Published:Updated:

30 வகை கதம்ப சமையல்

தொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்

30 வகை கதம்ப சமையல்

தொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
##~##
டிரெ
ஸ், பொழுதுபோக்கு, உணவு என்று எல்லாவற்றிலும் வெரைட்டியை தேடுவது சமீபத்திய டிரெண்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

30 வகை கதம்ப சமையல்
அதற்கு ஈடு கொடுத்து... 'வித்தியாசமாக, அதேசமயம் உடலுக்குச் சத்து சேரும் விதத்தில் 'டிஷ்’கள் செய்து குடும்பத்தினரை அசத்த வேண்டும்’ என்பது இல்லத்தரசிகளின் விருப்பம். இந்த விருப்பம் ஈடேறும் வகையில் தீவிரமாக செயல்பட்டு, '30 வகை கதம்ப சமையல்’ ரெசிபிகளுடன் வந்து உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார், சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

''தொன்னை இட்லி, ஸ்வீட் போண்டா, பைனாப்பிள் கொத்சு, ஆப்பிள் கார பச்சடி என்று வித்தியாசமான அயிட்டங்களை கொடுத்துளேன். இவற்றை செய்து கொடுங்கள்... உறவு, நட்பு வட்டத்தில் 'கிச்சன் கில்லாடி’யாக வலம் வாருங்கள்'' என்று என்கரேஜ் செய்யும் தீபாவின் ரெசிபிகளை, அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் 'செஃப்’ ரஜினி.

பிரெட் வித் பீட்ரூட் ஜாம்

தேவையானவை: பீட்ரூட், தக்காளி - தலா ஒன்று, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு சிறிய கப், பிரெட் ஸ்லைஸ் - 6, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி துருவவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நெய்யை காயவிட்டு... அரைத்த பீட்ரூட் - தக்காளி விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கினால்... ஜாம் ரெடி!

30 வகை கதம்ப சமையல்

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு, ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது தயாரித்து வைத்துள்ள ஜாமை தடவி, மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.

குட்டீஸ் மிகவும் விரும்பும் ஸ்நாக்ஸ் இது.

ரவைத் துள்ளி

தேவையானவை: ரவை - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - 2 கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - கால் கப், முந்திரி - 10.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். மீண்டும் ஒரு  டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்து  வைக்கவும்.

30 வகை கதம்ப சமையல்

அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை 'சிம்’மில் வைத்து... கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வறுத்து, ரவையை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். ரவை வெந்த பின்பு தேங்காய் துருவல், மீதமுள்ள நெய், சர்க்கரை சேர்த்துக் கிளறி, முந்திரியை தூவி இறக்கி... நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் செய்யவும்.

இது பாரம்பரியமான உணவு வகை.

தொன்னை இட்லி

தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உடைத்த முந்திரிப் பருப்பு - 10, வாழை இலை - 2 (டிபன் சாப்பிட பயன்படுத்தப்

படும் வாழை ஏடு), எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: கடாயில் எண்ணெயை காயவிட்டு... கடுகு, உடைத்த மிளகு - சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாயை தாளித்து, இட்லி மாவுடன் கலக்கவும். வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

குறிப்பு: வாழை இலைகளை 15 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் கொண்ட துண்டுகளாக வெட்டி எடுக்கவும். இரண்டு துண்டுகளை, ஒன்றன்மீது ஒன்றாக நீள வாக்கில் வைத்து, மையப் பகுதியிலிருந்து கணக்கிட்டு, இரண்டு முனைகளையும் முக்கோணம் போல மடிக்கவும். பார்ப்பதற்கு டைமன்ட் வடிவம் போல இருக்கும். பிறகு, முக்கோணமாக கிடைத்த பாகங்களை உள்பக்கமாக சிறு முக்கோணமாக மடியுங்கள். பார்ப்பதற்கு அறுங்கோண வடிவம் கிடைக்கும். இப்போது, இரண்டு முனைகளில் இருக்கும் சிறுமுக்கோணங்களை உள்பக்கத்துடன் சேர்த்துப் பிரித்து, 'டூத் பிக்’ அல்லது கனமான குச்சியால் குத்துங்கள். இப்போது, தொட்டி போன்ற நீள்வடிவ தொன்னை கிடைக்கும்.

 சலவை முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: அரிசி மாவுடன் வெண்ணெய், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவு பிசையவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

 சம்பா சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், நெய் - கால் கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, முந்திரிப் பருப்பு - 10, மிளகு - சீரகப்பொடி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, மிளகு - சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உப்பு சேர்த்து ஒரு சேர கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.

இது, ஆஞ்சநேயர் கோயில்கள் சிலவற்றில்  பிரசாதமாக தரப்படுகிறது.

 பைனாப்பிள் கொத்சு

தேவையானவை: அன்னாசிப்பழத் துண்டுகள் - ஒரு கப், புளி - நெல்லிக்காய் அளவு, வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல், உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுந்து, வெந்தயம், எள்  ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் அன்னாசிபழத் துண்டு களைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். இதனுடன் புளிக் கரைசலை சேர்த்து... உப்பு, வெல்லம், அரைத்து வைத்த பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

பொங்கலுக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

வெஜ் ப்ரோஸி

தேவையானவை: வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்ந்த கலவை - ஒரு கப் (காலிஃப்ளவரை வெந்நீரில் சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 3, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து... உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

 பச்சை சுண்டைக்காய் சூப்

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 50 கிராம், வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மிளகு - சீரகப்பொடி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். பிறகு, உப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகு - சீரகப்பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது!

பாம்பே சாம்பார்

தேவையானவை: வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், கடலை மாவு - 4 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், கடுகு - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும், இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி, நசுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, உப்பு போட்டுக் கிளறவும். கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும். நன்கு கொதி வந்த பின்பு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால்... இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சூப்பர் சைட் டிஷ் ரெடி

ஆப்பிள் கார பச்சடி

தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, தயிர் - 2 கப், பச்சை மிளகாய் - 3, தேங்காய் துருவல் - அரை கப், கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: ஆப்பிளை நன்கு கழுவி துண்டுகளாக்கி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து... உப்பு, அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்துக் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்த்தால்... இனிப்பு, காரம், புளிப்பு காம்பினேஷனில் அசத்தலான ஆப்பிள் பச்சடி தயார்.

லெமன் பிசிறல்

தேவையானவை: கேரட் - கால் கிலோ, எலுமிச்சம் பழம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: கேரட்டை சுத்தம் செய்து துருவவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய கேரட்டுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பிசிறி, மேலே கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்,

இதை அப்படியே சாலட் போலவும் சாப்பிடலாம். சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

 தேங்காய்  பனங்கற்கண்டு பாயசம்

தேவையானவை: பச்சரிசி, பனங்கற்கண்டு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை, நெய் - தேவையான அளவு, தேங்காய் துருவல் - அரை கப், பால் - ஒரு கப்.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: பச்சரிசியை மிக்ஸியில் சன்ன ரவையாக உடைக்கவும். தேங்காய் துருவலை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அரிசி ரவையை இரண்டு கப் வெந்நீரில் சேர்த்து நன்கு வேகவிடவும். முக்கால் பதம் வெந்த பின்பு... அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை தூவி அலங்கரித்து, இறக்கி பரிமாறவும்.

 மல்டி பர்ப்பஸ் பொடி

தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், எள் - அரை கப், காய்ந்த மிளகாய் - 20, உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் எள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக கலந்து ஆறவிட்டு, பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.

30 வகை கதம்ப சமையல்

இந்தப் பொடியை இட்லி, தோசை வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம். பொரியல் வகைகள் செய்யும்போது மிளகாயை தவிர்த்து இந்த பொடியை தூவி இறக்கலாம். இதனுடன் வெங்காயம் சேர்த்து அரைத்து சட்னி செய்யலாம்.

எள் ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, எள், தேங்காய் துருவல், மிளகு, சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவை யான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து எடுக்கவும். துவரம்பருப்பை வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்,

மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்து வைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க... 'கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!

ஹெல்தி ரொட்டி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா கால் கப், முந்திரி, பாதாம் - தலா 10, நெய், உப்பு - தேவையான அளவு.  

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, பாதாமை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு மாவை உருண்டைகள் செய்து, சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

அவல் மிக்ஸர்

தேவையானவை: அவல் - ஒரு கப், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, ஜவ்வரிசி - தலா கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: கடாயில் எண்ணெயை காயவிட்டு... ஜவ்வரிசி, அவல், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக பொரிக்கவும். பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கட லையை வெறும் வாணலியில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்.

பொட்டுகடலை ரிப்பன்

தேவையானவை: அரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், மிளகு -  சீரகப்பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தண்ணீர் விட்டு பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுத்தால்.... கரகரப்பான பொட்டுக்கடலை ரிப்பன் ரெடி!

வெற்றிலை  ஓமவல்லி கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், வெற்றிலை - 4, ஓமவல்லி - 4 இலை, தக்காளி - ஒன்று, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிதளவு, எண்ணெய், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: பாசிப்பருப்புடன் பொடியாக நறுக்கிய வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து... குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த பருப்பு கலவை, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

இந்தக் கூட்டு, சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

சாபுதானா புவ்வா

தேவையானவை: ஜவ்வரிசி, தயிர் (கடைந்தது) - தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - கால் கப், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: முதல் நாள் இரவே ஜவ்வரிசியை தயிரில் ஊறவிடவும். உருளைக்கிழங்கு, கேரட்டை பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு... கடுகு தாளித்து, உளுத்தம்ருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வேக வைத்த காய்கறிகள், உப்பு, ஊறிய ஜவ்வரிசி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, இறக்கி சூடாக பரிமாறவும்.

 கோதுமை பகோடா

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 6, இஞ்சி - சிறு துண்டு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை,  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, துருவவும். மாவு வகைகளுடன் கிள்ளிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி வைக்கவும். எண்ணெயை காய விட்டு பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

புதினா லஸ்ஸி

தேவையானவை: தயிர் - ஒரு கப், சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய புதினா - கால் கப், சர்க்கரை - ஒரு சிட்டிகை, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: தயிரை கெட்டியாக கடையவும். புதினா, சர்க்கரை, சீரகம், உப்பு  ஆகிய வற்றை சேர்த்து, நைஸாக அரைத்து, தயிருடன் கலக்கவும். மேலே சிறிதளவு புதினா இலைகளைத் தூவி பரிமாறவும்.

 ஸ்பைசி கேபேஜ்

தேவையானவை: முட்டைகோஸ் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: வெங்காயம், முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு... சீரகம் சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, வெங்காயம், முட்டைகோஸ், சாட் மசாலாத்தூள் சேர்த்து சிறிதளவு மூழ்கும் வரை தண்ணீர்விட்டு வேக வைத்து இறக்கவும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

இதை சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 சத்து மாவு இடியாப்பம்

தேவையானவை: சத்து மாவு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சத்து மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும். இதனுடன் எண்ணெய், உப்பு, வெந்நீர் விட்டு இடியாப்ப மாவு போல பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

30 வகை கதம்ப சமையல்

இதனை, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம். ஹெல்தியான இந்த இடியாப்பம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

உளுந்து ஸ்வீட் போண்டா

தேவையானவை: உளுந்து - ஒரு கப், சர்க்கரை - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்பு நீரை வடிய வைக்கவும். இதில் லேசாக தண்ணீர் தெளித்து... நன்கு கெட்டியாக, நைஸாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சேனை சட்னி

தேவையானவை: சேனைக்கிழங்கு - 100 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், பச்சை மிளகாய் - 4,  புளி - கொட்டைபாக்கு அளவு, பூண்டு - 2 பல், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். இதனுடன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டு, உப்பு,  சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

இட்லி, தோசைக்கு இதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டால்... சூப்பர் டேஸ்ட்டில் அசத்தும்.

தாளிப்பு தோசை

தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை தாளித்து, மாவில் கொட்டி கலக்கவும். மாவை, தோசைக் கல்லில் தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்த பின்பு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்.

பச்சை மிளகாயை விரும்பாதவர்கள், மோர் மிளகாயைப் பயன்படுத்தலாம்.

பச்சைப் பயறு புட்டு

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: பச்சைப் பயறை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும். ஆறிய பின் உதிர்க்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து... வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும். வேக வைத்து உதிர்த்த பயறு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

 பிரெட் மில்க் டோஸ்ட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, பால் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு, நெய் - சிறிதளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: பாலைக் காய்ச்சி, சூடாக இருக்கும்போதே சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி பிரெட் ஸ்லைசை பாலில் நனைத்து உடனே சூடான கல்லில் போடவும். இருபுறமும் லேசாக நெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்க... சுவையான பிரெட் மில்க் டோஸ்ட் ரெடி!

 லெமன் தொக்கு

தேவையானவை: எலுமிச்சம்பழம் - 10, மிளகாய்த்தூள் - 10 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: எலுமிச்சம்பழங்களை நறுக்கி சிறுசிறு துண்டுகளாக்கி, உப்பு கலந்து இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விட்டு, அரைத்த விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுக்கவும்.

கீரை  வேர்க்கடலை உசிலி

தேவையானவை: முருங்கைக்கீரை -  ஒரு கப், வறுத்த வேர்க்கடலை - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

30 வகை கதம்ப சமையல்

செய்முறை: முருங்கைக்கீரையை கழுவி சுத்தம் செய்து, ஆய்ந்து வைக்கவும். வறுத்த வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.

30 வகை கதம்ப சமையல்
30 வகை கதம்ப சமையல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism