Published:Updated:

30 வகை குயிக் சமையல்

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்

30 வகை குயிக் சமையல்

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
##~##
30 வகை குயிக் சமையல்

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இந்த அவசர யுகத்தில், சமையலுக்குக்கூட நேரம் ஒதுக்க பலராலும் முடிவதில்லை. கொஞ்சம் தாமதமாகும் என்றால்கூட, வீட்டுச் சாப்பாட்டை 'ஸ்கிப்' செய்துவிட்டு ஹோட்டலுக்கு இடம்பெயர்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இப்படி விலை கொடுத்து, எதற்காக வினையை அறுவடை செய்கிறீர்கள். கண்ட கண்ட ஹோட்டல் சாப்பாடு, உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைத்துவிடும்'' என்று எச்சரிக்கும் நங்கநல்லூர் பத்மா, 30 வகை ரெசிபிகளை 'குயிக் சமையல்’ என்கிற தலைப்பில் இங்கே வழங்கியிருக்கிறார்.

''இந்த ரெசிபிகளைத் தயாரிக்கத் தேவைப்படும் நேரம் குறைவாக இருந்தாலும்... சுவையும், மணமும் அபாரம்'' என்று கியாரன்டியோடு பத்மா தரும் ரெசிபிகளை, மனதை மகிழ்வூட்டும் விதத்தில் கலைநயம் பொங்க அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

ரவா கிச்சடி

தேவையானவை: ரவை - 200 கிராம், வெங்காயம் - ஒன்று,  கேரட் துருவல், உரித்த பட்டாணி - தலா ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: கடாயில் சிறிதளவு நெய் விட்டு, ரவையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், உரித்த பட்டாணி, இஞ்சி, பொட்டுக்கடலை, கேரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதில் ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்ற விகி   தத்தில் தண்ணீர்  விட்டு,    உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, வறுத்து வைத்த ரவையைத் தூவி கிளறி இறக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

 மோர்க்களி

தேவையானவை: புழுங்கல் அரிசி (இட்லிஅரிசி) - கால் கிலோ,  மோர் - 200 மில்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், மோர் மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: புழுங்கல் அரிசியை முதல் நாளே ஒரு மணிநேரம் ஊற வைத்து நன்கு அரைத்து, உப்பு சேர்த்து கலக்கி வைத்துவிடவும். அடுத்த நாள் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அதில்... அரைத்த மாவுடன் மோர் விட்டு கரைத்து சேர்த்து நன்கு கிளறி இறக் கவும். துண்டுகளாக்கி பரிமாறவும்

குறிப்பு: இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி சிறந்த காம்பினேஷன்.

 இஞ்சித் துவையல்

தேவையானவை: இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: இஞ்சி, கறிவேப்பிலையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுத்து... புளி, உப்பு, வதக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் இந்தத்  துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சுட்ட அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.

 பொடி தோசை

தேவையானவை: தோசை மாவு - 250 கிராம், இட்லி மிளகாய்ப் பொடி - 100 கிராம், எண்ணெய் - 100 மில்லி.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு, தோசையின் மேலே இட்லி மிளகாய்ப் பொடியை பரவலாக தூவவும்.

குறிப்பு: இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

 வெரைட்டி பஜ்ஜி

தேவையானவை: கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,  குடமிளகாய், வெங்காயம், கத்திரிக்காய், கேரட்,  வாழைக்காய், பஜ்ஜி மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய் -  500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை  வில்லை வடிவமாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து... காய்கறியை கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

30 வகை குயிக் சமையல்

குறிப்பு: விருப்பமான காய்கறிகளை பயன்படுத்தி பஜ்ஜி தயாரிக்கலாம். தேங்காய் சட்னி, சாஸ் இதற்கு சரியான காம்பினேஷன்.

 ஃப்ரூட் தயிர்சாதம்

தேவையானவை: அரிசி - 250 கிராம், ஆப்பிள், வாழைப்பழம், மாதுளம் பழம் -  தலா ஒன்று, திராட்சைப் பழம் -  100 கிராம்,  கேரட் துருவல் - ஒரு கப், புளிக்காத தயிர் - 2 கப், உப்பு - சிறிதளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: அரிசியைக் களைந்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும், திராட்சை, ஆப்பிளையும் நறுக்கவும். சாதத்தை நன்கு மசித்து, உப்பு, தயிர் சேர்த்து, நறுக்கிய பழங்களையும், கேரட் துருவலையும் சேர்த்து நன்கு கலக்கினால்... ஃப்ரூட் தயிர் சாதம் ரெடி!

குறிப்பு: தயிர்சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

 அடை மாவு குணுக்கு

தேவையானவை: இட்லி அரிசி -  கால் கிலோ, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4,  பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் 300 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, மிக்ஸியில் கெட்டியாக அடை மாவு பதத்தில் அரைக்கவும். துவரம்ருப்பு, கடலைப்பருப்பையும் தனியாக ஊற வைத்து காய்ந்த மிளகாய்  சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் கலக்கவும். நறுக்கிய கறி «வப்பில்லை - கொத்தமல்லி, வெங்காயம், உப்பு  சேர்த்து கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து, பிசைந்த மாவை பக்கோடா போல கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அடை மாவு மீந்துவிட்டால், அதைப் பயன்படுத்தியும் இதே போல் குணுக்கு தயாரிக்கலாம்.

 மிக்ஸ்டு கீரைக்கூட்டு

தேவையானவை: கழுவி சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை  - தலா ஒரு கப், தேங்காய் துருவல், பாசிப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: கீரைகளை உப்பு சேர்த்து வேக வைக்கவும். பருப்பையும் குழைவாக வேகவிடவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து அரைக்கவும். வேக வைத்த கீரை, பருப்பு, அரைத்த தேங்காய் விழுது எல்லாவற்றையும் கலந்து கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... அதை கொதிக்கும் கீரைக் கலவையில் சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை,  பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: எல்லா கீரைகளிலும்  இதே முறையில் கூட்டு தயாரிக்கலாம்.

 புளிப்பொங்கல்

தேவையானவை: உடைத்த அரிசி ரவை - 200 கிராம், புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,

30 வகை குயிக் சமையல்

செய்முறை: ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து, அதில் புளியைக் கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலை அரிசி ரவையுடன் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, ரவை கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: வடகம், வற்றல் இதற்கு சிறந்த காம்பினேஷன்

 வெஜிடபிள் சாபுதானா

தேவையானவை: ஜவ்வரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய குடமிளகாய் -  ஒரு கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலைப் பொடி, கேரட் துருவல் - தலா ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 100 மில்லி, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு... கடுகு, இஞ்சி, பொட்டுக்கடலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், குடமிளகாயை வதக்கவும். ஊற வைத்த ஜவ்வரிசி, உப்பு, மீதமுள்ள நெய் சேர்த்து மேலும் வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வேர்க்கடலைப் பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு:  இது, வட இந்திய ஸ்பெஷல். இதில் விரும்பிய காய்களை சேர்க்கலாம்.

 லெமன் ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - கால் கிலோ, எலுமிச்சம்பழம் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் -  100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: அரிசியைக் களைந்து, ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு போட்டு, வெடித்ததும் பொட்டுக்கடலை, நறுக்கிய பச்சை மிளகாய், வேர்க்கடலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தாளித்ததை சேர்க்கவும். அதில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: சாதம் குழையக் கூடாது. உதிரியாக இருந்தால்தான் கலப்பது எளிது. விருப்பப்பட்டால் முந்திரியும் சேர்க்கலாம்.

 வேர்க்கடலை சட்னி

தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2,  கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் -  2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: வேர்க்கடலையை எண்ணெய் விட்டு வறுத்து, காய்ந்த மிளகாய்,  உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்ததில் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இது இட்லி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.

 தக்காளி ஜாம்

தேவையானவை: தக்காளி - கால் கிலோ, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.  

செய்முறை: தக்காளியை வேகவிட்டு தோல் உரித்து... இஞ்சி, பச்சை மிளகாய், பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்ததை சேர்த்துக் கிளறவும்.

30 வகை குயிக் சமையல்

குறிப்பு: இந்த ஜாம் தோசை, சப்பாத்தி, பிரெட்டுக்கு சிறந்த காம்பினேஷன். தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டால், எளிதாக தோல் உரிக்க வரும்.

வெரைட்டி பயறு சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், துருவிய கேரட்  - தலா ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: முளைகட்டிய கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, கொள்ளு, சோளம், உப்பு  எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு

விசில் விட்டு இறக்கவும். துருவிய கேரட், கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இந்த வெரைட்டி பயறு சுண்டலை வெள்ளரிக்காய், தக்காளி கலந்தும் தயாரிக்கலாம்.

 மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),  துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, குடமிளகாய், கத்திரிக்காய் எல்லாவற்றையும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பருப்பை குக்கரில் குழைவாக வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகத்தை சேர்த்து அரைத்து வேக வைத்த காய்களுடன் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவை, பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, கறி வேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் நெய்விட்டு இந்தக் கூட்டு கலந்து சாப்பிட்டால்...  சுவை அபாரமாக இருக்கும். இதற்கு அப்பளம் சிறந்த காம்பினேஷன்.

 மாங்காய் சாதம்

தேவையானவை: அரிசி - 250 கிராம், மாங்காய் - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். அரிசியைக் களைந்து, ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை  பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பொட்டுக்கடலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் தாளிக்கவும். சாதத்துடன் உப்பு, மாங்காய் துருவல் சேர்த்துக் கலந்து, தாளித்ததையும் சேர்த்து நன்கு கலந்து, கொத்தமல்லி சேர்க்கவும்.

 துவரை  மொச்சை கிரேவி

தேவையானவை: உரித்த துவரைக்காய், தோல் உரித்த மொச்சை ­- தலா ஒரு கப், தக்காளி - 4, இஞ்சி -  ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் -  4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: துவரை, மொச்சை இரண்டையும் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த மொச்சை - துவரையுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு,  துவரை, மொச்சை கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

 உடனடி உப்புமா

தேவையானவை: அரிசி மாவு 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, புளித்த மோர் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: அரிசிமாவுடன் மோர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பிசைந்து வைத்த மாவில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள்  சேர்த்துக் கலந்து கடாயில் சேர்க்கவும். உதிரி உதிரியாக வரும்வரை நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: திடீர் விருந்தினர்களை சமாளிக்க இந்த உப்புமா உதவும்.

 அப்பளக் குழம்பு

தேவையானவை: புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, அப்பளம் (சிறியது) - 2, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தலா - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் தாளித்து, அப்பளத்தை உடைத்துச் சேர்க்கவும். இதில் சாம்பார் பொடியையும் சேர்த்து வறுத்து, புளித் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.

 வெஜிடபிள் இட்லி

தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட், பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய குடமிளகாய் - தலா ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்களை எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து மாவுடன் கலந்து இட்லித் தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

30 வகை குயிக் சமையல்

குறிப்பு: சட்னி, இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன். விருப்பமான காய்களை சேர்க்கலாம்.

தக்காளி பருப்பு

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தக்காளி - 2, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடுகு -  ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: பாசிப்பருப்பு, தக்காளி இரண்டையும் ஒன்றாகசேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு கடுகு தாளித்து... பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கிளறவும். இதில் வேக வைத்த தக்காளி - பருப்பை சேர்த்து, உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

குறிப்பு: இது, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்

 புதினா சாதம்

தேவையானவை: அரிசி - கால் கிலோ, புதினா - ஒரு கட்டு,  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொட்டுக்கடலை -  2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: அரிசியைக் களைந்து,  ஒரு பங்குக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து  2 விசில் வந்ததும் இறக்கவும். புதினாவை ஆய்ந்து, நறுக்கவும். கடாயில் நெய் விட்டு பொட்டுக்கடலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, நறுக்கிய புதினாவையும் சேர்த்து வதக்கி, சாதத்துடன் கலக்கவும்

குறிப்பு: புதினா சீஸனில்  புதினா சாதம், சட்னி, வடை, துவையல் என்று பலவிதமாக தயாரிக்கலாம். புதினாவுக்கு மருத்துவ குணம் உண்டு.

 மோர் ரசம்

தேவையானவை: மோர் - 500 மில்லி, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு,  வெந்தயம், சீரகம்  - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, அரிசி மாவு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: மோருடன் அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் தாளித்து...  மோர் கலவையை சேர்த்து சூடாக்கி இறக்கவும்.

குறிப்பு: இதை கொதிக்க வைக்கக் கூடாது.

 வெங்காய துவையல்

தேவையானவை: சின்ன வெங்காயம் (உரித்தது) - 20, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய நெல்லிக் காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து... புளி, உப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

30 வகை குயிக் சமையல்

குறிப்பு: இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குக்கும் சிறந்த சைட் டிஷ்.

 வெஜிடபிள் ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி, உப்பு சேர்த்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்

குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். விருப்பமான காய்களை சேர்த்துக் கலந்து தயாரிக்கலாம்.

 பாசிப்பருப்பு பெசரட்

தேவையானவை: புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: அரிசி, பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். தோசைக்கல்லில் அரைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பாசிப்பருப்பு வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.

 தயிர் சேமியா

தேவையானவை: வறுத்த சேமியா - 100 கிராம், புளிக்காத தயிர் - 500 மில்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: வறுத்த சேமியாவை தயிருடன் சேர்த்து... ஊறியவுடன் உப்பு, வெண்ணெய், சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, சேமியா கலவையில் சேர்த்துக் கலக்கினால்... தயிர் சேமியா ரெடி!

குறிப்பு: தயிர் சாதத்துக்கு பதில் இப்படி தயாரிக்கலாம்.

 வெஜிடபிள் ஜூஸ்

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், திராட்சைப் பழம் - 100 கிராம், மாதுளை முத்துக்கள், சர்க்கரை - தலா ஒரு கப், தக்காளி - ஒன்று.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: கேரட், திராட்சை, மாதுளம் முத்துக்கள், தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து,  சர்க்கரை போட்டு கலக்கவும்.

குறிப்பு: தக்காளிக்குப் பதில் எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

 எள்ளுப்பொடி ரைஸ்

தேவையானவை: அரிசி - 250 கிராம், எள்ளு - 100 கிராம், உளுத்தம்ருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: அரிசியைக் கழுவி, ஒரு பங்கு அரிசிக்கு  இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எள்ளைத் தனியாக வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து, எல்லாவற்றையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். இதை  சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு, எண்ணெய் விட்டு கலக்கவும்.

 பருப்பு பக்கோடா

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை குயிக் சமையல்

செய்முறை: பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து வடிக்கட்டி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதில் அரிசி மாவு, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலந்து பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்திருக்கும் மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: சோளத்தை அரைத்துச் சேர்த்தும் இந்த பக்கோடா தயாரிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism