பிரீமியம் ஸ்டோரி

நெல்லிக்காய் போளி

தேவை: பெரிய நெல்லிக்காய் - 10, மைதா மாவு - 100 கிராம், நெய் - 100 மில்லி, கடலைப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 200 கிராம் (பொடித்துக்கொள்ளவும்), தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

30 வகை சீஸன் காய்கறி சமையல்
30 வகை சீஸன் காய்கறி சமையல்

செய்முறை: மைதா மாவுடன் நல்லெண்ணெய், கேசரி பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும். நெல்லிக்காயை வேகவைத்து உதிர்த்து கொட்டை எடுக்கவும். கடலைப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து தண்ணீர் வடிக்கவும்.

வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். வேக வைத்த கடலைப்பருப்பு, நெல்லிக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு வெல்லத் தண்ணீரை விட்டு கெட்டியாக அரைக்கவும். வாணலியில் மீதம் உள்ள வெல்லத் தண்ணீர், அரைத்த விழுது சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஆறிய உடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

நெல்லிக்காய் போளி
நெல்லிக்காய் போளி

ஒரு வாழையிலையில் சிறிதளவு நெய் தடவி, மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து லேசாக குழவியால் உருட்டி பூரணத்தை உள்ளே வைத்து மூடி கைகளால் போளி வடிவில் தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் தீயைக் குறைத்து, தட்டிவைத்து இருக்கும் போளியை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் நெய் தடவி வாட்டி எடுக்கவும்.

சிறப்பு: பால் போளி, தேங்காய்ப் போளி, பருப்புப் போளி எப்போதும் செய்வோம். நெல்லிக்காய் கிடைக்கும் சீஸனில் இந்தப் போளியை செய்து சுவைக்கலாம்.

மொச்சை சோள உருண்டை ரசம்

தேவை: சோளக் கதிர் - ஒன்று, மொச்சைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, ரசப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

மொச்சை சோள உருண்டை ரசம்
மொச்சை சோள உருண்டை ரசம்

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். மொச்சை, சோளத்தைத் தோலுரித்து உதிர்த்துப் போட்டு, ஊற வைத்த பருப்பையும் தண்ணீர் வடித்து சேர்த்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்ததைச் சேர்த்து லேசாகக் கிளறி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். இட்லித் தட்டில் உருண்டைகளை வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

புளியை 300 மில்லி தண்ணீரில் கரைத்து ரசப்பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து வேகவைத்த உருண்டைகளையும் போட்டு, கொஞ்சம் கொதித்த உடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டு பிறகு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

சூடான சாதத்துடன் ரசம்விட்டு உருண்டைகளையே தொட்டு சாப்பிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துவரைக்காய் பருப்பு உசிலி

தேவை: தோலுரித்த துவரைக்காய் - 200 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.

துவரைக்காய் பருப்பு உசிலி
துவரைக்காய் பருப்பு உசிலி

செய்முறை: துவரையை குக்கரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் 30 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து அரைத்த பருப்பைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பருப்பு உதிரி உதிரியாக வெந்துவிடும். பிறகு வேகவைத்த துவரையைப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் எல்லாம் நன்றாகக் கலந்து வரும் வரை கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் பீன்ஸ், கோஸ், அவரை, காராமணிக்காய் வைத்தும் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

டெல்லி கேரட் அல்வா

தேவை: வறுத்த முந்திரிப்பருப்பு - 10, டெல்லி கேரட் - 200 கிராம், சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, பால் - 200 மில்லி.

டெல்லி கேரட் அல்வா
டெல்லி கேரட் அல்வா

செய்முறை: டெல்லி கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைக்கவும். வாணலியில் நெய்விட்டு அரைத்த விழுதை வதக்கவும். பால் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை சேர்த்து கெட்டியாக அல்வா பதம் வரும் வரை கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இத்துடன் முந்திரிப்பருப்பை உடைத்து நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

சிறப்பு: கேரட்டுடன் பால்கோவா சேர்த்தும் கிளறலாம். சுவை கூடும். பாதாம், பிஸ்தா, முந்திரி, கேரட் எல்லாம் சேர்த்து அரைத்து சர்க்கரை சேர்த்தும் அல்வா தயாரிக்கலாம். கெட்டியாகக் கிளறி பால் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து கீர் தயாரித்தும் சாப்பிடலாம்.

மொச்சை சாம்பார்

தேவை: தோலுரித்த பச்சை மொச்சை - 100 கிராம், புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு சிறிய கிண்ணம், மல்லி (தனியா), கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.

மொச்சை சாம்பார்
மொச்சை சாம்பார்

செய்முறை: தோலுரித்த மொச்சையை குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு இரண்டு விசில்விட்டு இறக்கவும். துவரம்பருப்பையும் குக்கரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூன்று விசில்விட்டு குழைவாக வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு மல்லி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் வறுத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியை 300 மில்லி தண்ணீர்விட்டு நன்றாகக் கரைத்து வடிகட்டி உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும். சிறிது கொதித்த உடன் வேகவைத்த மொச்சையைத் தண்ணீர் வடித்து சேர்க்கவும். அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்கவிடவும். கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துக் கலந்து இறக்கவும்.

சிறப்பு: மொச்சையில் சுண்டல் தயாரிக்கலாம். எல்லா பொரியலிலும் மொச்சையைச் சிறிதளவு சேர்க்கலாம்.

மொச்சை பட்டாணி துவரைக் கூட்டு

தேவை: தோலுரித்த துவரைக்காய் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தோலுரித்த மொச்சை - 100 கிராம், தோலுரித்த பச்சைப் பட்டாணி - 100 கிராம், பச்சை மிளகாய் - 2, சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

மொச்சை பட்டாணி துவரைக் கூட்டு
மொச்சை பட்டாணி துவரைக் கூட்டு

செய்முறை: பச்சைப்பட்டாணி, துவரை, மொச்சையை குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து தண்ணீர்விட்டு மூன்று விசில்விட்டு வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகத்தை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்துக்கொள்ளவும். வேக வைத்த துவரை, பச்சைப் பட்டாணி, மொச்சையைத் தண்ணீர் வடித்து, அரைத்த விழுது - பருப்புக் கலவையுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, அதில் எல்லாவற்றையும் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சூடான சாதத்துடன் நெய்விட்டு கூட்டு கலந்து சாப்பிடலாம். சிப்ஸ், அப்பளம் இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல்

தேவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன்.

சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல்
சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல்

செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி மீடியமான துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். பாசிப்பருப்பையும் குழையாமல் தனியாக வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு சிறிது வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் தண்ணீர் வடித்துப் போட்டு, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம். கரி அடுப்பைப் பயன்படுத்தி சுட்டும் சாப்பிடலாம்.

சிறுகிழங்குப் பொரியல்

தேவை: சிறுகிழங்கு - 200 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

சிறுகிழங்குப் பொரியல்
சிறுகிழங்குப் பொரியல்

செய்முறை: சிறுகிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் வைத்து தண்ணீர்விட்டு இரண்டு விசில்விட்டு இறக்கவும். ஆறிய உடன் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சிறுகிழங்கு துண்டுகளைப் போட்டு தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

சிறப்பு: இந்த சீஸனில் மட்டுமே இந்தக் கிழங்கு கிடைக்கும். பொங்கல் குழம்பில் இந்தக் கிழங்கையும் சேர்த்து தயாரிப்பது வழக்கம். இந்தக் கிழங்கை வாங்கி வைத்து ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தேன் நெல்லிக்காய்

தேவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - 100 மில்லி.

செய்முறை: நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து உதிர்த்து கொட்டையை எடுக்கவும். வெறும் வாணலியில் உதிர்த்த நெல்லிக்காயைப் போட்டு சிறிது வதக்கிக்கொள்ளவும். வதக்கிய நெல்லிக்காயை ஒரு பாட்டிலில் போட்டு நெல்லிக்காய் மூழ்கும் வரை தேன் ஊற்றிவைக்கவும். தேனில் ஊறி, தேன் சுவையும் நெல்லிக்காயின் சுவையும் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்.

தேன் நெல்லிக்காய்
தேன் நெல்லிக்காய்

சிறப்பு: தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் வைட்டமின் குறைபாடுகள் நீங்கும்.

கடாரங்காய் ஊறுகாய்

தேவை: பழுத்த கடாரங்காய் (சிறியது) ஒன்று, காய்ந்த மிளகாய்த்தூள் (எண்ணெய்விட்டு வறுத்துப் பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 100 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கடாரங்காய் ஊறுகாய்
கடாரங்காய் ஊறுகாய்

செய்முறை: கடாரங்காயைப் பொடியாக நறுக்கி தேவையான உப்பு சேர்த்துக் கலந்து மூன்று நாள்கள் வைக்கவும். நன்றாக ஊறியதும் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு தாளித்து வறுத்துப்பொடித்த மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: கடாரங்காயைப் பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கிப் போட்டும் ஊறுகாய் தயாரிக்கலாம்.

நார்த்தங்காய்ப் பச்சடி

தேவை: நார்த்தங்காய் - 2, காய்ந்த மிளகாய்த்தூள் (எண்ணெய்விட்டு வறுத்துப் பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (பொடித்தது) - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, புளி - ஒரு சிறிய எலுமிச்சைப்பழ அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

நார்த்தங்காய்ப் பச்சடி
நார்த்தங்காய்ப் பச்சடி

செய்முறை: நார்த்தங்காயை மேல் தோல் சீவி, தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் போட்டு சிறிது நேரம் வைத்து, நீரைக் கொட்டிவிட்டு, வேறு தண்ணீரில் போட்டு கழுவவும். பிறகு பொடியாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய நார்த்தங்காயைப் போட்டு வதக்கி, புளியைக் கரைத்துவிடவும். தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நார்த்தங்காய்த் துண்டுகள் நன்கு வெந்ததும் வெல்லம் சேர்த்து, வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவைத்து கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்பு: இந்தப் பச்சடி சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் நல்ல ருசியுடன் இருக்கும். நார்த்தங்காயை நறுக்கி உப்பு சேர்த்து ஊற வைத்து வெயிலில் காய வைத்து ஊறுகாய் தயாரித்தால், ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

மொச்சை குருமா

தேவை: பச்சை மொச்சை - 200 கிராம் (தோலுரித்தது), பனீர் துண்டுகள் - 100 கிராம், பூண்டுப் பல் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 2, தக்காளி - ஒன்று, தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், தயிர் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

மொச்சை குருமா
மொச்சை குருமா

செய்முறை: பச்சை மொச்சையைத் தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். பனீர் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். சோம்பு, தோலுரித்த பூண்டுப் பல், சிறு துண்டுகளாக உடைத்த பட்டை, மல்லி, தோலுரித்து நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்காளி ஆகியவற்றுடன் பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்ததை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்றாக வதங்கியதும் உப்பு சேர்த்து, வேகவைத்த மொச்சையைத் தண்ணீர் வடித்துப் போட்டு, பொரித்த பனீர் துண்டுகள் தயிர், வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இது சப்பாத்தி, பூரிக்கு சரியான காம்பினேஷன்.

வேர்க்கடலைக் காரக்குழம்பு

தேவை: உளுந்து அப்பளம் (சிறியது) - ஒன்று, தோலுரித்த பச்சை வேர்க்கடலை - 100 கிராம், புளி - ஒரு சிறிய எலுமிச்சைப்பழ அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

வேர்க்கடலைக் காரக்குழம்பு
வேர்க்கடலைக் காரக்குழம்பு

செய்முறை: பச்சை வேர்க்கடலையை குக்கரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். அதில் சாம்பார் பொடி சேர்த்து அப்பளத்தையும் பொடியாக உடைத்துப் போட்டு வறுத்து, புளியை 300 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரைத்துவிட்டு தேவையான உப்பு சேர்க்கவும். வேகவைத்த கடலையைத் தண்ணீர் வடித்துப் போட்டு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: வேர்க்கடலையை முற்றிய கடலையாகப் பார்த்து வாங்கி வெயிலில் காயவைத்து பாதுகாத்தால், வறுத்து சாப்பிடவும், உருண்டை பிடிக்கவும், சட்னி, குழம்பு தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

மரவள்ளிக்கிழங்கு அடை

தேவை: மரவள்ளிக்கிழங்கு - ஒன்று, இட்லி அரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பூண்டுப் பல் - 2, மிளகு - 10, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.

மரவள்ளிக்கிழங்கு அடை
மரவள்ளிக்கிழங்கு அடை

செய்முறை: மரவள்ளிக்கிழங்கைத் தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இட்லி அரிசியைத் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியைக் களைந்து, நறுக்கிய மரவள்ளிக்கிழங்குடன் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்துத் தண்ணீர்விட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது மசிந்ததும் ஊறவைத்த பருப்பையும் சேர்த்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, தோலுரித்த பூண்டுப் பல் போட்டு, மிளகு, உப்பு சேர்த்து அடை மாவுப் பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும். தோசைக்கல்லில் பரவலாக மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் எண்ணெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: எப்போது அடை தயாரித்தாலும் மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரித்தால் எளிதில் ஜீரணமாவதுடன் வயிறு மந்தமாகாமல் தடுக்கும். வாயுத்தொல்லை ஏற்படாது. வெல்லம், வெண்ணெய், அவியல் இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

பீஸ் புலாவ்

தேவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், தோலுரித்த பச்சைப் பட்டாணி - 100 கிராம், பனீர் துண்டுகள் - 10, குடமிளகாய் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், முந்திரிப்பருப்பு - 10, உலர்திராட்சை - 20, சோம்பு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டுப் பல் - 4, நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மில்லி.

பீஸ் புலாவ்
பீஸ் புலாவ்

செய்முறை: பாஸ்மதி அரிசியை ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர் அளந்துவிட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். பனீர் துண்டுகளை நெய்யில் பொன்னிறமாகப் பொரிக்கவும். சோம்பு, பச்சை மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து, வாணலியில் நெய்விட்டு வதக்கிக்கொள்ளவும். வதங்கியதும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக்கொள்ளவும். அகலமான வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், பச்சைப் பட்டாணியை வதக்கி, அரைத்து வதக்கிய விழுதைச் சேர்க்கவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, திராட்சை, பனீர் சேர்த்து, வேகவைத்த சாதத்தையும் போட்டு, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலே நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை தூவவும்.

சிறப்பு: பட்டாணி சீஸனில் இதைச் செய்து, குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்பினால் மிகவும் விருப்பமுடன் சாப்பிடுவார்கள்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா

தேவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைப்பழம் (சிறியது) - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா
சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா

செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். தோலுரித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைப் போடவும். கடுகு சிறிது வெடித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். இதனுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து, வேகவைத்த கிழங்கையும் போட்டு மசித்து, எலுமிச்சைச்சாறு பிழிந்து இறக்கவும். இதை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்துப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

மேலே கரகரப்பாகவும் உள்ளே சர்க்கரைவள்ளிக்கிழங்கு சுவையுடனும் சாப்பிட மிகவும் ருசியுடன் இருக்கும். இதற்கு சட்னி, சாஸ் சிறந்த காம்பினேஷன்.

மொச்சைப் பொரியல்

தேவை: பச்சை மொச்சை - 200 கிராம் (தோலுரித்தது), காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

மொச்சைப் பொரியல்
மொச்சைப் பொரியல்

செய்முறை: மொச்சையைச் சிறிதளவு தண்ணீர்விட்டு உப்பு சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு போட்டு, சிறிது வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பூண்டைத் தோலுரித்து நசுக்கிப்போடவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, வேகவைத்த மொச்சையைத் தண்ணீர் வடித்து சேர்த்து நன்றாகக் கிளறி தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: கரம் மசாலாத்தூள் போட்டும் இஞ்சி, பூண்டு, மல்லி (தனியா), தக்காளி அரைத்து சேர்த்தும் பொரியல் செய்யலாம்.

வேர்க்கடலைச் சுண்டல்

தேவை: தோலுரித்த பச்சை வேர்க்கடலை - 200 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வேர்க்கடலைச் சுண்டல்
வேர்க்கடலைச் சுண்டல்

செய்முறை: வேர்க்கடலையை உப்பு சேர்த்து குக்கரில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் போட்டு, வேகவைத்த கடலையையும் சேர்த்து தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: தோலுடன் உப்பு சேர்த்து வேகவைத்து உரித்தும் சாப்பிடலாம். மல்லி (தனியா) ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொண்டு, சுண்டல் தயாரிக்கும்போது சிறிதளவு சேர்த்தால் சுவை கூடும்.

பச்சை மிளகு ஊறுகாய்

தேவை: பச்சை மிளகு - 200 கிராம், எலுமிச்சைப்பழம் - 6, உப்பு - தேவையான அளவு.

பச்சை மிளகு ஊறுகாய்
பச்சை மிளகு ஊறுகாய்

செய்முறை: பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும். இந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். நன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.

சிறப்பு: மிளகு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

பனங்கிழங்குப் பொரியல்

தேவை: பனங்கிழங்கு - 2, தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கிண்ணம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

பனங்கிழங்குப் பொரியல்
பனங்கிழங்குப் பொரியல்

செய்முறை: பனங்கிழங்கைத் தோலுரித்து உள்ளே உள்ள கிழங்கை சிறு துண்டுகளாக உடைத்து நார் உரித்து வைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து கிழங்கைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து நீரை வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் போட்டு, வேகவைத்த பனங்கிழங்கு துண்டுகளையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சிறப்பு: பனங்கிழங்கைப் பொரியல், கூட்டு தயாரித்தும் சாப்பிடலாம்.

காலிஃப்ளவர் பக்கோடா

தேவை: காலிஃப்ளவர் (சிறிய பூ) - ஒன்று, கடலை மாவு, அரிசி மாவு - தலா 100 கிராம், சோள மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி விழுது, பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

காலிஃப்ளவர் பக்கோடா
காலிஃப்ளவர் பக்கோடா

செய்முறை: காலிஃப்ளவர் பூவை ஆய்ந்து பொடியாக உதிர்த்துக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, வெண்ணெய், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு உதிர்த்த காலிஃப்ளவர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து மாவை கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி பக்கோடாக்களாகப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இது ஒரு மாலைநேர ஸ்நாக்ஸ். முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்தும் பக்கோடா தயாரிக்கலாம்.

மாகாணி ஊறுகாய்

தேவை: மாகாணிக்கிழங்கு - 200 கிராம், எலுமிச்சைப்பழம் (மீடியம் சைஸ்) - 10, கடுகு - 2 டேபிள்ஸ்பூன், சிறிய மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 15, உப்பு - தேவையான அளவு.

மாகாணி ஊறுகாய்
மாகாணி ஊறுகாய்

செய்முறை: மாகாணிக்கிழங்கைத் தோல் சீவி நடுவில் உள்ள குச்சியை நீக்கி பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். மஞ்சளைப் பொடியாக உடைத்து கடுகு, காய்ந்த மிளகாயை அரை மணி நேரம் ஊறவைத்து, சிறிது மாகாணித்துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். நறுக்கி சுத்தம் செய்த மாகாணித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சைச்சாறு பிழிந்து, உப்பு சேர்த்து அரைத்த மிளகாய் - கடுகு - மஞ்சள் விழுதையும் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: மாகாணியை வாங்கும்போது வெள்ளைக்கிழங்காகப் பார்த்து வாங்க வேண்டும். சீஸனில் கிடைக்கும் மாகாணியை வாங்கி ஊறுகாய் தயாரித்தால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

பச்சை மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவை: பச்சை மணத்தக்காளி - 100 கிராம், புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

பச்சை மணத்தக்காளி வற்றல் குழம்பு
பச்சை மணத்தக்காளி வற்றல் குழம்பு

செய்முறை: மணத்தக்காளியை எண்ணெய்விட்டு வதக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளியைக் கரைத்துவிட்டு தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது வதக்கிய மணத்தக்காளியையும் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து இறக்கவும். சூடான சாதத்துடன் இந்தக் குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.

சிறப்பு: மணத்தக்காளியைத் தயிரில் சேர்த்து உப்பு போட்டு நான்கு நாள்கள் ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டால், எண்ணெயில் வறுத்தும் சாப்பிடலாம். மணத்தக்காளி கிடைக்காத நேரம் வற்றலைச் சமையலில் பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய்

தேவை: பெரிய நெல்லிக்காய் - 10, காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் ­ ஒரு டீஸ்பூன், சிறிய மஞ்சள் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்

செய்முறை: நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து கொட்டையை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மஞ்சளை சிறு துண்டாக உடைத்துக்கொள்ளவும். வெந்தயத்தையும் உடைத்த மஞ்சள் துண்டுகளையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்துப் பொடிக்கவும். காய்ந்த மிளகாயைச் சிறிது எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பொடித்த மிளகாயை நெல்லிக்காயுடன் சேர்த்து பொடித்த மஞ்சள் - வெந்தயப் பொடியும் ஒரு டீஸ்பூன் போட்டு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

சிறப்பு: வெந்தயம், மஞ்சளை வறுத்துப் பொடித்துவைத்துகொண்டால், ஊறுகாய் தயாரிக்கும்போதும் இதைச் சிறிதளவு போட்டால் மிகவும் வாசனையுடன் இருக்கும். 200 கிராம் மிளகாயை மொத்தமாக வறுத்து அரைத்துவைத்தால் ஊறுகாய் தயாரிப்பது சுலபம். நெல்லிக்காயை நறுக்கி அரைத்து தயிர் கலந்து உப்பு சேர்த்து, தேங்காய், பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து, கடுகு தாளித்து பச்சடியும் தயாரிக்கலாம்.

காலிஃப்ளவர் பட்டாணி சமோசா

தேவை: மைதா மாவு - 200 கிராம், காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று (ஆய்ந்து பொடியாக உதிர்க்கவும்), தோலுரித்த பட்டாணி - 100 கிராம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு - தலா 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மில்லி, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

காலிஃப்ளவர் பட்டாணி சமோசா
காலிஃப்ளவர் பட்டாணி சமோசா

செய்முறை: மைதா மாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகப் பிசைந்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காலிஃப்ளவர், தோலுரித்த பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வதக்கிய காயுடன் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். பிசைந்த மைதா மாவையும் சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இட்டு கூம்பு வடிவமாக மூடி உள்ளே பிசைந்து, உருட்டிய காய் கலவையை வைத்து சமோசா வடிவில் நன்கு மூடவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிதமான தீயில் ஒன்று அல்லது இரண்டு சமோசாவாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: எந்த காய்கறிகள் மிகுந்தாலும் இதே முறையில் வதக்கி சமோசா தயாரிக்கலாம். சாஸ் சிறந்த காம்பினேஷன்.

மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்

தேவை: சோளக்கதிர் - ஒன்று, மாங்காய் இஞ்சி - 100 கிராம், பெரிய நெல்லிக்காய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகு - ஒரு டீஸ்பூன், கேரட் துண்டுகள் - 4 (பொடியாக நறுக்கவும்), வெள்ளரித் துண்டுகள் - ஒரு கிண்ணம், வாழைத்தண்டு (தோல் சீவி நறுக்கி, நார் எடுத்துப் பொடியாக நறுக்கியது) - ஒரு கிண்ணம், கோஸ் துருவல் - ஒரு கிண்ணம், சிறிய எலுமிச்சைப்பழத்துண்டுகள் - 4, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்
மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்

செய்முறை: சோளத்தை உதிர்த்துக்கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் மாங்காய் இஞ்சி, நெல்லிக்காய், பச்சை மிளகு, கேரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, கோஸ் துருவல் சேர்க்கவும். இதனுடன் சோளத்தையும் போட்டு, எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடலாம்.

சோளம் துவரை மசாலா கிரேவி

தேவை: இளம் சோளக்கதிர் - ஒன்று, தோலுரித்த துவரைக்காய் - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பூண்டுப் பல் - 2 (தோலுரித்தது), கசகசா - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, சோம்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 100 மில்லி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

சோளம் துவரை மசாலா கிரேவி
சோளம் துவரை மசாலா கிரேவி

செய்முறை: சோளத்தை உதிர்த்து துவரையும் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரில் போட்டு தண்ணீர்விட்டு இரண்டு விசில்விட்டு இறக்கவும். இஞ்சி, பூண்டு, கசகசா, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சோம்பு, தேங்காய்த் துருவலை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸான விழுதாக அரைக்கவும். இதை வேகவைத்த சோளம், துவரையுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். கீழே இறக்கி தேங்காய்ப்பால் விட்டு கலக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும். சப்பாத்தி, தோசை, பிரெட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

துவரை சோள வடை

தேவை: சோளக்கதிர் - 2, கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தோலுரித்த துவரை - 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

துவரை சோள வடை
துவரை சோள வடை

செய்முறை: சோளத்தைத் தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பருப்புகளைக் களைந்து தண்ணீர் வடித்து உரித்துவைத்திருக்கும் சோளம், துவரை சேர்த்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் மாவைச் சிறிதாக உருட்டி கைகளில் வைத்து வடைகளாகத் தட்டிப்போட்டு இருபுறமும் திருப்பி நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பருப்பு வடை, உளுந்து வடைக்குப் பதிலாக சோளம் துவரை வடை வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு சட்னி, சாஸ் சிறந்த காம்பினேஷன்.

வெஜிடபிள் சப்பாத்தி ஃப்ரை

தேவை: கோதுமை மாவு - 200 கிராம், தோலுரித்த பச்சைப் பட்டாணி - 100 கிராம், தோலுரித்து உதிர்த்த சோளம் - 100 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கேரட் - ஒன்று (துருவவும்), பனீர் துண்டுகள் - 100 கிராம், காலிஃப்ளவர் - 100 கிராம் (உதிர்க்கவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வெஜிடபிள் சப்பாத்தி ஃப்ரை
வெஜிடபிள் சப்பாத்தி ஃப்ரை

செய்முறை: கோதுமை மாவுடன் வெண்ணெய், நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக சப்பாத்தி மாவுபோல் பிசைந்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டு பனீர் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், சோளம், வெங்காயம், கேரட்டை நெய்யில் வதக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். சப்பாத்தி மாவை உருண்டைகளாக்கி குழவியால் உருட்டி சப்பாத்தி தயாரிக்கவும். தோசைக்கல்லில் சப்பாத்திகளை வாட்டி எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வதக்கிய காய்கள், பொரித்த பனீர் துண்டுகள், சப்பாத்தி துண்டுகள் எல்லாம் சேர்த்து கலந்து அப்படியே சாப்பிடலாம்.

காலிஃப்ளவர் ரோஸ்ட்

தேவை: காலிஃப்ளவர் (சிறிய பூ) - ஒன்று, சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மில்லி.

காலிஃப்ளவர் ரோஸ்ட்
காலிஃப்ளவர் ரோஸ்ட்

செய்முறை: காலிஃப்ளவரை ஆய்ந்து பூவை எடுக்கவும். சோள மாவு, கடலை மாவு, அரிசி மாவு மூன்றையும் ஒன்று சேர்த்து உப்பு போட்டு மிளகாய்த்தூள், தண்ணீர் சேர்த்துக் கலந்து கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் மாவில் பூவைத் தோய்த்து கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: இதை சாஸ் தொட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கு சைடிஷாக வைத்தும் சாப்பிடலாம்.

சீஸன் காய்கறிகளில் சிறப்பான சமையல்!

30 வகை சீஸன் காய்கறி சமையல்

காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் அவசியம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அவற்றைத் தேவையான அளவு சேர்த்துக்கொள்வதில்லை என்பதே உண்மை. அதன் காரணமாக ஆரோக்கிய குறைபாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது. காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, அவற்றுக்கான செலவு.

ஒவ்வொரு சீஸனிலும் குறிப்பிட்ட சில காய்கறிகள் அதிக அளவிலும், விலை மலிவாகவும், பரவலாகவும் கிடைக்கின்றன. அந்த நேரத்தில் அவற்றை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று யோசிப்பது புத்திசாலித் தனம். அந்த வகையில் இப்போதைய சீஸனில் கிடைக்கும் காய்கறிகளைப் பயன்படுத்தி வகை வகையான சமையல் குறிப்புகளைத் தந்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் நங்கநல்லூர் பத்மா.

``கூட்டு, பொரியல், குருமா, போளி, அல்வா, போண்டா, வடை, சாலட் என வரிசைகட்டி நிற்கும் இந்த ரெசிப்பிகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும்; பலன் பெற வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைக்கிறார் பத்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு