Published:Updated:

சாப்பிட வாங்க !

படங்கள்: சு.குமரேசன்

##~##

ஹோட்டல்களில் தரப்படும் உணவு வகைகள், சுவை, தரம், விலை என ஒவ்வொன்றும் முன்கூட்டியே தெரிந்தால்... வார இறுதிநாட்களில், பார்ட்டி, கெட் டுகெதர் என்று ஹோட்டல்களை தேடிச் செல்லும்போது வசதியாகத்தானே இருக்கும்! அதற்காகவே இதழ்தோறும் இடம்பிடிக்கிறது 'சாப்பிட வாங்க' பகுதி.

இந்த இதழில்... சென்னை, தேனாம்பேட்டை, 'தாபா எக்ஸ்பிரஸ்’ (பஞ்சாபி ரெஸ்டாரன்ட்).

உள்ளே நுழைந்தால்... யூனிஃபார்முடன் வந்திருந்த பள்ளிக்கூட மாணவர்கள், ஐ.டி கார்டு   கழட்டாத சாஃப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள்  என்று ஆங்காங்கே அமர்ந்து சுவைத்துக் கொண்டிருந்தவர்கள்... இந்த உணவகத்தின் ரெகுலர் வாடிக்கையாளர்கள் யார் என்பதை உணர்த்துகிறார்கள்!

இந்த உணவகத்தில் பஃபே மற்றும் டேபிள் சர்வீஸ் என்று இரண்டு வகையாக உணவுகளைப் பரிமாறுகிறார்கள். பஃபே முறையில் சைவ உணவுகளை மட்டும் அளிக்கிறார்கள். இது ஜிலேபியில் ஆரம்பிக்கிறது. அடுத்து சாலட் வகைகளாக வினிகரில் ஊற வைத்த சின்ன வெங்காயம், முள்ளங்கி, வெள்ளரி என்று அடுக்குகிறார்கள். அதற்கடுத்து நாண், வொயிட் ரைஸ்... இதற்கு சைடு டிஷ்ஷாக காராமணி தால் குழம்பு, பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் வதக்கல், கத்திரிக்காய் பொரியல், காலிஃபிளவர் மஞ்சூரியன். இதைத் தவிர வெஜ் புலாவ்வும் உண்டு. இதற்கு 110 ரூபாய் கட்டணம்.

சாப்பிட வாங்க !

ஆனால், இவற்றில் ஏதாவது அயிட்டம் தீர்ந்துவிட்டால், அடுத்து கொண்டு வந்து வைப்பதற்கு அநியாயத்துக்கும் நேரத்தைக் கடத்துகிறார்கள். காத்திருந்து வெறுத்துப் போய், இருப் பதை சாப்பிட்டுக் கிளம்புவோம் என்கிற மனநிலையை ஏற்படுத்துகிறார்கள்.

நான்-வெஜ் வேண்டுமென்றால், அங்கேயே ஆர்டர் செய்து சாப்பிடலாம். அதற்கு தனிக் கட்டணம். சிக்கன், மீன், இறால் என எல்லா அயிட்டங்களையும் பஞ்சாபி தந்தூரி ஸ்டைலிலேயே கொடுக்கிறார்கள்.

சாப்பிட வாங்க !

பஃபே உணவு வகைகளை ஹாலுக்குள் வைத்திருக்கிறார்கள். அங்கேயே ஆறேழு மேஜை மற்றும் நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. திறந்தவெளியில் கற்களால் ஆன மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. இஷ்டம்போல இடம்பிடித்துக் கொள்ளலாம்.

பஃபே தவிர, ஆர்டர் கொடுத்து சாப்பிடுவதற்கும் தனியே இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கே சுடச்சுட வழங்கப்படும் உணவு வகைகளும் நம் பையைக் கடிக்காத விலையில்தான் உள்ளன.

சாப்பிட வாங்க !

நகரின் மத்தியில் நல்ல இடத்தில் அருமையான சூழலில் அமைந்திருப்பது  உணவகத்தின் பெரிய ப்ளஸ். ஆனால், நிர்வாகத்தினர் இதை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உட்புறத்தில் இருக்கும் அறைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்துவிட்டு வெளிப்புறத்தை இயற்கையாக விட்டுவைத்திருப்பது... அழகைவிட, அழுக்கைதான் அதிகம் கொண்டு வந்து சேர்க்கிறது. சாப்பிடும்போதே சரசரவென உதிரும் சருகுகளை சமாளித் தாலும், பறவைகளின் எச்சங்கள்... பதறடித்து பிளேட்டுடன் அந்த இடத்தைவிட்டே பறக்க வைக்கிறது நம்மை.

சாப்பிட வாங்க !

பஞ்சாபி ஸ்டைலில் அனைத்து அயிட்டங்களும் இருப்பதால் காரசாரமான தென்னிந்திய உணவைச் சுவைத்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவகத்தின் சுவை, சற்றே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

பார்ட்டி, கெட் டுகெதர் என பட்ஜெட் போட்டு செலவு செய்பவர்களுக்கு... இந்த உணவகம் கைகொடுக்கும்!

- சுவைப்போம்...

இந்த முறை நம் குழுவில் அவள் விகடனின் நீண்ட நாள் வாசகிகள் லக்ஷ்மி சீனிவாசன், சுதா செல்வகுமார், உஷா ராணி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களின் பார்வையில்...

லஷ்மி சீனிவாசன்: பஞ்சாபி ஸ்டைல் உணவு தயாரிப்பான கத்திரி, வெண்டை, காலிஃபிளவர் அருமை. சாலட் வகையில் தக்காளி இல்லைஎன்றாலும், மற்றவற்றை ருசிக்க முடிகிறது. புலாவ் அயிட்டத்தில் சூடே இல்லை. முதல்நாள் செய்தது போல் இருக்கிறது. சுற்றுச்சூழலை பசுமையாக பராமரிக்கிறோம் என்பதற்காக, வாஷ்பேஸின் இருக்கும் இடத்தையும் பாசி படர்ந்தபடி விட்டிருப்பது கொடுமை.

சாப்பிட வாங்க !

சுதா செல்வகுமார்: பஃபே வகை சுமார்தான். ஆனால், தனியாக ஆர்டர் செய்து சாப்பிட்ட பனீர் குல்சா, குல்பி, பான் அயிட்டங்கள் அருமை. சாப்பிடும் சாப்பாட்டை வீணாக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், பெரும்பாலான அயிட்டங்களை அப்படியே தட்டில் மிச்சம் வைத்துவிடும் நிலையில் தயாரித்தால், நாம் என்ன செய்வது?

உஷா குமாரி: வெயிட்டர்கள், சர்வர்கள் என்று அனைவருமே ஹிந்தி பேசுபவர்களாக இருப்பதால், மொழிப்பிரச்னை படுத்துகிறது. எதை ஆர்டர் செய்தாலும் அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் மண்டை காய்கிறது. அயிட்டம் தயாராகி வருவதற்கும் கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்கலாமே!

சாப்பிட வாங்க !
சாப்பிட வாங்க !
அடுத்த கட்டுரைக்கு