Published:Updated:

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

'லஞ்ச் பாக்ஸ் ரெடியா?’ - காலை நேரத்தில் வீடுதோறும் ஒலிக்கும் குரல் இது. எல்லோரும் ஸ்கூல், ஆபீஸ் என கிளம்ப பரபரக்கும் இந்தப் பொழுதில், 'லஞ்சுக்கு என்ன செய்து கொடுப்பது?’ என்ற தடுமாற்றத்தில் இருந்து உங்களுக்கு ரிலீஃப் அளிக்க, '30 வகை குயிக் ரைஸ்’ ரெசிபிகளை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.  

''மாதுளை சாதம், ஸ்வீட் கார்ன் ரைஸ், கட்டு சாதம் என்று வித்தியாச மான, சூப்பர் சுவையுடன் கூடிய சாத வகைகளை தந்துள்ளேன். இவற்றை செய்து கொடுத்தால், 'யூ ஆர் கிரேட்!’ என்று குடும்பத்தினர் பாராட்டுவது நிச்சயம்!'' என்று குஷிப்படுத்தும் தீபாவின் ரெசிபிகளை, காந்தம் போல கண்களைக் கவர்ந்திழுக்கும் விதத்தில் அலங்கரித்திருக் கிறார் செஃப் ரஜினி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கடுகு ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், புளி - சிறிதளவு, பெருங்காயம்,  மஞ்சள்தூள், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.  

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: எண்ணெயில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல், புளி சேர்த்து வறுத்து எடுத்து... கடுகு, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் பொடிக்கவும். அதே எண்ணெயில் பெருங்காயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வடித்த சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்தால்... கடுகு ரைஸ் ரெடி!

குறிப்பு: இது, மைசூர் ஸ்பெஷல் ரெசிபி.

 மாங்காய் சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாங்காய், வெங்காயம் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள், எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -  தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: மாங்காயை சுத்தம் செய்து துருவவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்றவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி... உப்பு, மாங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, இறக்கியதும் உதிர் உதிராக வடித்த சாதத்துடன் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: மாங்காய் கிடைக்காத சமயத்தில், க்ரீன் ஆப்பிளில் இந்த சாதம் தயாரிக்கலாம்.

 வைட்டமின் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் -  ஒரு கப், நெல்லிக்காய் - 10, கேரட் - ஒன்று, பாதாம், முந்திரி, வேர்க்கடலை - தலா 10, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 6 (நறுக்கியது), எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக்கவும். கேரட்டை துருவவும். பச்சை மிளகாயை நறுக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பாதாம், முந்திரி, வேர்க்கடலையை தனித் தனியாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், கேரட் துருவல், நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கி, ஆறிய பின் சாதம் சேர்த் துக் கிளற... வைட்டமின் ரைஸ் ரெடி! பரிமாறும்போது மேலே நட்ஸ் வகைகளை தூவவும்.

குறிப்பு: நட்ஸ் வகைகளை நெய்யில் வறுத்தும் தூவலாம்.

 ஜீரா ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப்,  சாம்பார் வெங்காயம் - 10, மிளகு - சீரகப் பொடி, நெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: சாம்பார் வெங்காயத்தின் தோலை நீக்கி பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு வெங்காயம், மிளகு - சீரகப் பொடியை சேர்த்து வதக்கி... உப்பு, சாதம் சேர்த்துக் கிளற... ஜீரா ரைஸ் ரெடி!

 ஸ்வீட் ரைஸ்

தேவையானவை: அரிசி - ஒரு கப், பால் - கால் கப் (காய்ச்சியது), சர்க்கரை - அரை கப், முந்திரி, திராட்சை - தலா 5, நெய் - கால் கப்.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: அரிசியை சாதமாக வடிக்கவும். முந்திரி, திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுக்கவும். பாலுடன் சர்க்கரையை கலக்கவும். கடாயில் நெய் விட்டு... சாதம், பாலுடன் கலந்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கி... வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து, சாப்பிடக் கொடுக்கலாம்.

குறிப்பு: கலர்ஃபுல்லாக தயா ரிக்க விரும்புபவர்கள், சிறிதளவு பாலில் கேசரி பவுடர் கலந்து சேர்க்கலாம்.

 கர்நாடகா காராமணி ரைஸ்

தேவையானவை: அரிசி -  ஒரு கப், காராமணி பயறு, நறுக்கிய சின்ன வெங்காயம் - தலா கால் கப், தக்காளி - 2, பூண்டு - 10 பல், சீரகம் -  ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 6, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: காராமணியை வெறும் கடாயில் வறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் நீக்கி தட்டவும். வறுத்த காராமணியில் பாதியளவு எடுத்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும். குக்கரில் எண்ணெயை காய வைத்து, சீரகம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு களைந்த அரிசி, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, மீதமுள்ள காராமணி, இரண்டு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து  மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

சமைக்கும்போதே வாசனை ஊரைக் கூட்டும்.

 பூண்டு குழம்பு சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், முழு பூண்டு - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், வெந்தயப் பொடி - ஒரு சிட்டிகை, கடுகு, எண்ணெய், பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: பூண்டை தோலுரித்து சீரகம் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, பெருங்காயம், வெந்தயப் பொடி தாளிக்கவும். அரைத்த பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி... புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து கெட்டியான பின்பு இறக்கி, வடித்த சாதம், சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கிளறவும். இதற்கு அப்பளம் சூப்பர் சைட் டிஷ்..

 தாளித்த சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பொரித்த அப்பளம் - 5, தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய் வற்றல் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், முந்திரி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும். இதனுடன் உப்பு, தூளாக்கிய பொரித்த அப்பளங்கள் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வடித்த சாதத்துடன் இந்த பொடியை கலந்து சாப்பிட... சுவையில் அசத்தலாக இருக்கும்.

 கார எள்ளோதரை

தேவையானவை: அரிசி - ஒரு கப், எள் - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக வடிக்கவும். எள்ளை ஊற வைத்துக் களைந்து, வெயிலில் உலர்த்தி, தேய்த்துப் புடைத்து, வெறும் கடாயில் வறுக்கவும். மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பை தனியே வறுக்கவும்.  வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள் போட்டு சற்று கொர கொரப்பாக பொடிக்கவும். சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்தப் பொடியை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்த கறிவேப்பிலையை தூவி சாப்பிட்டால்... வாசனை சுண்டி இழுக்கும்.

குறிப்பு: இதை, புரட்டாசி சனிக்கிழமை அன்று விசேஷ உணவாக செய் வார்கள்.

 தால் ரைஸ்

தேவையானவை: அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப், பூண்டுப் பல் - 6, சீரகம், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3, நெய் - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: பூண்டை தோல் உரித்து தட்டவும். அரிசி, பருப்பு வகைகளை கழுவி 5 நிமிடம் ஊறவிடவும். பச்சை மிளகாயை நறுக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்த பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். பச்சை மிளகாய், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், கழுவிய அரிசி, பருப்பு வகைகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி, மூன்று விசில் வந்த பின் இறக்கவும்.

குறிப்பு: இந்த தால் ரைஸ் சற்று குழைவாக இருந்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

 பீஸ் பாத்

தேவையானவை: வடித்த சாதம், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - தலா கால் கப், சீரகம், நெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: பச்சைப் பட்டாணியை வேகவிடவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். கடாயில் நெய்யை காய வைத்து சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி... வெங்காயம், சுத்தம் செய்த புதினா, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். பின்பு வேக வைத்த பட்டாணி, உப்பு, வடித்த சாதம் சேர்த்துக் கலக்கவும்.

 தேங்காய்ப் பால் சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய் - ஒரு மூடி, வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - ஒன்று, சோம்பு - சிறிதளவு, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி... ஊற வைத்த அரிசி சேர்த்து புரட்டவும். இதனுடன் தேங்காய் பாலும், தண்ணீரும் கலந்து இரண்டு கப் ஊற்றி... உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி மூடி, மூன்று விசில் வந்த பிறகு நிறுத்தி, ஆறிய பின் சாப்பிட கொடுக்கலாம்.

 ஸ்வீட் கார்ன் ரைஸ்

தேவையானவை: அரிசி - ஒரு கப், ஸ்வீட் கார்ன் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பட்டை -  ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, சோம்பு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: குக்கரில் எண்ணெயை காய வைத்து... பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, உதிர்த்த ஸ்வீட் கார்ன் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி... கழுவிய அரிசி, இரண்டு கப் தண்ணீர் விட்டு மூடி, மூன்று விசில் வந்த பின் இறக்கவும்.

குறிப்பு: ஸ்வீட் கார்னுக்குப் பதிலாக டபுள் பீன்ஸ் கலந்தும் செய்யலாம்.

 காலிஃப்ளவர் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, பச்சை மிளகாய் - 4, லவங்கம் - ஒன்று, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், தக்காளி - ஒன்று, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய், பெருங்காயம், மஞ்சள்தூள் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: காலிஃப்ளவரை தண்டு நீக்கி, பொடியாக நறுக்கி, வெந்நீரில் போட்டு எடுக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் காய விட்டு... கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், லவங்கம் ஆகியவற்றை தாளிக்கவும். இதில் மஞ்சள்தூள், பச்சை மிளகாய், காலிஃப்ளவர் துண்டுகள், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கிளறினால்... காலிஃப்ளவர் ரைஸ் ரெடி!

 ஆலு ரைஸ்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி  - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 3, உருளைக்கிழங்கு - 2 (பெரியது), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோலுடன் பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும். குக்கரில் எண்ணெயை காய விட்டு... இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரிசி சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கினால்... ஆலு ரைஸ் ரெடி!

குறிப்பு: அதிக மசாலா வாசனை இல்லாத சுவையான, ஈஸியான டிஷ் இது! விரும்பினால் இதில் சிறிது கீரையும் சேர்க்கலாம்.

 கட்டு சாதம்

தேவையானவை: சுண்டைக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் -  1 டீஸ்பூன், வடித்த சாதம் - ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள்தூள் - தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து அரைக்கவும். அதே கடாயில் மேலும் கொஞ்சம் தாராளமாக எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், சுண்டைக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் தாளித்து...  மஞ்சள்தூள், புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கவும். சாதத்தை ஆற வைத்து இந்தக் குழம்பு சேர்த்து கைபடாமல் கரண்டியால் நன்கு கிளறவும்.

 முளைப்பயறு சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப், வெங்காயத்தாள் -  ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று, இஞ்சி  - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், குடமிளகாய் - பாதி அளவு, முட்டைகோஸ் - 50 கிராம், எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து அரைக்கவும். வெங்காயம், வெங்காயத்தாள், குடமிளகாய், முட்டைகோஸ் ஆகியவற்றை பொடி யாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு... அரைத்த இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய காய்கள், முளைகட்டிய பயறு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

 மாதுளை சாதம்

தேவையானவை: வடித்த சாதம் -  ஒரு கப், புளிப்பான மாதுளை முத்துக்கள் - ஒரு கப், கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு,  எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, சர்க்கரை - சிறிதளவு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: மாதுளை முத்துக்களை அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து, சர்க்கரை சேர்த்து வைக்கவும். எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயம் தாளித்து... மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் மாதுளைச் சாறு, வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு கலந்து எடுக்க... சுவையான மாதுளை சாதம் ரெடி! உதிர்த்த மாதுளை முத்துக்களை மேலே சிறிதளவு சேர்த்து தரலாம்.

 காஜர் ரைஸ்

தேவையானவை: அரிசி - ஒரு கப், கேரட் - 3, பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: அரிசியை சாதமாக வடிக்கவும். கேரட்டை கழுவி, துருவவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி துருவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி, கேரட் துருவல், உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

 ஆரஞ்சு சாதம்

தேவையானவை: அரிசி - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, ஆரஞ்சு பழச் சாறு - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, கொத்தமல்லி, சர்க்கரை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: ஆரஞ்சு பழச் சாறுடன் சிறிதளவு சர்க்கரை சேர்க்கவும். குக்கரில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி... ஆரஞ்சு பழச் சாறு, களைந்த அரிசி, உப்பு, கொத்தமல்லி சேர்க்கவும். இதில் ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விரும்பினால் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்க்கலாம்.

 டொமேட்டோ  கீ ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, முந்திரி, பாதாம் - தலா 5, தேங்காய்ப் பால் - ஒரு கப், நெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: குக்கரில் நெய் ஊற்றி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பாதாம் ஆகியவற்றை வறுத்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். அரிசியை களைந்து சேர்த்து, ஒரு கப் தேங்காய் பாலும், ஒரு கப் தண்ணீரும் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கி, மேலே சிறிதளவு நெய் விட்டு கிளறி வைக்க... டொமேட்டோ - கீ ரைஸ் ரெடி!

 பீட்ரூட் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், இட்லி மிளகாய்ப் பொடி - 4 டீஸ்பூன், பீட்ரூட் (பெரியது) - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - அலங்கரிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

(இட்லி மிளகாய்ப் பொடி செய்ய: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், மிளகாய் வற்றல் - ஒரு கைப்பிடி அளவு, கறுப்பு எள் - அரை கப், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு. இவை அனைத்தையும் வறுத்துப் பொடிக்கவும்).

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, நன்கு பொடிப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பீட்ரூட் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கவும் (தண்ணீர் சேர்க்கக் கூடாது. எண்ணெயிலேயே நன்கு வேகும் வரை வதக்கவும்). பிறகு உப்பு, இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துப் புரட்டவும். கீழே இறக்கி வடித்த சாதம் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி சாப்பிட கொடுக்கலாம்.

 மல்டி பொடி சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப் - மிளகு - சீரகப் பொடி - 6 டீஸ்பூன், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, நெய் - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: கடாயில் நெய்யை சூடாக்கி கறிவேப்பிலை தாளித்து... சுக்குப் பொடி, மிளகு - சீரகப் பொடி சேர்த்து, வடித்த சாதத்தில் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறினால்... மல்டி பொடி சாதம் ரெடி!

குறிப்பு: நெய் சற்று கூடுதலாகச் சேர்த்தால் சுவை கூடும்.

 மசாலா தேங்காய் சாதம்

தேவையானவை: அரிசி - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பட்டை, லவங்கம் - தலா 2, தேங்காய் - ஒரு மூடி, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, நெய், உப்பு  - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: அரிசியை சாதமாக வடிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவவும். கடாயில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து... பட்டை, லவங்கம் சேர்த்து வறுக்கவும். இதில் மஞ்சள்தூள், வெங்காயம், உப்பு சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி எடுக்கவும். வடித்த சாதத்துடன் இந்த  தேங்காய் மசாலா கலவையை சேர்த்துக் கலந்தால்... மசாலா தேங்காய் சாதம் தயார்!

 இனிப்பு எள்ளோதரை

தேவையானவை: கறுப்பு எள் - 50 கிராம் , வெல்லம் - 50 கிராம், ஏலக்காய் - 4, அரிசி - ஒரு கப், முந்திரி  - 5, தேங்காய் - ஒரு மூடி, நெய் - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: எள்ளை ஊற வைத்து, களைந்து, தேய்த்து, வெயிலில் உலர்த்தி, மீண்டும் தேய்த்து நன்கு புடைத்து, வெறும் வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க, புட்டு போல வரும். இது ஒரு வாரம் வரை கெடாது. அரிசியை வேக வைத்து வடித்துக் கொள்ள வும். அரைத்து வைத்துள்ள பொடி, வறுத்த முந்திரி, தேங் காய் துருவல், வடித்த சாதம், நெய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து கொடுக்கலாம்.

குறிப்பு: இரும்புச் சத்து நிறைந்த இந்த ரைஸ், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

 கறிவேப்பிலை பொடி சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், கறிவேப்பிலை - அரை கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாய் வற்றலை வறுக்கவும். பிறகு, கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும். இவற்றுடன் பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வடித்த சாதத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு, இந்த பொடியை சேர்த்துப் பிசைந்து சாப்பிட கொடுக்கலாம்

 க்ரீன் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், கொத்தமல்லி,  புதினா, கறிவேப்பிலை - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - 2 தலா டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 6, புளி - சிறிதளவு, கடுகு,பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலையை சுத்தம் செய்யவும். உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாய் வற்றலை எண்ணெயில் வறுக்கவும். சுத்தம் செய்த புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையை தனியே வதக்கவும். இவற்றுடன் உப்பு, புளி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து, சாதத்துடன் கலக்கவும். கடுகு, பெருங்காயத்தை தாளித்து சேர்த்துக் கலக்கவும்.

 பகளாபாத்

தேவையானவை: அரிசி - ஒரு கப், பால் - அரை கப், தயிர் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: அரிசியை சாதமாக வடித்து, நன்கு ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்து, சாதத்துடன் கலக்கவும். தயிர், உப்பு, பால் விட்டு கரண்டியால் நன்கு கலக்கி 'லஞ்ச்’-க்கு எடுத்துச் செல்லலாம்.

குறிப்பு: குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் கலந்து தரலாம்.

 மின்ட் ரைஸ்

தேவையானவை: அரிசி - ஒரு கப், புதினா - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, நெய், கடுகு, உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: குக்கரில் நெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். சுத்தம் செய்த புதினா, உப்பு, களைந்த அரிசி, இரண்டு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி... மூன்று விசில் வந்த பின் இறக்கினால்... மின்ட் ரைஸ் ரெடி!

குறிப்பு: வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்க மின்ட் ரைஸ் உதவும்.

 ஆனியன் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், வெங்காயம் (பெரியது) - 2, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,  கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, கரம் மசாலாத்தூள் -  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளிக்கவும். வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி, தூள் வகைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, சாதத்துடன் கலந்து தரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism