு விசேஷங்களின்போதும் செய்யலாம். குழந்தைகளை இது மிகவும் குஷிப்படுத்தும்!
இதுபோல மிக்ஸ் தயாரித்து வைத்துக்கொண்டால் செலவு குறைவு; குறைந்த அளவில் தயாரித்து உடனடி உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம்.