Published:Updated:

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

சுதா செல்வகுமார்

பிரீமியம் ஸ்டோரி

வேர்க்கடலை சாதம்

தேவை: வடித்த சாதம் - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை - அரை கப் (தோல் நீக்கவும்), எள்ளு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள்
வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள்

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி எள்ளு, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். இதை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையில் கால் கப்பை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். மீதி கால் கப் வேர்க்கடலையை அப்படியே வைக்கவும்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

வாணலியில் நெய்விட்டு சூடானதும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அத்துடன் வடித்த சாதம், உப்பு, வறுத்துப்பொடித்த பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் மீதமுள்ள வேர்க்கடலை, பொடித்த வேர்க்கடலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

வேர்க்கடலை வடை

தேவை: பச்சை வேர்க்கடலை – ஒரு கப் (15 நிமிடங்கள் நீரில் ஊற வைக்கவும்), உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து தோலுரித்து உதிர்க்கவும்), பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், ரவை – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: ஊறிய வேர்க்கடலையுடன் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் இந்த வேர்க்கடலை விழுதைச் சேர்க்கவும். எண்ணெய் தவிர தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேர்க்கடலை பென்சில் ரோல்

தேவை: தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை – ஒரு கப், பால் பவுடர் – ஒரு கப், நெய் – 50 கிராம், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 50 கிராம்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: முந்திரிப்பருப்பையும் வேர்க்கடலையையும் மிக்ஸியில் மாவாக அரைத்துப் பொடித்து எடுத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சர்க்கரையுடன் 2 கப் நீர் சேர்த்து ஒரு நான்ஸ்டிக் பானில் போட்டு பாகு காய்ச்சவும். சர்க்கரை கரைந்தால் போதுமானது. பிறகு குறைந்த தணலில் அடுப்பை வைத்து இதனுடன் பால் பவுடர் சேர்த்து கிளறி சலித்த வேர்க்கடலைப் பொடியையும் சேர்க்கவும். பிறகு இதில் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு சேர்ந்து சுருள் பதம் வந்ததும் அடுப்பை நிறுத்தவும். பின்னர் இந்த மாவைச் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிறகு இதை பென்சில் மாதிரி சுருட்டி பத்து நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

மிக்ஸ்டு வெஜ் கடலைக் கறி

தேவை: வேகவைத்த வேர்க்கடலை – ஒரு கப், வேகவைத்து வட்டமாக நறுக்கிய பேபிகார்ன் – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புரொக்கோலி பூக்கள் – கால் கப், மாங்காய் (பொடியாக நறுக்கியது) – 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பின்னர் அதில் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் விழுது, பேபிகார்ன், புரொக்கோலி, வேகவைத்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய மாங்காய், உப்பு, கரம் மசாலாத்தூள் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி பின்னர் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: இதை சப்பாத்தியின் நடுவில் வைத்து ரோல் செய்தும் சாப்பிடலாம். சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.

ராகி வேர்க்கடலை லட்டு

தேவை: கேழ்வரகு மாவு – அரை கப், பீநட் பட்டர் – 50 கிராம், வறுத்துப் பொடித்து சலித்த வேர்க்கடலை மாவு – அரை கப், நெய் – லட்டு பிடிக்க தேவையான அளவு, உலர் திராட்சை – 2 டேபிள்ஸ்பூன், கிராம்பு – 2, தேங்காய்த் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – ஒரு கப், செர்ரிப் பழம் – உருண்டை மேல் அலங்கரிக்க, ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: அடுப்பில் வாணலியைவைத்து சூடானதும் கேழ்வரகு மாவை அதில் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் வேர்க்கடலை மாவு, கிராம்பு, ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை, உலர் திராட்சை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் நெய்யை உருக்கிச் சேர்த்து கைபொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இதன்மீது பீநட் பட்டர் தடவி ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலையை அதில் தூவி மேலே செர்ரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

வேர்க்கடலை போளி

தேவை: வெதுவெதுப்பான பால் – மாவு பிசைய தேவையான அளவு, பச்சை வேர்க்கடலை – ஒரு கப், ரவை – கால் கப் (வறுத்தது), மைதா – ஒரு கப், வெல்லத்துருவல் – ஒன்றரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, வெள்ளை எள் – 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – அரை கப், நெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்து, தோல் நீக்கி மிக்ஸியில் மாவாகப் பொடித்துக்கொள்ளவும். மைதா, ரவை, சிறிது உப்பு, எள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பால் ஊற்றி கொட்டியாகப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். போளியின் மேல் மாவு தயார். தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, வெல்லத்துருவல் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பின்னர் இதையும் சிறிது சூடான பால் ஊற்றிக் கெட்டியாகக் கிளறி வைத்துக்கொள்ளவும். பூரணம் தயார். இப்போது பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஓர் உருண்டையை எடுத்து சப்பாத்தியாகத் தேய்க்கவும். இதன் நடுவில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு வேர்க்கடலைப் பூரணத்தை வைத்து சப்பாத்தியின் எல்லாப் பக்கங்களையும் மூடி வட்டமாகத் தட்டவும் அல்லது போளியாக இடவும். நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

வேர்க்கடலைத் தட்டை

தேவை: பொட்டுக்கடலை – கால் கப், வேர்க்கடலை – அரை கப் (வறுத்து தோல் நீக்கியது), அரிசி மாவு – 2 கப் (பதப்படுத்தியது), கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எள்ளு – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், ஒன்றிரண்டாக உடைத்த வறுத்த வேர்க்கடலை – கால் கப், எண்ணெய் – பொரிப்பதற்கு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – கால் கப், வெண்ணெய் –50 கிராம், உப்பு – ருசிக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, சோம்பை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவுடன் இந்த மாவைச் சேர்த்து அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், எள்ளு, கரம் மசாலாத்தூள், தேங்காய்த்துருவல், ஒன்றிரண்டாக வறுத்த வேர்க்கடலை மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் தண்ணீர் தெளித்து கெட்டியான சப்பாத்தி மாவாகப் பிசைந்து அரைமணி நேரம் மூடிவைக்கவும். பிறகு மொத்த மாவையும் ஒரே சப்பாத்தியாக இட்டு வட்ட மூடியால் அழுத்தி அழுத்தி எடுக்கவும். பிறகு சுத்தமான காட்டன் துணியில் இதை அடுக்கவும். இப்படிச் செய்வதால் மாவில் உள்ள ஈரத்தன்மையைத் துணி இழுத்துக்கொள்ளும். எண்ணெயில் பொரிக்கும்போது தட்டை மொறுமொறுப்பாக வரும். பிறகு இதைச் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக, மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

கடலை தயிர்ச்சட்னி

தேவை: பச்சை வேர்க்கடலை – ஒரு கப், தேங்காய்த்துருவல் – கால் கப், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு பற்கள் – 4, இஞ்சி – கால் அங்குலத்துண்டு, காய்ந்த மிளகாய் – 3, புளித்த தயிர் (கெட்டியானது) – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். கலவையைச் சிறிது ஆறவிட்டு இதனுடன் பச்சை வேர்க்கடலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மைய அரைத்தெடுக்கவும். பின்னர் இதில் கெட்டித் தயிர் சேர்த்துக் கலக்கவும். பின்பு தாளிக்கும் பொருள்களைத் தாளித்து இதில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: இது தயிர் சுவையுடன் கொத்தமல்லி, வாசனையுடன் வித்தியாசமாக இருக்கும். தயிர் வேண்டாம் என நினைப்பவர்கள் தயிருக்குப் பதில் நெல்லி அளவு புளிவைத்து அரைத்தும் சாப்பிடலாம்.

பீநட் சில்லி கட்லெட்

தேவை: வேகவைத்த வேர்க்கடலை - ஒரு கப், பிரெட் ஸ்லைஸ்கள் – 5, பச்சை மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வேகவைத்த வேர்க்கடலை, நறுக்கிய பிரெட் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்தெடுக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், வேர்க்கடலைப் பொடி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக்கவும். குக்கீஸ் கட்டரின் உதவியோடு இந்த உருண்டைகளை விருப்பமான வடிவத்துக்குச் செய்துகொள்ளவும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடானதும் செய்துவைத்த கட்லெட்டைப் போட்டு இருபுறமும் வறுத்தெடுக்கவும்.

வேர்க்கடலை குக்கீஸ்

தேவை: வறுத்து பொடித்த வேர்க்கடலை – 150 கிராம், பொடித்த சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், மைதா – 3 டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், தேன் – 3 டேபிள்ஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் பொடித்த வேர்க்கடலை, சர்க்கரை, உருக்கிய வெண்ணெய், மைதா சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவும். மாவு சப்பாத்தி மாவுப் பதத்துக்கு வந்தவுடன் அதை ஒரே சப்பாத்தியாக இட்டு குக்கீஸ் கட்டர் அல்லது மூடியால் அழுத்தி குக்கீஸ் வடிவங்களுக்குக் கொண்டு வரவும். பின்னர், இதை வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் அடுக்கவும். ஐந்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த குக்கீஸ் பானின் மேற்புறம் ஒரு இந்த குக்கீஸ்கள் அடுக்கப்பட்ட பாத்திரத்தை வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். கடைசி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் குக்கீஸைத் திருப்பிப்போட்டும் வேகவிடலாம். வெந்ததும் குக்கீஸின் மேலே தேன் அல்லது பீநட் பட்டர் தடவி, பொடித்த வேர்க்கடலை தூவிப் பரிமாறவும்.

வேர்க்கடலை மசால் தோசை

தேவை: இட்லி அரிசி – 2 கப், பச்சை வேர்க்கடலை – ஒரு கப், அவல் – அரை கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, ஒன்றிரண்டாகப் பொடித்த மசாலா வேர்க்கடலை – அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: இட்லி அரிசி, வேர்க்கடலை, அவல், வெந்தயத்தை நன்றாகக் கழுவி ஒன்றாக மூன்று மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பிறகு உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து மைய அரைத்து ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். பிறகு மாவை கரண்டியால் நன்கு கிளறி தோசைக்கல்லில் தோசையாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய்விட்டு மேலே கறிவேப்பிலை, பொடித்த மசாலா வேர்க்கடலை தூவி தோசையை இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

பீநட் பட்டர் கிரேவி

தேவை: பச்சை வேர்க்கடலை – அரை கப், பெரிய வெங்காயம் – 2 (தோல் உரித்து பொடியாக நறுக்கவும்), தக்காளி – 2, இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப், முந்திரிப்பருப்பு – 10 (நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்), கசகசா – ஒரு டீஸ்பூன் (15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்), பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சால்ட் பீநட் பட்டர் – 2 டீஸ்பூன், உலர் மாங்காய்த்தூள் – அரை டீஸ்பூன், கசூரி மேத்தி - ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சை வேர்க்கடலையை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். அதில் தக்காளியை மட்டும் எடுத்து தோல் நீக்கி மிக்ஸியில் வெங்காயம், தக்காளி இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஊறிய கசகசா, முந்திரி, பச்சை மிளகாயைச் சேர்த்து அவற்றையும் மைய அரைத்துக்கொள்ளவும். வாணலி யில் எண்ணெய்விட்டு சூடானதும் அரைத்த வெங்காயம், தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி - பூண்டு விழுது, வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் தேவையான உப்பு, சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், உலர் மாங்காய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், அரைத்த முந்திரி - கசகசா விழுது சேர்த்துக் கிளறவும். பின்னர், இதில் சிறிது தண்ணீர்விட்டு கலவையைக் கொதிக்கவிடவும். கலவை கொதித்த பின்னர் இதில் ஃப்ரெஷ் க்ரீம், பீநட் பட்டர் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, மிளகுத்தூள், கொத்தமல்லி, கசூரி மேத்தி தூவி இறக்கவும்.

வேர்க்கடலை மசாலா கொழுக்கட்டை

தேவை: ஒன்றிரண்டாக உடைத்த பச்சை வேர்க்கடலை – ஒரு கப், பதப்படுத்திய அரிசி மாவு – ஒரு கப், நல்லெண்ணெய் – சிறிது, கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப், வறுத்த வேர்க்கடலை உடைத்தது – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உடைத்த உளுந்து – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு – ருசிக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வேர்க்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி அதனுடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் இக்கலவையில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரிசி மாவையும் சேர்த்துக் கிளறவும். மாவு வெந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை நிறுத்தவும். கைபொறுக்கும் சூட்டில் மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

வேர்க்கடலைக் காரக்குழம்பு

தேவை: பச்சை வேர்க்கடலை – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, பூண்டு – 10 பற்கள், பெரிய வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் – 5 (தோல் உரித்து நறுக்கவும்), கத்திரிக்காய் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), வெல்லத்துருவல் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. அரைப்பதற்கு: தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, சீரகம் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் அரைக்கக் கொடுத்த பொருள்களைப் போட்டு வறுத்தெடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு, கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு இதில் புளிக்கரைசல் மற்றும் பச்சை வேர்க்கடலையைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும். பிறகு தேவையான உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்த்துக் கிளறவும். இறுதியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெல்லத்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வேர்க்கடலை உதிரி பக்கோடா

தேவை: பச்சை வேர்க்கடலை – ஒரு கப், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்), சோம்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (வட்டமாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் தவிர தேவையான பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்கு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசிறி வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் இந்தக் கலவையை பக்கோடாவாக உதிர்த்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பனானா பீநட் பட்டர் ஐஸ்க்ரீம்

தேவை: வாழைப்பழம் – 2, பீநட் பட்டர் – 2 டேபிள்ஸ்பூன், உடைத்த வேர்க்கடலை – கால் கப் (உப்புப் போடாதது), டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன், தேன் – 3 டேபிள்ஸ்பூன், செர்ரி - அலங்கரிக்க.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாழைப்பழத்தைத் தோலுரித்து நறுக்கி ஜிப் லாக் கவரில் வைத்து மூடி 10 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். பின்னர் இதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். பின்பு இதனுடன் பீநட் பட்டர் சேர்த்து மறுபடியும் மிக்ஸியில் அடிக்கவும். பிறகு இதனுடன் வேர்க்கடலை சேர்த்து டூட்டி ஃப்ரூட்டி தூவவும். பின்னர் இதைக் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீசரில் ஐந்து மணி நேரம் வைத்து எடுத்து ஐஸ்க்ரீம் பவுலுக்கு மாற்றவும். கடைசியாக இதன் மேலே தேன் ஊற்றி அதன் நடுவில் செர்ரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

பீநட் பட்டர் சப்பாத்தி

தேவை: சப்பாத்தி – 4, பீநட் பட்டர் க்ரீம் – கால் கப், வறுத்து தோல் நீக்கி அரைத்த வேர்க்கடலைப் பொடி - 3 டேபிள்ஸ்பூன், மயோனைஸ் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மிக்ஸ்டு ஜாம் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சப்பாத்தியின் ஒரு பாதியில் பீநட் பட்டர் தடவவும். மற்றொரு பாதியில் ஜாம், மயோனைஸ் ஆகியவற்றைத் தடவவும். பின்னர் அதன் மேல் ஏலக்காய்த்தூள், வேர்க்கடலைப் பொடி தூவி பாய் போலச் சுருட்டி, சிறு துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

குறிப்பு: பீநட் பட்டர் ரெடிமேடாகக் கிடைக்கும். அப்படி இல்லை யென்றால் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் நன்கு பொடிக்கவும். பின்னர் இதனுடன் வெண்ணெயைச் சேர்த்து க்ரீமாக வரும் வரை நுரைக்க அடித்தால் டேஸ்ட்டியான பீநட் பட்டர் தயார்.

பீநட் பட்டர் க்ரீம் வித் பிரெட்

தேவை: கோதுமை பிரெட் - 6 (டோஸ்ட் செய்யவும்), பீநட் பட்டர் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பிரெட்டைத் தவிர மேற்கூறிய பொருள்களைப் போட்டு நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் இதை டோஸ்ட் செய்த இரு பிரெட்களின் ஒருபக்கம் முழுவதும் தடவவும். பின்னர் இரண்டு பிரெட்களையும் மூடி துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

வேர்க்கடலை அவல் ரவா கிச்சடி

தேவை: வேகவைத்த பச்சை வேர்க்கடலை - அரை கப், அவல் - அரை கப் (நீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும்), பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) - 2, வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 2 டேபிள்ஸ்பூன், வறுத்த ரவை - கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று, சதுரமாக நறுக்கிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, நெய் - சிறிதளவு

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, மிளகாய் தாளிக்கவும். பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மறுபடியும் வதக்கவும். பின்பு இதில் தேவையான அளவு தண்ணீர்விட்டு கலவையைக் கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும் இதனுடன் ரவை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். ரவை வெந்ததும் இதனுடன் அவல், வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் இதில் நெய் சிறிதுவிட்டு கிளறி கொத்தமல்லி தூவவும். இறுதியாகப் பொடித்த வேர்க்கடலையைத் தூவிக் கீழே இறக்கவும்.

வேர்க்கடலை அடை

தேவை: காய்ந்த மிளகாய் – 10, கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், உடைத்த வேர்க்கடலை - ஒரு கப், இட்லி அரிசி - 2 கப், துவரம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ருசிக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: அரிசியைத் தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை வேர்க்கடலையை ஒன்றாகத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அரிசி, பருப்பு வகைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உடைத்த வேர்க்கடலை தாளித்து அரைத்த மாவில் கொட்டிக் கிளறவும். இதைத் தோசைக்கல்லில் அடையாக ஊற்றி நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

கடலை ஸ்டஃபிங் பரோட்டா

தேவை: கோதுமை மாவு – அரை கப், கடலை மாவு – அரை கப், வறுத்த வேர்க்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, ஒன்றிரண்டாக உடைத்த வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உலர் வெந்தய இலை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை - வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருள்களை சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் நீர் தெளித்து சப்பாத்தி மாவுப் பதத்தில் நன்கு பிசைந்து அதைச் சப்பாத்திகளாக இடவும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டெடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: தயிரில் சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இந்த பரோட்டாவுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

வேர்க்கடலைக் காரப்பொடி

தேவை: காய்ந்த மிளகாய் – 10, லேசாக வறுத்த வேர்க்கடலை – ஒரு கப், கசகசா – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், எள் – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் கப், பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும். மற்றொரு வெறும் வாணலியைச் சூடாக்கி அதில் எள், கசகசாவை வறுத்தெடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருள்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால் சுவையான வேர்க்கடலைப் பொடி தயார். இதைச் சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம் அல்லது தோசை, இட்லிக்குப் பொடியாகத் தொட்டும் சாப்பிடலாம்.

வேர்க்கடலை குல்பி

தேவை: வறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு கப், பொடித்த பிஸ்தா, பாதாம் பருப்பு – தலா ஒரு ஸ்டீபூன், பால் – 2 லிட்டர், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் – ஒரு கப், ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப், உடைத்த வேர்க்கடலை - சிறிதளவு, ஒரு சிறிய மண்பானை – குல்பியை நிரப்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: அடிகனமான வாணலியில் பாலை ஊற்றி இரண்டு லிட்டர் பால் ஒரு லிட்டர் ஆகும்வரை காய்ச்சவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து பாலுடன் பொடித்த பிஸ்தா, பாதாம் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, கூடவே வேர்க்கடலைப் பொடி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கவும். பின்னர் கலவையை ஆறவைத்து மண்பானையில் ஊற்றி மேலே உடைத்த வேர்க்கடலையைச் சிறிது தூவவும். பானையை ஃப்ரீசரில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

பீநட் பட்டர் ஹாட் மில்க்

தேவை: வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலைப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், பீநட் பட்டர் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டியான பால் – ஒரு கப், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன், கோக்கோ பவுடர் - ஒரு டீஸ்பூன், சாக்கோ சிப்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: தேவையான பொருள்கள் அனைத்தையும் சூடான பாலில் சேர்த்துக் கலக்கி ஓர் ஆற்று ஆற்றி மேலே சாக்கோ சிப்ஸ் தூவிப் பரிமாறவும்.

வேர்க்கடலை அல்வா

தேவை: தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை – ஒரு கப், காய்ச்சி ஆறவைத்த பால் – 2 கப், நெய் – கால் கப், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த சிறிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வேர்க்கடலையை மிக்ஸியில் நன்கு பொடித்துப் பாலில் கலந்து வைக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர்விட்டு கிளறிக் கொதிக்கவிடவும். பிறகு வேர்க்கடலை கலந்த பாலை இதில் ஊற்றி நெய் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலவையைக் கைவிடாமல் அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு இதில் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பை நிறுத்தி வறுத்த தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

பீநட் சாக்கி லாலிபாப்

தேவை: மில்க் (ஒயிட்) சாக்லேட் - 100 கிராம், பீநட் பட்டர் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த முந்திரி மற்றும் வறுத்து உடைத்த வேர்க்கடலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், சிலிகான் சாக்லேட் மோல்டு மற்றும் லாலிபாப் குச்சிகள் – தேவைக்கேற்ப

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: சாக்லேட்டைத் துருவி டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். விருப்பமான சாக்லேட் மோல்டில் உருக்கிய சாக்லேட்டை சிறிது ஊற்றி அதன்மேல் சிறிது வறுத்த வேர்க்கடலையைப் போடவும். பின்னர் அதன்மீது மறுபடியும் உருக்கிய சாக்லேட்டை ஊற்றி கீழ்ப்புறம் லாலிபாப் குச்சியைச் செருகவும். இதை ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஒவ்வொரு லாலிபாப் மீதும் பீநட் பட்டர் தடவி பொடித்த முந்திரி, வேர்க்கடலையைத் தூவிப் பரிமாறவும்.

பீநட் சாக்கி ஃபில்லிங் வித் கோன்

தேவை: சாக்லேட் சாஸ் - 50 மில்லி, பீநட் பட்டர் - 2 டேபிள்ஸ்பூன், ரெடிமேட் கோன் (Wafer) – தேவையான அளவு, வேகவைத்த வேர்க்கடலை - அரை கப், உலர் வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, உலர் வெள்ளரி விதை மற்றும் சாக்லேட் சாஸ் போட்டுக் கலந்து மூடி 10 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். ரெடிமேட் கோன் எடுத்துக்கொண்டு அதனுள் பீநட் பட்டரை நிரப்பி அதன்மீது தயாரித்துவைத்துள்ள சாக்லேட் வேர்க்கடலையை வைத்துப் பரிமாறவும். நொடியில் இந்த பார்ட்டி ஸ்நாக்ஸைத் தயாரித்துவிடலாம்.

வேர்க்கடலை போண்டா

தேவை: கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், வறுத்த வேர்க்கடலைப் பொடி – கால் கப், இட்லி மாவு - அரை கப், சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் இட்லி மாவு, வேர்க்கடலைப் பொடி, கடலை மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய தேங்காய்ப் பற்கள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சித்துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். போண்டா மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு சூடான எண்ணெயில் மாவை போண்டாக்களாகப் பொரித்தெடுக்கவும்.

வேர்க்கடலை ஊறுகாய்

தேவை: வேகவைத்த வேர்க்கடலை - ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய் – அரை கப், நல்லெண்ணெய் - 50 மில்லி, மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு தாளிக்கவும். பிறகு இதனுடன் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய மாங்காய், வேகவைத்த வேர்க்கடலை, உப்பு, வெந்தயப்பொடி சேர்த்துக் கிளறவும். பின்பு அடுப்பைக் குறைவான தீயில் வைத்து கலவையை வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

வேர்க்கடலை கீர்

தேவை: பச்சை வேர்க்கடலை - அரை கப், தேங்காய்ப்பால் - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் – கால் கப், 10 நிமிடங்கள் ஊறவைத்து அரைத்த முந்திரிப்பருப்பு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், தோல் நீக்கி வறுத்து உடைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்

செய்முறை: மிக்ஸியில் வேர்க்கடலையைச் சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இதனுடன் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். பிறகு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து கலவையில் ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் முந்திரி விழுது சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறி, உடைத்த வேர்க்கடலையைத் தூவி அடுப்பை நிறுத்தவும். இதை சூடாகவும் பருகலாம். ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

வேர்க்கடலை இருக்க வேறென்ன வேண்டும்?

இயற்கை நமக்களித்த மகத்தான உணவுகளில் குறிப்பிடத்தக்கது வேர்க்கடலை என்கிற நிலக்கடலை. கொட்டை வகையைச் சேர்ந்த இதன் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. எண்ணெய் வித்துக்காக சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் இதை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றன. அனைத்துத் தரப்பினரும் வாங்கிப் பயன்படுத்தும் அளவிலான விலை, இதில் அடங்கியுள்ள ஏராளமான சத்துகள் ஆகிய காரணங்களால், வேர்க்கடலை உலகெங்கும் எளியவர்களின் உணவாகத் திகழ்கிறது.

சுதா செல்வகுமார்
சுதா செல்வகுமார்

வேர்க்கடலையில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, வைட்டமின்கள், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், ஃபோலிக் ஆசிட் உட்பட ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன.

வேர்க்கடலை என்றாலே வறுத்தோ, வேகவைத்தோ மட்டும்தான் சாப்பிட வேண்டுமா... கொழுக்கட்டை, மசால் தோசை, ஊறுகாய், பரோட்டா, குக்கீஸ் அல்வா, குல்பி, ஐஸ்க்ரீம் என்று வேர்க்கடலையை வைத்து ஒரு ஜுகல் பந்தியையே படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுதா செல்வகுமார். அப்புறமென்ன, இனி நம் வீடுகளில் வேர்க்கடலை உணவுகள் பட்டையைக் கிளப்பட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு