வாசகிகள் கைமனம்
சீஸ் பொட்டேடோ டிகியா
##~## |
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், சீஸ் - சில துண்டுகள், பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா (கலந்தது) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, கட்டியில்லாமல் நன்கு பிசையவும். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து சிறு உருண்டையாக உருட்டி, நடுவில் குழியாக்கி, அதில் சிறிய சீஸ் துண்டு வைத்து, அதன் மேல் பொடியாக சீவிய பிஸ்தா, முந்திரி தூவி, நன்கு மூடிவிடவும்.

இதேபோல் ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்ய வும். கடாயில் எண்ணெயை காய வைத்து, உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்து... சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறலாம். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- ராதா பாலு, போபால்
மசாலா டிக்கடியா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், வறுத்து பொடித்த சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, இருபது நிமிடம் ஊற வைக்கவும். சீரகத்தூள், மிளகாய்த்தூள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, ஐந்து சப்பாத்திகள் தேய்த்துக் கொள்ளவும். ஒரு சப்பாத்தி மேல் பரவலாக நெய் தடவி, கலந்து வைத்துள்ள மசாலா தூளை பரவலாகத் தூவவும். இதேபோல் மற்ற சப்பாத்திகளையும் செய்து, ஒரு சப்பாத்தியின் மேல் ஒவ்வொன்றாக வைத்து அடுக்கவும். அடுக்கியவற்றை ரோல் போல் சுருட்டி, இரண்டு ஓரங்களையும் அழுத்தவும். அதனை கத்தியால் ஐந்து துண்டுகள் போட்டு, ஒவ்வொரு துண்டையும் தனித்தனி சப்பாத்தி யாகத் தேய்த்து சூடான தோசைக்கல்லில் போடவும். நெய் தடவி, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்க... சுவையான மசாலா டிக்கடியா ரெடி!
- ஆர்.ராமாத்தாள், வேளச்சேரி
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்....
சீஸ் பொட்டேடோ டிகியா: பாதாம், பிஸ்தாவுடன் வறுத்துப் பொடித்த வேர்கடலையும் சேர்த்தால் தனி ருசியுடன் இருக்கும்.
மசாலா டிக்கடியா: சிறிதளவு எள் பொடியும் சேர்த்தால் சுவை கூடும்.