தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா பாஸ்தா உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேமியா பாஸ்தா உணவுகள்

சிறிதளவு நெய்யில் முந்திரி, சேமியாவைத் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த சேமியா மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியே வேகவிடவும்

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா வடை

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: பிருந்தா, மதுரை

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் - முக்கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிருடன் சேமியா சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவிடவும். நன்கு ஊறியதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சிறு சிறு வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான சேமியா வடை ரெடி.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா புலாவ்

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: செந்தில்கனி, பவானி

தேவையானவை: சேமியா - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேமியாவை வறுத்துக்கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய், எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் வேக வைத்த காய்கறி களுடன் உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த சேமியா சேர்த்து மெதுவாகக் கிளற வும். நன்கு வெந்து வாசம் வந்ததும் நெய்விட்டுக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாற வும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா பக்கோடா

தேவையானவை: சேமியா - ஒரு கப், பச்சரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, தயிர் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேமியாவை எண்ணெய்விட்டு வறுத்து, கைகளால் நொறுக்கி, தயிரில் அரை மணி ஊறவிடவும். ஊறியதும், அதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி - பச்சை மிளகாய் - சோம்பு விழுது, நறுக்கிய வெங்காயம், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், பிசைந்துவைத்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உதிர் உதிராக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா பொங்கல்

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: ஜெயராமன், திருநெல்வேலி டவுன்

தேவையானவை: சேமியா - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு நெய்யில் முந்திரி, சேமியாவைத் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த சேமியா மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியே வேகவிடவும். கடாயில் நெய், எண்ணெய்விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். அதனுடன், வேகவைத்த சேமியா, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து சீராகக் கலக்கவும். பிறகு, சிறிதளவு நெய்யை மீண்டும் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா கட்லெட்

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: ஆர்.கற்பகச்செல்வி, திருநெல்வேலி

தேவையானவை: சேமியா - 2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், மைதா மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பிரெட் தூள் - சிறிதளவு.

செய்முறை: ஒரு கப் சேமியாவை வறுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.ஒரு கப் சேமியாவை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். அத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பையும் சேர்த்துப் பிசையவும். சோள மாவை மைதா மாவுடன் தண்ணீர் விட்டுக் கரைத்து வைக்கவும். எண்ணெயை வாணலியில் காய வைத்து, சேமியா கலவையை சிறிய உருண்டைகளாக்கி உருளை வடிவில் தட்டி, கரைத்து வைத்த மாவுக்கு கலவையில் முக்கி யெடுத்து எடுத்து வைத்த ஒரு கப் சேமியாவில் புரட்டி, எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா முட்டை அடை

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: என்.மாணிக்கம், திருநெல்வேலி டவுன்

தேவையானவை: சேமியா - 250 கிராம், முட்டை - 3, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு கடாயில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் சேமியாவைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டிவிட்டு குளிர்ந்த நீரை ஊற்றி மீண்டும் வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வேகவைத்த சேமியாவை தேவைக்கேற்ப சேர்த்து, தோசைக்கல்லில் அடையாக ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான சேமியா முட்டை அடை தயார்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா வெஜ் பிரியாணி

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: சோமசுந்தரி, திருநெல்வேலி டவுன்

தேவையானவை: சேமியா - 100 கிராம், நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் - ஒரு கப், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - 1 கப் (200 மில்லி அளவு).

செய்முறை: நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து அதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய்ப்பால் சேர்க்கவும். அத்துடன் சேமியா சேர்த்து நன்கு வேகவிட்டு புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சாக்லேட் சேமியா

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: வள்ளி, தேவகோட்டை

தேவையானவை: பால் - 800 மில்லி, சாக்லேட் - 75 கிராம், சேமியா - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், வெனிலா எசென்ஸ் - 3 சொட்டு.

செய்முறை: மொத்தம் உள்ள பாலில், முக்கால் பங்கு பாலைக் காய்ச்சவும். அதில் சேமியாவைப் போட்டு வேகவிடவும். மீதி பாலில், 'சாக்லேட்'டைத் துருவி அதனுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து சூடாக்கும்போது சாக்லேட் சீராக உருகும். மொத்தமும் உருகி நன்கு கலந்ததும் வேகவைத்த சேமியா பால் கலவையுடன் சேர்த்து அத்துடன் பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லேட் சேமியா தயார்!

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

மட்டன் சேமியா பிரியாணி

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: பெனாசீர் பானு, சிவகங்கை

தேவையானவை: மட்டன் - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - இரண்டு, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, தயிர் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, மல்லித்தூள் - தலா அரை டீஸ்பூன், சேமியா - 250 கிராம், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, ஏலக்காய் - 2, ஆனியன் சாஸ், டொமேட்டோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் லவங்கம், பட்டை, ஏலக்காயை அதில் போடவும். அடுத்து ஆனியன் சாஸை கலந்து பிறகு டொமேடோ சாஸையும் போட்டு கலக்கவும். சாஸ் நன்கு கொதித்த பிறகு, நறுக்கிய மட்டன், வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நீர் சுண்டிய பிறகு கொத்தமல்லி, புதினாவைச் சேர்த்துக்கொள்ளவும். அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலாவைச் சேர்த்து கலந்து, போதிய அளவு நீர் சேர்க்கவும். நீர் கொதித்ததும், சேமியாவை கலந்து குறைந்த தீயில் சமைக்கவும். மட்டன் சேமியா பிரியாணி தயார்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா கருப்பட்டி லட்டு

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: பானுப்பிரியா, சென்னை

தேவையானவை: சேமியா - ஒரு கப், கருப்பட்டிக் கரைசல் - ஒரு கப், பேரீச்சம்பழம் - ஒரு கப், முந்திரிப்பருப்பு - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், நெய் - சிறிதளவு, நறுக்கிய முந்திரிப்பழம் - சில துண்டுகள, ஏலக்காய், தேங்காய்த்துருவல் - தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு தண்ணீரில் சேமியாவை வேகவைத்து எடுத்து உலர வைக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, முந்திரிப்பழம், வேர்க்கடலை, பேரீச்சம்பழம் இவற்றை வறுத்து எடுக்கவும். சிறிதளவு நெய்யில் தேங்காய்த்துருவலைப் பொன்னிறமாக வறுத்து, அதில் கருப்பட்டிக் கரைசலை வடித்து ஊற்றி நன்கு வதங்கியவுடன், அந்தக் கரைசலில் சேமியாவைப் போட்டு, நன்கு கிளறி, பிறகு அதில் மிக்ஸியில் வேர்க்கடலையை ஒரு சுற்றி அதையும் முந்திரிப்பருப்பு, பேரீச்சம்பழம், ஏலக்காய் போட்டு இறக்கவும். ஆறிய பிறகு, அதை உருண்டையாகப் பிடித்துப் பரிமாறவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா பிர்ணி

தேவையானவை: சேமியா - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு (மூன்றும் கலந்து) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சேமியாவைச் சிறியதாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையையும் நெய்யில் வறுக்கவும். பிறகு கால் டம்ளர் பாலில் சேமியாவை வேகவிட்டு, வெந்ததும் ஆற வைக்கவும். மீதியுள்ள பாலுடன் சர்க்கரை சேர்த்து அது நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். ஆறிய சேமியாவுடன் பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு, ஏலக்காய்த்தூள், சுண்ட வைத்த பால் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்றும் பருகலாம். கெட்டியாக இல்லாமல், சற்று தளர இருந்தால் சுவையாக இருக்கும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா பகளாபாத்

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் (புளிக்காதது) - முக்கால் கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி, ஆறவிடவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு பாலை தளர சேர்க்கவும். நிறைவாக கொத்தமல்லி சேர்க்கவும். கூடுதல் சுவைக்காக திராட்சை, மாதுளை முத்துகள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

சேமியா துவரம்பருப்பு பாத்

தேவையானவை: சேமியா - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, கீறிய பச்சை மிளகாய் - 2, பூண்டு (நசுக்கியது) - 4 பற்கள், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம், பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். சேமியாவை என்ணெய்விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள வற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நசுக்கிய பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேகவைத்த துவரம்பருப்பு, வறுத்த சேமியா ஆகியவற்றை அதில் சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து மூடி, வேக விடவும். வெந்ததும் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

பாஸ்தா உணவுகள்

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

மட்டன் கீமா பாஸ்தா

தேவையானவை: மட்டன் - 250 கிராம் (சுத்தம் செய்து கொத்துக்கறியாக வாங்கிக்கொள்ளவும்), எல்போ பாஸ்தா – 200 கிராம், பூண்டு – 4 பற்கள், வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், ஓரிகானோ - சிறிதளவு, உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் பாஸ்தா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து ஆறு நிமிடங்கள் கொதிக்கவைத்து, பிறகு வேறு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்றாற்போல வெண்ணெய் சேர்த்து அது உருகியவுடன் நசுக்கிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் மட்டன், மிளகாய்த்தூள் சேர்த்து குறைந்த தீயில் வைத்து 30 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், சர்க்கரை மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். கீமா தயார். இதை ஏற்கனவே வேகவைத்துள்ள பாஸ்தா உடன் சேர்த்து ஓரிகானோ தூவி பரிமாறவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

ஸ்பைசி பொட்டேடோ பாஸ்தா

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: சாரு நேத்ரா, திருத்துறைப்பூண்டி

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, எல்போ பாஸ்தா - 200 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெரிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நிறைய தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் பாஸ்தாவைச் சேர்த்து 5 -10 நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு வடிகட்டி சில நிமிடங்கள் உலரவிடவும். அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்க்கவும். அதன் பிறகு நசுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தேவை யான உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் கடாயை மூடி வைக்கவும். கடைசியாக எல்போ பாஸ்தாவைச் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். சுவையான காரமான உருளைக் கிழங்கு பாஸ்தா ரெடி.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

தலைக்கறி பாஸ்தா

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: தஹாஸீன், சேலம்

தேவையானவை: ஆட்டின் தலைக்கறி - அரை கிலோ, பாஸ்தா - 500 கிராம், வெங்காயம் - 500 கிராம், லவங்கம், பட்டை - சிறிதளவு, ஏலக்காய் - 4, கிராம்பு - 4, தக்காளி - 300 கிராம், பூண்டு விழுது - 100 கிராம், இஞ்சி விழுது - 50 கிராம், தயிர் - 5 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5, கல் உப்பு - தேவையான

செய்முறை: பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் கிராம்பு, லவங்கம், பட்டை, ஏலக்காய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் சுத்தம் செய்யப்பட்ட தலைக்கறியைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவைத்து அத்துடன் சிறிதளவு உப்பு, நறுக்கிய தக்காளி, தயிர், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி, புதினா, மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். பிறகு குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். கொதித்ததும் பாஸ்தாவைச் சேர்த்து மேலும் ஒரு விசிலுக்குக் காத்திருக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்து, சுவை யான தலைக்கறி பாஸ் தாவை சூடாகப் பரிமாறவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

நம்ம ஊரு பேக்கடு பாஸ்தா

தேவையானவை: வேகவைத்த பாஸ்தா - 200 கிராம், சிக்கன் - 200 கிராம், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 3 டீஸ்பூன், மைதா - ஒரு டீஸ்பூன், பால் - 250 மில்லி, மொஸரெல்லா சீஸ் - 10 கிராம், ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, கருப்பட்டி - சிறிதளவு, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன், இத்தாலியன் மசாலா (Italian Spices) - ஒரு டீஸ்பூன், நறுக்கிய குடமிளகாய், ஸ்வீட் கார்ன், காளான், கேரட் - அனைத்தும் மொத்தம் 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, ஓரிகானோ, ஆலிவ் - சிறிதளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சுத்தம் செய்யப்பட்டு நறுக்கிய சிக்கன் சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கி, பின்னர்அனைத்து உலர்ந்த மசாலா பொருள்களுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதன் மேல் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவிக்கொள்ளவும். இந்த கிரேவியுடன் காய்கறிகள் மற்றும் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து வதக்கி, தனியாக வைத்துக்கொள்ளவும்.

வொயிட் சாஸ் செய்ய... வெண்ணெய் மற்றும் மைதா சேர்த்து பின்னர் மூன்று தொகுதிகளாக பால் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கெட்டியான சாஸ் செய்து அத்துடன் சீஸ், கருப்பட்டி, ஜாதிக்காய்த்தூள், இத்தாலிய மசாலா, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். ஒரு பாத்திரம் அல்லது கண் ணாடி பவுலில் சிக்கன் - காய்கறிகள் - பாஸ்தா சேர்த்து அதன் மேல் ஓர் அடுக்கு வொயிட் சாஸ், இரண்டாம் அடுக்கு மொஸரெல்லா சீஸ் தூவவும். அதன்மேல் சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகானோ மற்றும் ஆலிவ் தூவி 200 டிகிரி செல்சி யஸில் அவனில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். சூடாகப் பரிமாற வும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

பாஸ்தா சாலட்

தேவையானவை: பாஸ்தா - 50 கிராம், நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) தலா - 30 கிராம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கத்தரிக்காய் - தலா 50 கிராம், எலுமிச்சைச்சாறு - கால் டீஸ்பூன், மயோனைஸ், உப்பு - சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் நன்கு வதக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சிறிது நேரம் குளிரவைத்து, தேவையான அளவு மயோனைஸ், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து பரிமாறவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

பனீர் மக்கானி பாஸ்தா

தேவையானவை: எண்ணெய் - 2 டீஸ்பூன், பாஸ்தா - 200 கிராம், வெங்காயம் - 3, தக்காளி - 3, பிரியாணி இலை - ஒன்று, முந்திரி - 5, பூண்டு - 5 பல், இஞ்சி - 2 அங்குலத் துண்டு, பனீர் - 100 கிராம், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெண்ணெய் - 50 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கசூரி மேத்தி - ஒரு டீஸ்பூன், உப்பு. ஃபிரெஷ் க்ரீம் - தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரில் பாஸ்தா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து ஆறு நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். வேறொரு கடாயில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் முந்திரி, நசுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பிரியாணி இலை, ஏலக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, 10 -15 நிமிடங்கள் அதிக தீயில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த பொருள்கள் ஆறியதும், அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், அரைத்த மசாலாவைச் சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதில் ஃபிரெஷ் க்ரீம், கசூரி மேத்தி, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து கிரேவியுடன் நன் றாக சேருமாறு கலந்தால் சுவை யான பனீர் மக்கானி பாஸ்தா தயார்!

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

பாலக் பாஸ்தா

தேவையானவை: தண்ணீர் - 2 லிட்டர், எண்ணெய் - 2 டீஸ்பூன், பாஸ்தா - 200 கிராம், பாலக் கீரை - அரை கட்டு, கொத்தமல்லி - 50 கிராம், பூண்டு - 4 பற்கள், ஊறவைத்த பாதாம் - 5 கிராம், ஊறவைத்த முந்திரி - 5 கிராம், ஆலிவ் எண்ணெய் - 200 மில்லி, காளான் - 50 கிராம், குட மிளகாய் - 50 கிராம், துருவிய சீஸ், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். அதில் உப்பு, எண்ணெய் மற்றும் பாஸ்தா சேர்த்துக்கொள்ளவும். ஆறு நிமிடங்கள் கொதிக்கும் நீரில் பாஸ்தாவை வேக விடவும். பின்பு, நீரில் இருந்துஎடுத்து வடிகட்டி வேறு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாலக் கீரை, நறுக்கிய கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, ஊறவைத்த பாதாம், முந்திரி மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஆலிவ் எண்ணெய் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய காளான், குடமிளகாய் சேர்த்து வதக்கி அரைத்த பாலக் கீரையை சேர்க்கவும். ஒரு நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும். தொடர்ந்து, வேக வைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். பின்னர் துருவிய சீஸ் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து விடவும். சுவையான சுலபமான பாலக் பாஸ்தா ரெடி.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

கேரட் பாஸ்தா பாயசம்

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: பிருந்தா, தஞ்சாவூர்

தேவையானவை: பாஸ்தா - ஒரு கப், பாயசம் மிக்ஸ் - ஒரு பாக்கெட், துருவிய கேரட் - ஒரு கப், பால் - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை வேகவைத்து மிக்ஸியில் அடித்து வைக்கவும். பாஸ்தாவை வேகவைக்கவும். பாயசம் மிக்ஸை பாலில் வேகவைத்து அத்துடன் அரைத்த கேரட், வேகவைத்த பாஸ்தாவையும் சேர்க்கவும். சுவையான பாயசம் தயார்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

முட்டை மசாலா சீஸ் பாஸ்தா

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: ஷகிலா மேரி, மதுரை

தேவையானவை: ஸ்பைரல் பாஸ்தா - 150 கிராம், எண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2, இஞ்சி - சிறிதளவு, பூண்டு - 4 பற்கள், கடலைப்பருப்பு - 300 கிராம், கறிவேப்பிலை - தேவையான அளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், முட்டை - 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், குழம்பு மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, சீஸ், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 200 கிராம் ஸ்பைரல் பாஸ்தாவை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி சேர்த்துக்கொள்ளவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி, பூண்டு பற்கள் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை முட்டையுடன் சேர்த்து வதக்கவும். அத்துடன் குழம்பு மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். கலவை நன்கு வெந்தவுடன் வேகவைத்த ஸ்பைரல் பாஸ்தாவை இதனுடன் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும். இறுதியில் தேவையான அளவு சீஸை துருவி மேலே தூவிப் பரிமாறவும். குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற கால்சியம், புரோட்டீன் சத்து நிறைந்த, சில நொடி களில் சமைக்கத் தகுந்த முட்டை மசாலா சீஸ் பாஸ்தா ரெடி.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

பாஸ்தா சிக்கன் மசாலா

தேவையானவை: பாஸ்தா - 200 கிராம், சிக்கன் - 200 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - இரண்டு, இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியா (மல்லி) தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, பட்டை - ஒன்று, லவங்கம் - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, ஏலக்காய் - 2, சீஸ் - ஒரு ஸ்லைஸ், மிளகுத்தூள் - சுவைக்கேற்ப, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் சிக்கனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி மூன்று நிமிடங்கள் வேகவைக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின்னர், சிறிது மிளகுத்தூள், சீஸ் மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். இறுதியாக, சிறிது எண்ணெயை ஊற்றி ஒருமுறை கலக்கி இறக்கவும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

இந்தியன் ஸ்டைல் பாஸ்தா

இந்த ரெசிப்பியை வழங்கியவர்: எம்.ஜெயா, சென்னை

தேவையானவை: பாஸ்தா - 200 கிராம், மஞ்சள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், கடலை எண்ணெய் - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள், மல்லி (தனியா)தூள் - தலா அரை டீஸ்பூன், இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு, பூண்டு - 4 பற்கள், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன், டொமேட்டோ சாஸ் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கேரட், பீன்ஸ் - கையளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை 1: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம் போடவும். பிறகு கடுகு, சீரகம் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட், பீன்ஸ், நசுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். வதக்கியபிறகு, பாஸ்தாவைக் கொதிக்கவைத்த நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து வடிகட்டி பிறகு, வெந்த பாஸ்தாவை கடாயில் போட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு கலந்து வேக வைக்கவும். இந்தியன் ஸ்டைல் பாஸ்தா ரெடி.

செய்முறை 2: செய்முறை 1-ல் செய்தபடி செய்து, அவற்றோடு சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன், டொமேட்டோ சாஸ் - ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். இதன் சுவையும் அருமையாக இருக்கும்.

25 வகை சேமியா பாஸ்தா உணவுகள்

இந்தோ மசாலா பாஸ்தா

தேவையானவை: பாஸ்தா - 500 கிராம், துவரம்பருப்பு - கால் கப், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி விழுது - அரை கப் (தக்காளியை வேகவைத்து, தோல் நீக்கி அரைத்த விழுது), காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், ஸ்வீட்கார்ன்) - ஒரு கப், தக்காளி சாஸ் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் (உலர்ந்த மாங்காய்த்தூள்) - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து, சிறிது நேரம் வேகவிடவும். மிருதுவாக வெந்த உடன் இறக்கி வடிகட்டி பாஸ்தாவையும் வடிகட்டிய தண்ணீரையும் தனித்தனியாக எடுத்து வைக்கவும். துவரம்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பருப்பு அரை வேக்காடு பதமாக வெந்த பிறகு இறக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மஞ்சள்தூள், சீரகம் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி விழுது, தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் காய்கறிக் கலவை, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், சர்க்கரை, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு, பாஸ்தா, ஒரு கப் வடிகட்டிய தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு வெந்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.