படங்கள்: வி.செந்தில்குமார்
மஷ்ரூம் போளி
##~## |
தேவையானவை: மைதா - ஒரு கப், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், காளான் - 100 கிராம், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 5 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா, மஞ்சள் தூளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து... நன்றாக பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காய் துருவல், சிறிதளவு உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய காளானை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

மைதா மாவை சிறிய உருண்டை களாக உருட்டவும். ஒரு பிளாஸ் டிக் பேப்பர் அல்லது வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மைதா உருண்டையை, கைகளால் பூரி போல தட்டி, அதில் காளான் மசாலாவை வைத்து மூடவும். மறுபடியும் கைகளால் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்
சாஸ்னி மக்மல் பூரி
தேவையானவை: மைதா - 250 கிராம், அரிசி மாவு - 50 கிராம், தேங்காய் மூடி - ஒன்று, சர்க்கரை - 250 கிராம், நெய் - ஒரு கப் (சுமார் 100 கிராம்), எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவி அரைத்து பால் எடுக்கவும், மைதா, தேங்காய்ப் பால், சிறிது உப்பு சேர்த்து பூரி மாவு போல பிசையவும். பிறகு மாவை சிறு உருண்டைகள் போல் செய்யவும். அரிசி மாவுடன் நெய்யைக் கலந்து குழைத்து வைக்கவும். மைதா உருண்டைகளை பூரியாகத் தேய்த்து, ஒரு பூரியின் மேல் அரிசி மாவு - நெய் கலவையை தடவி, அதன்மேல் மற்றொரு பூரியை வைத்து, மறுபடியும் நெய் கலவையை தடவி, மேலே வேறொரு பூரி வைக்கவும். இப்படி மொத்தம் ஐந்து பூரிகளை வைத்து சுருட்டவும். அதை நான்கு துண்டுகள் போட்டு, ஒவ்வொரு துண்டையும் மறுபடி பூரியாகத் தேய்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பூரிகளைப் போட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு செய்து, கம்பிப் பதம் வந்ததும் இறக்கவும். அதில் பொரித்த பூரிகளைப் போட்டு எடுக்க... சாஸ்னி மக்மல் பூரி ரெடி! இதை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- ஜெயலஷ்மி, புதுச்சேரி
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
மஷ்ரூம் போளி: வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்தால் ருசியாகவும், கெட்டியாகவும் இருக்கும்.
சாஸ்னி மக்மல் பூரி: ஒரு டீஸ்பூன் அளவு கசகசாவை, மைதா மாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால் சுவையும் மணமும் கூடும்.