Published:Updated:

விருதுக்கு வழி சொன்ன கறிவேப்பிலை குழம்பு !

படம்: சொ.பாலசுப்ரமணியன் ம.பிரியதர்ஷினி

விருதுக்கு வழி சொன்ன கறிவேப்பிலை குழம்பு !

படம்: சொ.பாலசுப்ரமணியன் ம.பிரியதர்ஷினி

Published:Updated:

''இந்த விருது, என் சமையலறைக்கு சமர்ப்பணம்!''

- எளிமையாகச் சிரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த விஜி கிருஷ்ணன். தான் எழுதிய 'வொய் ஆனியன்ஸ் க்ரை' (Why Onions Cry) என்கிற சமையல் கலை பற்றிய ஆங்கிலப் புத்தகத்துக்காக, சமீபத்தில் 'கோர்மண்ட் குக்புக் அவார்ட்ஸ்' (Gourmand Cookbook Awards) கமிட்டியால், 'இந்தியாவின் சிறந்த வெஜிடேரியன் புத்தகம்’ என்கிற விருதைப் பெற்றிருக்கும் சந்தோஷம் அவர் முகம் எங்கும்!

ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் தன் வீட்டில், அடுப்பில் கமகமத்த சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு, விரல்களில் கசிந்த மல்லித்தழை வாசனையுடன் வந்தமர்ந்தார் விஜி கிருஷ்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''படிச்சது... வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அப்பா வேதாந்தம், சாப்பாடு மேல ஆர்வம் உள்ளவர். நான் பி.ஏ., எகனாமிக்ஸ் முடிச்சப்போ, 'குக்கரி கிளாஸ் போறியா?’னு கேட்டார். எனக்கும் சமையல்ல ஆர்வம்ங்கிறதால செல்லம் கோபாலகிருஷ்ணன்கிட்ட ஆறு மாசம் கிளாஸ் போனேன். நார்த் இண்டியன் உணவு வகைகள் தொடங்கி, பேக்கரி அயிட்டங்கள் வரை எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். அதையெல்லாம் வீட்டுல செஞ்சு பார்த்தப்போ, சந்தோஷமா சாப்பிட்டு கமென்ட்டுகள் சொன்ன சோதனை எலிகள்... என் தம்பிகள்தான்!'' என்று சிரித்தவர்,

விருதுக்கு வழி சொன்ன கறிவேப்பிலை குழம்பு !
விஜி கிருஷ்ணன்

''திருமணத்துக்கு அப்புறம் புகுந்த வீட்டுலயும் கைவரிசை காட்டி பாராட்டுகள் வாங்கினேன். குறிப்பா, என் கணவர் கிருஷ்ணனும் சாப்பாட்டில் பிரியம் உள்ளவர்ங்கிறதால, நிறை, குறைகளைச் சரியா சுட்டிக்காட்டி விருப்பத்தோட சாப்பிடுவார். மாமியார், மாமனார்னு வீட்டில் நிறைஞ்சு இருக்கிற ஆட்களோட, விருந்தினர்களும் வந்துட்டே இருப்பாங்க. அதனால சமையல் அறையில்தான் பெரும்பாலான நேரத்தைக் கழிச்சேன். எத்தனை பேர் வந்தாலும் தடுமாறாம தாளிக்கவும், கை மணத்தோட சமைக்கவும், நிமிடங்களில் தயாராகிற இன்ஸ்டன்ட் சமையல்களையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது... புகுந்த வீட்டோட ஹவுஸ்ஃபுல் சூழல்தான்!''

- ரசிக்கப் பேசினார் விஜி.

''கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் குழந்தை இல்லாம இருந்தப்போ, அதுகுறித்த வருத்தத்துல என் மனதைக் குவிக்காம பார்த்துக்கிட்டதும் இந்தச் சமையல்தான். எப்பவும் சமையல், விருந்துனு பரபரப்பா... சந்தோஷத்தோட செய்ததால, குழந்தை இல்லாததை நினைச்சு வருந்த எனக்கு நேரம் இருந்ததில்லை. அந்த பாஸிட்டிவ் அணுகுமுறை தந்த மாற்றமோ என்னவோ... ஏழு வருஷம் கழிச்சு என் பொண்ணு அவந்தி பிறந்தா!'' என்றவர்,

விருதுக்கு வழி சொன்ன கறிவேப்பிலை குழம்பு !

''அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒருநாள் கறிவேப்பிலை குழம்பு வெச்சுருந்தேன். வீட்டு வேலைக்காரம்மா, 'வாசனை தூக்குதும்மா... என்ன குழம்பு அது, எப்படிச் செய்றது?’னு கேட்க, 'கறிவேப்பிலையை வறுத்து புளியோட அரைச்சு கொதிக்க விட்டா, குழம்பு ரெடி’னு ரெசிபி சொன்னேன். தான் வேலை பார்க்கிற இன்னொரு வீட்டுல அதை  சொல்லியிருக்காங்க அந்தம்மா. செய்து பார்த்துட்டு அந்த ருசியில லயிச்சுப் போய், அந்த வீட்டிலிருந்து எனக்கு போன் பண்ணினாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது... நியூஸ் பேப்பர்ல ஃபுட் காலம் எழுதுறவங்கனு. 'இவ்ளோ சூப்பரா சமைக்கிறீங்களே... நீங்க ஏன் சமையல் புத்தகம் எழுதக் கூடாது?’னும் கேட்டாங்க.''

- விருதுக்கான விதை விழுந்தது அங்கே தான்.

''கணவர்கிட்ட விஷயத்தை சொன்னேன். 'நல்ல ஐடியா. படிப்பு, வேலைனு இன்னிக்கு பல பசங்க வீட்டை விட்டு வெளியூர் போறாங்க. அவங்களுக்கு எல்லாம் உன் புத்தகம் பார்த்து சமைக்கிறது, வீட்டுல சாப்பிட்ட மாதிரி இருக்கும்’னு உற்சாகப்படுத்தினார். நோட்டும் கையுமா உட்கார்ந்து உள்ளூர் ஸ்பெஷல் தொடங்கி, இன்டர்நேஷனல் ரெசிபி வரை எழுதினேன். பத்திரிகையில வேலை பார்த்த அனுபவம் இருந்த என் தோழி நந்தினியோட உதவியோட புத்தகத்தைத் தொகுத்தேன்.

இந்த சந்தர்ப்பத்துல, முன்னாள் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரியோட பேரனின் மனைவி பிரதிபா எழுதின புத்தகத்தைப் பார்த்தோம். இந்தியாவின் சிறந்த வெஜிடேரியன் புத்தகம்னு தேர்வு செய்யப்பட்டிருந்த புத்தகம் அது. இந்த விருதுக்கு நாமளும் விண்ணப்பிச்சா என்னனு, மூன்று புத்தகங்களா அழகா தொகுத்து பரிசீலனைக்கு அனுப்பினேன். 160 நாடுகள் கலந்துக்கிட்ட போட்டி அது. எதிர்பார்ப்போட ரிசல்ட்டுக்கு காத்திருந்தேன். 'இறுதியா, ஆறு நாடுகளோட புத்தகம் சிறந்ததா தேர்வாகி இருக்கு. அதில் நீங்களும் ஒருவர்!’னு ஒரு மெயில் அனுப்பியிருந்தாங்க. நான் எழுதின முதல் புத்தகத்துக்கே விருதுனா... சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இந்தியாவின் சிறந்த வெஜிடே ரியன் புத்தகம் என்னோடதுங்கிற பெருமை, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளா சமையலறையில் நான் கத்துக்கிட்ட அனுபவங்களுக்குப் பரிசு.

அடுத்ததா, அந்த ஆறு புத்தகத்தில் இருந்து, உலகத்திலேயே சிறந்த சமையல் புத்தகம்னு தேர்ந்தெடுத்து சிறப்பு செய்வாங்க. மார்ச் மாசம் பாரீஸ்ல நடக்கப்போற அந்த நிகழ்வுக்காக தயாராகிட்டு இருக்கேன். என் கிச்சன், என்னை ஃப்ளைட் ஏற வெச்சுடுச்சு பார்த்தீங்களா..?!''

- பெருமை விஜி கிருஷ்ணனின் முகத்தில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism