Published:Updated:

ஆடி மாத பிரசாதங்கள்!

ஆடி மாத பிரசாதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆடி மாத பிரசாதங்கள்!

ஆடி மாத பிரசாதங்கள்!

ஆடி மாத பிரசாதங்கள்!

ஆடி மாத பிரசாதங்கள்!

Published:Updated:
ஆடி மாத பிரசாதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆடி மாத பிரசாதங்கள்!
ஆடி மாத பிரசாதங்கள்!

டி என்றாலே அம்மனின் மாதம் என்று சொல்வார்கள். அம்பிகையின் பூப்பெய்தல், திருமணத் தபசு, வளைகாப்பு என அனைத்து வைபோகங்களும் நடைபெறும் மாதம் ஆடி. சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் புண்ணிய தட்சிணாயனக் காலம் தொடங்குவது ஆடியில்தான்.

அதுமட்டுமா... கருடாழ்வார் அவதரித்த கருட பஞ்சமி, ஹயக்ரீவர் அவதரித்த ஆடி பௌர்ணமி (குரு பௌர்ணமி), ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூரம், ஆடி செவ்வாய் ஔவையார் விரதங்கள், ஆடிப்  பெருக்கு, ஆடி வெள்ளி, பித்ருக்களை வழிபடும் ஆடி அமாவாசை, கந்தனை வழிபடும் ஆடிக் கிருத்திகை, ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் கூழ் ஊற்றும் விழா, ஆடி கடைசி வெள்ளியின்போது மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம், சங்கரநாராயணராக அம்பிகைக்கு ஈசன் காட்சி தந்த ஆடி பௌர்ணமி, வரதர் கஜேந்திரனை ஆட்கொண்ட திருநாள் என ஆடி மாதத்தில் அத்தனை நாள்களுமே பண்டிகைதாம்.

ஆடி மாத பிரசாதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடி மாதம் அனல் குறைந்து புது மழை பொழியும் காலம் என்பதால் அம்மை, காய்ச்சல், வெப்பு நோய்கள் எனப் பலவும் பரவும். இதனால் அம்மனுக்குக் கூழ், துள்ளு மாவு, இளநீர், மஞ்சள் - வேப்பிலை கலந்த தீர்த்தம், வெள்ளரிப் பிஞ்சு, பானகம் என எளிமையான, குளிர்ந்த பிரசாதங்களையே படைப்பார்கள். பாரம்பர்ய விழாக்களை மறந்துவரும் இன்றைய சூழலில், அம்பிகையின் பக்தையான சென்னையைச் சேர்ந்த உமா முத்து நமக்காகச் செய்து காட்டிய ஆடிப் பிரசாதங்கள் இங்கே...

-மு.ஹரி காமராஜ், பெ.ராக்கேஷ்

மாவிளக்கு

மாவிளக்கு என்பது திருமகளும் மலைமகளும் சேர்ந்த அம்சம். ஆடி மாதத்தில் அத்தனை அம்மன் கோயில்களிலும் பக்தைகளால் ஏற்றப்படும் புண்ணிய விளக்கு இது. மாவிளக்கேற்றி வேண்டிக்கொள்ளும் எந்தக் கோரிக்கையையும் அந்த மகமாயி உடனே தீர்த்துவைப்பாள் என்பது நெடுங்கால நம்பிக்கை.

மாவிளக்கை உடலெங்கும் வைத்தபடி படுத்துக்கொண்டு நேர்ந்துகொள்ளும் பக்தர்களை அம்மன் கோயில்களில் பார்க்கலாம். இப்படிச் செய்வது, உடல் நோய் தீர வேண்டிக்கொள்ளும் ஒருவித நேர்த்திக்கடன்.

மாவிளக்கு

தேவையானவை:
* பச்சரிசி - அரை கிலோ
* ஏலக்காய் - 4
* வெல்லம் - கால் கிலோ
* நெய் - தேவையான அளவு
* திரி -  2

ஆடி மாத பிரசாதங்கள்!

செய்முறை:

பச்சரிசியைக் கழுவிக் களைந்து மெல்லிய வெள்ளைத் துணியில் பரப்பிக்  காய வைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது மிக்ஸியில் சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். உரலில் இடித்து மாவைத் தயார் செய்வது இன்னும் சிறப்பானது. மாவு அரைக்கும்போதே ஏலக்காயைச் சேர்த்து அரைக்கவும். பின் வெல்லத்தைத் தூளாக்கி, அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். பின்னர் அந்த மாவை நன்றாகப்  பிசைந்து உருண்டையாக உருட்டவும். உருண்டையின் மேல் எலுமிச்சைப் பழத்தை அழுத்தி குழி போலச் செய்துகொள்ளவும். குழியின் ஓரத்தில் மூன்று இடங்களில் குங்குமப்பொட்டு வைத்து, குழியில் நெய்விட்டுத் திரிபோட்டு விளக்குகேற்றி வைக்கவும்.

குறிப்பு:
அரிசி லட்சுமியின் அம்சம் என்பதால் ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபட்டால் தரித்திரம் விலகிச் செல்வ வளம் சேரும் என்பார்கள். இந்த விளக்கைக் குளிர வைத்தபிறகு பிரசாதமாக அனைவரும் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரார்த்தனை நிறைவேறும் என்பதும் ஐதிகம்.

பானகம்

வெப்பம் தணிக்கும் அற்புத பானம் பானகம். இளநீர், மோருக்குப் பிறகு கிராமங்களில் கோடைக்காலத்தில் அதிகம் பயன்படும் பானம் இது.

ஆங்கார வடிவமெடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்த அம்மனைக் குளிர்விக்க தேவர்களால் அளிக்கப்பட்டதே பானகம் என்பார்கள். எளிமையாகத் தயாரிக்கப்படும் இந்தப் பானம் உற்சாகத்தை அளிக்கக்கூடியது.

பானகம்

தேவையானவை:
* புளி - 150 கிராம் (அ) எலுமிச்சைப்பழம் - 3
* வெல்லம் - 250 கிராம்
* சுக்குப்பொடி -  கால் டீஸ்பூன்
* ஏலக்காய்த்தூள்  - ஒரு சிட்டிகை
* பச்சைக் கற்பூரம் (விரும்பினால்) - சிறிதளவு
* தண்ணீர் - தேவைக்கேற்ப
* உப்பு - ஒரு சிட்டிகை

ஆடி மாத பிரசாதங்கள்!

செ‌ய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும். அல்லது எலுமிச்சைச் சாறெடுத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்ல‌த்தை நன்கு பொடித்துக்கொள்ளவும்.

பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித் தண்ணீருடன்/எலுமிச்சைச்சாற்றுடன்  சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு அதில் சுக்குப்பொடி,  உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கோயிலுக்குக் கொடுப்பது என்றால் பச்சைக் கற்பூரம் கலந்தால் சிறப்பு.  

உப்பு அடை

பெருமாளுக்கு உகந்த உப்பு அடையை ஆடி தபசு நாளில் படைக்கலாம். ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்த ஆடி பௌர்ணமி நாளில் அம்பிகைக்குக் காட்சி தந்த இருவரும் இந்த நைவேத்தியத்தை விரும்பி உண்டார்கள் எனத் தென்மாவட்டப் பெரியோர்கள் சொல்வார்கள். 
சத்துள்ள இந்த உப்பு அடை குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நலம் அளிக்கக்கூடியது. உப்பு அடையை வைத்து சங்கர நாராயணரை வணங்கினால் நலன்கள் சேரும்; குறைகள் தீரும்.

உப்பு அடை

தேவையானவை:
* பச்சரிசி மாவு (சலித்தது) - ஒரு கப்
* காராமணி (சுத்தமாக்கியது)  - அரை கப்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் -  4
* உப்பு - தேவையான அளவு
* தண்ணீர் - 2 கப்

தாளிக்க:
* நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
* பெருங்காயத்தூள் (விரும்பினால்) - சிறிதளவு

ஆடி மாத பிரசாதங்கள்!

செய்முறை:

காராமணியை வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். பிறகு,  தண்ணீர் சேர்த்துக் குழைய வேகவைக்கவும். வெந்ததும் காராமணியில் உள்ள தண்ணீரை வடிக்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின் அதோடு அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அந்த நீரில் குழைய வேகவைத்த காராமணி, வதக்கிய இஞ்சி - பச்சை மிளகாய் கலவையைச் சேர்க்கவும். 

இதில் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும். அப்போது இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவுக் கலவையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டவும். இந்த வடைகளை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான நோன்பு உப்பு அடை பூஜைக்குத் தயார்.

கேழ்வரகுக் கூழ்

ஆயிரமாயிரம் படையல்கள் போட்டாலும் அம்மனுக்கு ஏற்றது கூழ்தான். கூழ் காய்ச்சிப் படைத்து ஏழைகளுக்கு ஊற்றினால் ஏழேழு ஜென்ம பாவங்களையும் நீக்கி, தன் பிள்ளைகளைக் காப்பாள் அந்த மாரி என்பது எளிய மக்களின் நம்பிக்கை.

தமிழர்களின் தொன்மையான உணவான கேழ்வரகுக் கூழ் உடலுக்கு வலிமையையும் குளிர்ச்சியையும் அளிக்கக் கூடியது. ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைதோறும் அம்மனுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றுவது வழக்கம். அம்மன் ஆலயங்களிலும் இந்த விழா விமரிசையாக நடைபெறும். பெரியபாளையம் பவானியம்மன் ஆலயத்தில் ஆடி, ஆவணி தாண்டி 10 வாரங்கள் வரை கூழ் ஊற்றி வழிபடும் வழக்கமுண்டு.

கேழ்வரகுக் கூழ்

தேவையானவை:
* கேழ்வரகு மாவு - ஒரு கிலோ
* பச்சரிசி நொய் - 300 கிராம்
* சின்ன வெங்காயம் - 10 (பெரியது, நறுக்கிக்கொள்ளவும்)
* தயிர் - 2 கப்
* உப்பு - தேவையான அளவு

ஆடி மாத பிரசாதங்கள்!

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாகக் கரைத்து முதல் நாள் இரவே புளிக்கவைக்கவும். மறுநாள் பானையை அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டுக் கொதிக்க வைக்கவும். பச்சரிசி நொய்யைக் கழுவி களைந்து, கொதித்த நீரில் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும், புளித்த கேழ்வரகு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து, மத்தின் பின்புறத்தால் அடிப்பிடிக்காமல் கிளறிக் கலந்துவிடவும்.

மாவும் அரிசியும் கலந்து கெட்டியாகும். அப்போது கையில் தண்ணீர் தொட்டு, வெந்துவிட்டதா என்று பார்க்கவும். மாவு கையில் ஒட்டாமல் வந்தால் அதுவே பதம். அப்போது  இறக்கிவிடவும்.

இந்தக் கெட்டியான களியை 6 மணி நேரம் புளிக்கவைத்துப் பயன்படுத்த வேண்டும் (அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலேயே புளிக்கவிடவும்).

இதில் வேண்டிய அளவு களியை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர்விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் குளுமையான கூழ் செய்து அம்மனுக்குப் படைக்கலாம். இத்துடன் துள்ளு மாவு, முருங்கைக்கீரை பிரட்டல், கருவாட்டுக் குழம்பு வைத்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றலாம். இதையே ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது என்பார்கள்.

முருங்கைக்கீரை பிரட்டல்

நோய்கள் அதிகம் பரவும் ஆடி மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட முருங்கைக்கீரையை உணவில் சேர்ப்பது நலம் என்று அறிந்துகொண்ட நம் முன்னோர்கள் கூழுக்குத் தொடுகறியாக இந்த முருங்கைக்கீரை பிரட்டலைச் சேர்த்து வழங்கியிருக்கிறார்கள். முருங்கைக்கீரை ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், வெப்ப நோய்களைத் தணிக்கவும் சிறந்தது என்கிறார்கள். அம்மனுக்கு உகந்த நைவேத்தியங்களில் இந்த முருங்கைக்கீரை பிரட்டலும் முக்கியமானது.

முருங்கைக்கீரை பிரட்டல்

தேவையானவை:
* முருங்கைக்கீரை - ஒரு கட்டு (ஆய்ந்துகொள்ளவும்)
* பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு
* தேங்காய்த் துருவல் - கீரையின் அளவுக்கேற்ப
* கடுகு - அரை டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளவும்)
* வெங்காயம் (விரும்பினால்) - 2 (நறுக்கிக்கொள்ளவும்)
* எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

ஆடி மாத பிரசாதங்கள்!

செய்முறை:

முதலில் பச்சரிசியை வெறும் சட்டியில் வறுத்துக் கொரகொரவெனப் பொடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்த்துத் தாளித்து, (விரும்பினால்) வெங்காயம் சேர்த்து வதக்கி, இத்துடன் கீரையைச் சேர்த்துக் கிளறி, தேவையான உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறவும். இதில் பச்சரிசிப் பொடியைத் தூவிக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
இந்த முருங்கைக்கீரை பிரட்டலைக்  கூழோடு மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். கூழுக்கு இது சூப்பர் காம்பினேஷன்.

துள்ளு மாவு

கூழ் ஊற்றும் வைபவத்தில் இந்த துள்ளு மாவும் இடம்பெறும். கூழ் ஊற்றுவதற்கு முன்பு இதை எல்லோருக்கும் கொடுப்பது வழக்கம்.

துள்ளு மாவு

தேவையானவை:
* வெல்லம் - ஒரு கப்
* பச்சரிசி - 2 கப்
* வறுத்த பாசிப் பயறு (பச்சைப் பயறு) மாவு - அரை கப்
* வடித்த சோறு - 2 கப்

ஆடி மாத பிரசாதங்கள்!

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். உரலில் இடித்தால் இன்னும் சிறப்பு. வெல்லத்தைப் பொடித்து பச்சரிசி மாவுடன் சேர்த்துக் கலக்கிக் கிளறவும்.

இதோடு வறுத்த பாசிப் பயறு மாவையும் சில ஊர்களில் சேர்த்துக்கொள்வார்கள். இதுதான் துள்ளு மாவு. அழுத்திக் கொழுக்கட்டைபோல பிடிக்கப்பட்ட சோற்று உருண்டையை, இந்தத் துள்ளு மாவில் ஒருமுறை புரட்டியெடுக்கவும். ஒரு முறத்தில் வேப்பிலைகளை வைத்து, அதன் மீது இந்த உருண்டைகளை வைத்து அம்மனுக்குப் படைக்க வேண்டும்.

ஔவையார் கொழுக்கட்டை

திருமணமாகாத பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ஒன்று சேர்ந்து செய்யும் விரதம், ஔவையார் விரதம். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். பெண்களால் கடைப்பிடிக்கப்படும் இந்த ரகசிய நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. ஆண் குழந்தைகளுக்குக்கூட அங்கே அனுமதியில்லை.

இந்த விரதத்துக்குப் போகக் கூடாது என்று ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களைத் தடுத்தால், அந்த ஆணின் பார்வைத்திறன் பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. அதுபோலவே, உரல் சத்தம் உட்பட இந்த விரதத்தில் எழும்பும் எந்தச் சத்தமும் ஆண்களின் காதுகளில் விழக்கூடாது என்பதும் ஐதிகம். ஔவையார் விரதத்தின் முக்கிய நைவேத்தியமான உப்பில்லா கொழுக்கட்டையை பெண்கள் உண்டால், அந்த வீட்டு ஆண்களுக்கு நன்மை விளையும் என்பது நம்பிக்கை.

ஔவையார் கொழுக்கட்டை

தேவையானவை:
* பச்சரிசி - அரை கிலோ
* வெந்நீர் - தேவையான அளவு

ஆடி மாத பிரசாதங்கள்!

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி களைந்து நிழலில் உலரவைத்து உரலில் இடித்தோ, மிக்ஸியில் அரைத்தோ நைஸான மாவாக்கிக்கொள்ளவும். இந்த மாவில்  வெந்நீரைச் சேர்த்து சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். அவற்றை இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துப் படைக்கலாம். மேலும், கொழுக்கட்டை மாவில் ஒரு  விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள்.

குறிப்பு:
கைக்குத்தல் பச்சரிசியும் தேங்காயும் மட்டுமே இந்த விரதத்தில் முக்கியப் பொருள்கள். வேறு எந்தப் பலகாரமும் உண்ணக் கூடாது. வழிபாட்டுக்குப் பிறகு விடிய விடியக் கதைகளும் பாடல்களும் பெண்களுக்கிடையே தொடர்ந்து நடக்கும். இரவெல்லாம் பாடியும் கதை சொல்லியும் மகிழ்ந்திருக்கும் பெண்கள் விடிவதற்கு முன்பு, அங்கே வழிபாடு செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் சுத்தம் செய்வார்கள்.

கொழுக்கட்டைகளை மீதமில்லாமல் எல்லோரும் உண்டுவிடுவார்கள். அடுத்த நாள் விடிந்ததும் வேறு உணவை உண்பதற்கு முன்பாக இந்தக் கொழுக்கட்டைகள் முழுவதையும் உண்டுவிட வேண்டும் என்பது ஐதிகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism