ரெகுலர்
Published:Updated:

வாவ்... வெஜிடபிள் அல்வா!

படங்கள்: பொன்.காசிராஜன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

வாவ்... வெஜிடபிள் அல்வா!

125

மிக்ஸ்டு வெஜிடபிள் அல்வா

##~##

தேவையானவை: காலிஃப்ளவர் துருவல் (உப்பு கலந்த தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு எடுத்து துருவியது) - கால் கப், தோல் சீவி துருவிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - தலா கால் கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - 50 கிராம், பால் - இரண்டரை கப், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

வாவ்... வெஜிடபிள் அல்வா!

செய்முறை: காலிஃப்ளவர், கேரட், உருளைக்கிழங்கு துருவல் ஆகியவற்றுடன் பச்சைப் பட்டாணியை சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் போட்டு பால் விட்டு வேகவிடவும். வெந்த காய்கறி கலவையை கரண்டியால் மசித்து அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரி பருப்பைத் தூவி பரிமாறவும்.

- ஆர்.வனஜா, போளூர்

பாலக் ரோல்

தேவையானவை: பாலக் கீரை (பெரியதான இலை) - 10, சாதம் - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் அரைத்த விழுது - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2, வெள்ளை எள் -  ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாலக் இலைகளை நன்கு கழுவி ஈரம் போக தனியே உலர வைக்கவும். கடுகு, எள், எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டி யாக கலக்கவும். இதிலிருந்து சிறிதளவு எடுத்து பாலக் இலை ஒன்றின் மேல் பரப்பி, அதன் மேல் மற்றொரு இலையை வைத்து மூடவும். இதுபோல எல்லாவற்றையும் செய்யவும். மேலே கொஞ்சம் கலவையைப் பூசி ஒவ்வொன்றையும் ரோல் செய்து ஆவியில் (இட்லித் தட்டில்) 5 நிமிடம் வேகவிடவும் இதுதான் ரோல்.

வாவ்... வெஜிடபிள் அல்வா!

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் எள் சேர்த்து வறுத்து... தயாரித்து வைத்த ரோல்களைப் போட்டு, சிறிது புரட்டி இறக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: வடஇந்தியாவில் இதை அதிகம் செய்வார்கள். இதுபோல சேம்பு இலையிலும் செய்யலாம்.

- ஜெயலஷ்மி, புதுச்சேரி

 வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

மிக்ஸ்டு வெஜிடபிள் அல்வா: கால் கப் பைனாப்பிள், சிறிதளவு பேரீச்சம்பழம் சேர்த்துத் தயாரித்தால், கறிகாய் வாசனை வராமல் இருக்கும்.

பாலக் ரோல்: கொஞ்சம் வேர்க்கடலைப் பொடி சேர்த்து செய்தால், சுவை அதிகரிக்கும்.