Published:Updated:

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

லெய்னா

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

லெய்னா

Published:Updated:
உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

யிலாப்பூர் என்றாலே இசை, நடனம், உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்த மூன்று அம்சங்களோடு ஊரின் பெருமை பேசும் அத்தனை விஷயங்களும் நடைபெறுகிற ஒரு நிகழ்ச்சிதான் `மயிலாப்பூர் ஃபெஸ்டிவல்’ என்கிற மாபெரும் கொண்டாட்டம். இந்த விழாவின் முக்கியப் பகுதியாக, பல மரபு நடைகளும் உண்டு. ஸ்ரீதர் வெங்கட்ராமனின் உணவு நடையும் இதில் வெற்றிநடைபோடும். பெரும்பாலும் ஸ்ரீதரின் நடைகள் நிறுத்தி நிதானமாக, பொறுமையாக, நிறைய உரையாடலுடன் நடைபெறும். இந்த முறை, மயிலாப்பூர் விழாவின் முக்கிய நடை என்பதால், கூட்டமோ கூட்டம்.

5.30 மணிக்கு நடை தொடங்கவிருப்பதாக முன்னறிவிப்பு இருந்ததாலும், கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்ததாலும், சற்றே முன் கிளம்பிவிட்டாலும்… வண்டி கிடைத்து, நான் அங்கு சென்று சேர்வதற்குள் ஐம்பது சொச்சம் அன்பர்கள் நடைக்குக் கூடியிருந்தார்கள். ஒன்றிரண்டு பரிச்சயமான முகங்கள் தவிர, இம்முறை நிறைய புதுமுகங்கள். நடை, ஸ்ரீதரின் உரையுடன் தொடங்கியது.

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

சென்னை நகரின் பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் அடைந்தாலும், சாந்தோம், மயிலாப்பூர், பூந்தமல்லி போன்ற பகுதிகள் நெடிய வரலாற்றை உடையவை. கி.பி. 2-ம் நூற்றாண்டில் கிரேக்கப் பயணியான ப்டாலமி, இந்த நகரை `மைலார்ஃபன்’ எனக் குறிப்பிடுகிறார்.

கி.பி.9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நந்திக்கலம்பகம், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை `மயிலைக் காவலன்’ என அழைக்கிறது. 14-ம் நூற்றாண்டில் இங்கு வந்த பயணியான ஜான் டி மரினோலி, `மிரபோலிஸ்’ என்று நகரை அழைக்கிறார். அதன் பிறகு வந்த போர்ச்சுக்கீசியர்கள் `மெலியாப்பூர்’ என்று இதை அழைத்தார்கள். 16-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போர்ச்சுக்கீசிய நாட்டுக் காவியமான  `ஓஸ் லூசியாடாஸ்’ மெலியாப்பூர் என்று மயிலாப்பூரைக் குறிக்கிறது.

`செழுமை நிறைந்த, பிரமாண்டமான மெலியாப்பூர் நகரில் அதன் மக்கள் பழஞ்சிற்பங்களை வழிபட்டுவந்தனர். இன்றும் அவற்றையே வழிபடுகின்றனர். முன்னொரு காலத்தில் கடற்கரையி லிருந்து தொலைவில் நகரம் இருந்த போது, அங்கு மக்களுக்குக் கடவுளை அறிவிக்க தோமா வந்தார்’ என்று கூறிச் செல்கிறது லூசியாடாஸ். ஐரோப்பிய நாட்டின் காவியம் ஒன்றில் இடம்பெறும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்த ஊர் மயிலாப்பூர்! வள்ளுவர் வாழ்ந்த ஊர் என்று சொல்லப்படும் மயிலாப்பூரில், அவர் வாழ்ந்த தெருவான வீரப் பெருமாள் தெரு அருகே  இன்றும் அவருக்கு ஒரு கோயில் அமைந்திருக்கிறது. `அழகிய தோட்டங்களும், மயில்கள் விளையாடும் இடமாகவும் அமைந்திருந்த இடம்’ என்று சம்பந்தர் மயிலாப்பூரைப் பாடியுள்ளார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் கிணற்றில் கிடைத்தவர், வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார். அங்கேயே வாழ்ந்து, இறந்தவர் அவர்.

நன்னூலை இயற்றிய சமணத் துறவியான மயிலைநாதர், 12-ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்திருக்கிறார். மயிலாப்பூரையொட்டிய கடற்கரையில் சமணத்தின் 22-ம் தீர்த்தங்கரரான நேமிநாதருக்கு கோயில் ஒன்று இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. புத்தர் சிற்பங்களும் இங்கு கிடைத்திருக்கின்றன.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, ஏறத்தாழ 2000 ஆண்டுகள் பாரம்பர்யம் நிறைந்த நகரத்தில் ஓர் உணவு நடை என்றால், யாருக்குக் கசக்கும்? வடக்கு மாட வீதியில் கோலப்போட்டி களைகட்டியிருந்தது.

எங்கு நோக்கிலும் மக்கள் வெள்ளம். ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு சிக்குக்கோலங்களும், பூக்கோலங்களுமாக சாலையை அடைத்துக் கோலமிட்டுக் கொண்டு இருந்தனர். அதை ரசித்தவாறே மத்தள நாராயணன் தெருவில் உள்ள ஸ்ரீகற்பகாம்பாள் கபாலி ஸ்வீட்ஸ் ஸ்டாலை நோக்கிப் படையெடுக்கிறோம்.

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மயிலாப்பூர்வாசிகளுக்கு கொண்டாட்டங்களுக்கும் விசேஷங்களுக்கும் இனிப்புகளையும் தின்பண்டங்களையும் விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். 
1980-களில் மயிலாப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணிய செட்டியார் தொடங்கிய கடை இது. 40 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இயங்கிவருகிறது கடை. இன்று அவரின் பேரன் சசிகுமார் அதை நிர்வகித்து வருகிறார்.  ``எங்களுக்கு எங்கும் கிளைகள் கிடையாது. தரமான பொருள், அதை வாடிக்கையாளரிடம் தன்மையாகக் கொண்டுசேர்ப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் நான் அதிகம் கவனம் செலுத்துவேன்.

தினமும் தேவையான பொருள்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கிக்கொள்வோம். அன்றன்று செய்துதான் இனிப்புகளை விற்கிறோம். இப்போது ஐந்து பேர் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் 10-15 ஆண்டுகளாக எங்களிடமே தொடர்ந்து பணியாற்றுபவர்கள்” என்கிறார்.

கடை தொடங்கிய காலம் முதல் இங்கே வாங்கிச் செல்லும் நிரந்தர வாடிக்கையாளர்களும் உண்டு. மாலை நேரங்களில் மினி ஆனியன் சமோசா கிடைக்கும். நாங்கள் சென்ற நேரம் சரியான கூட்டம் என்பதால், என்ன முண்டியடித்தும் ஒரு சமோசா மட்டுமே மிஞ்சி கைக்கு ஞானப்பழம்போலக் கிட்டியது. கடையில் இரண்டு சமையலறைகள். தீபாவளிதான் இங்கே பீக் சீஸன். இந்தக் கடையின் பாரம்பர்ய மைசூர்பாக், லட்டு, ஜாங்கிரி, மில்க் ஸ்வீட்ஸ், மக்கன் பேடா போன்றவற்றுக்கு மக்களின் பேராதரவு எப்போதும் உண்டு. காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை கடை திறந்திருக்கும் என்றாலும், காலை 11-2 மணி, மாலை 4-8 மணி வரை மிகவும் பிஸியான நேரம். கூட்டம் அலைமோதும். மதியம் பக்கோடா வாங்குவதற்காக இங்கு தினம் தினம் வருகிறவர்கள் உண்டு.

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

``மயிலாப்பூரில் வசிக்கும் பல வி.ஐ.பிக்கள் எங்கள் நிரந்தர வாடிக்கையாளர்கள். டி.வி மற்றும் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வந்து போவதுண்டு. மினி சமோசா, மெது பக்கோடா, வெங்காய பக்கோடா ஆகியவை இங்கே மிகவும் ஸ்பெஷல்” - கடை உரிமையாளரின் வார்த்தைகளில் தெறிக்கும் பெருமிதம் அவரின் முகத்திலும் பிரதிபலிக்கிறது.

மினி சமோசா உண்மையில் அவ்வளவு சுவை. நம் சிற்றூர்க் கடைகளில்கூட எளிதாகக் கிடைக்கும் சமோசாவின் பயணம் நெடியது.

வளைகுடா நாடுகள் மற்றும் பாரசீகப் பகுதியில் பத்தாம் நூற்றாண்டில் `சம்போசக்’ என்ற பெயரில் தோன்றிய உணவு வகை இது. நீண்ட பயணங்கள் மேற்கொண்ட பாரசீக வணிகர்கள் தங்கள் பைகளில் எடுத்துச் செல்லும் உணவு வகையான சம்போசக், முக்கோண வடிவில் கொத்துக்கறியைப் பூர்ணமாகக் கொண்டு செய்யப்பட்டு வந்தது. வளைகுடாப் பகுதியிலிருந்து வடஆப்பிரிக்கா, கிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கு வணிகர்கள் மூலமே வந்தது சம்போசக்.

டெல்லி சுல்தானிடம் வந்து சேர்ந்த சமையற்கலை வல்லுநர்கள் இதை இன்னும் மெருகூட்டினார்கள். 9-ம் நூற்றாண்டில் இஷக் பின் இப்ரஹிம் அல் மௌசிலி என்கிற கவிஞரும், `ஐன்-ஐ-அக்பரி’ எழுதிய அக்பரின் அரசவைக் கவிஞருமான அபு ஃபசலும் `முகலாய மன்னர்கள் விரும்பி உண்ட பண்டம் இந்தச் சம்பூசாக்கள்’ என்று எழுதியுள்ளனர். `1300-களில் டெல்லி சுல்தானின் அரசவையில் மிகவும் ருசிக்கப்பட்ட உணவுப்பண்டம் இது’ என்று எழுதியிருக்கிறார் சூஃபி அறிஞரும், கவிஞருமான அமீர் குஸ்ரோ. 

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கின் அரசவைக்கு வந்த பயணி இபன் பதூதா, சம்பூசக் என்கிற முக்கோண வடிவத் தின்பண்டத்தினுள் கொத்துக்கறி, பிஸ்தா, பாதாம் பருப்புகள் மற்றும் பட்டாணி வைக்கப்பட்டு விருந்தினருக்கு அளிக்கப்பட்டதாக எழுதியிருக் கிறார். விருந்தாளிக்கு முதன்முதலில் சர்பத் பானம் வழங்கப்பட்டு, அதனுடன் சம்பூசக் அளிக்கப்பட்டிருக்கிறது.

மன்னர் குடும்பத்தினரது விருப்பப் பண்டமான அதே சமோசாதான், இன்று கையில் ஐந்து ரூபாய் வைத்திருக்கும் சாதாரண மனிதனின் பசி போக்கவும் உதவுகிறது. ஆங்கிலேயரின் அமோக ஆதரவைப் பெற்ற சமோசா, இன்று உலகெங்கும் விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டி வகைகளில் ஒன்றாகிவிட்டது. உஸ்பெகிஸ்தான், கசாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுகல், வடக்கு ஆப்பிரிக்கா என்று சமோசா இல்லாத நாடுகளே இன்று இல்லை. வட இந்தியாவில் கிடைக்கும் சமோசாக்கள் அளவில் பெரியவை, வேகவைத்த உருளைக் கிழங்கை நிறைத்துச் செய்யப்படு பவை. கிழக்கு இந்தியப் பகுதிகளில் `சிங்காரா’ என்ற பெயரில் அளவில் சிறியதாகவும், சிறிதாக வெட்டிய உருளை, கடலை போன்றவை சேர்த்தும் செய்யப்படுவது.

கர்நாடகாவில் கீமா சமோசா மற்றும் வெங்காய சமோசா, குஜராத்தில் முட்டைகோஸ் கொண்டு செய்யப்படும் பட்டி சமோசா, முந்திரியும் பச்சைப் பட்டாணியும் சேர்த்து செய்யப்படும் பஞ்சாபி சமோசா என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சமோசா ஸ்பெஷல்! இந்திய ஸ்ட்ரீட் ஃபுட் எனப்படும் எளிய உணவு வகைகளில் சமோசாவுக்கே முதல் இடம். பாரசீகர்கள் கண்டு பிடித்திருந்தாலும், சமோசாவை உலகளாவிய உணவாக்கிய பெருமை இந்தியர்களையே சேரும்!

உணவு நடைக் குழுவினர் அடுத்து சென்றது, அதே தெருவில் உள்ள ஸ்ரீஅன்னபூரணி ஸ்வீட்ஸ் கடைக்கு.

1968-ம் ஆண்டு எம்.ஹெச்.ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட கடை இது. ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டு வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக் கொண்டிருக் கிறது.

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

கடையின் ஸ்பெஷல் `மினி ஜாங்கிரி’ என்று சொல்லப்பட, ஜாங்கிரி ஆர்டர் தந்துவிட்டு ஓரமாக நின்றுகொண்டோம். கடை, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மினி ஜாங்கிரிகள் வண்ணமயமாக கண்களைப் பறித்தது என்றால், நாவில் போட்டதும் அதன் சுவை நம்மை அங்கேயே கட்டிப் போட்டது. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு உரிமையாளர் ஆர்.முத்துக்குமாரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``கடையைத் தொடங்கியது என் தாத்தா ராமச்சந்திரன். தனியாளாக நின்று இந்தக் கடையை வளர்த்தெடுத்தவர் அவர்தான். பொருள்கள் வாங்க, மாவு அரைக்க, பலகாரங்கள் செய்ய, அவற்றை எடுத்து அடுக்க, விற்க, கல்லாவில் நின்று பணம் வாங்கிப் போட, பாத்திரங்கள் கழுவ என எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக நின்று செய்துகாட்டியவர் என் தாத்தா. அவரிடமிருந்துதான் `எல்லா வேலைகளையும் நாம்தான் செய்து கொள்ள வேண்டும்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். சமையல்காரர் ஒரு நாள் வரவில்லையென்றால், நானே கரண்டியைப் பிடித்து சமையலை முடித்துவிடுவேன். சமையலில் எனக்கு அபார ஈடுபாடு உண்டு. காரணம், தாத்தா. 85 வயது வரை உணவைச் சுவைத்து அதில் எது கூடுதல், எது குறைவு என, அமர்ந்த இடத்திலிருந்தே எனக்குச் சொல்லித்தந்து வளர்த்தார். அப்பா அதைத் தொடர்ந்தார். தேவையற்ற எந்தப் பொருளையும் நாங்கள் பண்டங்களில் சேர்ப்பதில்லை. பாரம்பர்யமாக எப்படிச் செய்து வந்தார்களோ அப்படியே தொடர்கிறோம்” என்கிறார் ஸ்ரீஅன்னபூரணி ஸ்வீட்ஸ் உரிமையாளர் முத்துக்குமார்.

``தீபாவளிதான் எங்களுக்கு சீஸன். அந்த நேரத்தில் ஐந்து கிலோவுக்குக் குறைந்த ஆர்டர்களை நாங்கள் எடுப்பதில்லை. எவ்வளவு ஆர்டர் தந்தாலும் ஜாங்கிரிக்கு மட்டும் முன்கூட்டி ஆர்டர் எடுப்பதே இல்லை. வாடிக்கையாளர் வரும் நேரம் கடையில் இருந்தால் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!

கூட்டத்தைச் சமாளிக்க முடியாது. தரம் குறைந்து போய்விடக் கூடாது என்பதும் இன்னொரு முக்கியக் காரணம். கூடுவாஞ்சேரி, நங்கநல்லூர், அண்ணா நகரிலிருந்துகூட ரெகுலர் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வது உண்டு. அங்கே கிடைக்காத இனிப்புகளா? ஆனாலும், எங்கள் சுவைக்கும் தரத்துக்கும் இங்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியே. கடந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டர்ஸ்காச் மற்றும் பிளாக் கரன்ட் மில்க் ஸ்வீட்களை நானே செய்து அறிமுகம் செய்தேன். இரண்டும் பெரிய ஹிட். ஏதாவது இப்படிப் புதிதாக முயன்று கொண்டே இருப்பேன்” என்கிறவர், தன் அப்பாவைப் பற்றியும் பேசுகிறார்.

``அப்பா எங்களிடம் வேலைக்கு வரும் சமையற்கலைஞர்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை, `எல்லோரும் வாங்க. நல்லா கத்துக்கோங்க. வெளியே போங்க, தனியா கடைவெச்சு ஜெயிச்சு நில்லுங்க!’ என்பதுதான். இவை, என்னை மிகவும் தொட்ட வார்த்தைகள். எத்தனையோ பேர் எங்களிடம் அசிஸ்டன்ட்டாக வந்து சேர்ந்து, மாஸ்டராகி, இங்கிருந்து வெளியே போய் ஒன்றிரண்டு கடைகளில் வேலை செய்துவிட்டு, பிறகு சொந்தமாகக் கடை தொடங்கி அமோகமாக இருக்கிறார்கள். அப்பா, இந்த ஜனவரியில்தான் இறந்தார். சென்னை முழுக்க  அவரிடம் வேலை பார்த்தவர்கள், இப்போது சொந்தமாக கடை வைத்திருப்பவர்கள் கடையை ஒருநாள் மூடிவிட்டு வந்து அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்கள்.

நாள் முழுக்க இங்கேயே அமர்ந்திருந்தார்கள். நெகிழ்ந்துவிட்டேன்.

நான் அப்பாவைவிட ஒருபடி மேலே போய், `வாங்க, கத்துக்கோங்க, வெளியே போய் கடை வையுங்க. என்ன உதவி தேவைன்னாலும் கேளுங்க, செய்றேன்’ என்று என்னிடம் வேலைக்கு வருபவர்களிடம் சொல்கிறேன். ஐந்து பேர் இப்போது வேலை செய்கிறார்கள். நம்மிடம் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மாரல் சப்போர்ட்டாக இருந்தால் மட்டுமே அவர்களால் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியும்” என்று சொல்லி முடிக்கிறார்.

ரசித்து ருசிப்போம்!

-நிவேதிதா லூயிஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism